முகங்கள்

பதினாறாம் முகம்

- Advertisement -

சிங்கப்பூர் வந்து வேலை தேடத் துவங்கியிருந்தேன். என் மாமா இங்கிருந்ததால் தங்க திங்க எந்தப் பிரச்சனையும் இல்லை. அவரும் ஐ.டி. துறையில் பணிபுரிந்ததால் அவரின் நண்பர்களிடமும் எனக்காக சிபாரிசு செய்துகொண்டிருந்தார். ஆனால் பாருங்கள் சிபாரிசு என்று சென்றாலே நம்மை மகா மட்டமாக கருதிவிடுவார்கள். நல்லவேளை சிபாரிசுகள் மூலம் எனக்கு  வேலை கிடைக்கவில்லை. 

நான் சென்னையில் ரேடியோ அலைகள் தொழில்நுட்பம் சார்ந்த அலுவலகத்தில் வேலை செய்ததால் சிங்கப்பூரிலும் அதே போல ஒரு வேலை கிடைத்துவிட்டால் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன். எதிர்பார்த்தது போல ஒரு அழைப்பும் வந்தது. எழுத்து மற்றும் நேர்முகத் தேர்விற்காக ‘அங்மோகியோ’ வரச்சொன்னார்கள். இரண்டு நாள்கள் கழித்து அமெரிக்காவில் இருந்து ஒருவர் அழைத்து ஒரு ஒன்னரை மணி நேரம் பேசினார். அதன் பின் அடுத்த இரண்டு நாள்கள் கழித்து ஒருவர் இந்தியாவில் இருந்து முக்கால்மணி நேரம் பேசினார். இறுதியாக இன்னொரு அமெரிக்கர் புகிஸ் ரயில் நிலையம் அருகில் இருக்கும் ‘ஸ்டார் பக்ஸ்’ காபிக் கடையில் வந்து என்னைச் சந்திக்கச் சொன்னார். அனைவருக்கும் என்னை மிகவும் பிடித்துவிட்டதாகக் கூறினார். நல்ல சம்பளம் ஆனால் இது வெறும்  ஆறு மாதக் காண்ட்ராக்ட் என்றார். 

பொதுவாக இந்தியர்களில் பலருக்கு காண்ட்ராக்ட் வேலை என்றாலே கொஞ்சம் பயம் தான். நமக்கு நிரந்தர வேலை தான் வேண்டும். அது ஏன் அப்படி நாம் சிந்திக்கிறோம் என்றே எனக்குப் புரியவில்லை. ஒருவேளை நீங்கள் இப்படிச் சிந்திப்பவர் இல்லை என்றால் இந்தியர் என்று பொதுமைப்படுத்திக் கூறியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். ஆனால் நான் அப்படித்தான். இன்றுவரை அப்படித்தான். எந்த வேலையும் நிரந்தரமில்லை என்று தெரிந்தாலும் காகிதத்தில் நிரந்தர வேலை என்றிருக்க வேண்டும்.

அந்த அமெரிக்கரிடம் எனக்கு ஒர் இரண்டு நாள்கள் அவகாசம் தாருங்கள் நான் மின்னஞ்சல் மூலம் தங்களைத் தொடர்புகொள்கிறேன் என்று கிளம்பிவந்துவிட்டேன். அடுத்த நாள் எனக்கு வேறு ஒரு நேர்முகத்தேர்வு இருந்தது அதில் எப்படி செய்கிறோம் என்பதைப் பார்த்துவிட்டு இவருக்கு முடிவு சொல்லலாம் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

அடுத்தநாள் நேர்முகத்தேர்விற்கு சீமேயில் இருந்து புக்கிட் பாத்தோக்  செல்ல வேண்டும். கிட்டத்தட்ட ஒண்ணேகால் மணி நேரப்பயணம். அதிகாலையில் எழுந்து இடத்தைக் கண்டுபிடித்துச் சென்றேன். எனக்கு முன்னரே ஓர் ஐந்து பேர் காத்துக்கொண்டிருந்தனர். நான் மட்டும் தான் ‘டை’ எல்லாம் அணிந்து சென்றிருந்தேன். மதுரைக்காரன் என்றாலே சட்டையில் மேல் பொத்தானை போடாமல் இருந்தால் தான் ஒரு கெத்து ஆனால் இப்போது கழுத்துப் பொத்தான் வரை போட வேண்டிய சூழல். அது கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தது. சென்னையில் என் நண்பன் ஒருவன் சிங்கப்பூருக்கு வழியனுப்ப வந்த போது ஒரு ஜோடி கருப்பு சப்பாத்துகள் வாங்கிக்கொடுத்தான். அது தான் என் நேர்முகத்தேர்வு சப்பாத்துகள். புதிது என்பதால் அது ஒரு பக்கம் எழுந்து நடக்கும்போதெல்லாம் கடித்தது. ஒரு கருப்புத் தோள்பையில் நான் வாழ்நாளில் வாங்கிய அத்தனை சான்றிதழ்களையும் வைத்து எடுத்து வந்திருந்தேன். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஓட்டப்பந்தயத்தில் வாங்கிய சான்றிதழ் உட்பட. எனக்கு முன் அமர்ந்திருந்தவர் கையில் ஒரு துண்டுக் காகிதம் கூடயில்லை. அவரும் இந்தியர் தான். குறுந்தாடி வைத்து அழகாக முடிவெட்டி தலையின் பக்கவாட்டில் மூன்று மூன்று கோடுகள் வேறு வரைந்திருந்தார்.  சட்டையை கூட கால்சட்டைக்குள் திணித்திருக்கவில்லை. ஜீன்ஸ் தான் அணிந்திருந்தார். அவரைப் பார்க்க பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு முன் ஒரு இந்தியப் பெண் விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்தார். அது எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக இல்லை நான் பார்த்தவர்கள் எல்லாம் அப்படித்தான்.

நான் தான் கடைசி என் முறை வந்து உள்ளே நுழைந்தேன். இடுங்கிய கண்கள், சிறிய செவ்வகக் கண்ணாடி. பார்த்தாலே சீனர் என்று தெரிந்துவிடும். வெள்ளையும் கருப்பும் கலந்த முடி. ஜாக்கிசானை எல்லாப்பக்கமும் சம்பட்டியால் அடித்துச் சுருக்கி ஒரு நாலு இஞ்சு குறைத்தது போல் இருந்தார். மென்மையான புன்னகையோடு என்னை வரவேற்று அவர் முன் இருந்த இருக்கையில் அமரச்சொன்னார். பார்க்கவே படு சாந்தமாக காட்சியளித்தார். இந்த சாந்தசொரூபி தான் நம்முடைய இந்த வார முகம். நான் ‘டாட் நெட்’ சம்பந்தமான வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். அவர் கேள்விகள் எல்லாமே பொதுவாகத் தானிருந்தன. பெரும்பாலும் நான் நல்லவன், வல்லவன், பொறுமையின் சிகரம், “நீங்கள் என்ன சொன்னாலும் செய்வேன் எசமான்” என்ற ரீதியில் தான் என் பதில்கள் இருந்தன. 

நாங்கள் இன்று ஒரு வேலை சொல்வோம் அதை அடுத்த நாள் அப்படியே தலைகீழாக மாற்றச் சொல்வோம் அப்போது நீ என்ன செய்வாய்? என்றார். நான் மாற்றிவிடுவேன் என்றேன். அடுத்தநாள் வேறு மாதிரி மாற்றச்சொல்வோம் என்றார். நான் மாற்றிவிடுவேன் என்றேன். இப்படி தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்போம் என்றார். நான் “மாற்றம் ஒன்றே மாறாதது” என்று பதிலளித்துவிட்டு அமைதியாக இருந்தேன்.

அந்த பதில் அவரை வெகுவாக கவர்ந்துவிட்டதோ என்னவோ. அதன் பின் மிக உற்சாகமாகிவிட்டார். உன்னால் எப்போது வந்து வேலையில் சேரமுடியும்? சமீபத்தில் ஏதாவது விடுமுறை எடுக்கும் திட்டம் இருக்கிறதா? என்பது போன்ற கேள்விகளை முடித்து விரைவில் அழைப்பதாகக் கூறி அனுப்பிவைத்தார். 

நான் மிகுந்த நம்பிக்கையுடன் வீடு வந்து சேர்ந்தேன். அடுத்த மூன்று நாள்கள் எந்த அழைப்பும் வரவில்லை. ஏற்கனவே வேலை தந்துவிட்ட அமெரிக்கருக்கும் எதுவும் சொல்லாமல் இழுத்தடித்தேன். ஒரு வாரம் கழித்து நான் எதிர்பார்த்த அந்த அழைப்பு வந்துவிட்டது. அந்த அமெரிக்கர் தருவதாக ஒப்புக்கொண்ட சம்பளத்தில் முக்கால் சம்பளம் தான் இவர்கள் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் இருண்டு வருடக் காண்டிராக்ட். நான் முன்பே சொன்னேன் அல்லவா அந்த இந்திய மனநிலை. அது தான் என்னை இந்த வேலையைத் தேர்வு செய்ய வைத்தது. சம்பளம் எவ்வளவு குறைவாக இருந்தாலும் பரவாயில்லை வேலையில் இருக்க வேண்டும். 

என் நண்பன் ஒருவன் ஐ.டி. ரெக்ருட்மென்ட் வேலையில் இருந்தான். அதாவது ஐ.டி. வேலைக்கு ஆள் பிடிக்கும் வேலை. ஒருநாள் அவன் வெளியில் இருந்ததால் அவனுடைய கன்சல்டன்ட் ஒருவனுடன் நான் ‘சாட்’ பண்ண வேண்டி வந்தது. அந்த கன்சல்டன்ட் பிரிட்டனைச் சேர்ந்தவன். ஒரு வருட காண்டிராக்ட் வேலை என்றேன். அவன் ஒரு வருடமா அதெல்லாம் முடியாது. ஆறு மாதம் என்றால் ஓகே. அதன் பின் நான் பனிச் சறுக்கு விளையாட போய்விடுவேன் என்றான். அவனுடைய பாணியே அதுதானாம். ஆறுமாதம் அல்லது மூன்று மாதம்  காண்டிராக்ட் என்று அதிக சம்பளத்திற்கு வேலை செய்வது. அதன் பின் சில மாதங்கள் ஓய்வெடுப்பது. ஒவ்வொரு வருடமும் பனிக்காலங்களில் பனிச்சறுக்கு விளையாட்டைத் தவற விட மாட்டானாம். நம்மளும் தான் இருக்கிறோமே. 

ஒருவழியாக வேலை கிடைத்துவிட்டது. சிங்கப்பூரில் வேலை செய்வதற்கான அனுமதி அட்டை எல்லாம் கிடைத்துவிட்டது. ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டன்று முதல்நாள் வேலையைத் தொடங்கினேன். சாந்த சொரூபியான என் மேலாளர், என்னை நேர்முகத்தேர்வு செய்தாரே அவரே தான், முதல் நாள் அங்கிருப்பவர்களை அறிமுகம் செய்து நான் எப்படி இருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று கூறினார். இரண்டாம் நாள் என்னை தனியறைக்கு அழைத்துச்சென்று எனக்கான வேலையை விளக்கினார். முதல் வேலை ‘டெல்பி’ என்றொரு மென்பொருள் எழுதும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யவேண்டும் என்றார். நான் அப்போது வரை ‘டெல்பி’ என்ற வார்த்தையைக் கூட கேள்விப்பட்டதில்லை. நான் ‘டாட் நெட்டில்’ வேலை செய்தவன். அவரிடம் கூறினேன். அவர் அதற்கு இங்கே இப்போது உள்ள அனைத்து மென்பொருள்களும் டெல்பியில் தான் உள்ளன. ஆதலால் நான் அதில் தான் வேலை செய்யவேண்டும் என்றார். மேலும் பிற்காலத்தில் அவற்றை ‘டாட் நெட்’க்கு மாற்றும் உத்தேசம் இருப்பதாகவும் கூறினார். நான் அதற்கு மேல் அவரிடம் எதுவும் மறுத்துப் பேசவில்லை. நான் தான் “மாற்றம் ஒன்றே மாறாதது’ என்று கூறியவனாயிற்றே. இந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதிலும் சாந்த சொருபியான அந்த மேலாளர் முகத்தில் ஒரு கடூரத்தைப் பார்த்தபின் வேறுவழியே இல்லை. வேலைக்குச் சேர்க்கும்போது இருந்த அந்தச் சிரிப்பு இப்போது காணாமல் போயிருந்தது. முடிக்கும் போது முத்தாய்ப்பாக இந்த வேலையை ஒருவாரத்திற்குள் முடித்தால் தான் நீ வேலையில் தொடரமுடியும் என்றும் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

அதிலும் முதல் ஆறுமாதங்களுக்குள் என்னை வேலையை விட்டு அனுப்ப அவர்கள் இரண்டு வார ஊதியத்தைக் கொடுத்தாலே போதும். அப்படித்தான்  என்னிடம் எழுதியும் வாங்கியிருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஒருவனை வேலைக்கு எடுத்து சோதிப்பது அவன் ஒத்துவராவிட்டால் உடனே தூக்கிவிடுவது. இது தான் பாலிசி. இதன் சூது தெரியாமல் அந்த இன்னொரு வேலையை உதறிவிட்டு இங்கு வந்து மாட்டிக்கொண்டேன். நல்லவேளையாக நல்ல தமிழ் நண்பர்கள் அங்கே கிடைத்தனர். அவர்களின் உதவியோடு ‘டெல்பி’ கற்றுக்கொண்டு முதல் வாரத்தில் என் மேலாளர் கொடுத்த வேலையை வெற்றிகரமாகச் செய்து முடித்தேன். வேலையைத் தொடங்கிய இரண்டாவது நாளிலிருந்தே இரவு ஒன்பது மணிவரை வேலை செய்ய வேண்டியதாகிவிட்டது. அதன் பின் பேருந்து மற்றும் இரயிலைப் பிடித்து வீடு செல்வதற்கு இரவு பதினோரு மணியாகிவிடும். மீண்டும் அதிகாலை எழு மணிக்கெல்லாம் இரயிலைப் பிடிக்க வேண்டும். காலை 8.30க்கு வேலை தொடங்கும். ஒரு ஐந்து நிமிடம் தாமதமானால் கூட ‘தம்பி இங்க வா’ என்று என் மேலாளர் அழைப்பார். குறைந்தது அரை மணி நேர அறிவுரை காதில் இரத்தம் ஒழுக ஒழுகக் கிடைக்கும்.

அதே போல் இரவு 8.30 மணிக்கு அவரின் மனைவி அலுவகத்தில் இருந்து வரும் வழியில் இவரை அழைத்துச் செல்வார். அவர் வரும் வரை இவர் அலுவலகத்தில் தான் இருப்பார். அதுவரை நாங்களும், குறிப்பாக நான் இருக்க வேண்டும். இடையில் கிளம்பினால் ‘இங்கே வா… இங்கே வா…’ என்று வேகமாக அழைப்பார். “என்ன வேலை எல்லாம் முடிச்சுட்டியா? அதுக்குள்ள கிளம்பிட்ட” என்று தொடங்குவார். அடுத்து ஒரு முக்கால் மணி நேரம் காதில் இரத்தம் ஒழுகும். வேலை முடித்துவிட்டு தான் வீட்டிற்குக் கிளம்ப வேண்டும் என்றால் அந்த அலுவலகத்தில் இருந்து கிளம்பவே முடியாது. அந்தளவிற்கு வேலை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அங்கே எல்லாமே ‘இன் ஹவ்ஸ் ப்ராஜெக்ட்ஸ்’ தான். அதாவது அந்த கம்பனியின் தேவைக்கான மென்பொருள்களை மட்டும் தயாரிப்போம். அது ஒரு மகிழுந்து நிறுவனம். அங்கே வாடகை மகிழுந்துகள், மாதா மாதம் தவணை முறையில் கார் விற்பனை, மொத்த விற்பனை, சர்வீசிங் எனப் பல துறைகள் இருக்கும். ஒவ்வொரு துறைக்கும் தேவையான மென்பொருள்களைத் தயாரிக்க ஆறு பேர் தான் இருப்போம். எங்கள் மென்பொருளை பயன்படுத்துபவர்கள் அருகிலேயே இருப்பதால் எதற்கெடுத்தாலும் ஓடி வந்து விடுவார்கள். உடனே அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் பலர் வந்து என்னுடையதை முதலில் செய் என்னுடையதை முதலில் செய் என்று முண்டியடிப்பதும் உண்டு. இவர்களை எல்லாம் சமாளிக்க வேண்டிய என் மேலாளர் அதைச் செய்யாமல் எங்களைக் கைகாட்டி விடுவார். ஒரு வேலை முடிக்கும் முன்னே ஐந்து வேலைகள் வந்து சேர்ந்துவிடும்.

நான் வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது மாதத்தில் ஒருவர் வேலைக்குச் சேர்ந்தார். அடுத்த ஒரு மாதத்தில் அவரை வேலையை விட்டு தூக்கிவிட்டார். அதே போல் இன்னொருத்தர், இன்னொருத்தர் என நான் அங்கு வேலை செய்த இரண்டு வருடங்களில் பலரை வேலையை விட்டு தூக்கியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று அவர் வேலையை ஒழுங்காகச் செய்யாமல் தாமதமாகும் வேலைகளுக்கு ஒரு காரணகர்த்தாவை உருவாக்கி அவரை பலிகடா ஆக்கிவிடலாம். அதே நேரம் மற்றவர்களுக்கும் ஒரு பயத்தை உண்டாக்கிவிடலாம். அவர் அடிக்கடி “தேர் இஸ் நோ ஃப்ரீ லஞ்ச்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவார். அதாவது நாங்கள் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குகிறோமாம். ‘ஏன்டா எருமை தெனம் பத்து மணி வரை வேலை பாக்குறேனே உனக்கு கண்ணு தெரியலையா?’ என்று கேட்கத் தோன்றும் ஆனால் நம் வீட்டில் நம்மை அப்படியா வளர்த்திருக்கிறார்கள்? பெரியவர்கள் என்றால் மரியாதையாக பேசவேண்டும் என்றல்லவா கற்றுகொடுத்திருக்கிறார்கள்.

உண்மையில் அந்த அலுவலகத்தில் மகா மட்டமாக நடத்தப்படுவது நான் தான். ஒரு நாள் நான் என் மேலாளரிடம் ‘டோஸ்’ வாங்கிக்கொண்டிருந்த போது என்னுடைய இன்னொரு நண்பர் உள்ளே நுழைந்தார். அவர் சிங்கப்பூரர். வந்தவுடன் அவரை என் மேலாளர் இருக்கையில் அமரச் சொன்னார். நான் அங்கே ஒரு அரைமணி நேரத்திற்கு மேல் நின்றுகொண்டிருக்கிறேன். அதே போல் அவரின் கடுகடு முகம் அந்த நண்பரிடம் பேசும்போது மிக அழகாக மாறியிருந்தது. அவர் பேச வந்ததை பேசிவிட்டு வெளியே சென்றுவிட்டார். அதன் பின் இன்னும் ஒரு அரைமணி நேரம் நான் வாங்க வேண்டியதை நின்றுகொண்டே வாங்கிவிட்டு வெளியில் வந்தேன். 

என் சிங்கப்பூர் நண்பர் “ஏன் ஜெயா உள்ள நின்னுக்கிட்டே இருந்தீங்க?” என்றார்.

“அவர் என்னை எப்பவுமே உட்காரவே சொல்ல மாட்டாருங்க… நீங்க வந்த உடனே உட்கார சொன்னார்ல?” என்றேன்.

“ஆமா… அவன் என்னை எப்பவுமே உட்கார சொல்லிடுவான்… அவன் சொல்லாட்டி என்ன நீங்க உள்ள போனவுடனே உட்கார வேண்டியதுதானே?”

“ஒரு நாள் அப்படித் தாங்க உட்காந்தேன்… ஒரு முறை முறைச்சுட்டு… உன்ன யாரு உட்காரச் சொன்னான்னு கேட்டாருங்க… அதில இருந்து நான் பாட்டுக்கு போய் நின்னுடுவேன்…”

சில கெட்ட வார்த்தைகளால் என் மேலாளரை அர்ச்சனை செய்துவிட்டு. “நீங்க தானேங்க எனக்கே ‘டாட் நெட்’, ‘டெல்பி’ லாம் கத்துக்கொடுத்தீங்க… உங்களைப் போய் ஏன் இப்படி பண்றான் அவன்?” என்றார்.

உண்மை தான் அந்த நண்பர் இங்கு வந்து சேர்ந்த போது அவருக்கு விஷுவல் பேசிக் (VB) மட்டும் தான் தெரியும். இங்கு வந்து தான் மற்றவைகளைக் கற்றுக்கொண்டார். 

ஏன் என்னை மட்டும் அந்த மேலாளர் அப்படி நடத்தினார்? ஒருவேளை நான் மட்டும் தான் அங்கே வேலை அனுமதி அட்டை வைத்துக்கொண்டு வேலை செய்தேன். மற்றவர்கள் எல்லாம் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் அல்லது சிங்கப்பூரர்கள் என்பதாலா? அல்லது ஒருவேளை அங்கு வேலை செய்தவர்களிலேயே நான் தான் இளையவன், 23 வயதில் அங்கே வேலைக்குச் சேர்ந்தேன். அதனால் ஒரு சிறுவனை நடத்தும் மனநிலையில் என்னை நடத்தினாரோ? அல்லது என்ன தான் கடுமையாக வேலை செய்தாலும் என் வேலையை எனக்கு ஒழுங்காக நிர்வகிக்கத் தெரியவில்லை என்பதாலா? தெரியவில்லை. 

ஆனாலும் அங்கே வேலை செய்த மற்ற துறையினர் பலருக்கு என்னை மிகவும் பிடித்தே இருந்தது. பெரும்பாலும் பெண்கள் தான் வேலை செய்தார்கள். என் வயதைக் கேட்டுவிட்டு நீ அவளோ சிறுவனா என்று கூறிக்கூறிச் சிரிப்பார்கள். என் வயது தெரியுமா? என் வயது தெரியுமா? என்று என்னிடம் அவர்கள் வயதைச் சொல்லாமலே யூகிக்கச் சொல்வார்கள். நான் வேண்டுமென்றே குறைத்துச் சொல்வேன். அதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. பெரும்பாலும் சீனப்பெண்கள் தான். அவர்கள் அனைவருக்குமே நாற்பது வயதிற்கு மேல். இருந்தாலும் நான் முப்பது என்பேன். அதிலும் ஒரு பெண் எப்போதும் கைக்குள் சிகரெட்டை மறைத்து வைத்துக்கொண்டு “தம்மடிக்க வர்றீயா?” என்று ஒரு விரல் போல் சிகரெட்டை நீட்டி  அழைப்பார். நான் எப்போதுமே “எனக்கு பழக்கமில்லை” என்ற ஒரே பதிலைச் சொன்னாலும் அடிக்கடி அழைத்துக்கொண்டே இருப்பார். ஒரு குழந்தையிடம் மிளகாயைக் காண்பித்து வேணுமா வேணுமா என்று பயம் கொள்ளச்செய்வதைப் போல என்னிடம் விளையாடுவதில் அவருக்கு ஒரு ஆனந்தம். அங்கு வேலை செய்த மற்ற துறையினர் அத்தனை பேருமே எனக்குப் பிரியமானவர்கள். அடிக்கடி “ஒரு முக்கியமான வேலை வேகமா வா” தொலைபேசியில் அழைப்பார்கள். அங்கு சென்றால் தின்பதற்கு ஏதாவது கொடுப்பார்கள். 

ஒருமுறை நான் செய்த தவறால் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பவேண்டிய பல இன்வாய்ஸ்கள் தவறாகிவிட்டன. அதைக் கண்டறிந்த போது மணி இரவு எட்டரை அதன் பின் அதைச் சரி செய்து மீண்டும் அனைத்து இன்வாய்ஸ்களையும் கவர்களுக்குள் போட்டு முடிக்க மணி பன்னிரண்டாகிவிட்டது. ஆனால் இதைப்பற்றி யாரிடமும் கூறாமல் அப்படியே மறைத்துவிட்டார்கள் அந்த இரண்டு பெண்களும். அன்றைக்கு மட்டும் அது என் மேலாளருக்குத் தெரிந்திருந்தால் ருத்ரதாண்டம் பார்த்திருக்கலாம்.

இரண்டு வருடம் கடுமையாக உழைத்தும் நல்ல பெயர் கிடைக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் என் விடுமுறையை இந்தியாவில் தான் கழிப்பேன். அப்படி நான் வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது வருடம் விடுப்பை எடுக்க அனுமதி வேண்டி என் மேலாளருக்கு அனுப்பினேன். அவர் ஒரு பெரிய பட்டியலிட்டு இந்த வேலையெல்லாம் முடி உன் விடுமுறைக்கு அனுமதியளிக்கிறேன் என்றார். ஒவ்வொரு நாளும் பத்து பதினோரு மணி வரை வேலை செய்தும் என்னால் ஒரு வேலையை மட்டும் முடிக்க முடியவில்லை. அடுத்த நாள் காலை எனக்கு விமானம், ஆனால் இன்னுமும் விடுப்பை அவர் அனுமதிக்கவில்லை. இரவு பதினோரு மணி அவர் சொன்ன வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு “வேலைகளை முடித்துவிட்டேன். நாளை நான் ஊருக்குப் போகிறேன்” என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு சென்றுவிட்டேன். அப்போது முடிவு செய்தேன் இனி அந்த அலுவகத்தில் வேலை செய்யக்கூடாது என்று. ஊருக்குச் சென்று வந்த அன்றிலிருந்தே வேறு வேலை தேட தொடங்கிவிட்டேன். இதையே காரணமாக வைத்து அந்தாண்டு எனக்கு கிடைக்க வேண்டிய போனசையும் கிடைக்கவிடாமல் செய்துவிட்டார். அதன் பின்னும் அவருக்கு அடங்கிப்போவதில் அர்த்தமில்லை என்பதை புரிந்துகொண்டேன். அலுவலக நேரம் முடிந்தவுடன் மற்றவர்களுடன் வீட்டுக்குச் செல்லத் தொடங்கினேன்.

இரண்டாம் ஆண்டு முடிவில் “உன் காண்டிராக்ட்டை ரெணீவ் செய்யவில்லை. நீ என்ன பண்ணப்போற?” என்றார். 

“எனக்கு வேறு வேலை கிடைத்துவிட்டது. நானே உங்களிடம் சொல்லலாம் என்றிருந்தேன். மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம்” என்றேன். உண்மையில் அப்போது எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஆனால் நம்பிக்கை இருந்தது. 

அதன் பின் ஒரு மாதத்திலேயே எனக்கு வேறு ஒரு வேலை கிடைத்துவிட்டது. ஆனால் இப்போது நான் என்னை முற்றிலும் மாற்றிக்கொண்டிருந்தேன். யாருக்கும் அடிபணிவதில்லை. வேலையை மட்டும் சரியாகச் செய்யவேண்டும் மற்றபடி வருவதைப் பார்த்துகொள்வோம் என்று மனதில் ஒரு உறுதி பிறந்திருந்தது. 

சில மாதங்கள் கழித்து என் முந்தைய அலுவகத்தில் வேலை செய்த தோழி ஒருவர் திடீரென மரணித்து விட்டதாக தகவல் வந்தது. பாவம் கடுமையான வேலைப்பளு. வேலை செய்துகொண்டிருந்தவர் ‘ஸ்ட்ரோக்’ வந்து சுருண்டு விழுந்து இறந்திருக்கிறார். நாற்பது வயது தான். இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகள். 

அங்கே என் பழைய மேலாளரைப் பார்த்தேன். என்னிடம் வந்து புதிய வேலை எப்படி இருக்கிறது என்றெல்லாம் நலம் விசாரித்தார். 

அதே அலுவகத்தில் வேலை செய்துகொண்டிருந்த இன்னொரு மேலாளர் என்னிடம் வந்து “வாவ் ஜெயா… யூ சேஞ்சட் எ லாட்… ஏ பாய் பிகம் எ மேன்” என்றார்.

உண்மை தான். அந்த இரண்டாண்டு காலம் என் சிறுவத்தைக் கொன்று என்னை மனதளவில் பெரியவனாக மாற்றி இருந்தது. 

முகங்களின் தரிசனம் தொடரும்….

முகங்கள் -17

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

முகங்கள்

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -