ரூட்டுத் தல

சிறுகதை

- Advertisement -

முதலில் அவரை ராஜாராம் வேலைப்பார்க்கும் சலூனில் தான் பார்த்தேன். மிஷ்கின் போல் கருப்பு கண்ணாடி காட்டன், டெனிம் சட்டை – அரைக்கால் ஜீன்ஸ் டவுசர் என சிவப்பான உருவம். உதடு லிட்டர் கணக்கில்புகையிலை குடித்த வடு , கீழ் உதட்டில் ரோஸ் கலராக வெளிறி இருந்தது. குடைகம்பை சுற்றி துணிசுற்றியதுபோல் மெல்லிய தேகம். நடுவாங்கு இழுத்து சுருள் சுருளாக வழுவி நெற்றியில் விழும் கேசம். கோதும் விரல்கள் , பின் பக்கம் லேசாக தொங்கவிட்டாற் போல் ஃபங். கெச்சலான பழைய சஞ்சய்தத்தை பார்த்தது போல் உணர்வு. டவுசர் இப்பவோ அப்பவோ கழன்றுவிடும் நோக்கில் இருந்ததை மேல் இழுத்துவிட்டு, தம்பியாரென என்னைப்பார்த்து கேட்டார் . தம்பி உறவுக்காரன் மன்னார்குடி தான்.. ஊர்லேர்ந்து பேங்க்ல வேலை கிடச்சி இங்க வந்திருக்காப்ள.. இவர் தான் நம்ம தல – ரூட்டுத் தல என ராஜாராம் கண்சிமிட்டி என்னிடம் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

நான், ராஜாராம் , பழனி, கனகல் நால்வரும் கேம்பல் லேன் ஷாப் ஹவுஸ் வரிசையில் கீழிருக்கும் மூணாவது மசாஜ் கடைக்கு மேல் தான் தங்கியிருந்தோம். எனக்கு வங்கியில் வேலை என்றாலும் , யாரும் முன் பின் அறிமுகம் இல்லாததால் ராஜாராம் ரூமில் கிடைத்த பெட்ஸ்பேசிலேயே தங்கிவிட்டேன். பழனி ராஜாராம் ஊர்காரர் மற்றும் கூடவே அவர் சலூனில் வேலைப்பார்க்கிறவர். கனகல் தெலுங்கானாகாரர் – குடும்பத்தோடு பி.ஆர். வாங்கியதைத் திரும்ப கொடுத்து விட்டு ஊரில் செட்டிலாக போனவர் , ஏனோ சில வருடங்கள் கழித்து மீண்டும் இங்கே வந்து பாஸில் வேலைப்பார்க்கிறார். காலை வேலைக்கு கிளம்பினால் இரவு ஒன்பது மணிக்கு வந்து கனகல் படுத்துவிடுவார். எல்லா நாளும் எங்களோடு சரக்கடித்தாலும் ஞாயிறு அடிக்கும் பெக்கில் பெஷலாக கொஞ்சம் ரம் வாங்கி ஊத்துவார். அன்றைய ஞாயிறு ஆராதனை விஜயவாடாவில் இருக்கும் ரெட்டிகாரு மாமானரை ஏறுஏறு என ஏறுவார். சகட்டுமேனிக்கு திட்டுவார். கம்மென போர்வை போர்த்திக்கொண்டு பார்த்துக்கொண்டே இருப்பேன். மப்பு மண்டைக்கு ஏறிப்போய் கிறங்கிவிட்டால் , தூங்ட்டீயா கார்த்தி.. ஏன் பாஸ் வந்தே.. வெளிநாட்டு வாழ்க்கை கத்தி பாஸ். ஒன் டைம் நீ வந்தா அவ்ளோ தான் .. பைனல் வரிக்கும் ஏர்போர்ட் தான்.. ஃப்ளைட் தான் ..என அரைகுறை தமிழில் உளறுவார்.

நம்ம ரூட்டுத் தல சிவப்பு அட்டைக்காரர் தான்.. இப்போல ஜிபிஎஸ் ..கூகுள் .. மேப்பு.. அது இதுனு.. ஆனா தலக்கு சிங்கப்பூர்ல தெரியாத சந்துப்பொந்தே கிடையாது.. மனுஷன் இங்கின முக்குளிச்சு அங்கின எந்திரிப்பான்.. எம்டன் மயன்.. எவனாவுது ரூட்டுத் கேட்டா ஸ்கெட்ச் போட்டு .. எத்தனை ட்ராஃபிக் லைட்டு.. எங்கின திரும்பணும் .. எந்தலேண்.. என்னா நம்பர் பஸ் .. எத்தனையாவுது ஸ்டாப்.. என ரொம்ப துல்லியம்.. சிங்கப்பூர் ரூட்டு அத்துப்படி …. ஆனா வீட்டுல ரப்ச்சர் தாங்க ஏலலன்னு இங்கே வந்திடுவார் என ஒருநாள் ராஜாராம் போதையில் உளறிக்கொண்டிருந்தார். என்னா ரப்ச்சர்னு.. கேட்டதுக்கு அது ஒரு மாதிரி டா என ராஜாராம் கீழ இருந்த நியூஸ் பேப்பரில் இருந்த மிக்சரை தெளிவாக வாயில் அள்ளிப்போட்டுக் கொண்டே மறுத்துவிட்டார்.

ரூட்டுத் தலயை எங்கின வேணும்னாலும் நீங்க தேக்காவில பாக்கலாம். ஹனிபா பின்னாடி அட்டைப்பொட்டி எடுப்பார். சுங்காய் ஸ்ட்த்தீட் பீத்த பஜாரில் நாலைந்து உடைந்த பேன்களும் ஹேண்ட்போன்களும் விற்கும் வியாபாரியாக பார்க்கலாம். வீடு ஷிஃப்டிங்னா சொல்லுங்க பாஸ் நம்மள்ட்ட சிட்டிங்வேன் கூட இருக்கு அரேன்ஜ் பண்ணிடலாம்னு என போன் நம்பரை துண்டுச்சீட்டில் எழுதிக்கொடுக்கும் மார்க்கெட்டிங் ரெப்பாக பார்க்கலாம். திடீர் ஞாயிறு டாப்அப் கடைகளில் ‘வாங்க வாங்க ‘என அழைக்கு டன்லப் ஸ்திரீட் குரல்களில் ஒன்றாக அவரது குரல் இருக்கலாம்.தேக்காவின் ஜேக் ஆஃப் ஆல் டிரேட்ஸ். இப்படித்தான் அன்னைக்கு குடைக்கேண்டீன் இட்லிகடை பின்புறம் பாத்திரங்களை அள்ளிப்போய் கொண்டிருந்தது நீங்க மாதிரி தெரிஞ்சது என கேட்டதுக்கு கூட உனக்கு மனப்பிரமைடா என மழுப்பிவிட்டுப் போனார். வாரத்தில் பெரும்பாலான நாட்கள் எங்களோடே கழிந்தார். யார்கிட்டயும் உதவின்னு நின்னு அவர பார்த்ததில்ல, வருமானம் கும்மாக இருந்தால் இரவு ஒன்பது மணிக்கு எல்லாம் சிகரெட்டை பஞ்சு வரைக்கும் நசுங்க குடித்து வழித்துப் போட்டுவிட்டு வாங்கபாஸ் .. என மூணு ஆஃப் மிக்சர் முறுக்கு பாக்கெட்டோடு ரூமில் ஆஜராகிவிடுவார். நேரா ஜலான் பசார்புட் கோர்ட் பின்னாடி இருக்குற தட்டாந்தரையில் அஞ்சு பேருமாக சனிக்கிழமை இரவு உட்கார்ந்தால் விடியவிடிய ரவுண்டு ஓடும். அடித்த போதையில் எல்லோருக்கும் உண்மை நாய்க்குட்டி மாதிரி தாவி குதிக்கும். நான் என்னோட எக்ஸ்கேர்ள் பிரண்ட்ட திட்டுவேன். பதிலுக்கு ராஜாராம் முதலாளிய ட்ரில் எடுப்பார். கனகல் வழக்கம் போல அந்த பாவமா போன ரெட்டிக்காரு மாமனார பரேடு எடுப்பார். பழனி அண்ணே லேசா ஊத்திட்டு சைடீஸ் காலிப்பண்ணுவார். ஆனா ரூட்டுத்தல அப்படியில்ல.. ரவுண்டு ஓட ஓட பேச்சு குறஞ்சுடும்.. மெளனமாயிடுவார். நாலாவது பெக்.. அஞ்சாவது பெக்.. என போகும் போதுலாம் ஜலான் பசார் புட்கோர்ட்டுக்குப் பின்னாடி இருக்கும் புல்வெளியில் பெரிய ஒளி வட்டம் தோன்றி யோகி மாதிரி மெளனச் சாமியாகிவிடுவார்.

ஒரு நாள் .. செம மப்புல நான், தல ஒரு நாள் மதியம் மூணு மணியிருக்கும். ரோச்சார் பாலம் பக்கத்துல கம்பிச்சேர் கிட்ட பீர்டின்னும் கறிக்குழம்புமா கிடந்த உங்களைத் தூக்கினு வந்தோம். எங்கள மாதிரி நீங்க ஒண்டிக்கட்டையா தல.. விதியா தல.. வீட்டுல போய் அண்ணியோட சந்தோசம இருக்க வேண்டியது தானே எனகேட்டுவிட்டேன். விறுவிறுவென ஒரு போத்தலை எடுத்துக்கொண்டு எங்களை விட்டும் கொஞ்சம் தள்ளிப்போய் உட்கார்ந்துவிட்டார். நள்ளிரவு நிலா முழுசா படர்ந்து பச்சை புல்வெளி எங்கும் வெள்ளை பாய்ச்சி நடுவில் நின்றுக்கொண்டிருந்தது. தல ஏதும் தப்பா கேட்டுட்டேனா மன்னிச்சுக்குங்க.. அமைதியாக இருந்தார். வேணும்னா உங்க கால புடிக்கிறேன் என அரைப்போதையில் கையை கொண்டுப்போனேன் தட்டிவிட்டார். பேசிக்கொண்டிருக்கும் போதே ராஜாராம் வந்துவிட்டார்.

ஏன் தல ..உங்க பொண்ணு பேரு வெண்ணிலா தானே என வானத்தை பார்த்துக் கொண்டிருந்தவரை ராஜாராம் கேட்டது தான் மிச்சம், மனிதர் பொலபொலவென கதறிவிட்டார். எல்லாம் பணம் தான்யா.. அவளுக்கு எல்லாம் பணம்.. பணம்.. ஆனா எனக்கு நாலு நல்ல மனுஷன் போதும்யா என்றவர், போத்தலை தூக்கி தலைக்கு மேலே காட்டினார். மறுநாள் காலையில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் எங்கேயோ போய்விட்டார்.

~~~~~~~~

மால், சின்னவயதிலேயே பூர்வீகமான வேதாரண்யத்தில் இருந்து அவரது அத்தா இங்கே அழைத்து வந்துவிட்டார். பரம்பரை தொழிலான புகைப்படங்களுக்கு கண்ணாடி சட்டகம் அமைக்கும் தொழிலை உன் அண்ணனுங்க மாதிரி கத்துக்கோ என பட்டைறயில் இறக்கிவிட்டார். பஃப்பல்லோ ஸ்த்தீரிட் – சைனா டவுன் என விரிந்த கண்ணாடி ஃபிரேம் தொழில் வேதராண்யத்தை சார்ந்தவர்கள் ரொம்ப காலமாக நடத்துவதும் அவர்களுக்குள் சம்மந்தமுமாக மூவருக்கும் தொழில் சொந்தங்களுக்குள்ளே அத்தா திருமணத்தை முடித்து வைத்தார . அண்ணன்கள் பெரியவர்களாகி வேறு வேறு இடங்களில் ஃப்ரேம் கடை தொடங்க, கமால் மட்டும் அத்தாவோட இருந்துவிட்டார். கமாலின் தொழில் சுத்தம் அச்சுபிசகாமல் அவரது அத்தாவைப்போல், ஒரு புகைப்படத்தை பார்த்து அதன் பலகைச் சட்டகங்களின் அளவைத் துல்லியமாகச் சொல்லக்கூடியவர். அடுக்கி வைக்கப்பட்ட ‘V’ கிளாம்புகளை வாடிக்கையாளர்களிடம் காட்டி வியாபாரத்தை பிடிப்பதிலாகட்டும், தலைக்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கிற ஆயில் பெயிண்ட் ஃப்ரேம்களை விற்கும் லவாகமாகட்டும் அவன் அப்படியே சுல்தான் தான் என அவனது தந்தையின் நண்பர் ஜெயக்குமார் மாமா கடைமுகப்பில் உட்கார்ந்துக்கொண்டு சொல்லிக்கொண்டிருப்பார். மெல்லிய தேகமும் உருண்டை கண்களையும் மேசையில் கிடக்கும் சட்டகங்களின் மீது கண்களை வைத்து ஃப்ரேமின் முனைகளை உராய்ந்து , கண்ணாடித்துண்டை வெட்டியெடுத்து புகைப்படத்தை நேர்த்தியாக ஃப்ரேம் செய்வதில் கெட்டிகாரர். சீனபுகைப்படங்கள் அலுவலங்களுக்கு ஃப்ரேம் அடிக்கும் ஆர்டர் கிடைத்தால் ராவுபகலாக ஒரே ஆளாக நின்று முடிப்பவர். ஃப்ரேம்கள் மீது கமால் செய்யும் நகாசு வேலைகள் எப்போதுமே தனித்து நிற்கும். மற்ற பிள்ளைகள் அவரவர் போக்கில் நிற்க, கமால் அவர் அத்தாவுக்கு ஒரே நம்பிக்கையாக இருந்தார் எல்லாம் கமால் லதாவைச் சந்திக்கும் முன்பு வரை. லதா ஜெயக்குமார் மாமாவின் ஒரே மகள். கமாலின் துடிப்பும் வசீகரமும், மெல்லிய வெண்ணிற தேகமும் எல்லோரையும் கிறங்கடிக்கும். மனம் ஒத்துப்போன நாளில் கட்டினால் அவளைத் தான் கட்டுவேன் என நின்றவரை, அந்தப் பெண்னை கட்டினால் சல்லிப்பைசா கிடையாது.. கண்ணுல முழிக்காத.. கடைய விட்டுப்போடா என அத்தா விரட்டிவிட்டார். அதன் பிறகு ஜெயக்குமார் மாமா கடைப்பக்கம் வருவதே இல்லை. பப்பலோ ஸ்ட்ரீட் பக்கம் கமால் நடப்பதையும் குறைத்துவிட்டார்.

லதாவும் கமாலும் திருமணம் முடித்துக்கொண்டு ஜெயக்குமார் மாமா வீட்டிலேயே தங்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் இருந்த அன்னோன்யம் பின்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துக்கொண்டே போனது. நண்பரோடு கமால் ஆரம்பித்த ஃப்ரேம் கடையும் காலப்போக்கில் காத்து வாங்க ஆரம்பித்தது. அதெல்லாம் ஒரு காலம்யா.. உங்க அத்தா – மாமானு ஃப்ரேம் கட்டிங்ல கொள்ளை காசு பார்த்தது. இப்ப அந்தத் தொழிலே முடங்கிப்போச்சு என போறபோக்கில் உட்கார்ந்திருந்த கமாலுக்கு யோசனையை யாருக்கோ சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தார் ஜெயக்குமார் மாமா. தோதான தொழிலோ வேலையோ அமையாமல் காலையில் கிளம்பி கிடைத்த வேலையை பார்த்துவிட்டு ஐம்பது வெள்ளிக்கு குறையாமல் சம்பாதித்து வந்தாலும் லதா எரிந்துவிழத் தொடங்கினாள். அந்நேரம் தான் லதாவிற்கு மீடியா துறையில் பெரியசம்பளத்தோடு நல்ல வேலை கிடைத்தது. ஈகோ காசு ரூபத்தில் வீட்டிற்குள் ருத்ர தாண்டவம் ஆடியது.

கோப்பி மங்கை காலால் தள்ளுவது, சாப்பாட்டுத் தட்டை தள்ளிவிடுவது, சம்பாதித்து காசு கொண்டு வந்து கொடுத்தால் கூட அதை முகத்தில் எறிவது என லதாவின் இன்னொரு முகத்தை தாங்கிக்கொள்ள கமாலுக்கு ஒரே ஒரு ஆறுதல் வெண்ணிலா. எல்லா கசப்புகளுக்கும் கணுக்கால் இனிப்பாய் இருந்தாள். லதாவோடு ஏற்ப்படும் எல்லாசச் சரவுகளின் போது வரும் தற்க்கொலை எண்ணத்தை தனது ஒரே முத்தத்தால் கமாலை ஆசிர்வதித்து அனுப்பிவிடுவாள் வெண்ணிலா. சண்டை முற்றிப்போக வீட்டுப்பக்கம் வருவதையும் குறைத்த கமால், குடியில் இறங்கினார். மாதம் ஒருமுறை வரும் பெளர்ணமியின் குளிர்ச்சியை வெண்ணிலாவை மட்டும் கமாலுக்குத் தந்தாள். எல்லாம் சரியாகிப்போனால் அத்தாவிடம் ஒரு ஹரிராயாவிற்கு வெண்ணிலாவோடு போய் நிற்க வேண்டும் என்பது கமாலின் வெகுநாளைய ஆசை.

~~~~~~~~

ருநாள் ஆபீஸ்நேரத்தில், என்னை அவசரமா கிளம்பி வா என்றார் ராஜாராம். மேனஜரிடம் பெர்மிசன்வாங்கிக்கொண்டு இடத்திற்கு விரைந்தேன். இன்ட்ரோகேசன் ஆபிசர் , கமாலுக்கு நீங்க என்ன முறை ? எனராஜாராமை கேட்டுக்கொண்டிருந்தார். மதியவெயில் புக்கிட்தீமா பைபாஸில் மண்டையைபிளந்துக்கொண்டிருந்தது. ரூட்டுத்தலயின் வேன் சாலைக்கு நடுவே இருந்த மீடியனில் தலைகீழாககவிழ்ந்துக்கிடந்தது. என்னைப்போலவே கனகல், பழனி, ராஜாராம் நால்வருமாக அந்த இடத்துக்குபோய்ச்சேர்ந்திருந்தோம்.

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
அனிஷா மரைக்காயர்
அனிஷா மரைக்காயர்https://minkirukkal.com/author/kmohamedriyas/
சிங்கப்பூரில் 9 ஆண்டுகள் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைபார்த்துவருகிறேன். பட்டது, பார்த்தது, படித்தது என எனை பாதித்த மனிதர்கள் என சிலநேரம் மனசிக்கலுக்களுக்குள் உள்ளாவதுண்டு.இதிலிருந்து விடுப்படுவதற்கும் அகவிடுதலையடைவதற்குமே புனைவை வடிகாலாக தேர்ந்தெடுத்தென்.

1 COMMENT

  1. எழுத்தாளர் அனீஷா அவர்களுக்கு,
    தங்களின் மொழி நடை மற்றும் பேச்சு வழக்கு கதையமைப்பு நாம் அந்த கதையின் ஒரு அங்கமாகவே மாற்றிவிடுகிறது

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -