ஆதரவற்ற ஏழைப் பெண்ணின் தாயுள்ளத்தையும் சுயமரியாதையுணர்வையும் சொல்லுவதே ஜெயகாந்தனின் “இரண்டு குழந்தைகள்” சிறுகதை. எளிய கருவானாலும் உள்ளம் உருக்கும் வகையில் கதையாக்கியுள்ளார்.
வசதியுள்ளவர்கள் வாழும் தெருவில் சிகப்பியும் அவள் நான்கு வயது மகனும், சுப்பு ஐயர் மனைவி தயவில் அவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் மாட்டுக் கொட்டகையில் இடம்பிடிக்கின்றனர். அண்டை வீடுகளில் உடல் நோக வேலை செய்து தங்கள் இருவரையும் பராமரிக்கிறாள் சிகப்பி. சுப்பு ஐயரின் மனைவியிடம், தன் உழைப்பிற்கு ஈடாக வடித்த கஞ்சியை மட்டும் பெற்றுக் கொள்கிறாள். ஆனால் அதுகூட சுப்பு ஐயருக்கு உறுத்துகிறது. உலகத்தில் உள்ள சத்தெல்லாம் அந்த கஞ்சியில் தான் இருக்கிறது என்றெண்ணுகிறார். ஒவ்வொரு முறை சிகப்பி கஞ்சி வாங்க வரும்போதும் பொரிந்து தள்ளுகிறார்.
பொறுமையின் சிகரமாய் இருக்கும் சிகப்பி, ஒருநாள் சுப்பு ஐயர் தன் மகனை எச்சில் பண்டத்தை சாப்பிடத் தூண்டும் போது பொங்கி எழுகிறாள். எப்பொழுதும் கொஞ்சி மட்டும் பழகிய மகனைக் கண்டிக்கிறாள். சுப்பு ஐயரிடமும் சீறி விழுகிறாள். வாங்கிய கஞ்சித் தண்ணியையும் கொட்டி கவிழ்த்து விட்டுச் செல்கிறாள்.
ஆசிரியர் கதை சொல்லி இருக்கும் விதத்தில் ஒவ்வொரு காட்சியும் நம் மனதில் படமாய் விரிகிறது. சிகப்பியை விவரிக்கும் வார்த்தைகளில் அவள் மொத்த உருவமும் முன்னே தோன்றுகிறது. அவளுக்கும் அவள் மகனுக்கும் இடையேயான பாசக் காட்சிகள் படிப்பவர் உள்ளத்தில் அன்பைக் கசிய வைக்கின்றன.
உணவு கிடைக்குமென்றால் எத்தகு அவமானத்தையும் பொறுத்துக் கொள்ளுவோர் மத்தியில் கஞ்சிக்கு வழி இல்லா நிலையிலும் தன்மானம் காத்துக் கொள்ளும் சிகப்பி குணத்தில் உயர்ந்து நிற்கிறாள். மகனுக்காக, கடின வேலைகளை ஊமையாகச் செய்யும் போது நம்மை அவள்பால் பரிவு கொள்ள வைக்கிறாள். அதே சமயம், “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்பதிற்கிணங்க, சுப்பு ஐயரிடம் ஆக்ரோஷமாக இரையும் போது கிடுகிடுக்கவும் வைக்கிறாள்.
மேல்தட்டு மக்கள் சிலர், கீழ்த்தட்டு மக்கள் மேல் காட்டும் அலட்சியத்தையும் அடக்குமுறையையும் தெளிவாகக் காட்டுகிறார் ஆசிரியர். சுப்பு ஐயர் ஒவ்வொரு முறையும் சிகப்பியையும் அவள் மகனையும் சீண்டும் வார்த்தைகளால், சில வசதியுள்ளவர்கள் மனதில் தேங்கி இருக்கும் வக்கிரத்தை வெளிக்கொணர்கிறார். சுப்பு ஐயரின் மனைவி, சிகப்பிக்காக சமயங்களில் சுப்பு ஐயரையே பகைத்துக் கொள்ளும்போது ஆசிரியர், கோபத்தை ஐயரிடமும் குணத்தை அவர் மனைவியிடமும் வைத்து விட்டாரோ? என்று தோன்றுகிறது.
வறிய நிலையிலும் மகனை ராஜாவைப் போல் எந்நேரமும் இடுப்பில் தூக்கி வைத்து கொஞ்சி மகிழ்கிறாள் சிகப்பி. ஆனால் தன்னைத் தேடி அழும் மகனைச் “சனியன்” என்று சலிக்கிறாள் செல்வச் செழிப்பில் வளர்ந்த சுப்பு ஐயரின் மகள். இந்த இரண்டு குழந்தைகளின் வர்க்க வேறுபாடுகளோடு, அவர்களின் தாய்மார்களின் மன வேறுபாடுகளும் மறைமுகமாக நமக்கு உணர்த்தப்படுகிறது.
சில சமயம் அதிகாரம் ஏதுமில்லா எளிய மக்கள் காட்டும் கம்பீரம் நம்மை வியப்பிலாழ்த்திவிடுகிறது. அது உண்மை தரும் கம்பீரம். அந்த வரிசையில் இந்த “இரண்டு குழந்தைகள்”, நம்மை “சபாஷ்” போட வைக்கும் ஒரு ஏழைத் தாயின் தன்மானச் சீறல்.