வன்மம்

சிறுகதை

- Advertisement -

புயலடித்துச் சற்று ஓய்ந்திருக்கிறது என் வாழ்க்கை. புயல் என்று கூடச் சொல்ல முடியாது. சூறாவளி இல்லை இல்லை சுனாமி. ஆம் சுனாமி தான். என் மானத்தை மரியாதையை வாழ்க்கையை மொத்தமாகச் சுருட்டி எடுத்துக்கொண்ட சுனாமி.

அழுதழுது என் கண்கள் காய்ந்துவிட்டன. அறையை விட்டு வெளியே செல்லவே வெட்கமாக இருக்கிறது. என் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இது தெரிந்தால் என்னாவது? அப்பாவை அம்மாவை அண்ணனை அக்காவை எப்படி எதிர்கொள்வேன். கடைக்குட்டி என்று என்மீது இவர்கள் வைத்திருந்த அதீதமான பாசம் இனிமேலும் இருக்குமா? இல்லை தங்கை தவறானவள் கெட்டுப் போனவள் இவளால் நமக்குக் கிடைத்தது அவமானமும் அசிங்கமும் மட்டுமே என வெறுத்து ஒதுக்குவார்களா?


என் தோழிகள் வாழ்க்கையைத் தொலைத்த ஏமாளி கோமாளி என்று என்னைப் பார்த்து ஏளனம் செய்வார்களா? தோழிகளின் தாய்மார்கள் இவள் கெட்டவள் நடத்தைச் சரியில்லாதவள் என்று கூறி அவர்கள் பிள்ளைகளை எச்சரிக்கை செய்வார்களா? நினைக்க நினைக்க வெட்கமும் அவமானமும் என்னைப் பிடுங்கித் தின்கிறது.


அவன் மனைவி என்னை விபச்சாரி என்றாள். அவளின் அக்கா என் கூந்தலைப் பற்றிக் கீழே இழுத்துத் தள்ளி மிதித்தாள். இன்னும் யார் யாரோ. எத்தனை அடி எத்தனை வலி அந்தக் கூட்டத்தில் சில ஆண்களும் கூட இருந்தனர். அவர்கள் அனைவரும் ஏதேதோ வார்த்தைகளைச் சொல்லித் திட்டினர் அவ்வளவும் விபச்சாரி என்ற ஒரே அர்த்தத்தையே தந்தன.


விபச்சாரி…. ஆம் நான் விபச்சாரி தான் இதோ மங்களகரமாக மஞ்சள் நிறத்தில் என் கையில் கிடக்கும் இந்த நைலான் புடவை தான் நான் செய்த விபச்சாரத்திற்குச் சம்பளம். காதல் என்ற ஒன்று பொய்யாகிவிட்ட பின் ஒருவன் தந்தச் சேலைக்கு மயங்கி முந்தி விரித்த நான் விபச்சாரி தானே.
நான் என்ன பாவம் செய்தேன் அவனை நல்லவன் என்று நம்பியதைத் தவிர. எனக்கு ஏன் இந்த விபச்சாரிப் பட்டம். திருமணம் ஆனதை மறைத்தவன் அவன். காதலிக்கிறேன் என்று நாடகமாடி என் கற்பைச் சூறையாடியவன் அவன். மாட்டிக்கொண்ட உடன் மனைவியின் காலில் சரணடைந்து என்னைக் கள்ளக் காதலியாய் மாற்றியவன் அவன். அத்தனை வேசித்தனங்களையும் செய்த அவன் உத்தமனகிவிட்டான் நான் வேசியாகிவிட்டேன்.


இனி வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. விபச்சாரத்திற்குச் சம்பளமாய்க் கிடைத்த இந்தச் சேலையே என் உயிரைக் குடிக்கட்டும். என் கட்டிலின் மேல் ஒரு சிறிய இரும்பு நாற்காலியை எடுத்துப் போட்டு ஏறினேன். வெள்ளைநிறக் காத்தாடி வேதாளம் போல் என்னைப் பார்த்துச் சிரித்தது. அதன் கழுத்தைச் சேலையின் ஒரு பாதியைக் கட்டி இறுக்கினேன்.

சரியாக என் கழுத்தளவில் சுருக்குப் போட்டுத் தொங்கியவுடன் சேலை என் கழுத்தை இறுக்கும்படி செய்துகொண்டேன். வற்றியிருந்த என் கண்களில் நீர் ஊறியது. எதிரே இருந்த கண்ணாடியில் என் அருவருப்பான அழுது வடிந்துகொண்டிருந்த முகம் தெரிந்தது. சிறிது நேரத்தில் நாற்காலியைத் தள்ளிப் பட்டென்று தொங்கிக் கழுத்தொடிந்து சாகப்போகிறேன். நினைக்க நினைக்கப் பயம் கூடியது தொடைகள் இரண்டும் கிடுகிடுவென ஆடியது.

இந்தப் பயம் கூடினால் என் எண்ணம் மாறிவிடுமோ என்ற பயத்தில் நாற்காலியிலிருந்து வேகமாகக் குதித்தேன். நான் குதித்த விசையில் நாற்காலி, கட்டிலில் இருந்து நழுவி கீழே ‘டாம் டூம்’ என்ற சத்தத்துடன் விழுந்தது. நான் எதிர்பார்த்த எதுவுமே என் வாழ்வில் நடைபெறாது போல. என் கழுத்து ஒடியாமல் சேலை என் கழுத்தை இறுக்கியது. மூச்சடைத்தது திடீரென்று தப்பிக்கும் எண்ணம் அதிகமானது கால்கள் பின்னிருந்த நாற்காலியைத் தேடின கைகள் எதையாவது பிடித்துத் தப்பும் எண்ணத்தில் காற்றில் நீச்சலடித்தன.
கழுத்தில் இறுக்கம் அதிகமானது கண்கள்  இருண்டது. யாரோ படபட வென என் அறைக்கதவைத் தட்டுகிறார்கள் “வெண்ணிலா… வெண்ணிலா…” ஆம் அது என் அம்மாவின் குரல் தான் எனக்காகக் கத்துகிறாள். உடலின் அனைத்துப் பாகங்களுக்குமான ஆக்சிஜன் குழாயில் விழுந்த முடிச்சால் என் முகத்திலும் கண்களிலும் உள்ள இரத்த நாளங்கள் வெடித்தன. நுரையீரலும் இதயமும் மூளையும் ஆக்சிஜனுக்காக ஏங்கின. மூவரில் யார் வேகமாக வெடிக்கப் போகிறார்கள் என்று என் ஆத்மா காத்துக்கொண்டிருந்தது.

எங்கள் வீட்டின் ஓட்டுக் கூரையிலிருந்து ஓர் அடி கீழே வெளிச்சத்திற்காக அமைக்கப்பட்டிருந்த வட்ட சாரளத்தின் வழியே என் அண்ணன் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். வெளியே இருக்கும் மாமரத்தின் மீது அவன் ஏறிக்கொண்டிருக்க வேண்டும். “அம்மா… அம்மா… அவ தூக்குல தொங்குறாம்மா…” தொண்டை புடைக்கக் கத்திவிட்டு அவன் அங்கிருந்து மறைந்துவிட்டான். வெளியிலிருந்து கதவை மடார்…. மடார்… என்று இடிக்கும் சத்தம் கேட்டது.

என் உடல் என்னை விரும்பாமல் துரத்தியடித்துவிட்டுக் காத்தாடியில் தொங்கிக்கொண்டிருந்தது. என் வலியெல்லாம் எங்கோ பறந்திருந்தது. கதவு உடைந்து விழுந்த சத்தத்தில் வீட்டுச் சுவர்கள் அனைத்தும் நடுங்கி நின்றன. வெளியே மாமரத்தில்  இருந்த பறவைகள் படபட வெனப் பறந்தன. என் அண்ணனும் அப்பாவும் எங்கள் ஹாலில் எப்போதும் கிடக்கும் மர டீப்பாயை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக்கொண்டு வெளியே நின்றனர். “ஐயோ! பாவி மகளே!…” அம்மா நெஞ்சிலும் வயத்திலும் அடித்துக்கொண்டு கத்தினாள்.

டீப்பாயைப் ‘பொத்’ என்று கீழே போட்டுவிட்டுத் தாவிக்குதித்து ஓடி வந்து என் காலைக் கட்டிக்கொண்டான் என் அண்ணன். “அப்பா… வாப்பா… வா… வந்து இறக்கு” கத்தினான். இனி எத்தனை வேகமாக வந்தாலும் பலனில்லை என்று அவருக்கு எப்படிச் சொல்வேன். அழாதே அம்மா உங்கள் அனைவருக்கும் வரவிருந்த மானக்கேட்டிலிருந்து உங்களை நான் காத்திருக்கிறேன். அழாதே அக்கா உனக்கு நல்ல இடத்தில் வரன் அமைவது இனி கெட்டுப்போகாது.
ஆத்மாவான பின் என் உடலருகிலேயே அமர்ந்திருந்தேன். சில முறை உட்புக முயற்சியும் செய்தேன். என் உடல் என்னைச் செமிக்காத உணவாகத் துப்பித் துரத்தியது. இறுதிச்சடங்கு முடிந்து என் முயற்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. என் குடும்பத்தினர் மீதிருந்த பற்றில் அவர்களுடனேயே தங்கியிருந்தேன். பதினாறாம் நாள் காரியத்தோடு அவர்களும் தலைமுழுகினர்.

இனி இங்கு வேலையில்லை என்பதால் அங்கிருந்து நகர்ந்தேன்.
ஊர் ஊராக அந்த அயோக்கியன் ரத்தினத்தைத் தேடினேன். அவன் குடும்பத்தோடு வீட்டைக் காலி செய்து எங்கோ ஓடியிருந்தான். அலைந்து திரிந்து ஒருவழியாகச் சில வருடங்களுக்குப்பின் அவனைக் கண்டுபிடித்தேன். பார்த்த அந்த நொடியே அவன் மீது பாய்ந்தேன். காற்றுக் குமிழைப் போல் அவன் என்னுள் புகுந்து சென்றுவிட்டான். நான் ஓர் ஆவி; வெறும் காற்று; அவனைத் தொடக்கூட முடியவில்லை. எப்படிக் கொல்வேன்? வழி தேடி தேடி அவன் பின்னே பேயாய் அலைந்தேன்.

வழிதோறும் ஆயிரம் அனுபவங்கள் மனிதர்களை மட்டுமே பார்த்து பழகிய நான் இன்று பல ஆத்மாக்களையும் பார்க்கிறேன். ஆன்மாக்களாக அலையும் அத்தனை பேரும் இயற்கையாக மரணமடையாதவர்களாகவே இருந்தார்கள். பல ஆன்மாக்கள் தாங்கள் இறந்துவிட்டதையே நம்பாமல் சுற்றித் திரிகிறார்கள்.
நான்கு வயது ராஜேஷ் ஒவ்வொரு நாளும் அவன் அம்மா அவன் நினைவாக வைத்திருக்கும் கரடி பொம்மையைக் கேட்டு அவளிடம் சென்று அடம்பிடிக்கிறான். அவனுக்கு எப்படிப் புரியவைப்பேன் நீ இறந்தே ஆறு வருடம் ஆகிறதடா தம்பி என்று. ஆவி உலகில் எங்களுக்கு என்றும் வயதாவதில்லை. எப்படி இறந்தோமா அப்படியே தான் இருக்கிறோம். காற்றிலாடும் மெல்லிய கண்ணாடித் துணிபோலக் கட்டற்ற சுகந்திரத்துடன் யாருக்கும் துன்பமில்லாமல் அலையலையாய் ஆடிக்கொண்டே நகர்கிறோம்.

ஆசை பந்தம் பாசம் காதல் கோபம் வன்மம் இப்படி ஏதோ ஓர் இழையால் எங்களைப் பிணைத்துக் கொண்டுள்ளது இந்த உலகம். அது மிக மெல்லிய இழைதான் என்றபோதிலும் அதை அறுத்தெடுக்க எங்கள் யாருக்கும் விருப்பம் இருந்ததில்லை அதுவாகவே அறுந்தால் தானுண்டு. அவன் அம்மா உயிரோடு இருக்கும் வரை ராஜேஷ் இங்குச் சுற்றித் திரிந்துகொண்டும் அந்தக் கரடி பொம்மையைக் கேட்டுக் கொண்டும் தானிருப்பான். அதே போல் என் கழுத்து இறுகியதைப் போல அந்த ரத்தினத்தின் கழுத்தை நெரித்து அவன் இதயம் வெடிக்கும் ஓசை கேட்டால் தான் என் வன்மம் தீரும்.

காலங்கள் கரைந்து ஓடின எங்கள் கூரை வீடுகளும் ஓட்டு வீடுகளும் இடிந்து விழுந்து காரை வீடுகளாகவும் அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் வளர்ந்தன. பிரம்மாண்ட நகர மலைப்பாம்பு எங்கள் கிராமத்தை முழுவதுமாக விழுங்கிவிட்டிருந்தது. ரத்தினம் அறுபத்து ஏழு வயது கிழவனாக மண்டை முழுவதும் பனியில் நனைந்த பன்றி போல் நரைத்துப் போய்த் தோல் சுருங்கி இருந்தான். நான் விரும்பிய அந்த ஊசி மீசையை மொத்தமாக வழித்து எடுத்துவிட்டிருந்தான். கிராமத்து ஓட்டு வீட்டில் ஆரம்பித்த அவன் வாழ்க்கை நாற்பதாண்டு கால ஓட்டத்தில் நகரத்தின் மையத்தில் நீச்சல்குளத்தோடு உள்ள பெரிய வீடாக கம்பீரமாக வளர்ந்து நிற்கிறது. வீடு மட்டுமல்ல மகன் மகள் பேரன்கள் பேத்திகள் என்று அவன் குடும்பமும் தான். ஒரு சிமென்ட் ஆலையை விட அதிகமான புகையைக் கக்குவதாலோ என்னவோ எப்போதும் இருமிக்கொண்டே இருக்கிறான்.

இந்தக் கிழவன் கழுத்தை நான் நெரிக்க வேண்டும். இவன் உயிர் பிரியும் அந்தத் தருணத்தை என் கைகளில் உணர்ந்து அனுபவிக்க வேண்டும். அவன் கிழட்டு ஆன்மாவைத் தெரு தெருவாக அலையவிட வேண்டும். இதற்காவே காத்துக்கொண்டிருக்கிறேன். எப்படி? எப்படிச் செய்வது?
உடல் தேடும் என் வேட்கை அதிகமானது. ரத்தினத்தின் மனைவி மகள் பேத்தி பேரன் என அத்தனை உடலிலும் புக முயற்சித்துத் தோற்றேன். சில பிணங்களுக்குள்ளும் நுழைந்தேன் அவை உயிரை பிடித்துவைக்கும் சக்தியை இழந்திருந்தன.

கருவிழிக்காகத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு கண்ணில் மட்டுமே இன்னொரு கருவிழி பொருந்தும். இறந்த கண்ணிலோ கருவிழி இருக்கும் கண்ணிலோ வேறொரு கருவிழியைப் பொருத்த முடியாது. அது போலவே உயிரும் உடலும். இதைப் புரிந்துகொள்ளவே எனக்கு இத்தனையாண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.

என் வன்மத்தை அறுத்து உலக வாழ்க்கையிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள மனம் ஒத்துக்கொள்ளவில்லை. வயது முதிர்ந்த பலம் கொண்ட கட்டை போல் என் மனதில் வன்மம் வைரமாக ஏறியிருந்தது. ஓர் உடல்… உயிருக்காகத் துடிக்கும் அந்த உடல்… அது தான் என் தேவை.
என் விண்ணப்பம் அந்த ஆண்டவனுக்கு எட்டிவிட்டது போல் ஒரு நாள் அதிகாலையில் ரத்தினம் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தான். நான் எப்போதும் போல் அவன் பின்னே அலைந்துகொண்டிருந்தேன்.  ‘டம்….’ என்று ஒரு பெரிய சத்தம் அதைத் தொடர்ந்து ‘ஆ….ஆ….ஆ….’ என்ற அலறல். பின் க்ரீச்…. என்ற டயர் தேயும் சத்தம். ரத்தினம் குடுகுடுவென ஓடி எட்டிப்பார்த்தான்.
இரத்த சகதியாக ஓர் இளம்பெண் ஓரத்தில் விழுந்து கிடந்தாள்.

அருகில்  நெளிந்து போய் ஒரு வெள்ளி நிற இன்னோவா நின்று கொண்டிருந்து. அதிலிருந்து இறங்கிய நடுத்தர வயது பெண் முன்னே ஓடி வந்து இரத்த வெள்ளத்தில்  துடித்துக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து கதறி அழுதாள்.  அந்தக் காரின் சர்க்கரம் ஒரு பத்தடிக்கு மேல் சாலையில் அடர் கருந்தளும்பை ஏற்படுத்தியிருந்தது. வறண்டு போய்கிடந்த சாலை தன் தாகத்தைத் தனிக்க அந்தப் பெண்ணின் உடலைப் பல இடங்களில் நக்கி எடுத்ததில் உடை முழுவதும் சிவப்பாக மாறியிருந்தது. மண்டை உடைந்ததா மூக்கு உடைந்ததா கன்னம் தேய்ந்ததா எங்கிருந்து இரத்தம் வருகிறது என்ற தெரியாத அளவிற்கு அவள் முகம் செந்தேனில் முக்கியப் பேரீச்சம்பழமாகி இருந்தது.

அந்த உடல் துடித்துக்கொண்டே இருந்தது வலி தாங்க முடியாத அந்த ஆன்மா கானல் நீராக அந்த உடலைவிட்டு வெளியேறியது. உடலின் துடிப்பு அடங்கியது. வாழும் ஆசைகொண்ட அந்த ஆன்மா மீண்டும் உடலுக்குள் புகுந்து அந்த உடல் துடிப்பதைக் கண்டேன். ஒரு நிமிடம் உயிர் போய் வந்தது என்கிறார்களே அது இது தானா? என் மனதில் ஏதோ பொறி தட்டியது. மீண்டும் உடல் துடிப்பு அடங்கியது. நான் எதிர்பார்த்த தருணம் இது தான்.

ஆ… ஆ… உடலெங்கும் வலி எரிச்சல் என்னால் தாங்க முடியவில்லை. என் கண்களைத் திறக்க முயற்சிக்கிறேன் முடியவில்லை. தலையில் பெரிய பாறாங்கல் இருப்பது போல் இருக்கிறது. வலி தாங்காமல் என் கை கால்கள் துடிக்கின்றன. இந்த வலியையும் வேதனையையும் நான் தாங்கித் தான் ஆக வேண்டும். இந்த உடல் எனக்கு வேண்டும். ஆ… ஆ… முனங்கினேன் தாகம் என் தொண்டையைத் தின்றது. தண்ணீர்…. தண்ணீர்…. தண்ணீர்…..

மெதுவாகத் தூக்கத்தில் இருந்து விழித்தேன். நாற்பது வருடத்திற்குப் பிறகான தூக்கம் எத்தனை நாள் தூங்கினேன் என்று தெரியவில்லை. எழுந்துகொள்ள முடியவில்லை உடல் பாரமாக இருந்தது. தலையைச்சுற்றி ஏதோ இறுக்கிக்கொண்டு இருந்தது. வலது கால் பேண்டைடு சுற்றப்பட்டு வெள்ளை மரக்கட்டையாகக் கிடந்தது. குறிப்பாக எந்த இடம் வலிக்கிறது எந்த இடம் எரிகிறது என்று சொல்ல முடியாத அளவுக்கு உடலெங்கும் காயங்கள். மருத்துவமனையில் படுத்திருக்கிறேன்.

கண்களை வலதுபுறம் ஒதுக்கிப் பார்த்தேன். என் அம்மா, வீங்கியிருந்த கண்களைத் துடைத்துக்கொண்டே நானிருந்த அறைக்குள் நுழைந்தாள். என் பக்கத்தில் நெருங்க நெருங்க அடக்கமுடியாத அவள் கண்ணீர் பொத்துக்கொண்டு ஊற்றியது. அவள் நெஞ்சுக்குள் அடங்கிக் கிடந்த காற்று அவளை மீறி வெளியேறி அவளைக் குலுக்கியது. “ஐயோ ஏன் புள்ளை….” என்று வாய்திறந்த அம்மாவை அங்கிருந்த செவிலி அமைதிப்படுத்தினாள்.
அம்மா…. இவள் எப்படி என் அம்மாவானாள். இவள் இந்த உடலின் அம்மா, என்னைக் கட்டுப்படுத்துவது இந்த உடலின் மூளை, என்னைக் குழப்புகிறது. இந்த மூளைக்கு நான் அடிமையாகிவிடக் கூடாது. என் நினைவுகளை இதற்குள் புகுத்த வேண்டும். தலை வலிக்கிறது பயங்கரமாக வலிக்கிறது. “மஞ்சு… மஞ்சு…” அந்த அம்மாவின் குரல். அம்மா என்றழைக்க என் உதடுகள் துடிக்கின்றன. கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

உடலைவிட மனம் அதிகமாக வலித்தது. ஒவ்வொரு நாளும் மனம் எனும் குட்டை குழம்பிக்கொண்டே இருந்தது. ஆயிரம் குழப்பங்கள் இருந்தாலும் அவன் முகம் அழியாமல் பதிந்திருந்தது. அவன் கழுத்தை நெரிக்கப்போகும் அந்த நாளுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். வலிகளோடு சேர்ந்து காயங்களும் ஒன்றின் பின் ஒன்றாக மறைந்துகொண்டிருந்தன. என் கண்களுக்கு இப்போது எந்த ஆவியும் தெரிவதில்லை. மஞ்சு மட்டும் என்னைச்சுற்றி எங்கோ இருப்பது போல் ஒரு பிரமை.

மஞ்சுவிற்குக் கிடைக்க வேண்டிய அத்தனை சலுகைகளையும் அவள் வீட்டில் பெற்று என்னைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.  எழுந்து நடக்க இன்னும் நான்கு மாதங்களாகும் என்றார் மருத்துவர். அந்த நாட்களில் சக்கர நாற்காலியில் என்னைப் பொருத்தி இங்கும் அங்கும் நகர்ந்து கொண்டிருந்தேன். கட்டுப்பிரிக்கப் பட்டு சில நாட்கள் ஊண்ட முடியாத காலுக்குப் பதில் ஊன்றுகோல் தந்தார்கள்.

நான் முழுவதுமாகக் குணமடையச் சரியாக ஆறுமாதங்கள் பிடித்தன. காட்டெருமைத் தோலால் செய்யப்பட்ட கையுறையை மாட்டிக்கொண்டு. ஒரு மெல்லிய இரும்புக் கயிற்றைச் சுருட்டி என் கைப்பைக்குள் திணித்துக்கொண்டேன். இரத்தினத்தின் வீடிருந்த வீதிக்குச் சென்றேன், அவன் வீட்டிற்கு வெளியே சில ஜோடி செருப்புகள் தாறுமாறாகக் சிதறிக் கிடந்தன. வீடு திறந்தே இருந்தது ஏதோ விசேஷம் நடைபெறுவது போல் சிலர் இங்கும் அங்கும் அலைந்துகொண்டிருந்தனர்.

அங்கே நடுநாயகமாக இரத்தினத்தின் படம் சந்தனம் குங்குமம் பூமாலை சகிதம் வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் பேச்சிலிருந்து அங்கே பதினாறாம் நாள் காரியம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிந்தேன். என் மனம் அமிலக் குழம்பாகக் கொதித்தது.

அங்கிருந்த ஐயர் “உன் தோப்பனார் இறந்த நேரத்தையும் அவர் ஜாதகத்தையும் வச்சு பாக்குறப்போ அவருக்கு இந்த லோகத்துல கிடைக்க வேண்டிய ஒன்னு இன்னும் பாக்கியிருக்கு. அதனால் உன் பையனுக்குப் பேரனா அவரே வந்து பிறப்பார். கேட்டயா…” என்றார்.

அவரின் அந்த வார்த்தைகள் எனக்குப் புதிய தெம்பைத் தந்தன. ஆம் அவனுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனை இன்னும் கிடைக்கவில்லை. அதைத் தரும் வரையில் என் வன்மமும் தனியப் போவதில்லை.  அவன் பேரனுக்குப் பேரன் என்றால் இன்னும் எத்தனையாண்டு நான் காத்துக்கொண்டிருக்க வேண்டும். அதுவரை இந்த உடல் தாங்குமா சிந்தித்துக்கொண்டே அந்த வீட்டிலிருந்து வெளியேறினேன்.

என் கால்கள் என்னை அதன் வழியில் நகர்த்திக்கொண்டு சென்றன. ‘கூ……ங்ங்ங்…. டுடுக்… டுடுக்.. டுடுக்… ‘ மின்சார ரயில் ஒன்று என் காதுக்குள் ரீங்காரமிட்டது.  என் எதிரே ஒரு புள்ளியாக தொடங்கி அது பெருத்துக்கொண்டே வந்தது. இந்த உடலென்னும் சுமையை எப்படி இறக்குவது? நிமிர்ந்து பார்த்தேன் அந்த ரயிலின் வேகம் என் ஆத்மாவைப் பிரித்தெடுக்கச் சரியான வேகமே.

‘கூ……ங்ங்ங்…. டுடுக்…. டுடுக்.. டுடுக்… ‘

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -