காண முடியாத கண்கள்
கண்ணால் கண்டதை மட்டுமே
கருத்தாய் ஏற்க முடியுமென்றும்
காணாத விஷயங்கள்
கட்டுக்கதைகளே என்றும்
கடுமையாக விவாதம் செய்தான்
கண்களே இருந்தாலும்
கண்ணாடியின் உதவியின்றி – யாரும்
காணமுடியாதே தன் முகத்தை
தொட்டுப் பார்த்து
தெரிந்து கொள்வேன்
காற்றை எவ்வாறு தொடுவாய்
காற்றில் மிதந்து வரும்
மணத்தை எவ்வாறு தொடுவாய்
நுகர்வதால் தெரியாதோ மணம்?
உணர்வதால் தெரியாதோ காற்று?
அருகிலேயே இருந்தாலும்
அண்டை மனிதரின் பசியை
உணர்ந்திட முடியுமோ ?
காதலியாகவே இருந்தாலும் அவள்
கண்ணீரின் சூட்டை
உணர்ந்திட முடியுமோ?
கேள்விக்கு பேச்சற்று நின்றான்
குறுகிய பார்வை – காண்பவனின்
குறையே அன்றி வேறென்ன?
மேகத்தைப் பிரியாத மழைத்துளி
கடலின் ஆழத்தை உணருமோ?
ஜன்னலின் வழி தெரியும் உலகம்
சதுரமாய் தோன்றாதோ?
காண்பதை மட்டுமே நம்புபவன்
கானல் நீரைப் பருக
காலம் முழுவதும் காத்திருப்பான்
தொலைதூர விண்மீனோ
தொடும்தூர கூழாங்கல்லோ
அதுவாக ஆக முடிந்தவனே
காணாததைக் காணும்
கண்களைப் பெற்றவன்
இருட்டையே பார்ப்பவனின் காதுகளில்
வெளிச்சத்தைப் பற்றிய வர்ணனைகள்
வீணான விதண்டா வாதங்களன்றோ ?
இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்