முகங்கள்

ஒன்பதாம் முகம்

- Advertisement -

சிங்கப்பூர் வந்த புதிதில் என் மாமா வீட்டில் சில காலம் தங்கியிருந்தேன். அப்போது அங்கு ஒருவர் வந்தார். என் அண்ணனின் நெருங்கிய நண்பன் என்றும் தாங்கள் அனைவரும் ஒன்றாக தங்கியிருந்து வேலை செய்ததாகவும் என்னிடம் அறிமுகம் செய்துகொண்டார். ஐந்தரை அடிக்கும் சற்று குறைவான உயரம். ஒல்லிக்கும் சாதாரண உடலுக்கும் இடைப்பட்ட உடல்வாகு. முன்வயிறு மட்டும் முழுவதும் சாப்பிட்டது போல் லேசாக உப்பிக்கொண்டிருக்கும். வேலை செய்யும்போது மட்டும் செவ்வக மூக்குக்கண்ணாடி மூக்கில் தாவி அமர்ந்துகொள்ளும். அவர் உடலைவிட சற்று பெரிய ‘டி-சர்ட்’ தொடை வரை தொங்கிக்கொண்டிருக்கும். அவ்வப்போது சரியான அளவிலான சட்டை அணிந்துவருவார். பெரும்பாலும் ‘டி-சர்ட்’ தான். ஜீன்ஸாக இருந்தாலும் கூட தொடையை கடித்துக்கொண்டில்லாமல் தளர்வான கால்சட்டையைத் தான் அணிந்துவருவார். முப்பத்தைந்திலிருந்து நாற்பது வயதிருக்கும். கருத்த தேகம். நம்முடைய இந்த வார முகம் இவர் தான்.

அவர் வீட்டிற்கு வந்த உடனேயே அவருக்காகக் காத்துக்கொண்டிருந்த வேலைகளை என் மாமா கூறினார். குழாயில் ஏற்பட்டிருந்த கோளாறை நீக்க தேவையான உதிரி பாகங்களை என் மாமாவிடம் வாங்கி வரச்சொன்னார். கதவில் ஏற்பட்டிருந்த சிறு பிரச்சனையை சரி செய்தார். பின் ஹாலின் ஒரு மூலையில் துண்டை விரித்து படுத்து தூங்கிவிட்டார். நான் புதிது என்பதால் அவரிடம் பெரிதாக பேச்சுக் கொடுக்கவில்லை. கடைக்குச் சென்று வாங்கி வந்த பொருட்களை என் மாமா ஒரு மூலையில் வைத்துவிட்டார். எப்போதும் போல என் மாமாவின் மகன் கார்ட்டூன் சேனலில் டிவி பார்த்தான். நாங்கள் அரட்டையடித்தோம். ஒரு ஜீவன் அங்கே தூங்கிக்கொண்டிக்கிறது என்ற உணர்வு எங்களுக்கும் இல்லை அவரும் எங்கள் யாரையும் பொருட்படுத்தவும் இல்லை. நிம்மதியாக தூங்கி பிற்பகல் மூன்று மணி போல் எழுந்தார். சாப்பிட்டார். பின் குழாயை சரி செய்தார். இரவு வரை இருந்தார் பின் இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு கிளம்பி விட்டார்.

மாதம் ஒருநாளோ இரண்டு நாளோ கிடைக்கும் விடுமுறையில் நிம்மதியாக தூங்குவதற்காக இங்கு வருவதாகக் கூறினார். உண்மையில் எங்கள் வீடு ஒன்றும் அவ்வளவு அமைதியாகவெல்லாம் இல்லை. அங்கே இருந்த சத்தத்தில் நிச்சயம் என்னால் தூங்கயிருக்கவே முடியாது. இங்கு வந்து அவரால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்றால் அவர் தங்கியிருக்கும் இடத்தை நினைத்துப்பார்க்கவே கொஞ்சம் அச்சமாகத்தானிருந்தது. பார்த்த முதல் நாளே நல்ல மனிதராகத் தெரிந்தார். பேச்சில் ஒரு நேர்மை இருந்தது. என் மாமாவிற்கு ஒரு நல்ல குடும்ப நண்பராக இருந்தார்.

காலம் வேகமாக ஓடியது. நான் என் மாமா வீட்டில் இருந்து என் அலுவகத்திற்கு அருகில் சென்று தங்கிக்கொண்டேன். என் மாமாவும் இந்தியா சென்றுவிட முடிவெடுத்து மொத்தமாக காலி செய்துகொண்டு சென்றுவிட்டார். என் கல்லூரி நண்பர்கள் இருவர் இந்தியாவில் இருந்து வர நாங்கள் இன்னும் இருவரைச் சேர்த்துக்கொண்டு தனி வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம்.

என் மாமாவின் நண்பராக இருந்தவர் இப்போது எனக்கும் நல்ல நண்பராகியிருந்தார். விடுமுறை வந்தால் நேரே எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார். பொதுவாக அவருக்கு இரவு நேர வேலை என்பதால் வந்தவுடன் என் அறைக்குள் சென்று துண்டை விரித்து தூங்கிவிடுவார். தலையணை போர்வை எல்லாம் வைத்துக்கொண்டால் தூக்கம் வராது “நமக்கு துண்டு தான் சரி” என்பார். தூங்கி எழுந்தவுடன் வீட்டில் பழுதாகி இருக்கும் குழாய், காற்றாடி, குளிர்சாதனப் பெட்டி, கதவு, “டாய்லெட் ப்ளஷ்” போன்றவற்றைச் சரி செய்வார். அவர் செய்யும் அந்த வேலைகளை வெளியில் இருந்து ஆள் வரவைத்துச் செய்தால் குறைந்த பட்சம் நூறிலிருந்து இருநூறு டாலர்களாவது கேட்பார்கள். இப்படி வேலை ஆள் சம்பளம் அதிகம் இருப்பதால் தான் பொதுவாக சிங்கப்பூர் மக்கள் பழுதான பொருளைத் தூங்கி எறிந்துவிட்டு புதிது வாங்கி வைத்துவிடுவார்கள். உண்மையில் பழுது பார்க்கக் கொடுக்கும் சம்பளத்தை விட புதிதின் விலை குறைவாகத் தான் இருக்கும்.

ஒருமுறை இந்தியாவில் வாங்கிய பேனாசோனிக் மிக்ஸியை பழுது பார்க்க சிங்கப்பூரில் உள்ள பேனாசோனிக் சர்வீஸ் சென்டருக்குச் சென்றேன். அது ஊரில் வாங்கியது அதன் வாரண்டி இங்கு செல்லாது. அதை திறந்து உள்ளே என்ன பழுது என்று பார்த்து சொல்வதற்கே நாற்பது வெள்ளி என்றார்கள். “நல்லது! வாழக வளமுடன்!” என்று கூறிவிட்டு மிக்ஸியைத் தூக்கிக்கொண்டு வந்து ஊருக்கே அனுப்பிவிட்டேன். இங்கு வாங்கிய பொருட்களாக இருந்தாலும் வாரண்டி முடிந்துவிட்டால் இதே நிலை தான். பொதுவாக இந்த மேசைக் காற்றாடிகள் (table fan) எல்லாம் சரியாக வாரண்டி முடிந்தவுடன் மண்டையாட்ட ஆரம்பித்துவிடும். அதன் பின் குப்பைத்தொட்டிக்குத் தான் செல்லும். புதிது வாங்க வேண்டும். ஆனால் நம் நண்பர் சிங்கப்பூரில் இருந்தவரை ஒரு காற்றாடியும் குப்பைத்தொட்டிக்குச் சென்றதில்லை. ஊக்கை நெளித்து உள்ளே செருகுவார், பேப்பரைத் திணிப்பார், நூலை வைத்துக்கட்டுவார் ஏதாவது செய்து ஓடாத காற்றாடி எல்லாம் ஓடவைத்துவிடுவார். சில நேரம் ஆகா நல்ல காற்றாடியாக இருக்கிறதே என்று யாரோ தூக்கி வீசிய காற்றாடியை கூட எடுத்து வந்து வைத்திருக்கிறோம். அவர் வந்தவுடன் அதுவும் சுற்றிவிடும். இப்போதெல்லாம் ஒவ்வொரு முறை காற்றாடியைத் தூக்கி விசும் போதெல்லாம். “அவர் மட்டும் இருந்திருந்தா” என்று அந்தக்காலத்து கதை ஒன்றை மறக்காமல் என் மனைவியிடம் சொல்லிவிடுவேன்.

தொடர்ச்சியாக ஏழெட்டு வருடங்கள் ஊருக்கே செல்லாமல் இங்கிருந்து உழைத்துச் சேர்ப்பதாகக் கூறினார். அடிக்கடி தன்னுடைய மகனைப் பற்றிக் கூறுவார். தன் இளம் வயதிலேயே சிங்கப்பூர் வந்துவிட்டார் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் இங்கேயே கழித்துவிட்டார். வருடம் ஒருமுறை ஊருக்குச் செல்வது கூட கிடையாது. ஐந்தாறு வருடங்களுக்கு ஒருமுறை தான்.

“என் மகனை ரெண்டு வயசு கொழந்தையா பார்த்துட்டு அப்பறம் எட்டு வருஷம் கழிச்சுத் தான் போய் பார்த்தேன். சின்ன வயசுல அப்பா அப்பான்னு காலைச் சுத்திக்கிட்டே இருந்த பய எட்டு வருசத்துல என் ஒசரம் வளந்துட்டான். மகனேன்னு ஆசையா கொஞ்சப் போனா? ‘யப்பா நான் என்ன சின்னப் பையனா?’ன்னு சொல்லிட்டு தள்ளிப்போறான். வாழ்க்கைல நிறைய சம்பாதிக்கணும்னு நினைச்சு நிறைய இழந்துட்டேன் குமாரு…”

அவர் இதைச் சொன்ன போது என் மனம் கலங்கிவிட்டது. திருமணம் செய்துகொண்ட பின் நான் ஒரு இடத்தில் குடும்பம் ஒரு இடத்தில் என்ற சூழல் வந்துவிடக்கூடாது என்று எனக்கு நானே ஒரு தீர்மானம் செய்துகொண்டேன்.

“பையன் வளந்துட்டான். இனிமேலாச்சும் அவன் கூட போயி சந்தோஷமா இருக்கலாம்ன்னு இருக்கேன்.” என்று முடிவெடுத்து மொத்தமாக தமிழகம் திரும்பிவிட தேவையான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினார். அவருக்கு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல் வேலை நன்கு தெரியும் என்பதால் அதே தொழிலை தமிழகம் திரும்பிய பின் செய்ய முடிவு செய்தார். அதற்காக என்னென்ன தேவை அல்லது அவர் கண்களில் படும் பொருட்களில் எதெல்லாம் தேவை என்று அவருக்குத் தோன்றுகிறதோ அதையெல்லாம் கார்கோவில் ஊருக்கு அனுப்பினார். இப்படி ஒரு வருடதிற்கும் மேல் பல மோட்டார்கள் மெசின்களை வாங்கி ஊருக்கு அனுப்பினார். பின் ஒரு நாள் தன்னை இத்தனை வருடங்கள் வாழ வைத்த சிங்கையைப் பிரிய மனமில்லாமல் கண்கள் கலங்க சிங்கப்பூர் சாங்கி விமானநிலையத்தில் எங்கள் அனைவருக்கும் பிரியாவிடை கொடுத்துச் சென்றார்.

அவர் ஊருக்குச் சென்ற ஒரு வருடத்திற்குப் பின் நான் ஊரில் வீடு கட்டத் தொடங்கினேன். அவராக முன் வந்து “வீட்டுக்குத் தேவையான எலக்ட்ரிக்கல் வேலை எல்லாம் நானே பாத்துக்கொடுத்துடுறேன்” என்றார். உள்ளூரில் கண்கொத்திப் பாம்பாக கவனித்துக்கொண்டிருந்தாலே ஏமாற்றிவிடுவார்கள் எனும் போது. வெளிநாட்டில் இருந்துகொண்டு ஊரில் வீடு கட்டுவது என்பது சற்று சிரமமான காரியம். சரி நமக்கும் நம்பிக்கையான ஆள் இவர். நமக்கு வீடு கட்டும்போது அங்கிருந்தால் சரியான நிலவரத்தை நாம் அறிந்துகொள்ள முடியும் என்று நினைத்து நானும் ஒப்புக்கொண்டேன்.

ஆனாலும் அவர் ஊரில் இருந்து மதுரை வந்து போகவே ஒரு செலவு பிடிக்கும். அப்படி இருக்கும்போது நான் தரப்போகும் சம்பளம் அவருக்கு நிச்சயம் கட்டாது. அவரிடமே கேட்டேன்.

“என்னா குமாரு இப்படிச் சொல்லிட்டீங்க… உங்களுக்கு நான் சும்மாவே வந்து வேலை பார்த்துக்கொடுக்கணும். வேற வருமானம் இல்லைங்கறததால தான் சம்பளமே வாங்குறேன்” என்றார்.

ஒவ்வொரு வேலையையும் யோசித்து நிதானமாகச் செய்தார். அவரின் சொந்த வீட்டிற்கு வாங்குவது போல் பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்கினார். அவரின் வேலையை யாரும் குறைகூற முடியாத அளவிற்கு இருக்க வேண்டும் என்று முழு உழைப்பையும் போடுவார். ஏனோதானோ என்று அவர் ஒருபோதும் வேலை செய்ததில்லை. தவறு ஏதாவது நடந்தால் அது அவரையும் மீறி நடந்ததாக இருக்குமே தவிர அவர் குறை எதுவும் இருக்காது. அந்தளவிற்கு அவர் மீது எனக்கு நம்பிக்கை.

பல நாட்கள் கட்டிடத்திலேயே தங்கியிருக்கிறார். என் குடும்பத்துடனும் நெருங்கி பழகிவிட்டதால் அங்கேயே சாப்பிட்டுக்கொள்வார். அவர் வீட்டைப் போல வேண்டியதைக் கேட்டு வாங்கி சாப்பிடுவார். சில நேரங்களில் அவர் வேலையில் அது சரியில்லை இது சரியில்லை என்று என் அம்மா குறை கூறினால் கூட அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார். மீண்டும் மீண்டும் விளக்கி என் அம்மாவை சமாதானப்படுத்திவிடுவார்.

வீட்டு வேலை முடிந்த பின் தான் நான் ஊருக்குப் போக முடிந்தது. வீட்டுக்கு வந்து சந்தித்தார். அடிக்கடி அவர் மகனைப்பற்றி பேசுவார். கூடிய விரைவில் கல்லூரி செல்லப்போவதாகக் கூறினார். “கொஞ்ச நாள் கழிச்சு அவனுக்கு ஒரு லேப்ட்டாப் வாங்கணும்.” என்றார்.

அதன் பின் சில புதிய வேலைகள் கிடைத்ததாகக் கூறினார். ஒவ்வொரு முறை தொலைபேசி உரையாடலின் போதும் தன்னுடைய ஏதாவது ஒரு புதிய கண்டுபிடிப்பைப் பற்றிக்கூறுவார். சென்சார்களைப் பயன்படுத்தி அலாரம் அடிப்பது, தண்ணித் தொட்டி நிறைந்தவுடன் மோட்டரை தானாக நிறுத்துவது, சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்துவது என்று ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார். அவருடைய பேச்சில் ஏதாவது சாதித்தே ஆகவேண்டும் என்று துடிப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஒரு வேலைக்காக சென்னை சென்று அங்கேயே சில காலம் தங்கியிருப்பதாகக் கூறினார்.

கொரோனா காலத் தொடக்கத்தில் அவருக்கு அழைத்து எப்படி இருக்கிறார் என்று விசாரித்தேன். அதன் பின் சில காலம் எனக்கும் அவருக்குமான தொடர்பு இல்லாமல் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு நாள் என் அம்மா என்னை அழைத்து “என்னடா அவர்கிட்ட நீ பேசுனியா? இல்லையா? டா” என்றார்.

நான் “இல்லை பேசி ரொம்ப காலம் ஆச்சு” என்றேன்.

“ஆறேழு மாசத்துக்கு முன்ன அவரு பையன் கார் அக்கிசிடன்டல இறந்து போயிட்டானாம் டா… பாவம் ஆளே பித்து பிடிச்ச மாதிரி ஆகிட்டாராம். அவர் ப்ரண்டு ஒருத்தர் சொன்னாரு…”

என்ன அம்மா சொல்லிய அந்தச் செய்தியை என் மனத்தால் ஏற்க முடியவில்லை. ஒரு நிமிடம் அப்பாவித்தனமான அவரின் வெகுளிச் சிரிப்பு என் கண்முன் வந்து போனது. கண்கள் கலங்கிய நிலையில் “என்னம்மா சொல்ற? உனக்கு நல்லா தெரியுமா?” என்றேன்.

“ஆமாடா உண்மை தான். நான் அவருக்கே நேரடியா போன் அடிச்சு கேட்டேன். பாவம்… எப்பவும் கலகலன்னு பேசுற ஆளு… ரொம்ப அமைதியா பேசுனாரு. ஆனால் முன்னாடிக்கு இப்போ ரொம்ப தேறிட்டதா சொன்னாரு. நீ இப்பவே அவருக்கு அடிச்சு பேசு” என்றுவிட்டு வைத்து விட்டார்.

அவருக்கு அழைத்து என்னவென்று நான் விசாரிப்பது. இப்படி ஒவ்வொரு முறையும் புதிதுபுதிதாக யாராவது அழைத்து விசாரித்தால் அது அவரின் நினைவுகளைக் கிளறிக்கொண்டே இருப்பது போல் ஆகாதா? இப்படி எல்லாம் சிந்தித்தாலும். விஷயம் தெரிந்த பின் எப்படி கேட்காமல் இருக்க முடியும்?

அழைத்தேன்… மிக மிக சோகமான உரையாடல். அவருக்கு நான் எந்த ஆறுதலும் சொல்லவில்லை அவர் சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் பேச்சில் இருந்து அவர் காயத்தைக் காலம் ஓரளவு ஆற்றியிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.

அடுத்து ஒரு இரண்டு வாரங்கள் கழித்து மதுரையில் என் வீட்டிற்கு சென்றிருக்கிறார். என் அம்மாவின் அலைபேசியில் எனக்கு ‘வீடியோ கால்’ வந்தது. அவரைப் பார்த்தேன். அதே வெகுளித்தனமான சிரிப்பு ஆனால் அந்தக் கண்கள் மட்டும் சோகத்தை சிந்திக்கொண்டிருந்தன.

“உங்க பிள்ளைகளை பார்க்கலாம்ன்னு தான் அம்மாவ கூப்பிடச் சொன்னேன்” என்றார்.

அன்றைக்கு என்று நான் அலுவகம் சென்றிருந்தேன். ஆதலால் வீட்டிற்கு வந்து அழைக்கிறேன் என்றேன். நான் வீட்டிற்கு வந்து அழைத்தபோது அவர் கிளம்பிவிட்டிருந்தார்.

இன்று இதை எழுதிக்கொண்டிருக்கும் போது அவரை அழைத்துப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. நாளை பேசுவேன்.

முகங்களின் தரிசனம் தொடரும்….

முகங்கள் -10

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

முகங்கள்

- கட்டுரைப்போட்டி முடிவுகள் -
ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -