முகங்கள்

பதினைந்தாம் முகம்

- Advertisement -

ஒன்றாம் இரண்டாம் வகுப்புகளை விடுதியில் சேர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை. ஆரம்பத்தில் சில நாள்கள் உறவினர்கள் வீட்டில் இருந்தேன். ஆனால் இங்கும் அங்குமென சில பந்தாடல்களுக்குப் பின் விடுதியே சிறந்தது என என் வீட்டில் முடிவு செய்துவிட்டார்கள். இரண்டாம் வகுப்பு படிக்கும்போது அம்மை போட்டுவிட்டது. அதன் பின் மூன்றாம் வகுப்பு வேறு பள்ளியில்  சேர்ந்து, பள்ளிப் பேருந்தில் செல்லத் தொடங்கினேன். புதிய பள்ளியில் என் ஊர்க்காரர்கள் பலர் படித்தாலும் அது எனக்கு ஒரு புது உலகமாகத் தானிருந்தது. அதுவரை நான் பார்த்துப் பழகிய சூழலில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டிருந்தது. ஆசிரியர்களை மட்டுமல்ல என் வகுப்பு மாணவர்களைப் பார்ப்பதற்கே எனக்கு அச்சமாக இருந்தது.

எனக்கான ஒரு நண்பன் அங்கே கிடைப்பானா? என்று ஒவ்வொரு முகமாகப் பார்ப்பேன் அதில் எந்த முகமுமே என் நட்பை ஏற்க தாயராக இல்லாதது போலவே தோன்றும். போதாக்குறைக்கு அந்தப் பள்ளியில் ஆங்கிலத்தில் தான் உரையாட வேண்டும் தமிழில் உரையாடினால் ஐந்திலிருந்து ஐம்பது ரூபாய் வரை அபராதம் விதிப்பார்கள். அங்கே படித்த அநேகர் ஒன்றாம் வகுப்பு முதலே அங்கு படித்துக்கொண்டிருப்பவர்கள் ஆதால் அங்கே ஏற்கனவே இரண்டு குழுக்கள் இருந்தன. மாணவிகளின் குழு தனி. இதில் எந்தக் குழுவிலுமே என்னால் ஒன்ற முடியவில்லை. எங்கு சேர்ந்தாலும் என்னைப் போல அப்பாவி சப்பாவிகள் அடி வாங்க வேண்டும். ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு வந்தால் உருண்டு பிரண்டு நகத்தை வைத்து பிறாண்டி விடலாம். ஆனால் அவர்கள் அப்படியெல்லாம் சண்டைக்கு வரமாட்டார்கள். ஏதாவது ஒரு வழியில் சீண்டிக்கொண்டே இருப்பார்கள். என்னைப்போலவே அந்த வகுப்பில் தனித்துவிடப்பட்ட இரண்டு ஜீவன்கள் இருந்தன அவர்களில் ஒருவன் மிகவும் நல்லவன். சற்று வசதியானவன். அடுக்கு டிபன் பாக்ஸில் சாப்பாடு கொண்டு வருபவன். போலியோவால் அவன் கால்கள் வளைந்திருக்கும். 

இன்னொருவன் கருத்தவன், ஒல்லியானவன் எப்போதும் துருதுருவென இருப்பான். இவன் தான் என் குருநாதன். சாப்பிடும் போதும் சரி மற்ற நேரங்களிலும் சரி நாங்கள் மூவரும் தான் சேர்ந்திருப்போம். மற்றவர்களிடமிருந்து விலகியே இருப்போம். பின் நாங்கள் தமிழில் பேசுவது அவர்களுக்குத் தெரிந்துவிட்டால் போட்டுக்கொடுத்து விடுவார்கள். 

ஒருநாள் இப்படித்தான் என் பாட்டுக்கு வாயைக் குவித்து வைத்துக்கொண்டு விசில் அடிக்க முயற்சி செய்துகொண்டே மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு முன் மாடியில் ஏறிக்கொண்டிருந்த பெண் திடீரென என்னை முறைத்துக்கொண்டு நின்றாள். அவள் என்னைவிட உயரமானவள் வேறு. திடீரென அவள் அப்படி முறைத்தது எனக்கு பயத்தை உண்டாக்கியது. “ஏ பாய் ஒய் யூ விசில் அட் மீ?” என்றாள். 

எனக்கு ஒன்றும் புரியவில்லை வெறித்துப்போய் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் வாயில் இருந்து உஸ் உஸ் சத்தம் தான் வந்ததே தவிர எந்த விசில் சத்தமும் வரவில்லை.

 “ஐ வில் டெல் டு மிஸ்…” என்றாள். 

என்னது ‘ஒரு புறாவுக்கு போய் போரா?’ என்பாரே வடிவேல் அதைப்போலத் தான் இருந்தது என் நிலை. “நோ கேர்ல். ஐ நோ விசிலிங் யூ. ஐ ஒன்லி விசில்…” என்று ஏதேதோ உளறினேன். அவள் எதற்கும் மசியவில்லை. சரி ஆங்கிலத்தில் கெஞ்ச சிரமமாக இருக்கிறது என்று தமிழில் குதித்தேன்.

“ஓ… நவ் யூ டாக்கிங் இன் தமிழா?” என்று ஒரு இழு இழுத்துவிட்டு “ஐ வில் டிபனட்லி டெல் டு சையன்ஸ் மிஸ்…” என்றாள்.

அவ்வளவு தான் எனக்கு அழுகையே வந்துவிட்டது. அந்த சையன்ஸ் டீச்சர் மர ஸ்கேலை வைத்து விரல்களின் பின்புறம் ‘நொட்டு நொட்டு’ என்று அடிப்பாரே. “நோ கேர்ல்… ப்ளீஸ் கேர்ல்.. ப்ளீஸ் கேர்ல்…” என்று கெஞ்சினேன். ஒருவழியாக “ஓகே… ஓகே… டோன்ட் டூ திஸ் அகேன்” என்று என்னைப் பெருந்தன்மையாக மன்னித்துவிட்டுச் சென்றாள். இந்தச் சம்பவத்திற்கு பின் பெண்கள் என்றாலே அலற்சியாகிவிட்டது. அதிலும் மேலே என்னை மிரட்டிய இந்தப் பெண்ணோடு இன்னும் இருவர் இருப்பார்கள் மூவர் பெயரும் ‘ஸ்ரீ’ என்று முடியும். எப்போதும் கழுதை போல் காகிதத்தை மேய்ந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் மூவர் இருக்கும் பக்கமே செல்ல மாட்டேன்.

என் வகுப்பில் இருக்கும் சில தைரியசாலி மாணவர்கள் “ஏய் கேர்ல் ஒய் யூ ஆர் ஈட்டிங் பேப்பர்” என்று கேட்பார்கள். ஆனால் அந்தப் பெண்கள் ஆய் ஊய் என்று ஏதாவது சொல்லி அந்தப் பையன்களையே மிரட்டிவிடுவார்கள். அவர்கள் அதிகமாக “ஏய் பாய்… மைன்ட் யுவர் ஓன் பிசினஸ்” என்ற சொற்றொடரைத் தான் பயன்படுத்துவார்கள். 

நம்முடைய இன்றைய முகம் இந்தப் பெண்கள் இல்லை. என் குருநாதன் தான். அவனை ஏன் நான் குருநாதன் என்கிறேன் என்கிறீர்களா? அவன் தான் எனக்குத் திருடக் கற்றுக்கொடுத்தான். 

“டேய் நம்ம ரெண்டு பேரும் அந்தப்பக்கம் ஓடுவோம். நான் உன்னை அவன் மேல தள்ளிவிடுவேன். நீ அவன் சட்டைப்பையில இருக்க பேனாவ எடுத்துரு…” இது தான் அவன் எனக்குக் கொடுத்த முதல் டாஸ்க். என்னால் முடியவில்லை. மறுபடியும் அதே டாஸ்க். அப்போதும் தோல்வி. அடுத்தடுத்து ஐந்தாறு முறை அதே பேனா அதே பையன். அடித்துவிட்டேன். அந்தப் பேனாவை இரகசியமாக என் குருநாதனிடம் கொடுக்கும்போது அப்படி ஒரு பெருமிதம். சாதித்துவிட்டேன்.

அடுத்தடுத்த டாஸ்க்குகள் விரிந்துகொண்டே சென்றன. இதில் எங்களுடைய இன்னொரு நண்பனுக்கு எந்தப் பங்கும் இல்லை. இந்த இரகசியத்தை அவனுக்கே தெரியாமல் தான் வைத்திருந்தோம். 

பள்ளி முடிந்த பின் நடக்கும் நடன வகுப்புகளைக் குறிவைத்துச் செல்லுவோம். அங்கே பெண்களின் பைகள் நடன வகுப்பு நடக்கும் அறைக்கு வெளியில் அனாதையாகக் கிடக்கும். அல்வா சாப்பிடுவது போல் அவர்கள் பைகளுக்குள் இருக்கும் பென்சில் டப்பாக்களை அடித்து வந்துவிடுவோம்.  பணம் இருந்தால் வெளியில் இருக்கும் பழக்கடையில் தண்ணீர் பழம், மாங்காய் என வாங்கித் தின்போம். நல்ல பேனாக்கள் இருந்தால் என் குருநாதன் எடுத்துச் சென்றுவிடுவான். நான் என் வீட்டிற்கு எதுவும் எடுத்துச் செல்ல மாட்டேன். பின் அது எப்படிக் கிடைத்தது என்பதற்கு ஒரு பொய்யை தயார் செய்ய வேண்டும் எனக்குப் பொதுவாகப் பொருள்களின் மீதெல்லாம் நாட்டம் இருக்காது. ஆனால் அந்த விளையாட்டு பிடித்திருந்தது.

என் குருநாதன் ஒருநாள் அவன் வீட்டில் நிறைய பூச்செடிகள் வளர்ப்பதாகவும் இன்னும் சில செடிகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினான். எங்கள் பள்ளி தலைமையாசிரியர் உட்பட இன்னும் சில கன்னிகாஸ்திரிகள் தங்கும் விடுதி அங்கே இருந்தது. அதற்குள் இருந்த நிறைய பூச்செடிகள் எங்கள் கண்களை உறுத்தின. பொதுவாக அங்கே ஆள் நடமாட்டம் குறைவாகத் தானிருக்கும். திட்டத்தைத் தீட்டினோம். பள்ளி முடிந்து பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்தோம். ஒரேயொரு பேருந்து தான். அது முதல் ட்ரிப்பை முடித்துவிட்டு இரண்டாவது ட்ரிப்பில் எங்களை ஏற்றிச் செல்லும். அந்த இடைவெளிக்குள் செடிகளை அடித்துவிட்டால் பைக்குள் வைத்துக்கொண்டு சென்றுவிடலாம்.

முதல் நாள் ஆளுக்கொரு செடியை அடித்துவிட்டோம். ஆனால் அங்கிருந்த ஒரு சிறிய ரோஜா செடியை முள்ளுக்குப் பயந்து விட்டுவிட்டோம். என் குருநாதன் அவன் வீட்டில் அந்தச் செடிகள் மிக அழகாக இருப்பதாகக் கூறினான். மேலும் அந்த ரோஜா செடி கிடைத்தால் இன்னும் அழகாக இருக்கும் என்றான். ஒருவார இடைவெளிக்குப் பின் மீண்டும் கன்னிகாஸ்திரிகளின் விடுதிக்குள் நுழைந்தோம். அப்போது அங்கே யாரோ வருவது போல் சந்தடி கேட்டதால் என் குருநாதன் வெளியில் நின்று வேவு பார்த்துக்கொண்டிருந்தான்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பார்களே. அது நடந்துவிட்டது. நான் கையும் களவுமாக மாட்டிக்கொண்டேன். எங்கள் தலைமையாசிரியையிடம் அழைத்துச்செல்லப்பட்டேன். சாந்த சொரூபியாக என் தலைமையாசிரியை அங்கே உட்காந்திருந்தார். நான் குற்றத்தை ஒப்புக்கொண்டேன். என்னை முழங்கால் போட வைத்திருந்தார்கள். என் குருநாதனை போட்டுக்கொடுத்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். என்ன தண்டனை வழங்கப்போகிறார்கள் தெரியவில்லை. என் தலைமையாசிரியை அழைத்தார் அவர் அருகில் ஊதா நிற முக்காடும் வெள்ளை உடுப்புமாக ஒரு அழகான மேரி மாதாவின் சிலை இருந்தது. 

என்னை அந்த மேரிமாதாவின் சிலை முன் மண்டியிடச் சொன்னார். பின் “நான் இனிமேல் திருட மாட்டேன். செய்த பாவத்திற்கு என்னை மன்னித்துவிடுங்கள்” என்று வேண்டிக்கொள்ளச் சொன்னார். நான் முடிந்தமட்டில் உருகி உருகி வேண்டினேன். 

சரி போ இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று கூறி அனுப்பிவைத்துவிட்டார். என் குருநாதனுக்கு நான் அவனை போட்டுக்கொடுக்காததில் ஏக சந்தோசம். என்னை நண்பா நண்பா என்று கட்டிப்பிடித்து உருகிவிட்டான். அந்தச் சம்பவத்திற்குப் பின் திருடக்கூடாது என்று முடிவு செய்துகொண்டாம். அதாவது கன்னிகாஸ்திரிகளின் விடுதிக்குள் திருடக் கூடாது என்று.

ஆனால் ஆடின காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா. எங்கள் கைவரிசையைக் காண்பிக்க நடன வகுப்பு நடக்கும் இடத்திற்குப் போனோம். இப்போது பைகள் அனைத்தையும் வகுப்பறைக்குள்ளேயே ஒரு மூலையில் வைத்துவிட்டு அந்தப் பெண்கள் நடனம் கற்றுக்கொண்டிருந்தனர்.

பள்ளிக்கூடத்தில் எல்லாம் உசாராகிவிட்டார்கள் இனி ஒன்றும் செய்ய முடியாது. நாம் ஏன் மாங்காய் கடைக்காரரிடமே நேரடியாக நம் திறமையைக் காட்டக் கூடாது என்று தோன்றியது. வெளியில் சென்றோம். அங்கு கூட்டம் வரும் வரை காத்திருப்போம். பின் என் குருநாதன் கூட்டத்திற்குள் முண்டியடித்து முன்னால்ச் செல்வான். நான் அவன் பின்னால் சென்று சரியாக கடைக்காரர் கல்லாப்பெட்டியில் கவனத்தைச் செலுத்தும்போது மாங்காய் கீற்றையோ, தண்ணீர்ப்பழக் கீற்றையோ உருவி எடுத்துவிடுவேன். பின் நாங்கள் இருவரும் பங்கு போட்டுத் தின்போம். இப்படியே சில நாள்கள் சென்றன.

ஒருநாள் என் தம்பி ஒருவன் வந்து என்னிடம் காசு இருக்கிதறதா என்று கேட்டான். நான் எதற்கு என்று கேட்டேன். வெளியில் தண்ணீர் பழம் வாங்க வேண்டும் என்றான். காசு இல்லை ஆனால் தண்ணீர் பழம் நான் எடுத்துத் தருகிறேன் வா என்று அழைத்துச் சென்றேன்.

கடைக்காரன் உசாராகி ஒரு பெரிய ஞெகிழிப் பையால் பழங்களை மூடியிருந்தான். அவன் பக்கம் இருந்து மட்டும் தான் பழங்களை எடுக்க முடியும். எனக்கு மானக்கேடாக ஆகிவிட்டது. தம்பியை வேறு அழைத்து வந்துவிட்டேன். கடைக்காரன் மீது ஆத்திரமாக வந்தது. இவனைச் சும்மா விடக்கூடாது என்று எப்போதும்போல கூட்டத்தின் ஊடே தம்பியை அனுப்பினேன். நான் உள்ளே கையைவிட்டு ஞெகிழியைக் கிழித்து தண்ணீர்ப் பழக் கீற்றை உருவினேன். என்ன நடந்தது என்றே அறியாத என் தம்பி கூட்டத்தை விட்டு வெளி வந்த பின் என் கையில் இருந்த தண்ணீர்ப் பழத்தைப் பார்த்து ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்றான். நான் பெருமையில் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டேன். அவன் செம சூப்பர் என்று என்னைப் பாராட்டிக்கொண்டே வந்தான்.

பாராட்டியவன் அப்படியே விடவில்லை அன்று மாலை என் வீட்டிற்கு வந்து என் பெருமையை என் அம்மாவிடமும் புகழோ புகழ் என புகழ்ந்து தள்ளிவிட்டான். அவன் சொன்னதைச் சிரித்துக்கொண்டே என் அம்மா கேட்டுக்கொண்டிருந்தார். எனக்கு பெருமைப்படுவதா அச்சப்படுவதா ஒன்றும் புரியவில்லை. என் தம்பி கிளம்பிச் சென்றவுடன் “இந்தாடா இந்தக் கரண்டியப் புடி” என்று என் அம்மா ஒரு குழம்புக் கரண்டியை நீட்டினார். 

“ஐயோ… அம்மா…” என்று அலறி கரண்டியைத் தூக்கி வீசிவிட்டேன். உள்ளங்கையில் ரேகைகளுக்கு மத்தியில் ஒரு சிகப்புக் கோடு விழுந்திருந்தது. அதன் பின் வாசலைப் பெருக்க வைத்திருந்த விளக்குமாறால் சிறு அர்ச்சனை நடந்தது. அன்றோடு அனைத்தையும் விட்டுவிட்டேன். அதன் பின் தினமும் எனக்கு மாங்காய் வாங்க ஒரு ரூபாய் கிடைத்தது. என் அம்மா அடிக்கடி என் பையில் ஏதாவது புதிய பொருள் இருக்கிறதா என்று வேறு சோதனை செய்ய ஆரம்பித்துவிட்டார்.

என் குருநாதன் எனக்கு நடந்த சம்பவத்தைக் கேட்டு மிகவும் வருந்தினான். இதெல்லாம் நடந்தது ஐந்தாம் வகுப்பு முடியும் தருவாயில். அடுத்த வருடம் ஆறாம் வகுப்பு. என் வீட்டில் வேறு பள்ளியில் சேர்த்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள். அது தமிழ் வழிக் கல்வி என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. அதிலும் அந்தப்பள்ளியில் ஆண் பிள்ளைகள் மட்டுமே படிக்கமுடியும். பெண்களுக்கு இடமில்லை என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. ஆனால் இந்தப் பள்ளிக்கு பள்ளிப் பேருந்து இல்லை பொதுப் பேருந்தில் தான் வரவேண்டும். என்னால் அந்த வயதில் தனியாக வரமுடியாது என்று யோசித்து விடுதியில் சேர்த்துவிட்டார்கள். இதில் கொடுமை என்னவென்றால் என் தங்கை ஒன்றாம் வகுப்பு முதலே பொதுப் பேருந்தில் தான் சென்று வந்துகொண்டிருந்தாள். என்ன அவள் பள்ளி எங்கள் வீட்டில் இருந்து கொஞ்சம் பக்கம். மேலும் அவளை பத்திரமாக அழைத்துச் செல்ல அவள் பள்ளியைச் சேர்ந்த அக்கா ஒருவர் இருந்தார். எனக்கும் அண்ணன்கள் சிலர் எங்கள் ஊரில் இருந்து சென்றார்கள் ஆனாலும் என் சுழியறிந்த பெற்றோர் விடுதி தான் சரி என்று முடிவு செய்துவிட்டார்கள்.

ஆறாம் வகுப்பு புதிய பள்ளியில் சேர்ந்து மதிய சாப்பாட்டு வேளையில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தோம். அப்போது தான் அவனை மீண்டும் பார்த்தேன். ஆம் அவன் என் குருநாதனே தான். அதுவும் என் பள்ளிச் சீருடையில். ஓடிச்சென்று “டேய் என்னடா இங்க இருக்க?” என்றேன். 

“டேய் நானும் இந்த ஸ்கூல்ல தாண்டா சேர்ந்திருக்கேன்…” என்றான்.

பிரிந்து சென்ற ஒரு மந்தை ஆடுகளாய் மீண்டும் கட்டியணைத்து இணைந்தோம். ஆனால் ஆறாம் வகுப்பு ‘C’ பிரிவு அவன் ‘F’ பிரிவு. முந்தைய பள்ளியில் A,B இரண்டு தானிருக்கும். இங்கே அப்படியல்ல ‘H’, ‘I’, ‘J’, ‘K’ வரையெல்லாம் செல்லும். மொத்தம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள். அதுவும் நான் விடுதியில் தங்கிப் படித்ததால் அங்கேயே பல நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். அதே போல என் குருநாதனும் அவன் வகுப்புத் தோழர்களோடு ஐக்கியமாகியிருந்தான். 

ஆரம்ப நாள்களில் அடிக்கடி சந்தித்துக்கொண்டாலும். அதன் பின் அது வெகுவாகக் குறைந்துவிட்டது. அடுத்த வருடமே அவன் வேறு பள்ளிக்கு மாற்றலாகிச் சென்றிருக்க வேண்டும். அவனை ஏழாம் வகுப்பிலிருந்தே நான் காணவில்லை.

களவையும் கற்று மற என்பார்கள் பெரியவர்கள். அதை எனக்குச் சாத்தியப்படுத்தியவன் என் குருநாதன் தான்.

நன்றி குருநாதா… எங்கிருந்தாலும் நீ வாழ்க…. 😉

முகங்களின் தரிசனம் தொடரும்….

முகங்கள் -16

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

முகங்கள்

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -