தோழன்

வரலாற்று சிறுகதைப் போட்டி - 2022

- Advertisement -

ன்றாக இருட்டத் துவங்கிவிட்டிருந்தது. சென்றவேகத்தில் திரும்பிவிடுவதாக சொல்லிச்சென்ற ஞானதேவனை இன்னும் காணவில்லை.

மிகப்பெரிய உணவுக்கிடங்கை வலம் வந்தபடியே ஞானதேவனுக்காகக் காத்திருந்தான், குறுநில மன்னன் கோப்பெருஞ்சிங்கனின் சிறப்பு மெய்க்காப்பாளர்களில் முக்கியமானவனா மல்லப்பசோழகன். இத்தனை நாழிகையாகியும் ஞானதேவன் வராதது, அவனுக்குள் பெரும் கலக்கத்தை உண்டாக்கியிருந்தது. அவன் சொல்லிச் சென்றிருந்த காரணம் அப்படியானது.

“இரண்டு நாட்களாகவே மனைவியின் உடல்நிலை மிகவும் சீர்கெட்டிருக்கிறது. வைத்தியரிடம் அழைத்துச் சென்றேன். கவலை தோய்ந்த முகத்துடனே வேறெதுவும் சொல்லாமல் கஷாயம் மட்டும் கொடுத்தனுப்பிவிட்டார். இன்று காலை நான் பணிக்கு கிளம்பும்பொழுது அவளால் எழுந்து அமரக்கூட முடியவில்லை. தற்பொழுது என்ன நிலையிலிருக்கிறாளோ.. மனம் கிடந்து அல்லாடுகிறது மல்லப்பா”

அம்புகளை தடுத்து நிறுத்தும் அகன்ற கேடயம் போன்ற மார்பையும் வலுவான உடற்கட்டையும் கொண்டிருக்கும் மல்லப்பசோழகனின் மனமோ அளவுக்கதிகமான மென்மையைக் கொண்டிருந்த காரணத்தால், ஞானதேவனின் வார்த்தைகள் அவனை அங்கிருந்து நகரவிடாமல் செய்தது. நண்பன் ஞானதேவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு மனைவியை பார்த்து வருமாறு அனுப்பிவைத்திருந்தான். அவன் திரும்பும்வரை அவனது தலைமைக் காவல் பணியை தானே சிரமேற்கொள்வதாக வாக்களித்துவிட்டு, மற்ற காவலர்களை தேவைப்படும் இடங்களில் நிறுத்தி வைத்துவிட்டு உணவுக்கிடங்கை வலம் வந்துகொண்டிருந்தான்.

சீராய் அடுக்கப்பட்ட கருங்கற்களாலான மிக உயரமான சுவர்களின்மீது இயற்கை பேரிடர்கள் சிதைத்துவிடாதவகையில் கூரை வேயப்பட்டிருக்க, நான்கைந்து வீரர்கள் ஒன்றுசேர்ந்து தள்ளினாலொழிய திறக்கமுடியாதபடி கோட்டைக்கதவுகள்போல் வடிவமைக்கப்பட்டிருந்தன கிடங்கின் கதவுகள்.

தனது மகளுக்காக வந்திருந்த வரன் ஒன்றை இன்று மாலை முடிவுசெய்துவிட திட்டமிட்டிருந்தான் மல்லப்பசோழகன். மகளுக்கு மணம் முடிக்கும் வேலை தனது நேரமின்மையால் வெகுநாட்களாக இழுத்துக்கொண்டே சென்றிருக்க, எப்படியாகினும் இன்று மாலை மனைவியை அழைத்துக்கொண்டு, பொன்னாப்பூரிலிருக்கும் மாப்பிள்ளையின் தாய்மாமனை சந்தித்து இறுதி செய்துவிடவேண்டுமென்பது அவனது உறுதியான எண்ணமாக இருந்தது. ஆனால், இன்றும் அந்த வேலை ஞானதேவனால் கேள்விக்குறியாகியிருந்தது.

‘வருகின்ற வரன்களெல்லாம் இப்படி ஏதேனுமொரு காரணத்தால் தட்டிக்கொண்டே செல்கிறதே, என்னவாக இருக்கும்? பரிகாரங்கள் எதுவும் செய்யவேண்டியிருக்குமோ? நாளை சூரியனார் கோவில் சென்று, அங்கிருக்கும் சோதிடர்கள் சிலரிடம் விசாரித்தறியவேண்டும்’ மனதிற்குள் பேசியபடியே சுற்றிக்கொண்டிருந்தான் மல்லப்பசோழகன்.

“அண்ணா.. அண்ணா..”

திடீரெனக் கிளம்பிய ஒரு ஆணின் கதறல் மல்லப்பசோழகனை பலமாய் உலுக்கியது. நின்று, குரல் வந்த திசையை கூர்ந்து நோக்கினான். நன்றாக இருள் கவிழ்ந்துவிட்ட அந்தவேளையிலும் மல்லப்பசோழகனின் கூர்மையான பார்வையானது குரலுக்குரியவனை அடையாளம் கண்டுகொண்டது. அழுதபடி ஓடி வந்திருப்பவன், சொக்கலிங்க சேதுராயன்.

அவனது குரலில் இனம்புரியாத சோகம் ஒன்று தொக்கி நின்றது. ஏதோ ஒரு விபரீதம்.. தாங்கவொண்ணா துயரம்.. எல்லாமுமாகக் கலந்து ஒரே நொடியில் மனதை கலங்க வைக்கக்கூடிய அலறலாக இருந்தது அது. பதற்றத்தோடு சேதுராயனை நோக்கி ஓடிவந்த மல்லப்பசோழகன் அவனது தோள்களை இறுகப்பிடித்தான்.

“சேதுராயா.. என்னவாயிற்று? எதற்காக இப்படியொரு அலறல் உன்னிடமிருந்து?”

“அண்ணா.. அண்ணா.. என்ன சொல்வது..”

“சொல். மனம் பதறுகிறது சேதுராயா. என்ன நடந்தது?” – சேதுராயனின் தோள்களைக் குலுக்கினான்.

“மிகப்பெரிய துயரம் அண்ணா. அண்ணியார் விண்ணுலகம் சென்றுவிட்டார். அண்ணன் ஞானதேவன் பித்துப்பிடித்தாற்போல் சாலையில் நிற்கின்றார்.”

கதறினான் சேதுராயன். செய்வதறியாது மலைத்து நின்ற மல்லப்பசோழகன் அப்படியே சிறு பாறையொன்றின் மீதமர்ந்தான். நிதானத்திற்கு வர சற்று நேரமெடுத்தது.

“சரி. இந்தக் கிடங்கு சோழ மாமன்னரின் கட்டுப்பாட்டில் உள்ளதால், நமது அரண்மனைக்கு தகவல் சொல்வதில் அர்த்தமில்லை. மாமன்னரின் அரண்மனைக்கு இந்தத் தகவலைக் கொண்டு செல். ஞானதேவனுக்கு மாற்றாக அவர்கள் வேறு தலைமைக்காவலரை இங்கு அனுப்பட்டும். நான் ஆகவேண்டிய காரியங்களை கவனிக்கிறேன்”

றுநாள்.

மனைவியின் மூச்சு நின்றபொழுதில் சிலையாகிப்போன ஞானதேவனை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவர எத்தனையோ முயற்சித்தும் முடியாமல் போயிருந்தது. மஞ்சள் நிலவு போல் முகம் முழுவதும் மஞ்சள் பூசி, அம்மனைப் போல் நெற்றியில் பெருவட்டமாய் குங்குமம் சுமந்துகொண்டிருந்தவளை எந்த சலனமுமில்லாமல் பார்த்தபடியே அமர்ந்திருந்தான் ஞானதேவன்.

ஒரு குழந்தையை அழைத்துச் செல்வதுபோல் அவனை மயானத்திற்கு அழைத்துச்சென்றான் மல்லப்பசோழகன். தூரத்திலேயே நின்றுகொண்ட ஞானதேவன் அவள் கிடத்தப்பட்டிருந்த பகுதிக்கு வர மறுத்து அடம்பிடித்தான். இப்பொழுதும் அழவில்லை, கதறவில்லை. மல்லப்பசோழகனின் முகத்தில் கவலை படர்ந்தது.

அடுக்கப்பட்ட விறகுகளின்மீது அவளைக் கிடத்தி, முகத்தை தவிர உடல் முழுவதையும் குழைத்த மண்கொண்டு பூசி முடித்திருக்க, அவளது முகத்தை இறுதியாக ஒருமுறை பார்த்து அழுது தீர்த்துவிடச் சொல்லி கூடியிருந்தோர் எத்தனையோ கெஞ்சியும் இறுதிவரை கல்லாகவே நின்றிருந்தான் ஞானதேவன்.

அனைத்தும் முடிந்தது.

ரண்டாவது இரவும் உறக்கமின்றி வெறித்துக்கொண்டேயிருந்தவனுக்காக மருத்துவனிடமிருந்து பானம் ஒன்றை வாங்கிவர பணித்திருந்தான் மல்லப்பசோழகன். அதன்பிறகே ஆழ்ந்த உறக்கம் சாத்தியமாகியிருந்தது ஞானதேவனுக்கு.

விழித்தெழும்பொழுது பழைய ஞானதேவனாக எழவேண்டுமே என்ற கவலை மல்லப்பசோழகன் உட்பட அனைவரிடத்திலுமே மிகுந்திருந்தது. அவனை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாமல், இன்றும் அங்கேயே தங்கிக்கொள்ள முடிவெடுத்து அவனுக்கு அருகிலேயே படுத்துக்கொண்டான்.

திடீரென சொக்கலிங்க சேதுராயனின் ஞாபகம் வந்தது. ‘அழுது கதறியபடி நம்மிடம் தகவலைக் கொண்டுவந்து சேர்த்தவனை அதன்பின்னர் காணவில்லையே? அரண்மனைக்குச் சென்றவன், இறுதிச்சடங்கிற்கு வந்து சேராததுடன், இப்பொழுதுவரையிலும் நம் கண்ணில்படவில்லை. என்னவாக இருக்கும்?’ யோசித்தபடியே உறங்கிப் போனான்.

திகாலைப்பொழுது.

ஞானதேவனின் உறவினர்கள் திண்ணையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர்.

“இது ஞானதேவனின் இல்லம்தானே?” – பலமான அதட்டல் ஒலி அவர்களை உலுப்பி எழுப்பியது.

“ஆம்”

“ஞானதேவனை அரண்மனைக்கு அழைத்துவரும்படி உத்தரவு. வெளியே வரச் சொல்லுங்கள்”

“என்ன விடயம்? தனது அன்பு மனைவியை இழந்திருக்கிறான் அவன். மிகவும் சிரமப்பட்டு உறங்க வைத்திருக்கிறோம். தகவல் இன்னதென்று தெரிவித்தால் நலமாக இருக்கும்”

“ஞானதேவன்மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. இப்பொழுதே அழைத்துச் செல்ல பணிக்கப்பட்டுள்ளோம்.”

தூக்கம் கலைந்து அவசரமாய் வெளியே வந்தான் மல்லப்பசோழகன்.

“குற்ற வழக்கா? அப்படியென்ன குற்றம் நடந்தேறிவிட்டது?”

“தலைமைக்காவலன் என்ற பொறுப்பை மறந்து, நாட்டினுடைய முக்கிய உணவுக்கிடங்கின் பாதுகாப்பை கேலிக்குரியதாக்கிய குற்றம். கிடங்கிலிருந்த காவலர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டு, உணவு தானியங்கள் முற்றிலுமாகக் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது”.

அதிர்ந்தான் மல்லப்பசோழகன்.

“அது..”

“வீணான விளக்கங்கள் எதுவும் தேவையில்லை. ஞானதேவன் எங்கே?”

“அழைத்துச் செல்லும்நிலையில் அவன் இல்லை. அவனுக்கு மாற்றாக நான் குற்றவாளிக்கூண்டில் ஏறி விளக்கமளிக்கிறேன். அவனது மனநிலை சீரானதும் விரைவில் அரண்மனைக்கு எங்களால் அவனை கொண்டுவரமுடியும். சற்று அவகாசம் கொடுங்கள்.”

“குற்றம் சாட்டப்பட்ட நபரை வீட்டிலேயே விட்டுவிட்டு சம்பந்தமில்லாத நபரை அழைத்துச் செல்வது எங்களுக்கு பாதகமாக அமையும். புரிந்துகொண்டு ஞானதேவனை அனுப்புங்கள்.”

உறுதியாக இருந்த காவலர்களிடம் தொடர்ந்து மன்றாடி வென்றான் மல்லப்பசோழகன். துக்கத்தின் ஈரம் காய்ந்திருக்காத அந்த வீட்டின் சூழலையும் தன் நண்பனின் நிலையையும் விடாமல் எடுத்துச் சொல்லி காவலர்களை அமைதிப்படுத்தினான்.

விசாரனை அதிகாரிகளின் முன்னால் மண்டியிட்டான் மல்லப்பசோழகன்.

“தயைகூர்ந்து கருணை காட்டுங்கள். மனைவியை காலனுக்கு இரையாக்கிவிட்டு சுயநினைவற்று அலைந்துகொண்டிருக்கிறான் ஞானதேவன். அவன் என்னிடம் விட்டுச்சென்ற பொறுப்பிலிருந்து நான்தான் தவறியிருக்கிறேன். தண்டனையை எனக்களியுங்கள்.”

“இது ஏற்புடையதல்ல. இந்தப் பணி ஞானதேவனுக்கானது. முழுப்பொறுப்பையும் அவனே ஏற்கவேண்டும். அத்துடன், மூன்றாம் நபரான உன்னிடம் தலைமைக்காவல் பணியை ஒப்படைத்ததும் மாபெரும் குற்றம். அதற்கான தண்டனையையும் அவன் ஏற்கவேண்டியிருக்கும். நீ குறிப்பிட்டதுபோல் அவனது மனைவி இறந்தது குறித்து எந்தத் தகவலும் அரண்மனையை வந்தடையவில்லை. காலம் கடந்து, அதுவும் கொள்ளை நடந்தபிறகு சொல்லப்படுவதை பொருத்தமான காரணமாக ஏற்கமுடியாது”

மல்லப்பசோழகனின் மன்றாடல்கள் எதுவும் கணக்கில் கொள்ளப்படவில்லை. இறுதி முயற்சியாக வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தான்.

“அவனை நிரபராதியாக்க என்ன செய்யவேண்டும்? கட்டளையிடுங்கள், நிறைவேற்றுகிறேன்.” – கையெடுத்து வேண்டி நாதழுதழுத்தான்.

அதிகாரிகளின் அமைதியை நேர்மறை பதிலுக்கான வாய்ப்பாக உணர்ந்து காத்திருந்தான்.

“சரி. மரணத்தைக் காரணமாகச் சொல்வதால் வாய்ப்பொன்று வழங்குகிறோம். கொள்ளையடிக்கப்பட்ட உணவுப்பொருட்களில் ஒரு குண்டுமணியளவும் குறைந்துவிடாமல் மீட்டுக் கொண்டுவரவேண்டும். அப்படி மீட்டுக் கொண்டு வந்தால் வழக்கின் தீவிரத்தை பின்னர் பரிசீலிக்கிறோம்.”

மீண்டும் அரண்மனையில் நேர் வந்து நிற்கவேண்டிய நாள் ஒன்றும் நிர்ணயிக்கப்பட்டது. மண்டியிட்டு நன்றி தெரிவித்துவிட்டுக் கிளம்பினான் மல்லப்பசோழகன்.

இந்த கொள்ளைச்சம்பவத்தில் ஞானதேவனோ மல்லப்பசோழகனோ எவ்விதத்திலாவது சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு ஒற்றர் குழுவும் அவன்பின்னே அனுப்பப்பட்டது.

முதலில் சொக்கலிங்க சேதுராயனைக் கண்டுபிடித்தாகவேண்டும். ஒருவேளை, செய்தியை அரண்மனைக்கு கொண்டு செல்லமுடியாதவகையில் அவன் வழிமறித்து தாக்கப்பட்டிருக்கலாம்’

சேதுராயனை பல்வேறு இடங்களில் தேடத் துவங்கினான். கிடங்கிலிருந்து அரண்மனை திசை நோக்கிச் செல்லும் பல்வேறு காட்டுவழிப் பாதைகளையும், பொட்டல்வெளிகளையும் சரியாக மனதில் வைத்து தேடத் துவங்கியிருந்தான்.

மல்லப்பசோழகனின் கணக்கு தவறவில்லை. ஆளரவமற்ற பொட்டல்வெளியொன்றில், பட்டமரத்தில் பலத்த காயங்களுடன் வலுவாகக் கட்டப்பட்டிருந்தான் சேதுராயன். தண்ணீரின்றி உயிர்போகும் நிலையிலிருந்தவனை பரபரப்பாய் இயங்கி மீட்டு, மருத்துவனிடம் கொண்டுசேர்த்தான்.

சுயநினைவுக்கு வந்தவனிடமிருந்து தாக்கியவர்களின் அங்க அடையாளங்கள், முத்திரைகள், வந்துசென்ற திசை என அனைத்து தகவல்களையும் திரட்டத் துவங்கினான்.

ல்லப்பசோழகன் அரண்மனையில் நேர் நிற்கவேண்டிய நாள்.

அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும் பரபரப்பு காணப்பட்டது. இதுவரை கண்டிராத மாபெரும் உணவுக்கொள்ளை இது என்பதால் குற்றவாளிகளைக் கண்ணுற பெரும் கூட்டம் கூடியிருந்தது.

உடல்முழுதும் விலங்கிடப்பட்டநிலையில் முதன்மையாக ஒருவன் இழுத்துவரப்பட, அவனுக்குப் பின்னால் ஒரு கூட்டம் சங்கிலியால் மொத்தமாக பிணைக்கப்பட்டு இழுத்துவரப்பட்டது. அனைவருக்கும் முன்னால் சென்றுகொண்டிருந்த மல்லப்பசோழகன் விசாரனை அதிகாரிகளை வணங்கி நின்றான்.

“மேன்மைக்குரியீர்.. இதோ, முன்னால் நிற்கும் இவன் இந்தக் கிடங்கின் காவலர்களில் ஒருவன். மகதநாட்டு அரசன் விரித்த வலையில் சிக்கிக்கொண்ட இவனே நமக்கு மாபெரும் துரோகியாக செயல்பட்டிருக்கிறான். இவன் மூலமாகவே இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் அவர்கள். ஏனையோர் மகதநாட்டின் ராஜகிரகத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள். கொள்ளையடிப்பதற்கும், கொள்ளையடித்த தானியங்களை கங்கை நதியின் தென்பகுதிக்கு எடுத்துச் சென்று பதுக்கி வைப்பதெற்குமென இரண்டு கூட்டம் அனுப்பப்பட்டிருக்கிறது. தொடர்ந்து நம்நாட்டிலேயே தங்கியிருந்து மொத்த தானியங்களையும் கொள்ளையடிப்பது, விளைநிலங்களில் நச்சுத்தன்மையை உண்டாக்கி கடும் உணவு பஞ்சத்தை உண்டாக்குவது போன்ற திட்டங்களுடனே இவர்கள் இங்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.”

“நம் மக்களும் வீரர்களும் பஞ்சத்தில் வீழ்ந்து, போராடும் மனநிலையை இழக்கும் தருணத்தில் போர் தொடுக்க தயாராகக் காத்திருக்கிறான் அந்நாட்டு மன்னன். தக்க சமயத்தில், முதல் கொள்ளையிலேயே தானியங்களுடன் பிடிபட்டுவிட்டார்கள்”

சபை மொத்தமும் அதிர்ந்து வியந்து நின்றது.

ன்னன் முன்பு பணிவாய் நின்றிருந்தான் மல்லப்பசோழகன்.

“மல்லப்பா, குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்ட நீ, இன்று இந்த நாட்டையே காப்பாற்றியிருக்கிறாய். உனது வீரம், அறிவுக்கூர்மை, நட்பை போற்றும் விதம் என அனைத்தும் என்னை வியக்கவைக்கிறது. செயற்கரிய செயலை செய்திருக்கும் உனக்கு இந்த அரசாங்கத்தில் உயரிய பதவியொன்றை வழங்க விரும்புகிறேன், ஏற்றுக்கொள்.”

“அரசே.. ஒரு மாவீரனாக உங்கள் மனதில் கிடைத்திருக்கும் ஆசனமே எனக்கான மாபெரும் பேறு. என் உயிர் நீங்கும்வரை இது ஒன்று போதும் அரசே. எங்கள் மன்னர் கோப்பெருஞ்சிங்கனின் பாதுகாப்பு பொறுப்பை சிரமேற்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து அந்தக் கடமையை நிறைவேற்ற என்னை அனுமதிக்கவேண்டுகிறேன்”

“ம்.. கொடுத்து வைத்தவன் கோப்பெருஞ்சிங்கன். உனது செயல்களும் குணாதிசயமும் அவனுக்கு நன்மை பயப்பதாக அமையட்டும். அதற்கு அச்சாரமாக, கோப்பெருஞ்சிங்கனின் வரையறைக்குள் வருகின்ற நீடூர் விளைநிலங்களின் விளைச்சல் அத்தனைக்குமான இரண்டு வருட வரியை ரத்து செய்கிறேன். உனது மன்னன் உன்னை கௌரவிப்பானாக.”

குதிரைகளும் யானைகளும் புடைசூழ மல்லப்பசோழகனை அவனது இல்லத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடானது. ஆனால், நண்பன் ஞானதேவன் குறித்த கவலைகள் அதீதமாய் மனதை ஆக்கிரமித்திருக்க, அரண்மனை ஏற்பாடுகள் அனைத்தையும் புன்னகையுடனே மறுத்துவிட்டு, அவனைக் காண அவசரமாய் புறப்பட்டான் மல்லப்பசோழகன்.

சந்துரு மாணிக்கவாசகம்
சந்துரு மாணிக்கவாசகம்
1. பெயர்: சந்துரு மாணிக்கவாசகம் 2. தஞ்சையை பூர்வீகமாகக் கொண்டு, திருச்சி உறையூரில் பிறந்து வளர்ந்தவன். 3. பிஷப் ஹீபர் கல்லூரியில் வணிகவியல் பட்டத்தைத் தொடர்ந்து, அரசு திரைப்படக்கல்லூரியில் திரைக்கதை எழுதுதல் மற்றும் இயக்குனர் பிரிவில் பட்டயம் (BCom DFTech) பெற்றேன். 4. பல சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளேன். சிறுகதைகளில் யதார்த்த வாழ்வை, நிகழ்வுகளை பிரதிபலிக்கவே அதிக விருப்பம். மற்ற பிரசுரங்கள் வெளியிட்டுள்ள சிறுகதை தொகுப்புகளில் எனது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. விரைவில் பிரசுரமான மற்றும் பரிசுபெற்ற எனது சிறுகதைகளின் தொகுப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். 5. 2015-ஆம் ஆண்டு எனது இயக்கத்தில் ’அவள் வண்ணதினுசேஷம்’ என்ற மலையாளத் திரைப்படம் வெளியாகியுள்ளது. 6. நீ நான் நிலா, அசுரகுரு போன்ற தமிழ் திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகவும், வெளியீட்டிற்கு தயாராகவுள்ள ’கிழக்கு பாத்த வீடு’ திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன். 7. தமிழக அரசு விருது பெற்ற குறும்படம், திரைப்பட விழாக்களில் பங்குபெற்று பாராட்டப்பட்ட குறும்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மத்திய, மாநில அரசுத் துறைகளுக்கான ஆவணப்படங்கள், விளம்பரங்கள் இயக்கியுள்ளேன். 8. தற்பொழுது, தமிழ்த் திரைப்படம் இயக்குவதற்கான ஆயத்தப் பணிகளிலும், சில திரைப்படங்களுக்கு வசனகர்த்தவாகவும் பணியாற்றி வருகிறேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -