யமுனா வீடு

தொடர் கவிதைகள் - 7

- Advertisement -

பச்சைநிறக் கிரில் கேட்டையும்
அதன் வழியே நீண்டு செல்லும்
செம்மண் சாலையையும்
சன்னல் சட்டங்களுக்குள்
கைகளால் துழாவி
இழுத்துப் பார்க்கும் யமுனா
பறவையாக எத்தனிக்கிறாள்

தத்தி தத்தி
அறையெங்கும் பறந்து பார்த்தவள்
அவ்வப்போது யாரேனும் வருகையில்
முற்றத்திற்கும்
வெளித் திண்ணைக்கும் தத்திப் பார்ப்பாள்

அவளின் ஒவ்வொரு செய்கையும்
பறத்தலுக்கான ஒன்றாக இருக்கிறது
சகித்துக்கொண்டும்
அவ்வப்போது புலம்பிக்கொண்டிருக்கும்
அம்மாவின் புரிதலொன்றெ
அவளைப் பறவையாக தீர்மானம் செய்கிறது

சன்னல் வழியே
ஆகாயத்தைப் பார்க்கும் யமுனாவிற்கு
இப்போதைக்குப்
பச்சை நிற கிரீல் கேட்டைக்
கடந்து செல்வதே
பறவையாக எத்தனிக்கும் யமுனாவின்
பயணதூரம்.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -