மெய்நிகர் உலகம் – 15

- Advertisement -

வணக்கம். மெய்நிகர் உலகத்தில் விளையாட்டுகளின் பங்களிப்பை பற்றி சில பகுதிகளாக பார்த்துக் கொண்டு வருகிறோம். குத்துச்சண்டை வாள் சண்டை முதலிய அனைத்து விதமான வீர விளையாட்டுகளையும் மெய்நிகர் வழியாக இணையத்தில் நீங்கள் எந்த ஒரு மூலையில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் விளையாட முடியும் என்பதையும் சென்ற பகுதியில் பார்த்தோம். ஆனால் அதற்குள்ளே ஒளிந்திருக்கும் சில விபரீதங்களையும் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

போர் பயிற்சி செய்வதற்கு நேரடியாக போரில் ஈடுபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்த ஒரு ராணுவ பயிற்சி நிலையத்திலும் போர் நடப்பது போன்ற ஒத்திகைகளை மேற்கொண்டு ஒருவேளை போர் ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அங்குள்ள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். அப்படிப்பட்ட பயிற்சியின் மூலமாக அந்த வீரர்களால் நிஜப்போரிலும் சிறப்பாக செயல்பட முடியும். இது உண்மை என்றால் சில தவறான பயிற்சிகளை மெய்நிகர் முறையில் எடுத்துக் கொள்ளும் பொழுது அதற்கான தவறான பலன்களும் கிடைக்க தானே செய்யும். அது என்ன தெரியுமா? உங்களது மொத்த வாழ்க்கையை ஒரு விளையாட்டாக மாற்றி ஒரு மெய் நிகர் உலகத்தில் உங்களுக்கென்று வேறு விதமான வாழ்க்கையை வாழ்ந்து கொள்வதற்கு இணையத்தில் வழி உள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இதற்கான வசதிகள் வந்துவிட்டது என்றாலும் தற்பொழுது இணையத்தின் வேகம் சிறப்பாக உள்ளதால் இது மிகவும் அதிக அளவில் மக்களை சென்றடைந்துள்ளது.

2003இல் ஐபிஎம் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது செகண்ட் லைஃப்(Second Life) என்னும் நிறுவனம். இதனை ஒரு விளையாட்டு போல துவக்கினாலும் இது அதற்கும் மேற்பட்ட ஒரு வாழ்க்கை முறை என்றே கூறலாம். நீங்கள் வாழும் இந்த உலகத்தில் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் வேறொரு மாய உலகத்தை உங்களுக்கென்று உருவாக்கிக் கொண்டு அதில் நீங்கள் விரும்புவது போல் வாழ்ந்து கொள்ளலாம். அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? முதலில் உங்களுக்கான ஒரு புதிய பெயரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்பு கணினிக்குள் கட்டமைக்கப்பட்டிருக்கும் அந்த புதிய உலகத்தில் உங்களுடைய புதிய அவதாரத்தை போன்று மற்றவர்களும் இருப்பார்கள் அல்லவா? அவர்களுடன் சிறிது சிறிதாக பழகி ஒரு புதிய சமூகத்தையும் கூட்டமைப்பையும் உங்களால் உருவாக்கிக் கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல், அங்கே உங்களுக்கு என்று புதிய வேலை அதற்கு என்று சம்பளம் போன்ற அனைத்தையும் கூட பெற்றுக் கொள்ளலாம். இது கேட்பதற்கு உங்களுக்கு மிகவும் நல்ல விஷயமாக கூட தோன்றலாம். பிரச்சனை என்னவென்றால் அதனை ஒரு பகுதி நேர விளையாட்டாக செய்து கொண்டு வந்தால் எந்தவித பேராபத்தும் வராது. ஆனால் தனது முழு வாழ்க்கையையும் அதற்காகவே அர்ப்பணித்து விட்டால் கணினியை தவிர வேறு எந்த ஒரு பொருளும் உலகத்தில் தேவைப்படாது. தொடர்ந்து கணினிக்கு முன் உட்கார்ந்து இருப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை பற்றி கூட உங்களால் புரிந்து கொள்ள முடியாது. உங்களுடைய கற்பனை உலகத்தில் நீங்கள் ஒரு மாவீரர் போன்ற கூட இருக்கலாம். ஆனால் உண்மையான உலகத்தில் உட்கார்ந்து கொண்டே இருப்பதால் உடலில் கொழுப்பு அபரிமிதமாக பெருகி இளம் வயதில் கூட மாரடைப்பு ஏற்பட்டு இறப்பது மிகவும் சர்வசாதாரணமாகி வருகிறது. 

குறிப்பாக சமீப காலங்களில் மிகவும் புகழ்பெற்ற விளையாட்டான பப்ஜி PUBG யாரை வேண்டுமானாலும் ஒரு போர் வீரனாக மாற்றியது. இந்த விளையாட்டின் மூலமாக பலர் தங்களது வாழ்க்கையையும் சேமிப்பையும் கூட இழக்கத் துவங்கினர். உண்மையான போர் ஏற்படாமல் ஒரு போர் வீரனை தயார் செய்வதற்காக உருவாக்கப்பட்ட இதுபோன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள், காலப்போக்கில் போலி ஆன்லைன் போராளிகளை கட்டமைக்க துவங்கியது தான் துரதிஷ்டவசமான இன்றைய நிலைமையாகும். பல்வேறு உபகரணங்களை பெறுவதற்கு இந்த விளையாட்டில் நீங்கள் அதிகப்படியான பணத்தையும் செலவழிக்க வேண்டி வரும். ஆனால் விளையாட்டில் வரும் உபகரணங்கள் யாவும் நிஜமான பொருள் கிடையாது. அந்த கற்பனை உலகத்தில் மட்டுமே நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு ஒரு சிறிய மென்பொருள் பாகம்தான். குழந்தைகள் தெரியாத்தனமாக தங்கள் பெற்றோர்களின் கடன் அட்டையை பயன்படுத்தி இலட்சக்கணக்கில் செலவழித்து இந்த விளையாட்டில் மூழ்கி தங்கள் குடும்பத்தையும் மூழ்கடித்த கதைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. ஒரு நாளைக்கு தொடர்ந்து இருபது மணி நேரம் இதே விளையாட்டில் மூழ்கியிருந்து கணினியின் முன்னாலேயே பல சிறுவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

ஒரு சிறிய கணினியின் முன்பு இவ்வளவு பெரிய மெய்நிகர் மாய உலகத்தை கட்டமைக்க முடியும் என்றால் மெய் உலகத்தையே மறைத்து நம் கண்களைக் கட்டிக் கொண்டு வேறு உலகத்தில் மூழ்கி விடக்கூடிய சாதனம் உங்கள் கைக்கு வந்தால் அது என்னவெல்லாம் செய்யும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். ஆனால் நான் கூறும் இந்த சாதனம் ஏதோ வருங்காலத்தில் உருவாக்கப்பட போகிறது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். பல ஆண்டுகளாக நம்மிடையே புழக்கத்தில் இது இருந்து வருகிறது. இதன் வளர்ச்சியும் காலப்போக்கில் மிகவும் அதிகமாகி வருகிறது. இதனால் ஏற்படும் பலதரப்பட்ட விளைவுகளை அடுத்த பகுதியில் இன்னும் விளக்கமாக கூறுகிறேன். அதுவரை நன்றி.

-மீண்டும் சந்திக்கலாம்

மெய்நிகர் உலகம் பிரதி திங்கள் இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு மின் கிறுக்கல் தளத்தில் உங்களை தேடி வரும்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -