மந்திரப் புன்னகை

சிறுகதை

- Advertisement -

“அம்மா! நான் கடந்த ஆறு மாதமா, ஆதி என்ற பையனைக் காதலிக்கிறேன். இந்த வருட இறுதியிலே, தேர்வு எல்லாம் முடிஞ்ச பிறகு திருமணம் செய்துக்கலாம்ன்னு இருக்கோம்” என்று பூஜா நேற்றிரவு சொன்னபோது சாரதா அதை நம்பவில்லை. ஏதோ, விளையாட்டுக்காகச் சொல்கிறாள் என்றே நினைத்தாள். ஆனால் அவளோ அதை அழுத்தந்திருத்தமாகச் சொன்னபோதுதான் விஷயத்தின் வீரியமே அவளுக்கு உரைத்தது.

எதிர்பாராமல் வந்த அந்த வார்த்தை கணைகளால், சட்டென்று நிலைகுலைந்து போனாள் சாரதா. அதன் பிறகு பூஜா கூறிய எதுவும் அவள் காதுகளில் ஏறவில்லை. பிரமை பிடித்த நிலையில் இருந்த அவள் எப்படிப் படுக்கைக்குச் சென்றாள்? எப்போது உறங்கினாள்? என்பது எல்லாம் அவள் நினைவில் இல்லை.
அதுவரை, எங்கோ மூலையில் ஒளிந்து கொண்டிருந்த எண்ணங்களும், நினைவுகளும் கண் விழித்தபிறகு மீண்டும் அவளைத் தாக்க, அதன் வலி தாளாமல் படுக்கையில் புரண்டுக்கொண்டிருந்தாள்.

வேலைக்குச் செல்ல வேண்டுமே என்கிற சிந்தனை தட்டியெழுப்ப, எழுந்து பார்த்தபோது, பூஜாவின் அறைக்கதவின் இடுக்கு வழியாகக் கசிந்த வெளிச்சம், அவள் பல்கலைக்கழகத்துக்குக் கிளம்பத் தயாராகிக்கொண்டிருப்பதை அவளுக்கு உணர்த்தியது.

நேற்றிரவு நடந்த களேபரத்தில், இருவருமே சரியாகச் சாப்பிடவில்லை. சரி, பூஜாவுக்கு மைலோவைக் கலக்கிக் கொடுத்து விட்டு, தானும் ஒரு கப் காப்பியைக் குடித்தால் தெம்பாக இருக்கும் என்று தோன்ற, சமையலறைக்குச் சென்று பாலைச் சூடுப்படுத்தினாள் ]

சிறிது நேரத்தில், பூஜா அவள் அறையிலிருந்து வெளியே வரும் சத்தம் கேட்டது. சமையலறைக்குள் வந்து அவள் கலக்கி வைத்திருந்த மைலோவை எடுத்து மௌனமாகக் குடித்தாள். வழக்கமாக இவளைக் கட்டிப்பிடித்து, முத்தம் பதித்து, ‘காலை வணக்கம்’ சொல்பவள் அன்று எதுவும் செய்யவில்லை. இவள் தான் அவளிடம்,

“பூஜா, சாப்பிட ரொட்டி வச்சுத்தரட்டுமா? அல்லது தோசை ஊத்தவா?” என்று கேட்டாள்.

“எனக்கு ஒண்ணும் வேணாம். நான் கல்லூரில போய்ச் சாப்பிட்டுக்கிறேன். நேற்றிரவு, நான் சொன்னதைப் பத்தி யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க. எனக்கு நேரமாச்சு நான் வரேன்” என்று பட்டும் படாமலும் பேசி விட்டுப் போகும் மகளையே வெறித்துப் பார்த்தாள் சாரதா.

தாதிமை தொழிலிலே எத்தனையோவிதமான வேதனைகளையும், வலிகளையும் தைரியமாக எதிர்கொண்ட அவளை, `காதல்’ என்னும் ஆயதமேந்தி அடிக்காமல் வலிக்காமல் உயிரை மட்டும் உருவி எடுத்து விட்டாளே இந்தப் பாவி பெண்?. எது தன் வாழ்க்கையில் நடந்ததோ.. எது தன் மகளின் வாழ்க்கையில் நடக்கக்கூடாது என்று நினைத்தாளோ அது நடந்து விட்டது.

“இந்தப் பொம்பள புள்ளைங்களுக்குக் காதல் வந்துடுச்சுன்னா பெத்து இத்தன வருஷம் கஷ்டபட்டு வளர்த்தவங்க சொல்றது கூ, காதுல ஏற மாட்டேங்குது?” என்று பல வருடங்களுக்கு முன், அவள் தாய் கூறிய வார்த்தைகள் ஏனோ நினைவுக்கு வந்து அவள் மனத்தை அரித்தது. இனி, நான் என்ன செய்யப் போகிறேன்? எப்படி, இதை எதிர் கொள்ளப் போகிறேன்? என்ற கேள்விகள் நெஞ்சைப் பிசைய சட்டென்று அவளுக்குச் சித்ராவின் நினைவு வந்தது.

கைத்தொலைப்பேசியை எடுத்து, ‘சித்ரா வேலையிடத்துக்குக் கொஞ்சம் சீக்கிரம் வா உன்னோடு பேச வேண்டும்’ என்ற குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு அவள் தயாராகிப் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது, அவளைக் காக்க வைக்காமல், அவள் செல்ல வேண்டிய பேருந்தும் வந்து சேர்ந்தது.

பேருந்தில் ஜன்னலோர இருக்கையிலே அமர்ந்து கொண்டு வெளியே தெரியும் காட்சிகளையும், மனிதர்களையும் இரசித்துக்கொண்டே வருவது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சில வேளைகளில் அப்படி இடம் கிடைக்காத பட்சத்தில், ஏதோ ஒன்றை இழந்ததைப் போல் உணர்வாள். இன்று, அவளுடைய
மகள் வேண்டுமானால் அவளை ஏமாற்றியிருக்கலாம், ஆனால் இருக்கை ஏமாற்றவில்லை. இருந்த போதும், இரசிக்கும் மனநிலையில் அவள் இல்லாததால் கண்கள் காட்சியைப் பார்த்துக்கொண்டே வந்தது தவிர, நினைவோ அவைகளின் பின்னே பயணிக்கத் தொடங்கியது. அப்போது, அவள் சிங்கப்பூர்ப் பலதுறை தொழில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டுக் கணிதத்துறையில் படித்துக்கொண்டிருந்தாள். பொதுவாக அவள் அமைதியானவள்; யாருடனும் அதிகமாகப் பேசமாட்டாள்; பழகமாட்டாள். அந்தச் சமயத்தில் அவள் தோழியின் மூலம் அறிமுகமானவன்தான் அவள் கணவன் ரகு. சிரித்துச் சிரித்துப் பேசி மயக்குவதில், அவனுக்கு நிகர் அவன்தான். எப்படியோ அவன் விரித்தக் காதல் வலையில் இவள் சிக்கிக்கொண்டாள். படிப்பைப் பாதியில் விட்டு விட்டு இவள் திருமணம் செய்து கொள்ளப் போவதைத் தெரிந்து அவள் தாயும், அண்ணனும் எவ்வளவோ அவளிடம் மன்றாடினார்கள். காதல் மயக்கத்தில் எதுவும் காதில் ஏறவில்லை. `எக்கேடும் கெட்டுப் போ’ என்று கூறி, அவளைத் தலை முழுகி விட்டார்கள். திருமணம் முடிந்து, சில மாதங்களுக்குப் பிறகு தான் அவனுடைய இன்னொரு முகம் அவளுக்குத் தெரிந்தது. அவன் முன்பு காதலித்த பெண் அவனை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொண்ட கோபத்தை அவளிடம் காட்ட ஆரம்பித்தான். கேள்வி கேட்டால் அடி, உதைதான். சாதாரணமாகவே வாயைத் திறந்து அதிகம் பேசாதவள் அதன் பிறகு பேசுவது என்பதையே மறந்து போனாள். மறுபடியும், அவள் பேச ஆரம்பித்ததே பூஜா உண்டான பிறகுதான்.

சுகம், துக்கம், அழுகை, சிரிப்பு என்று அனைத்தையும் பகிர்ந்து கொள்ள அவளுக்கென்று ஓர் உறவு கிடைத்தது. அன்றலர்ந்த மலர்போலச் சிரிக்கும், பூஜாவின் சிரிப்பில் தன் துயரை மறந்தாள். மாலை வேளைகளில், பூஜாவைத் தூக்கிக் கொண்டு சிறிது நேரம் வெளியே சென்று விட்டு வருவாள். அவளுக்கான சுதந்திரத்தின், எல்லைக்கோடு அதுவரை மட்டுமே. அப்படியொரு நாள், பூங்காவில் இருந்தபோது அங்கே வந்திருந்த சித்ராவைத், தன் காந்தச் சிரிப்பால் கவர்ந்து விட்டாள் பூஜா. திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும், குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த சித்ரா, பூஜாவின் சிரிப்பில் மயங்கியதில் ஒன்றும் வியப்பில்லை. இப்படிப் பூஜாவை வைத்துத்தான் அவளுக்கும், சித்ராவுக்கும் இடையிலான நட்பு ஆரம்பித்தது. இவளின் நிலையை அறிந்தபிறகு சித்ராவின் அன்பும், பாசமும் கூடியதே தவிரக் குறையவில்லை.

தன்னைப் பாதித்தவரையில் கணவனின் செயல்களுக்கெல்லாம் பொறுமை காத்த சாரதாவால் குழந்தையின் காலில் அவன் சிகரெட்டால் சூடு வைத்தபோது தாங்கிக்கொள்ள இயலவில்லை. கோபம் தலைக்கேற, பொங்கி வந்த ஆத்திரத்தையெல்லாம் ஒன்று திரட்டி, அவனுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு, குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள். சித்ராவின் உறுதுணையோடு, தனக்கான ஒரு வேலையைத் தேடிக்கொண்டாள். பூஜாவை நல்லதொரு குழந்தை காப்பகத்தில் சேர்த்து விட்டு வேலைக்குச் செல்லத் தொடங்கினாள்.

இருண்டு போன அவள் வாழ்க்கையில் எப்படிச் சித்ராவின் அன்பும், ஆதரவும் வெளிச்சத்தைக் கொண்டு வந்ததோ, அதைப் போல, அன்பும், பாசமும் அதிகம் தேவைப்படுகிற, விரும்பப்படுகிற தாதியர் துறையை விரும்பித் தேர்ந்தெடுத்தாள். வேலை செய்துகொண்டே பகுதி நேரமாக, தாதியர் படிப்பை முடித்தாள். பின்னர்ச் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தாதியாக வேலைக்குச் சேர்ந்தாள். பின்னர்ப் படிப்படியாக உயர்ந்து, இன்று புற்றுநோய் சிகிச்சை பிரிவில் தலைமை தாதியாகப் பணியாற்றுகிறாள்.

தெளிந்த நீரோடையைப்போலச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சலனம். சிறிய கல்லாக இருந்திருந்தால் சட்டென அடங்கியிருக்கும். ஆனால், ‘காதல்’ என்ற பெயரில், பெரிய குண்டாக அல்லவா தூக்கி போட்டு விட்டாள். இதிலிருந்து எப்போது தெளிந்து தன் நிலைபெறுவது?.

என் நிலையைப் பார்த்தும், அறிந்தும் கூட இந்தப் பெண் இப்படிச் செய்து விட்டாளே? என்று கேள்விகளும், பதில்களும் மாறி மாறித் தாக்க, நினைவுகளின் ஊடாகப் பயணித்த மனத்தை, நனவுலகிற்குக் கொண்டு வந்தபோது அவள் இறங்க வேண்டிய இடமும் வந்து சேர இறங்கி வேகமாக மருத்துவமனையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

மருத்துவமனை, நுழைவாயிலுக்கு வெளியே போடப்பட்டிருந்த இருக்கையிலே சித்ரா இவளுக்கும் முன்பாகவே வந்து காத்துக் கொண்டிருந்தாள். இவள் வந்த வேகத்தையும் இருந்த நிலையையும் கண்டு, ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் என்பதை யூகித்துக் கொண்டு முதலில் அவளுக்குத் தண்ணீரைக் குடிக்கக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினாள்.

பிறகு அவளிடம், “என்னாச்சு சாரதா, ஏன், முகமெல்லாம் இப்படி வெளிறிப் போயிருக்கு? உன் குறுஞ்செய்தியைப் பார்த்துட்டு உன் தொலைப்பேசிக்குப் பல தடவை அழைச்சேன். நீ எடுக்கவேயில்லை. என்னாச்சு? மறுபடியும், உன் கணவன் வந்து ஏதாவது பிரச்சனை கொடுத்தானா, சொல்லு?”

ஓரளவு தன் நிலைக்குத் திரும்பியிருந்த சாரதா, கிளம்பி வர்ற அவசரத்துல தொலைப்பேசியை வீட்டுல வெச்சிட்டு வந்துட்டேன் சித்ரா. இப்போ பிரச்சனை ரகு இல்ல பூஜா தான்….”

“பூஜாவுக்கு என்னாச்சு? உடம்புக்கு எதுவும் சரியில்லையா? இல்ல, கல்லூரிலே ஏதாவது பிரச்சனையா?” என்று பதட்டத்துடன் கேட்டாள் சித்ரா.

“அவ உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்லை. அவ, நல்லா தான் இருக்கா. ஆனா அவ, யாரோ ஒரு பையனை ஆறு மாசமா காதலிக்கிறாளாம். இந்த வருஷம், தேர்வெல்லாம் முடிஞ்ச பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு முடிவுபண்ணியிருக்கங்களாம். இதுக்கு, என்னோட சம்மதத்தைக் கேட்டு நிக்கிறா..”

“என்ன சொல்ற சாரதா?… நம்ம பூஜாவா?… அவளா, அப்படிச் சொன்னா? நீ, நிஜமாதான் சொல்றீயா?…. நான், இன்னும் அவளைச் சின்னப் பொண்ணுன்ல நெனச்சுக்கிட்டுயிருக்கேன்” என்று அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஒன்று சேர்ந்து சித்ராவின் குரலில் ஒலித்தது.

நாம தான் அவள சின்னப் பொண்ணுன்னு நினைச்சுகிட்டு இருக்கோம். அவ வளர்ந்துட்டா. என்ன பேச்சுப் பேசுறா தெரியுமா? மொதல்ல, அவ சொன்னப்ப நானும் நம்பல. ஆனா அவ முடிவை அழுத்தந்திருத்தமா சொன்னப்ப நான் ஆடிப் போயிட்டேன். நான் தான் அவள ரொம்ப நம்பி இதெல்லாம் கவனிக்காம,
முட்டாளா இருந்துட்டேனோன்னு தோணுது. அதை நெனச்சால, நெஞ்சு படபடன்னு அடிச்சுகுது.”

“ஏய்! சாரதா…எதுக்கு இவ்வளவு படபடப்பு. ஏற்கனவே உனக்குப் பிளட் பிரஷர் இருக்கு. இப்படியிருந்தா உனக்கு ஏதாவது ஆயிடும். மொதல்ல கண்ணைத் தொட”

“சின்னச் சின்ன விஷயங்களைக் கூட என்கிட்ட பகிர்ந்துகிட்டவ இந்தக் காதலை மட்டும் சொல்லாம மறைச்சுட்டாளேன்னு நெனைக்கும்போது தாங்க முடியல” என்று குமுறினாள் சாரதா.

“என்ன பண்றது அவ வயசு அப்படி. எங்க சொன்னா உன்னோட நிலைமையக் காரணம் காட்டி நீ அத மறுக்கலாம்ன்னு நெனச்சு கூட உன்கிட்ட அத மறைச்சிருக்கலாம். காதலிக்கிறது சரி. இப்போ கல்யாணத்துக்கு எதுக்கு இத்தன அவசரம்ன்னு கேட்டியா?”

“அந்தப் பையனோட அப்பாவுக்கு உடல்நிலை மோசமா இருக்காம். அதனால கல்யாணத்தை உடனே செய்யனும்ன்னு நினைக்கிறாங்களாம். இப்போ நான் என்ன பண்ணப் போறேன் சித்ரா. எந்தக் காதல் என் வாழ்க்கையே சிதைத்ததோ எந்தக் காதலால நான் வாழ்க்கையில தோத்துப் போய்உட்கார்ந்து இருக்கேனோ அதே காதல் இப்போ என் பொண்ணு வாழ்க்கையையும் பாதிச்சிருமோன்னு பயமா இருக்கு.”

“சாரதா, பல பேரேட அன்புக்குப் பாத்திரமா இருக்கிற நீயா வாழ்க்கையில தோத்துட்டேன்னு சொல்ற. பல வருடங்களாக, இதே மருத்துவமனையில அலுவலகப் பிரிவில வேலை பார்த்துட்டு வர்ற எனக்குக் கூட, நோயாளிங்களப் பாத்து பாத்து என்ன வேலைடா இதுன்னு? சலிப்படஞ்சிருக்கேன். ஆனா அன்றிலிருந்து இன்று வரை முகம் கோணாம, உன் உதட்டிலிருக்கும் புன்னகை மாறாம புற்றுநோயாளிகளுக்கு நீ செய்யுற சேவையைப் பார்த்து பல தடவை நானே பிரமிச்சுப் போயிருக்கேன். ஏன்? சில வேளைகளில பொறாமை கூடப்பட்டிருக்கேன். அதுமட்டுமில்லாம மனதளவுல சோர்ந்து போய் இருக்கிற அவங்களுக்கு உன்னுடைய கனிவான பேச்சால, ஊக்கத்தால, அவங்க இழந்த தைரியத்தைத் திரும்பப் பெற்று தந்தருக்கே. நீ கொடுத்த ஊக்கத்தால பல பேர் இந்த நோயோட தைரியமாகப் போராடி, இதுலயிருந்து மீண்டு வந்துருக்காங்க என்பதை நான் சொல்லி உனக்குத் தெரிய வேண்டியதில்லை. சிகிச்சைக்கு வரும்

சண்முகம் அய்யா, ஒரு படி மேலே போயி உன்னைத் தேவதையா அல்லவா பார்க்குறாரு. அந்த வானத்துத் தேவதை கையில மந்திரக்கோலை வச்சிகிட்டு ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளித் தருதுனா, இந்த `பூலோக தேவதை’ தன் உதட்டிலிருக்கும் ‘மந்திரப்புன்னகையாலே’ என்னைப் போல உள்ளவங்களுக்கு அன்பையும், அமைதியையும் அள்ளித் தருதுன்னு அடிக்கடி சொல்லுவாரு. இப்படிப் பல பேரோட வாழ்க்கைய திருப்பிக் கொடுத்த நீ தான் வாழ்க்கையில உண்மையா ஜெயிச்சுருக்கே.

“இப்படி அடுத்தவர்களின் வலியையும், வேதனையையும் சுலபமாகக் கையாளத் தெரிந்த உன்னால பூஜாவின் காதலை மட்டும், ஏன் சாதாரணமாக எடுத்துக்க முடியல?. காரணம், உன் மனசுல ஆறாத வடுவாக, காதல் என்ற கத்தியால கீறப்பட்ட காயத்தின் ரணமும், வலியும் தான் உன்னை இந்த அளவுக்குத் துடிக்க வைச்சிருக்கு. காதலால, உனக்கு ஏற்பட்ட நிலைமை எங்கே பூஜாவுக்கும் ஏற்பட்டு விடுமோங்கற பயம் தான் உன்னை இப்படிப் பதட்டப்பட வெச்சிருக்கு. முதல்ல, உன்னோட பயத்தையும், பதட்டத்தையும் தூக்கிப் போடு”

இப்ப என்ன? அவ கல்யாணம் பண்ணிகிட்டா போயிட்டா? காதலிக்கிறேன்… கல்யாணம் பண்ணி வையுங்கன்னு தானே கேக்குறா. முதல்ல, அந்தப் பையன் யாரு? குடும்பம் எப்படின்னு? விசாரிப்போம். ஒத்து வந்தா பார்ப்போம். இல்லைன்னா பூஜாகிட்ட பக்குவமா பேசிப் புரிய வைப்போம். அவ கேப்பாங்கிற
நம்பிக்கை எனக்கிருக்கு. மொதல்ல இந்த ‘டிஷ்யூவால’ முகத்த தொட. மறுபடியும், நான் அந்தப் பழைய சாரதாவைப் பார்க்கனும் அதே மந்திரப்புன்னகையோட”

அதுவரை, தெளிவற்ற நிலையில் இருந்த சாரதாவிற்குப் பட்டென்று மனத்தை மறைத்திருந்த திரை விலகினாற் போல், ஓர் உணர்வு ஏற்பட்டது. வாழ்வா! சாவா! என்று அனுதினமும் போராடிக் கொண்டிருப்பவர்களின் வலியை, விடவா! என் வலி பெரியது?. பாசம், கண்ணை மறைக்கத் தெரிந்ததே? நல்லவேளை! சித்ரா, அதைச் சுட்டிக்காட்டி விட்டாள். அதுவரை அவளைச் சூழ்ந்திருந்த கவலை மேகங்கள் விலகிச் செல்ல தெளிந்த முகத்தோடும், சஞ்சலமில்லாத மனத்தோடும் நட்பின் இலக்கணமாய்த் திகழும் தன் தோழியை நோக்கி, தன்னுடைய வழக்கமான மந்திரப்புன்னகையைப் பூத்தாள் சாரதா.

பிரதீபா
பிரதீபாhttps://minkirukkal.com/author/pradeebhav/
நான் தற்பொழுது தமிழாசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். கதை, கட்டுரை எழுதுவதில் எனக்கு ஆர்வம் அதிகம்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -