மோப்பம்

கவிதைகள்

- Advertisement -

மோப்பம்

ரொம்ப லேட்டு
பெரிய கட்டி
பத்து நாளுதான்
கெடு வைத்தார்
பெரிய டாக்டர்
வழியும் கண்ணீரை
அவர் முன் துடைப்பது
சங்கடமாயிருந்தது
பிடித்தது கொடுத்து
தடவிக்கொண்டே
நாட்களை எண்ணினோம்
ரெண்டு மணிக்கு
வந்தாலும்
மூக்கை நீட்டி
நான் தடவிக்கொடுக்காமல்
தூங்க மாட்டான்
படும் வேதனை
தாளாது
முடிவு செய்தோம்
ஊசியென
அன்றிரவு
உயிரைக் கால்களில்
தேக்கி
நொண்டிக் கொண்டே
பக்கம் வந்து
என் கைகளால்
கேட்டு உண்டான்
மரணத்தை முகர்ந்தவன்
அடுத்த நாள்
விறைத்துக் கிடந்தான்
அதே இடத்தில்
ஞானியைப் போல
முதலில் மகன்தான்
வெடித்தான்
‘டாம்மீ………’

??????????????????????????

பிய்ந்த செருப்பு

பெருவிரல் அறுந்த
செறுப்பினைத் தைக்க
பொத்தலான
குடையடியில்
கால் மடக்கி
அமர்ந்தவரிடம்
சென்றேன்
வாங்கிப் பார்த்தவர்
சிறுகத்தியால்
தோலறுத்து
நைந்த கைகளால்
நடுங்கியபடியே
தைத்துக்கொடுத்தார்
அடுத்தவர் வந்து சேர
அவரோ
விட்ட இடத்திலிருந்து
தனது வாழ்க்கையைத்
தைக்கத்துவங்க
ஒட்டுப்போட்ட
எனது வாழ்க்கையை
அணிந்தபடி
நொண்டியபடியே
வீடு வந்து சேர்ந்தேன்

கண்ணன்
கண்ணன்https://minkirukkal.com/author/vkannan/
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு. செந்தூரம் இதழில் "பூனை புராணம்" கவிதை, தாய் மின்னிதழில் "பந்தி விசாரிப்பு" கவிதை வெளியாகி உள்ளது. இவருக்கு வாசிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது, நல்ல ஓவியங்களை ரசிக்க, பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -