முகங்கள்

பதினேழாம் முகம்

- Advertisement -

எப்போதும்போல வேலை முடித்து வீட்டிற்கு வந்து சிறகுப்பந்து விளையாடத் தொடங்கினோம். ஒரு மாதங்களாக தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்ததால் எங்கள் பயிற்சி மெருகேறியிருந்தது. சிங்கப்பூரின் சிறப்புகளில் இதையும் ஒன்றாகச் சொல்லலாம். எல்லா அடுக்குமாடி குடியிருப்பின் கீழேயும் ஏதாவது ஒரு விளையாட்டுத் திடல் இருக்கும். அதிலும் இரவு பத்து மணி வரை விளக்குகள் பிரகாசமாக எரியும். விளையாட்டு ஆர்வம் இருக்கும் எவரும் சென்று விளையாடலாம். என்ன மற்றவர்களுக்கு முந்திச் செல்ல வேண்டும். வேறு யாராவது வந்து இடத்தைப் பிடித்துவிட்டால் அவர்கள் இறக்கப்பட்டு வெளியேறும் வரை அவர்கள் விளையாட்டை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.

நான் எப்போதும் ஆளுக்கு முதல் சென்று நெட்டைக் கட்டிவிடுவேன். அன்றைய ஆட்டம் மிக விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்தது. நானும் என் நண்பனும் எங்கள் முழு ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தி விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது அங்கே ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் அவரின் மகளுடன் வந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் கையிலும் சிறகுபந்தாட்ட ராக்கெட்கள் இருந்தன. ஐந்தரையடி உயரத்தில் எழுபதுகிலோ இருப்பார். வட்ட முகம் புன்னகை மாறாத உதடுகள். பார்க்கவே படு நல்லவராகவும் அப்பாவியாகவும் தெரிந்தார். மொத்தத்தில் மௌனராகம் மோகனையும் சின்னத்தம்பி பிரபுவையும் கலந்தது போல் இருப்பார். அவர் மகளுக்கு ஒரு பதினைந்து வயதிருக்கும். 

அவர்கள் வந்ததை கவனிக்காதது போலவே நானும் என் நண்பனும் விளையாடிக்கொண்டிருந்தோம். ஒருவேளை கவனித்துவிட்டால் நாங்கள் அவர்களுக்கு வாய்ப்புத் தரவேண்டும் அல்லவா? முடிந்த அளவு அவர்கள் பக்கம் பார்வையைத் திருப்பவேயில்லை. ஒரு ஆட்டம் முடிந்து இருவரும் பக்கம் மாறினோம். இதற்காகவே காத்திருந்தது போல் அவர் வேகமாக முன்னே வந்து அவர் பெயரைச் சொல்லி கையை நீட்டி அறிமுகப்படுத்தி கொண்டார். அவர் மகளையும் அறிமுகப்படுத்தினார். அவராக “ஹாய்” சொல்லி கையை நீட்டிக்கொண்டு வரும்போது எப்படித் தவிர்க்க முடியும்? சரியென்று கையைக் குலுக்கிக்கொண்டோம். அப்படி அன்று கைகுலுக்கிய அவர் தான் நம்முடைய இந்தவார முகம்.

“நாங்களும் உங்க கூட சேர்ந்து விளையாடலாமா? டபுள்ஸ் ஆடுவோம்?” என்றார்.

சரி எப்படி அணி பிரிப்பது என்ற போது.

“நானும் என் பொண்ணும் ஒரு டீம்… நீங்க ரெண்டு பேரும் ஒரு டீம்” என்றார்.

எனக்கு அவர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஒரு அப்பாவித் தந்தையும் ஒரு சிறுமியையும் போட்டு அடித்த பாவத்தை வேறு சுமக்க வேண்டுமா என்று எண்ணினேன்.

விளையாட்டுத் தொடங்கியது. மனிதன் உருவத்திற்கும் ஆட்டத்திற்கும் சம்பந்தமேயில்லை. அவர் மகளின் பக்கம் அடித்து தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்தால். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் அவர்கள் இருவரும் எங்களை அடித்து துவம்சம் செய்துவிட்டார்கள்.

ஒரு ஆட்டம் இரண்டு ஆட்டமில்லை அடுத்தடுத்து வந்த எல்லா ஆட்டங்களிலும் இதே நிலை தான். என்னதான் அடிஅடியென வெளுத்திருந்தாலும். கிளம்பும்போது “நீங்க ரொம்ப நல்லா விளையாண்டிங்க” என்று சொல்லி “ஹஹஹா” என்று சிரித்து முதுகில் நாலு தட்டு தட்டிவிட்டுச் சென்றார். 

அடுத்தநாள் எப்போதும்போல வந்து நெட்டைக் காட்டும்போது, இன்றும் அவர்கள் வந்துவிடுவார்களோ என்ற பயத்தோடு தான் கட்டினேன். நினைத்தது போலவே வந்துவிட்டார்கள். அவர் மனைவியும் உடன் வந்திருந்தார். நல்லவேளை அவர் மனைவி விளையாடவில்லை. வேடிக்கை தான் பார்த்தார். 

விளையாட ஆரமித்த சிறிது நேரத்தில் அவர்களின் வேறு சில நண்பர்களும் வந்தார்கள். அவர்களும் ஓரளவிற்கு சிறப்பாகவே விளையாடினார்கள். அவர்கள் அனைவரும் வேறு ஒரு ப்ளாக்கின் கீழ் விளையாடுவார்களாம். அங்கே ஏதோ மராமத்து வேலை நடைபெற இந்தப்பக்கம் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே குடும்பமாக இருந்தார்கள். கடும் கோடைகாலத்திற்குப் பின் வரும் வசந்தம் போல இருந்தது அவர்களின் வருகை. எங்கள் வீட்டில் இருந்த அத்தனை பேச்சுலர்களையும் அவர்களின் குடும்பத்திற்குள் இணைத்துக்கொண்டார்கள். அவர்கள் பிள்ளைகள் எல்லாம் எங்களோடு நெருங்கிப் பழகிவிட்டார்கள்.

அதன் பின் அணி பிரித்து எங்களுக்குள் டோர்னமென்ட் எல்லாம் விளையாட தொடங்கிவிட்டோம். ஒவ்வொரு வார இறுதியிலும் “ச்சாய் ச்சீ”யில் இருக்கும் சமுதயாக் கூடத்தில், உள்ளரங்க ஆடுகளத்தை பதிவு செய்து அங்கே விளையாடினோம். எங்கு விளையாடினாலும் நம் இந்தவார முகத்தை வீழ்த்துவது மட்டும் இயலாத காரியமாகவே இருந்தது. எனக்கு எப்போதுமே அவருக்கு எதிர் அணியில் இருக்கத்தான் பிடிக்கும். அவரோடு ஆடும்போது முழுக்கவனமும் ஆட்டத்தில் இருக்கும். எத்தனையோ ஆட்டத்தில் யார்யாருடனோ தோற்றிருக்கிறோம் அதைப் பற்றி எல்லாம் கவலையில்லை. இவரை ஒருமுறையாவது வீழ்த்தியாக வேண்டும் அது தான் குறிக்கோள். நாம் எவ்வளவு சிரத்தை எடுத்து அவருடன் போராடினாலும் அவர் சிரித்துக்கொண்டே வென்றுவிட்டுச் சென்றுவிடுவார். ஆட்டம் நடக்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் எல்லாம் சிரித்துக்கொண்டு தானிருப்பார்.

“எப்படிங்க இப்படி விளையாடுறீங்க… உங்க ரிவர்ஸ் ஷாட்ட கூட எங்களால எடுக்க முடியல… எப்படி அவ்வளோ வேகமா அடிக்கிறீங்க.?” என்று கேட்டால். “டேய்… போடா.. சும்மா என்ன ஓட்டாத” என்று சிரித்து மழுப்பிவிடுவார்.

அவர் வீட்டில் நடக்கும் பிறந்தநாள் விழா முதல் வரலட்சுமி பூஜை வரை அத்தனைக்கும் எங்களுக்கு அழைப்பு வந்துவிடும். அவர்களின் நட்பு வட்டம் பெரிது என்பதால் பலர் வருவார்கள். வகை வகையான சாப்பாடுகளை செய்து அசத்திவிடுவார் அந்த அக்கா. 

ஒவ்வொரு நாள் சாயுங்காலம் நாங்கள் விளையாடும் போதும் அவர்களில் ஒருவர் தேநீரோடு வருவார், ஒருவர் வடை கொண்டுவருவார். உண்மையில் என் பேச்சுலர் வாழ்க்கையில் வசந்தகாலம் என்றால் அது இவர்களுடன் நான் இருந்த அந்தக் கொஞ்ச நாள்கள் தான். 

நம் நண்பர் அவர் மகளின் மீதும் மனைவி மீதும் பேரன்பு கொண்டவர். அவர் தொழில் அவர் அடிக்கடி வெளிநாட்டுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். பயங்கர பிஸியான ஆள். இருந்தாலும் கூட தன் மகளுக்காக சிறகுபந்தாட்ட ராக்கெட்டைத் தூக்கிக்கொண்டு விளையாட வந்துவிடுவார். அதே போல் அவர் மனைவி சொல்லும் எந்த விழாவையும் அவர் வீட்டில் நடத்துவார். அதற்காக அவர் மனைவி கடுமையாக வேலை செய்வதை மட்டும் சொல்லி மனம் வருந்துவார். அனாலும் ஒருபோதும் இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்று தடைபோட மாட்டார். இருவரும் காதம் திருமணம் செய்துகொண்டவர்கள். 

அவர்கள் வீட்டிற்கு ஏதாவது விழா என்று சென்றோமானால் திரும்பி வர அதிகாலை இரண்டு மணிக்கு மேல் ஆகிவிடும். அப்போதும் கூட “ஏன்டா ஏற்கனவே மணி ரெண்டாகிடுச்சு… இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா விடிஞ்சிரும்… அப்பறம் போய் தூங்க வேண்டிய தானே” என்பார். அரட்டை, பாட்டுக்கு பாட்டு,  ஊர் புரளி என நேரம் செல்வதே தெரியாது. மனிதர் பாடத் தொடங்கினால்  பழைய தமிழ் பாடல்களை எல்லாம் ஆங்கிலப் பாடல் போல் பாடி அசத்தி விடுவார். அதிலும் அவர் “வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்…” என்று பாடலைத் தொடங்கும் போதே என் நண்பன் ஒருவன் “சார் தமிழ்ல பாடுங்க… சார் தமிழ்ல பாடுங்க…” என்று அவரைக் கேலி செய்ய தொடங்கிவிடுவான். அதெல்லாம் அவர் காதில் ஏறவே ஏறாது தொடங்கிய பாடலை முடித்துவிட்டுத் தான் “என்ன சொன்ன ?” என்றே கேட்பார்.

எங்கள் கூட்டத்தில் புதிதாக ஒரு வடஇந்திய ஜோடி வந்து சேர்ந்தது. ஆரம்பத்தில் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்தாலும் போகப்போக நன்கு பழகிவிட்டார்கள். அவர்களுக்கு சிங்கப்பூரில் ஒட்டு உறவு என சொல்லிக்கொள்ள யாருமில்லை. அந்தப் பெண் கருத்தரித்திருந்த போது. எல்லோரும்  சேர்ந்து ஒரு வளைகாப்பை நடத்தினார்கள். அந்த வடஇந்திய நண்பர் உண்மையில் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார். 

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது எங்கிருந்து தான் வந்ததோ இந்த ஈகோ திடீரென நிறைய பிரச்சனைகள் வந்தன. பொதுவாகவே நான் யாரிடமும் அன்பை வெளிப்படையாக காண்பிப்பவன் அல்ல. இவர்களிடமும் அப்படித்தான் இருந்தேன். அதனாலேயே எனக்கும் அவர்களுக்கும் நேரடியாக எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை. என்னைப் போலத் தான் நம் நண்பரும் அவரும் யாருடனும் “நீ தான் எனக்கு ரொம்ப க்ளோஸ்… நான் ரொம்ப பொசசிவ்…” என்றெல்லாம் நாடகத்தனமாக பழகுபவர் அல்ல. அதனாலேயே எங்கள் இருவரால் அங்கே எந்தப் பிரச்சனையும் இல்லை. அதே நேரம் என் நண்பர்களில் சிலர் கிடைக்கும் சலுகைகளை கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்திக்கொண்டனர். “எனக்கு  புளியோதரை பிடிக்கும்… பொங்கல் பிடிக்கும்…” என்று கேட்டு வாங்கித் தின்ற வேகத்திலேயே அவர்களைப் பகைத்தும் கொண்டார்கள். 

அவர்கள் பகைத்துக்கொண்ட பின் “உன் ப்ரண்டு தானே… நீ ஞாயத்த கேளு…” என்றார்கள். இந்தப்பக்கம் “நீ எல்லாம் பேருக்குத்தான் ப்ரண்டு என்னைக்குமே எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டா” ன்னு கிளம்பினார்கள். நான் என்ன செய்வது. பொதுவாக நண்பர்களுக்குள் நடக்கும் பஞ்சயாத்துகளில் ஞாய அநியாயமெல்லாம் பார்க்க முடியாது. சண்டை வரும் போகும். இது தான் நமக்குத் தெரியும். நான் எதுவும் பேசாமல் நடுநிலை வகித்தேன். என்னைப் போலத்தான் நம் நண்பரும். பாவம் அவர், அவர் மனைவிக்காக அதிகம் வருத்தப்படுவார். “நைட்டெல்லாம் ஒரே பொலம்பல் ஜெய்… ” என்பாரே தவிர அவரும் யார் நல்லவர்? யார் தப்பு செய்தவர்? என்றெல்லாம் ஒரு நாளும் கேட்க மாட்டார்.  உடலை ஒரு குலுக்கு குலுக்கி சத்தமாகச் சிரித்து முடிக்கும்போது எல்லாவற்றையும் மறந்துவிட்டது போல் ஆகிவிடுவார். அவருக்கு கோபம் வந்து யாரையும் நான் திட்டிப் பார்த்ததேயில்லை.

என் நண்பன் ஒருவனுக்கு திருமணம் ஆனது. நாங்கள் இருந்த வீட்டை அவனுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு அனைவரும் தனித்தனியாகக் கிளம்பிச் சென்றோம். இங்கே ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களுக்குப் பின் நான் யாருடனும் சேர்ந்து இருக்க விரும்பவில்லை. தனியாக அரை எடுத்து வெகுதொலைவில் சென்று தங்கிக்கொண்டேன். இங்கே இருந்த அத்தனை குடும்பங்களும் தனித்தனியாக பிரிந்து போயின. இப்போது வரை அப்படி அவர்கள் பிரிந்து போனதற்கான ஒரு காரணம் கூட எனக்குத் தெரியவில்லை. 

அதன் பிறகும் நம் நண்பர் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் எனக்கு அழைப்பு வந்துவிடும். நானும் சென்று நன்கு உண்டுவிட்டுச் வந்துடுவேன். என்னதான் என் நண்பர்களில் சிலரை அவர்கள் பகைத்துக்கொண்டிருந்தாலும் ஒவ்வொருவரின் நலனையும் தனித்தனியாக விசாரித்து அறிவார். “எல்லாரும் எப்படிடா இருக்கானுக… அவனுகளை எல்லாம் கூப்பிடமா இருக்கது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்டா… ஆனாலும் என்ன செய்றது…” என்று இழுப்பார். 

என் திருமணதிற்கு பின் அவர்கள் வீட்டில் நடந்த ஒரு வரலட்சுமி பூஜைக்கு மனைவியுடன் சென்றுவந்தேன். அதன் பின் வெகுநாள்கள் தொடர்பேயில்லாமல் இருந்தது. ஒருநாள் நான் ஒரு தேம்பனிஸ் மாலில் என் மனைவியுடன் சென்றிந்த போது. இவர் கண்ணில் பட்டார். அவர் மனைவியும் உடன் வந்திருந்தார். நலம் விசாரிப்பிற்குப் பின். “எனக்கு ஒரு சட்டை எடுத்துக்கொடுங்க?” என்று விளையாட்டாகக் கேட்டேன். அவர் மனைவியை எப்போதும் அக்கா என்று தான் அழைப்பேன் அவரும் அதே உரிமையில் என்னை வாடா போடா என்றே அழைப்பார். “அவர் என்னடா எடுத்துக் கொடுக்குறது நான் உனக்கு எடுத்து தரேன்டா…” என்று அந்த அக்கா சில டீசர்ட்களைப் புரட்டினார். நாற்பது வெள்ளிக்கு ஒரு டீசர்ட்டைத் தூக்கினேன். நானாக எடுத்தால் பத்து இருபது வெள்ளிக்குமேல் தாண்ட மாட்டேன். “உனக்கு இல்லாததாடா” என்று அவர் சிரித்துக்கொண்டே எடுத்துக்கொடுத்துவிட்டுச் சென்றார்.

கொரோனா காலகட்டத்தில் அழைத்து நலம் விசாரித்தார். எந்த ஒரு சூழ்நிலையையும் ஒரு தோள் குலுக்கலில் சிரித்துக்கொண்டே கடந்து சென்றுவிடும் அவர் குணம் அவருக்குக் கிடைத்த வரம். 

எத்தனை பேருடன் பழகினாலும் சிலரை வாழ்நாளில் ஒரு நாள் கூட பகைத்துக்கொள்ளக் கூடாது என்று தோன்றும் அப்படிப்பட்டவர் இவர். 

இந்த இனிய தீபாவளி நாளில் அவர்களுடன் கொண்டாடிய அந்த இனிய தீபாவளி நாளை நினைத்துக்கொண்டே இந்தப் பதிவை முடிக்கிறேன்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்….

முகங்களின் தரிசனம் தொடரும்….

முகங்கள் -18

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

முகங்கள்

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -