தனிப்பெருங்கருணை

சிறுகதை

- Advertisement -

அமுதன் அவரசர அவசரமாக தெம்பனீஸ் சென்ட்ரல் பார்க் நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். கொஞ்சம் தொளதொளப்பான கையில்லாத ஊதா பனியனையும், கருப்பில் கால்சராயும், சப்பாத்துகளும் அணிந்திருந்தான். அவன் பனியனில் இடது பக்கம் நெஞ்சுப் பகுதியிலும், கால் சப்பாத்துகளிலும் நைக் என்று ஆங்கிலத்தில் எழுதி அதன் மேல் ஒரு டிக் இருந்தது.

சற்றுமுன் பெய்த மழையால் அந்தப் பூங்காவின் அழகு மெருகேரியிருந்தது. கடந்த வாரம்வரை முடி வெட்டாத, முகம் சிரைக்காத காட்டுச்சாமியார் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த பூங்கா. இப்போது கொரோனா கொஞ்சம் ஓய்ந்ததால் கத்தரரிக்கப்பட்டு புதுமாப்பிள்ளைப் போல் ஜொலித்தது. மரங்களில் இன்னும் வடியமுடியாமல் தொங்கிக்கொண்டிருந்த நீர் முத்துக்கள் தெம்பனீஸ் ஹப்பை பொத்துக்கொண்டு வெளிவந்த கதிரவனின் புதுக்கதிர்களால் எரிந்துகொண்டிருந்தன. அமுதன் அவன் கடிகாரத்தைப் பார்த்தான் அதில் மணி ஆறு இருபது எனக்காட்டியது. அதை இரண்டு முறை அமுத்தி அவன் ஓட்டத்தைக் கணக்கிடும் படி செய்தான்.

நானூறு மீட்டர் சுற்றளவுள்ள அந்தப் பூங்காவில் இது அவனுக்கு நாலாவது சுற்று. அவனை முந்திக்கொண்டு ஓடும் சிறுவன் இப்போது அவனை நாலாவது முறையாக முந்திக்கொண்டு ஓடுகிறான். அமுதனின் ஓட்டத்தில் அவ்வளவு வேகம். இன்னும் இரண்டு சுற்றுகளில் முடித்துவிடுவான். அவ்வளவு தான் அவனால் முடியும். இந்த ஓட்டம் கூட கொரானாவின் புண்ணியத்தில் வீட்டிற்குள் அடைபட்டுக்கிடக்க முடியாமல் தொடங்கியது தான்.

இல்லை இல்லை ஐந்தாவது சுற்றிலேயே அசந்துவிட்டான். அந்தப் பூங்காவின் மையத்தில் இருக்கும் குழந்தைகள் விளையாடுமிடத்தில் அவன் மகள் அபி விளையாடிக்கொண்டிருந்தாள். அங்கே அபியின் அம்மா அவள் தோழிகளோடு அமர்ந்திருந்ததால் முன் தொப்பையை முடிந்தளவிற்கு உள்ளே இழுத்துக்கொண்டு சென்றான். எத்தனை முயற்சி செய்தும் அவன் தொப்பை அவனுக்கு கொஞ்சம் கூட ஒத்துழைக்கவில்லை. அவன் எதிரே அரைவட்டம் போல் நின்றுகொண்டிருந்த குழந்தைகள் “அங்க்கிள்… அங்க்கிள்…” என்று அவனை எச்சரிக்கை செய்வதுபோல் கத்தின.

தொப்பையில் முழுக்கவனத்தையும் வைத்திருந்த அவன் மிதித்தே விட்டான். மிதித்ததை அவன் கால் நன்றாகவே உணர்ந்தது. சப்பாத்தையும் மீறி முறிந்து நொறுங்கும் சத்தம் பாதத்தில் பரவியது. அந்தப் பிள்ளைகளில் கொஞ்சம் உயரமானவர்கள் அவனை முறைத்தும் சிறுவர்கள் வெறித்தும் பார்த்துக்கொண்டிருந்தனர். வேகமாக அவன் கண்கள் அபியைத் தேடின.

“அப்பா… அப்பா…” என்ற அவளின் அழுகை அவன் காதுகளுக்குள் எதிரொலித்தது.

நிச்சயம் அவளால் இதைத் தாங்கிக்கொள்ள முடியாது. அவன் மனம் பதறியது. உடலில் வியர்க்கும் சுரப்பிகள் வெறிபிடித்தது போல் வியர்வையை வெளித்தள்ளின. அவன் கால்கள் லேசாக நடுங்கத் தொடங்கின. இதயத்தின் வேகம் அவனை நான்கு முறை முந்திச் சென்ற சிறுவனின் வேகத்தையும் முந்தியது. ஒரு குளிர்ச்சியான உயிர் காற்று சப்பாத்தைக் கிழித்து பாதம் வழியே ஊடுருவி இதயத்தை முட்டியது. அசையாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தான்.

அரைவட்டத்தில் நின்ற குழந்தைகளில் சிலர் தலையிலடித்துக்கொண்டு களைந்து சென்றனர். அபியின் அழுகைச் சத்தம் அடங்காமல் அவன் காதுகளை நிறைத்துக்கொண்டிருந்தது.

அவன் நகர்ந்து தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. அபி அவ்வளவு எளிதாக சமாதானமடைபவள் அல்ல. இந்த வலி அவளைக் குறைந்தது ஓர் இரவாவது உறங்காமல் செய்துவிடும்.

“ஏம்பா இப்படி பண்ணுனீங்க? போங்கப்பா… போங்க…” வெறிகொண்டு கத்திக்கொண்டிருந்தாள்.

அவனுக்கு இடப்புறம் இருந்தவளைக் குனிந்துப் பார்த்தான். எரித்துவிடும் சின்ன வள்ளாலார் போல அண்ணாந்துபார்த்து முறைத்துக்கொண்டிருந்தாள்.

“காலெடுங்கப்பா… காலெடுங்கப்பா…” காலிலேயே நாலைந்து முறைக் குத்தினாள்.

அப்படியே குத்தவைத்து அமர்ந்தாள். அங்கே பூத்துக்கிடந்த செம்பருத்தி ஒன்று வாடி அழுவதுபோல் அவள் பிஞ்சு முகம் தொங்கிப்போயிருந்தது. அணிந்திருந்த இளஞ்சிவப்பு கவுன் தரையில் விரிந்து கிடந்தது. சென்ற வாரம் அவளின் நான்காவது பிறந்தநாளுக்காக அணிந்திருந்த அதே கவுன். அவளுக்கு மிகவும் பிடித்த கவுன். அது அழுக்காவதைப் பற்றிய எந்த சிந்தனையும் அவளுக்கு இப்போது இல்லை. நேற்று வரை மடித்துக் கிடந்த அந்தக் கவுனைத் தொட்டாலே “கை எடுங்கப்பா… அழுக்காயிடும்” என்று அதட்டிக்கொண்டிருந்தாள். இப்போது அவள் கவனம் முழுவதும் அமுதன் காலிலேயே இருக்கிறது.

காலைத் தூக்கினான். நொறுங்கிப் போய் நினமும் சதையுமாக கிடந்தது அது. அவன் சப்பாத்திலும் கொஞ்சம் ஒட்டியிருந்தது.

“பாவம்…. பாவம்… கொன்னுடீன்களேப்பா…” தேம்பித் தேம்பி அழுதாள்.

“அப்பா தெரியாமா மிதிச்சுட்டேன்டா குட்டி…”

“போங்கப்பா… பாவம்… அது பாட்டுக்கு நடந்து போய்க்கிட்டு இருந்துச்சு…” கண்களைத் துடைத்துக்கொண்டு “ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…” என்று தேம்பிக் கொண்டே இருந்தாள்.

“என்னங்க என்னாச்சு?” அத்தனை பெரிய விவாதங்களுக்கு மத்தியில் ஒரு வழியாக அபியின் குரல் அவள் அம்மாவை எட்டிவிட்டது. அவள் கழுத்தில் நிற்க அடம்பிடித்துக் கொண்டிருந்த துப்பட்டாவை தூக்கி மரயிருக்கையில் வைத்திருந்த கைப்பை மேல் போட்டுவிட்டு இரண்டு எட்டுகள் வேகமாக வைத்து முன்னேறி வந்தாள்.

“ஒண்ணுமில்ல நத்தைய மிதிச்சுட்டேன்”

“இதுக்குத் தான் இந்த ஆர்பாட்டம் பண்றாளா? நான் கூட என்னுமோன்னு நினைச்சேன்.”

மறுபடியும் அவள் விவாதத்தை விட்டயிடத்திலிருந்து தொடரச் சென்றுவிட்டாள்.

அமுதன் குனிந்து அபியைத் தூக்கினான்.

“பாவம்ப்பா… பாவம்ப்பா… நீங்க தானேப்பா எதையும் கொல்லக்கூடாதுன்னு சொன்னீங்க.”

அப்போது தான் கடலில் இருந்து வெளிவந்த டால்பின் போல அவன் கைகளுக்குள் அடங்காமல் துள்ளிகொண்டே இருந்தாள் அபி.

கவனமில்லாமல் எடுத்துவைத்த ஒரு அடியில் அன்புக்குரியவளின் மனதில் கொலைகாரனாகிவிட்ட அமுதன். இனி வைக்கப் போகும் ஒவ்வொரு அடியும் அவற்றைப் பின்தொடரும் அபியின் மீதுகொண்ட அக்கறையாக வேண்டுமென்று எண்ணிக்கொண்டே அவளை இறுக அணைத்துக்கொண்டான்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -