சாகாத பிணம்

- Advertisement -

புதைத்துக்கொண்டு தானிருக்கிறேன்

ஒவ்வொரு நாளும் புதைக்கிறேன்

அவனை நான் தோண்டுவதேயில்லை

எப்படியோ வெளி வருகிறான்

கூரான நகங்களில்லை

கோரைப் பற்களில்லை

அச்சமூட்டத் தேவையான எதுவுமில்லை

அழகாக சிரிக்கிறான் 

அடிவயிற்றில் ஊரும் எறும்பாகி

என்னுள் சிலிர்க்கிறான்

ஒரு நாளில் ஓரிரு முறையாவது

வருகிறான்

நான் புதைத்துக்கொண்டே தானிருக்கிறேன்

எதிரே வரும் ஊதாச் சட்டைக்காரனின் 

உயரமிருப்பான்

என் அண்டைவீட்டுக்காரின் 

கன்னக்குழிகளுக்குள்ளும் பதுங்கியிருப்பான்

காய்கறி வாங்கச் சென்றால் 

பல்லிளிக்கிறான்

கல்லூரிக்கும் வந்தான்

இப்போது என் அலுவலகத்திற்குள்ளும் 

இருக்கிறான்

நான் புதைத்துக்கொண்டே தானிருக்கிறேன்

என் வயதில் அவனுக்கொரு 

பேத்தியிருந்திருக்கலாம் 

அப்போது அவன் 

அவளை நினைத்திருக்கலாம்

எல்லாம் அவன் தவறு தான்

என் மேனியில் ஊரும் 

அட்டைப் பூச்சிகளுக்கெல்லாம்

காரணம் அவன் தான்

அவனைப் புதைத்த இடத்தில்

முளைத்த அரளிச்செடி மரமாகிவிட்டது

ஆனால் நான் மட்டும் அவனை 

ஒவ்வொரு நாளும்

புதைத்துக்கொண்டே தானிருக்கிறேன்

பெரியகருப்பன்
பெரியகருப்பன்
கதை கவிதைகள் என படைப்புலகில் தன்னைத் தகவமைத்துக்கொண்டிருக்கும் இவரின் படைப்புகள் பெரும்பாலும் சமூக அக்கறை கொண்டவையாக இருப்பது சிறப்பு. தன் படைப்புகளை மின்கிறுக்கள் தளத்திற்காக எழுதிவருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -