வர்ணஜாலம்

நூலாசிரியர் : எண்டமூரி வீரேந்திரநாத்

- Advertisement -

தெலுங்கு மூலம் : எண்டமூரி வீரேந்திரநாத்

தமிழில் : கௌரி கிருபானந்தன்

வெளியீடு: அல்லயன்ஸ்

வீரேந்திரநாத் கதைகள் என்னை அதிகம் ஈர்க்கக் காரணம் அவற்றின் வேகமும், கதாபாத்திரங்களின் விவேகமும் தான். தொழில் துறையில் நடக்கும் பல விஷயங்களை ஸ்வாரஸ்யம் குன்றாமல் கூறுவார். நிறுவனச் சட்டங்கள், இன்ஷுரன்ஸ், ஸ்டாக் மார்க்கெட் குறித்த தகவல்கள் கதையின் போக்கொடு இணைத்து போரடிக்காமல் தருவார். கதையின் கருவும் தெலுங்கு திரைப்படப் பாணியில் தடாலடியாக இருக்கும்.

பக்கத்திற்கு பக்கம் திருப்பங்களுடன் இறுதி வரை விறுவிறுப்பை கூட்டிக் கொண்டே போவது எண்டமூரி வீரேந்திரநாத்தின் ஸ்டைல். இந்த நாவலும் அதற்கு விதிவிலக்கல்ல. குணத்திலும் பணத்திலும் இரு துருவங்களாக இருக்கும் இருவரை ஒன்றிணைத்து வர்ணஜாலம் படைத்திருக்கிறார் வீரேந்திரநாத். மூலத்தை வாசித்த அதே திருப்தியைத் தருகிறது கௌரி கிருபானந்தன் மொழிபெயர்ப்பு.

மனிதர்களின் மேல் அசாதாரண நம்பிக்கையைக் கொண்ட கார்த்திகேயன். சிறுவயதில் இருந்தே யாரையும் நம்பக் கூடாது என்கிற கொள்கையோடு இருக்கும் ஶ்ரீ கல்யாணி. இவர்களுக்கு இடையே ஒரு புயலென நுழையும் அனுஜா. இந்த மூவரின் உணர்ச்சிகளுக்கு நடுவில் நடக்கும் போராட்டமே கதை.

கார்த்திகேயனுக்கும் ஶ்ரீ கல்யாணிக்கும் இடையேயான அறிமுகம், ஒரு தொலைபேசி அழைப்பின் போது நிகழ்கிறது. முதல் தடவையிலேயே அவன் மேல் கோபம் கொள்ளும் ஶ்ரீ கல்யாணி அவனைப் பழி வாங்கத் துடிக்கிறாள். ஆனால் அவளைத் தனது உயர்ந்த பண்பால் ஒவ்வொரு முறையும் வீழ்த்துகிறான் கார்த்திகேயன். சந்தர்ப்பவசத்தால் இருவரும் திருமண பந்தத்திற்குள் நுழைகிறார்கள். ஒரு ஓவிய போட்டியின் போது கார்த்திகேயனை சந்திக்கும் அமைச்சரின் மகளான அனுஜா, அவன் குணம் கண்டு காதலில் விழுகிறாள். இதற்கிடையில் ஶ்ரீ கல்யாணியை அவளின் சொத்துக்காக தீர்த்துக் கட்ட ஒரு கும்பல் திட்டமிடுகிறது. இறுதியில் என்னவானது என்பது தான் கதை.

கதையின் ஆரம்பத்தில் ஒவ்வொரு சம்பவத்தின் முடிவிலும் twist ஒன்று வைத்து நம்மை திணறடிக்கும் வீரேந்திர நாத், போகப் போக ஓவர் டோசால் சற்று சலிப்பையும் தந்து விடுகிறார். முக்கியமாக அனுஜா கார்த்திகேயனை ஏமாற்றும் இடங்களில் நம் பொறுமை சோதிக்கப்படுகிறது.
கதையும் சற்று நீளம். இரண்டு பாகங்கள் கொண்ட கதை.

அவரின் பிற படைப்புகளான ‘ பணம்’ , ‘ தூக்கு தண்டனை ‘ ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் பல இடங்களில் இந்நாவல் சறுக்கினாலும்,
Serious reading இல் இருந்து சற்று இளைப்பாற நினைப்பவர்களை நிச்சயம் ஏமாற்றாது.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -