யமுனா வீடு

தொடர் கவிதைகள் - 6

- Advertisement -

இந்த நாளில்
யமுனா
நெகிழ்ந்து போயிருக்கிறாள்
ஓர் அரவணைப்பு தேவைப்படலாம்
அப்போதைக்கு அவள் கைகளை யாராவது பற்றிக்
கொண்டிருக்க வேண்டும்

வரிசையாய் வந்துவிழும் குறுஞ்செய்திகளைவிட
ஓர் அழைப்பு தரும் மகிழ்வை எதிர்பார்த்திருப்பாள்
மகிழ்வைப் பகிரும்
உணவில்லாததால்
இப்போதைக்கு அவளுக்குப் பசிக்கப்போவதில்லை

இந்தநாளில் அவள் உங்களையும் என்னையும் நினைவு கூர்ந்திருப்பாள்
அவளுக்கு முன்னும் பின்னுமான நாட்களை சிலர்
நினைவுபடுத்தக்கூடும்

நிகழ்பாடுகளுக்குப் பழகிய மனமென்றாலும்
சிறுமியாய் அவள்
விம்மும்ஒலி கேட்கும்
யாரோ ஒருவரின்
கனவொன்றில்
அவள் விழிநீரைத் துடைத்துவிட்டிருக்கலாம்
நெகிழ்ந்தநீரில் புன்னகைத்தபடி
யமுனா
உறங்கிப்போயிருப்பாள்.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -