மெய்நிகர் உலகம் – 3

- Advertisement -

வணக்கம். சென்ற பகுதியில் பணம் என்னும் மெய்நிகர் உருவாக்கத்தின் தொடக்கத்தை பார்த்தோமல்லவா? ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட மதிப்புக் கொண்ட பொருள்களை எவ்வாறு ஒருநிலைப் படுத்தினான் என்று இந்த பகுதியில் பார்க்கலாம்.

பணம் என்னும் ஒரு மெய்நிகர் அடையாள சின்னத்தை உருவாக்கிய உடன் மனிதனுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சனை அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளும் விதமாக உருவாக்கப்பட வேண்டிய ஒரு விலைப்பட்டியல் தான். இது உருவாகும் சமூகத்தில் முழுவதுமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இல்லை என்றால் மீண்டும் யுத்தங்கள் ஆரம்பித்துவிடும். எந்த ஒரு பொருளுக்கும் சேவைக்கும் விலையை உருவாக்குவதற்கு அதன் மதிப்பை மூன்றாக பிரிக்க வேண்டி இருந்தது. அந்தப் பொருள் அல்லது சேவை கடந்த காலத்தில் எவ்வாறு மதிப்பிடப்பட்டது, நிகழ்காலத்தில் அதன் தேவை என்ன?, வருங்காலத்தில் அது எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும் என்பது தான். 

அசையாச் சொத்துக்களும், தங்கம் முதலிய விலை உயர்ந்த பொருட்களும் கடந்த காலத்தில் அது எவ்வாறு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்னும் கணக்கின் மூலமாக பொதுவாக மதிப்பிடப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்துமே பொதுவாக காலத்தினால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாமல் குறைந்தபட்சம் ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதுமாவது ஏதோ ஒருவகையில் உபயோகம் தரக்கூடியதாக இருக்கும். உதாரணமாக நிலத்தை எடுத்துக் கொண்டால், காலநிலை மாற்றம் ஏற்பட்டு அழியும்வரை அது எந்தவித மாற்றமும் அடையாது. இப்படிப்பட்ட பொருட்கள், மிகவும் ஸ்திரத்தன்மை கொண்டதாக இருந்தாலும் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு நேரடியாக எந்த பயனும் தராது. நாம் இங்கு கூறிய ஒரு நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நிலத்தில் நம்மால் ஒரு வீடு இல்லாமல் வாழக் கூட முடியாது. ஆனால் நேரடியாக நாம் வாழ்வதற்கு உபயோகப்படும் வீடு காலப்போக்கில் எளிதாக அழிந்து விடும். தங்க ஆபரணங்களை விரும்பி அணிந்து கொண்டால் கூட உங்கள் அன்றாட வாழ்க்கைக்கு அது கண்டிப்பாக இருக்க வேண்டும் என்னும் தேவை கிடையாது. உலகின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இந்தவிதமான சொத்துக்களை வைத்திருக்கும் மனிதர்கள்தான் காலங்காலமாக மற்றவர்களை ஆளும் சக்தியாக இருந்து வந்தனர். இதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. மற்ற இரண்டு வகை மதிப்புகளும் காலத்திற்கு ஏற்றார்போல் பல்வேறு மாற்றங்களை அடைந்து கொண்டிருக்கும். அதனால் மற்ற இரு வகை செல்வங்களையும் எப்பொழுதும் முதல்வகை செல்வத்துடன் ஒப்பிட்டு மதிப்பளித்து வந்தனர்.

இரண்டாவது வகை மதிப்பு அன்றைய தினத்தில் அதற்கு ஏற்படும் தேவையைப் பொறுத்து உருவாக்குவது. உணவுப் பண்டங்கள் அனைத்தும் இந்த வகையைச் சார்ந்ததுதான். நீங்கள் கடையில் சென்று சாதாரணமான காய்கறியை வாங்கும் போது கூட தினமும் இதன் விளைச்சல் மற்றும் தேவைக்கேற்ப அதன் விலை மாறுபட்டுக் கொண்டே இருக்குமல்லவா? இப்படிப்பட்ட பொருட்கள் அனைத்தும் நீங்கள் பயன்படுத்தவில்லை என்றாலும் விரைவிலேயே அதன் தன்மை மாறிவிடும். உணவு மட்டும் இல்லாமல் நீங்கள் அலங்காரத்துக்காக பயன்படுத்தும் மலர்கள் போன்ற மக்கும் பொருட்கள் கூட இந்த வகையைச் சார்ந்தது தான். நீங்கள் எப்போதாவது உணவகங்கள் சென்று அங்கு கிடைக்கும் உணவுகளின் மூலப்பொருட்களை சற்று யோசித்துப் பார்த்துள்ளீர்களா? நீங்கள் நேரடியாக சாப்பிடும் நிலையில் இருக்கும் உணவகத்தின் விற்பனைப் பொருள், அதன் மூலப் பொருட்களை விட மிகவும் அதிகமாகத்தான் இருக்கும். இதற்கு காரணமும் அதன் ஆயுள் காலம் தான். அரிசி பருப்பு போன்ற உணவுப் பொருட்களை நீண்ட நாட்கள் வரை கெடாமல் வைத்திருக்க முடியும். ஆனால் அதனை நீங்கள் சமைத்து விட்டால் அன்று அதனை உட்கொண்டு விட வேண்டும். இல்லை என்றால் அது முழுவதும் பாழாகிவிடும். இப்படிப்பட்ட பொருட்களின் விலையும் அதிகமாக தான் இருக்கும். எவ்வளவு வருடங்கள் ஆனாலும் கெட்டுப் போகாத ஒரே உணவு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட பொருட்கள் கிடைத்தால், அதனை மனிதன் ஒரு பெரிய உணவு கிடங்கில் சேர்த்து வைத்துக்கொண்டு அதனை முதல்வகை அசையா சொத்தாக கருதி விடுவான். கடந்த காலங்களில் இது அதிகப்படியாக நடக்கவும் செய்தது. உதாரணத்திற்கு, மேற்குலக நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த வாணிபர்களை, தென்னிந்தியாவில் எளிதாகக் கிடைக்கும் கருப்பு மிளகு அதிகப்படியாக கவர்ந்தது. ஏனென்றால் இதனை காய வைத்த உடன் பல வருடங்கள் கெட்டுப்போகாமல் அதன் தன்மை மாறாமல் இருந்தது. மேற்கொண்டு இதனை நிலை மாறாமல் மேற்குலகத்தின் கொண்டுசென்று விற்கவும் முடிந்தது. அதனால் மேற்குலக மக்கள் மிளகை கருப்பு தங்கம் என்று அழைத்தார்கள். 

நான் மேலே கூறிய இரண்டு வகை பொருட்களும் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தை அடிப்படையாக கொண்டது என்பதால் நம்மால் அதனை சோதனை செய்து பார்த்து விலையை மதிப்பிட முடிந்தது. ஆனால் இந்த மூன்றாவது வகை பொருட்கள்தான் மிகவும் ஆச்சரியமானது. இதற்கு மெய்நிகர் மதிப்பு கொடுக்கும் பணியில் தான் இந்த மொத்த உலகமும் மூழ்கி இருக்கிறது என்றால் நம்புவீர்களா? அதனை அடுத்த வாரம் தொடர்கிறேன். 

-மீண்டும் சந்திக்கலாம்

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -