யமுனா வீடு

தொடர் கவிதைகள் - 1

- Advertisement -

ஸ்தோத்திரம் சொல்லிய அவள்

அந்தப் புலர்பொழுதின்

பச்சைநிற சமிக்ஞையில் சாலையைக் கடக்கிறாள்

மெல்ல இருள் விலக்கிய வாடகை டாக்சி ஒன்று சன்னமாக அவளை மோதி நிற்கிறது.

சாலையில் நிலைகுலைந்தவள்

ஞாபகப்படுத்தி சமிக்ஞையைச் சரிபார்க்கிறாள்

பச்சையில் ஒளிர்ந்து கொண்டிருக்க

டாக்சி ஓட்டுனர் கீழிறங்கி வருகிறார்

அவளின் மிரட்சியைப் பார்த்துப் பதற்றமடைந்தவராய்

கைகளைக் கூப்பி அழும் பாவனையில் இரட்சிக்க வேண்டுகிறார்

ஞாபகங்களை மீளப்பெற்ற அவளும்

கை கால் சிராய்ப்புகளுடன் கெந்திக் கடக்க முற்பட

சீன ஓட்டுனர்

அவள் வீடடையும்வரை வந்துதவுவதாகச் சொல்ல, மறுக்கிறாள்

இருந்தும் சீனர் அவளின் கெந்தல் நடைகண்டு

வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்

15 நிமிட பயணநேரமும் சீனரே பேசிக்கொண்டிருக்கிறார்

காவல்துறையை அழைத்து புகார் செய் மகளே

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவா மகளே

புன்னகையால் அதுவும் வேண்டாம் என்றவளை

நீ கர்த்தரின் பிள்ளையா என்கிறார்

ஆம் என ஆமோதித்தவளிடம்

அதனால்தான் என்னை மன்னித்தாயா

நானும் கர்த்தரின் பிள்ளைதான்

ஆனால் நிறைய தவறுகள் செய்திருக்கிறேன்

உன்னால் மட்டும் எப்படி அன்பு செய்யமுடிகிறது

உன்னைப்போல மகள் ஒருத்தி எனக்கு இருக்கிறாள்

வேறெதுவும் உதவிகள் தேவைப்பட்டால் அழை மகளே என்றவர்

அவள் வீடடைந்தபின்னும்

அவள் சென்ற திசைநோக்கி துயர்கடந்து நின்றுகொண்டிருந்தார்

கர்த்தரின் பிள்ளையானவளின் அன்பினால்…

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

5 COMMENTS

  1. ஸ்தோத்திரம் யமுனா ?? அன்பை உணர்த்தும் கவிதை அழகு.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -