பொய்த்தேடல்
‘ஏங்க, பாப்பாவக் காணம்’
வெளியிலும் உள்ளும் தேடியபின்
‘எனக்கென்னமோ, நீதான் ஒளிச்சி
வச்சிரக்கறன்னு ஒரு சந்தேகம்’
போர்வையை விலக்கிய
முழு நிலவு
‘பே’ என்றிட
பொய்யான தேடலிலும்
‘பே’ எனும் வார்த்தையிலும்
உள்ளிருக்கும் கசடுகள்
கரைந்து வெளியேற
மீண்டும் மலர்ந்திடும்
உள்ளிருக்கும்
உயிர்ப்பூ
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼\
நிழலைத் துரத்துபவள்
பிரகாரம் சுற்றுகையில்
நிழலைத் மிதித்துத்
துரத்தினாள் சிறுமி
பிடிகொடுக்காமல்
விலகி ஓடிய நிழலை
ஒரு கணத்தில்
தொடர்வதை நிறுத்தி விட்டாள்
நிழலைப் பிடித்து விட்டதாய்
நினைத்த சிலர்
பிறகு நிழலற்று வீழ்ந்தனர்
ஆயினும் அயராது
ஏதோவொரு நிழலை
நிஜமென்றெண்ணி
துரத்தியபடி ஓடுகிறோம்
தினந்தோறும்,
வாழ்நாள் முழுவதும்