யமுனாவீடு -63

தொடர் கவிதை

- Advertisement -

சற்றே தோய்ந்த குரலில்
உதிர்த்த சொற்களின்
புன்னகையை எங்கே எனத் தேடுகிறாய்

வண்ணமான பொழுதுகளின்
திசைகளறிந்தும்
தேடுதல் முடிவடைவதில்லை

காயங்களாகப்பட்ட
இந்த வாழ்வில்
தோற்றுக் கொண்டிருப்பதாகத்தான் தெரியும்

மிச்சமிருக்கும் வாழ்வில்
நம்பத்தொடங்கியவனுக்கு
கோடையில் மழை பெய்யும்

உன்னுடைய நல்ல கனவுகள்
பிறருக்கும் வந்திருக்கும்
கையைப்பற்றி வெளியேற்றிவிடு

சட சடத்து பெய்தமழையைபோல
நீ சிரிக்கவேண்டுமெனில்
எதிலாவது தொலைந்து போ

காகிதத்தில் ஒரு வீட்டைக்கட்டு
சின்னஞ் சிறுமியாக
மெல்ல நடந்துபோ

எந்த ஒன்றையும் தீர்மானிக்காதே
உனக்குள் பீறிட்டுக்கொண்டிருக்கும்
எல்லாவற்றோடும் கிணத்துக்குள் குதித்துவிடு

உனக்கு நீச்சல் தெரியாது
கற்றுத்தர யமுனாவருவாள்
கிணற்று நீரை மேலேற்ற
நீ நடக்கத்தொடங்கிய பிறகு
எல்லாம் சரியாகத்தான் இருக்கும்.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -