சாபங்களின் ஆயுள்
வீட்டுக்குள் வந்தமர்ந்து
கேள்விகள் பல கேட்டுப்
பின்னர் முடிவு செய்கிறார்கள்
என்ன சொல்லலாம் என.
வீட்டிலுள்ள பெண்கள் ஆண்கள்
குழந்தைகள் வருமானம்
கடன்கள் எதிர்காலத் திட்டங்கள்
வயதானவர்களின் மரணம்
கல்வி அறிவு
பொழுதுபோக்குகள்
என நீளும் அவர்களின்
விசாரணையின் இறுதியில்
எங்களுக்கான சொற்கள்
தயார்ப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.
எல்லாமும் கேட்டோய்ந்த பின்பும்
அவர்களின் கண்கள்
எங்களின் மீது மேய்கின்றன.
போதாமையின் தேம்பல்
அவர்களின் உதடுகளில்
துடித்துக் கொண்டிருந்தன.
எப்படியிருப்பினும்
அவர்கள் தயார் செய்து வைத்திருந்த
சாபத்தின் அடுக்குகளை
ஒவ்வொன்றாகக் கட்டவிழ்த்துவிடுவார்கள்.
வீட்டிலுள்ள அனைவரும்
கைகளைக் கோர்த்து
வட்டமாக நின்றுகொண்டு
சாபங்களைப் பெறத்
தயாரானோம்.
-கே.பாலமுருகன்