வசந்தகாலமொன்றில்
பனித்துளியோடு மலர்க்கொத்தொன்று
என் கரங்களில் வீழ்ந்தது.
மகிழ்ச்சி இதழ்கள் உதிர்ந்த பாதையில்
பயணமென்ற போதிலும்
ஆங்காங்கே சிறுசிறு கற்கள் குத்துகின்றன.
சில கண்ணாடித் துகள்களும்கூட
நெருஞ்சி முட்களை பிடுங்க வேண்டியுள்ளது.
எப்படியோ மழைக்கு ஒதுங்கினாலும்
சேறு சகதிக்குள் புரள வேண்டியுள்ளது.
பள்ளம் மேடுகளில் கவனம் கொள்ளவேண்டியுள்ளது.
இந்தப் பயணத்தின் பாதையில்
இன்னும் எவ்வளவோவென்று
தலைசுற்றும் வேளையில்
பாலைவனமொன்றில் நாவறண்டு கிடக்கிறேன்.
இப்போது அழத்தான் முடியுமா?
வந்தவழியே திரும்பத்தான் முடியுமா?
தெளிவற்ற பார்வையில் விளங்கவேயில்லை.
விழிகளைத் தேய்த்துப் பார்த்தால்
நீர்க்குப்பியோடு பூங்கொத்தையும் கொடுத்து வரவேற்கிறது
ஓர் ஒட்டகம்…
நானும் அடுத்த கட்டத்தை நோக்கி
ஆயத்தமாகிவிடடேன்!!