பாபாவும் நானும் (3)

பாடமாய் வந்த பாபா

- Advertisement -

ஓம் சாய்ராம். கடந்த இரண்டு பதிவுகளில் பாபா என்னை எப்படி அவர்பால் ஈர்த்தார் என்பதைக் கூறியிருந்தேன். இந்த வாரம் அவர் எனக்குத் தந்த ஒரு பாடத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

பாபாவின் அறிமுகம் கிடைத்தப் பின் ஒவ்வொரு வியாழனும் தவறாமல் கோவிலுக்குப் போகத் தொடங்கிவிட்டேன். கோவிலுக்குச் செல்லும் நாள்களில் அசைவ உணவைத் தவிர்த்தேன். கூடுமானவரை கோவிலுக்குச் சென்று திரும்பும் வரை அசைவ உணவை உண்ணாமலிருந்தேன். 

நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த நிறுவனத்தில் என் மதிப்பு உயர்ந்துகொண்டே இருந்தது. நானும் கடுமையாக உழைத்து என்னை நிரூபித்துக்கொண்டிருந்தேன். 2014ம் ஆண்டுக்கான சிறந்த குழு (Best Team) விருது எங்கள் குழுவிற்குக் கிடைத்தது. எங்கள் குழுவில் நானும் என் நண்பர் ஒருவரும் தான் முக்கியப் புள்ளிகள். என் நண்பர் எனக்கு முன்பிருந்தே இந்த அலுவகலத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அவர் தான் என்னை இந்த வேலைக்குப் பரிந்துரை செய்தவர். முன்பு செய்துகொண்டிருந்த வேலையை விட இங்கே வேலை அதிகம் என்றாலும் சம்பளமும் அதற்கு ஏற்றாற்போல் கொடுத்தார்கள். கற்றுக்கொள்ளவும் நிறைய கிடைத்தது.

என் நண்பர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் அவர் ஆஸ்திரேலியா போய் அங்கே செட்டில் ஆகும் முயற்சியில் இருந்தார். காலம் கைக்கொடுக்க எங்கள் அலுவலகத்தின் ஆஸ்திரேலியக் கிளையில் அவர் பணிபுரியக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு அங்கே சென்றுவிட்டார். நான் சிங்கப்பூரை விட்டுக் கிளம்பினால் மதுரைக்குத் தான் திரும்ப வேண்டும் என்ற முடிவில் இருப்பதால் அந்த மாதிரி முயற்சிகளில் ஈடுபடவில்லை. சுற்றிப்பார்க்க வாவென்று நண்பர் அழைத்துக்கொண்டே இருக்கிறார். பாபாவின் அருளால் இந்தக் கொரோனாவும் திருகையில் அரைபட்ட கோதுமையாய் காற்றோடு கரைந்து காணாமல் போகும் நாள் வெகு விரைவில் வரும். அதன் பின் உலகைச் சுற்றலாம் என்று காத்துக்கொண்டிருக்கிறேன். 

நண்பர் ஆஸ்திரேலியா சென்ற பின், வேலை, வீடு. வியாழக்கிழமைகளில் பாபா கோவில் என்று நாள்கள் வேகமாக நகர்ந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு நடுத்தரக் குடும்ப இளைஞனின் கனவு போல நானும் என் கனவு இல்லைத்தைக் கட்டிக்கொண்டிருந்தேன். என் கல்லூரி நண்பன் ஒருவனிடம் ஒரு தொகையையும் வங்கியில் ஒரு தொகையையும் கடனாகப் பெற்று வீட்டைக் கட்டி முடித்திருந்தேன். பெண் பார்க்கும் படலத்தை என் அம்மா ஒரு பக்கம் தொடங்கியிருந்தார். என்ன தான் கனவு இல்லம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டாலும் வாங்கிய கடன் மூட்டையாக முதுகில் ஏறி அமர்ந்து சிரித்தது. 

2014 டிசம்பரில் அந்த ஆண்டிற்கான செயல்திறன் மதிப்பீடு (performance appraisal) தொடங்கியது. என் மேலாளர் ஒரு மலாய் பெண்மணி பலமுறை அவரிடம் நல்ல பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறேன். நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக எனக்கு 4.3/5 மதிப்பெண் கொடுத்தார். இது அதற்கு முன் வரை வேறு எந்த நிறுவனத்திலும் நான் பெறாத மதிப்பெண். சம்பளம் கூடியது. ஜனவரி தொடக்கத்தில் ஒரு மாத போனஸ் லம்ப்பாக வந்து விழுந்தது. நான் பிப்ரவரி மாதம் ஊருக்குப் போக விண்ணப்பித்தேன். எந்தக் கேள்வியும் இல்லாமல் என் விடுமுறை விண்ணப்பத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பிப்ரவரி இரண்டாவது வாரம் ஊருக்குப் போக எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தேன்.

ஒரு வியாழக்கிழமை எப்போதும் போல அலுவகத்தில் இருந்து கிளம்பி பாபா கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்தேன். எனக்கு இரயில் பயணங்களை விட சிங்கப்பூர் பேருந்து பயணங்கள் மிகவும் பிடிக்கும். அதுவும் மாடியில் ஏறி அமர்ந்துகொண்டு குளுகுளுவென ஏ.சியில் செல்வதென்றால் ஒரு அலாதி இன்பம் தான். அன்று சிரங்கூன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 147 ஆம் எண்கொண்ட பேருந்தில் ஏறினேன். மாடியில்லாத ஒற்றைப் பேருந்து. கிட்டத்தட்ட காலியாகத் தானிருந்தது. பேருந்திற்குள் நுழைந்தவுடன் இருக்கும் மஞ்சள் இருக்கைகள் கர்ப்பிணிகள், வயதானவர்கள் அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கானது. அங்கே அமர்ந்தால் வயதானவர்கள் வரும்போது எழுந்து நிற்கும் சூழல் ஏற்படும். அதனால் நான் பின்னால் இருக்கும் இருக்கைகளுக்குச் சென்றேன். கதவுக்கு அருகில் முன்பக்கம் பார்த்திருக்கும் இரண்டு ஜோடி இருக்கைகள். அதற்கு பின் எதிர் எதிர் திசையில் இரண்டு இரண்டாக நான்கு இருக்கைகள் இருக்கும். நான் ஏறும் போது நான்கும் காலியாகத் தானிருந்தது. நான் ஒரு சன்னல் ஓர இருக்கையில் அமைந்துகொண்டேன்.

பேருந்து நகர்ந்து அடுத்த பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றது. ஒரு ஆறேழு பேர் ஏறினார்கள். அதில் ஒரே ஒரு இந்திய உருவமும் ஏறியது. நல்ல ஓங்கு தாங்கான உடல் வாகு. தமிழன் என்று அடையாளம் சொல்லும் நிறம். தொப்பை நெஞ்சு எல்லாமே அவரின் சட்டைப் பொத்தான்களைப் பிய்த்துவிட்டு வெளியே வரத் துடித்துக்கொண்டிருந்தன. அவரும் ஏதோ பரபரப்புக் குறையாதவராக மண்டையைச் சொரிவதும், கையை முறுக்குவதும், காதைத் தேய்ப்பதுமாக வித்தியாசமாக எதையோ செய்துகொண்டிருந்தார். அவரை நேருக்கு நேர் பார்ப்பதை நான் முடிந்தவரைத் தவிர்த்துகொண்டிருந்தேன். நான் மட்டுமல்ல பேருந்தில் இருந்த பலர் அவரை ஒரு வித்தியாசமான ஜந்துவாகத் தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அவரின் நடவடிக்கைகள் மேலும் மேலும் அவரின் மன அழுத்தத்தை வெளிக்காட்டிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு இருக்கையாக மாறி மாறி அமர்ந்துகொண்டிருந்தார். அவர் எங்கெல்லாம் சென்று அமர்கிறாரோ அங்கே அருகில் அமர்ந்திருப்பவர் முகம் சன்னலுக்கு வெளியே சென்றுவிடும். அவரைக் கண்ணோடு கண் பார்த்தாலே எதுவும் பேசிவிடுவாரோ என்ற அச்சத்தில் பார்க்காதது போலவே அத்தனை பேரும் நடித்திக்கொண்டிருந்தோம். அங்க சுத்தி இங்க சுத்தி அண்ணன் என் பக்கத்திலேயே வந்து அமர்ந்துவிட்டார்.

என்ன செய்வானோ ஏது செய்வானோ என்று நெஞ்சு படக் படக் என்று அடித்துக்கொண்டிருந்தது. 

“அண்ணே… அண்ணே…” அவன் தான் என்னை அழைக்கிறான். மெதுவாக அவன் பக்கம் முகத்தைத் திருப்பி. உதடுகளைச் செயற்கையாக விரித்து. ஒரு இளிப்பு இளித்தேன். 

“அண்ணே…. எனக்கு வேலை போயிருச்சுண்ணே. என்ன பண்றதுன்னே தெரியலண்ணே? ஊர்ல நிறைய கடனை வாங்கி இந்த வேலைய வாங்கிட்டு வந்தேண்ணே. “

அவன் சொல்லச் சொல்ல எனக்கே என் மேல் ஒரு அருவருப்பு உண்டானது. ‘ச்ச ஒரு மனுசன் அவனோட கஷ்டத்தைச் சொல்ல ஆள் கிடைக்காம அலைஞ்சிருக்கான். அதைப் புரிஞ்சுக்காம எவ்வளோ கேவலமா நடந்துக்கிட்டு இருந்திருக்கேன்’ மனதிற்குள் என்னை நானே திட்டிக்கொண்டு அவன் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டேன்.

“ஊர்ல ரொம்ப கஷ்டம்ணே அதான் இங்க வந்து எப்படியாவது சம்பாதிச்சுரலாம்ன்னு வந்தேன். ஆறு மாசத்துல திடீர்னு வேலையில்லை. நீ கிளம்புன்னு சொல்லிட்டாங்கண்ணே”

“ஒண்ணும் கவலைப் படாதீங்க தம்பி. நீங்க காசு கொடுத்து வந்திருந்தா ஒரு ஏஜென்ட் வச்சுத் தானே வந்துருப்பீங்க? அவரை காண்டாக்ட் பண்ணுணீங்களா?”

“அவர்ட்ட கேட்டா நான் என்ன தம்பி பண்றது நல்ல கம்பெனில தான் சேர்த்துவிட்டேன். அவனுக ஏன் திடீர்ன்னு இப்படி பன்னுனானுகன்னு தெரியல. வேற வேலை வந்தா சொல்றேன்னு சொல்றாரு”

“வேற யாராவது ஏஜென்ட்டு கிட்ட கேட்டுப் பார்த்தீங்களா?”

“ஒரு ஏஜன்ட்ட தாண்ணே பார்க்க போய்கிட்டு இருக்கேன். ஆனால் மறுபடி வேலைக்கு காசு கட்ட சொல்லுவானுகண்ணே. என்ன பண்றதுன்னே தெரியல?”

“எனக்கு உங்க லைன் பத்தி அந்த அளவுக்குத் தெரியாது தம்பி. ஆனால் நீங்க இதை நினைச்சு ரொம்ப வருத்தப் படாதீங்க. மூணு லட்சம் நாலு லட்சம் பணம் கட்டி வர்றீங்க. இங்க என்ன கோடிக்கணக்காவா சம்பாதிக்கிறீங்க. ஒருநாளைக்கு பதினெட்டுல இருந்து இருபத்து நாலு வெள்ளி. மாசம் ஐநூறு அறநூறு வெள்ளி அதிகபட்சம் ஓவர் டைம் பார்த்தா எண்ணூறு வெள்ளி. இதுல தான் உங்க சாப்பாடு மற்றதெல்லாம் பார்க்கணும். தங்குறதுக்கு மட்டும் கம்பெனி இடம் தர்றான். எவளோ தான் கஷ்டப்பட்டுச் சேர்த்தாலும் வருசத்துக்கு ஒரு தடவை ஊருக்குப் போனா எல்லாம் காலியாகி மறுபடி வெறும்பயலா இங்க வந்து தொடங்கனும். ஊர்லையே நிறைய நல்ல தொழில் வேலை எல்லாம் இருக்குத் தம்பி. ஒரு கொத்தனார் மாசம் முப்பதாயிரம் சம்பாதிச்சுருறாரு திறமையும் உழைப்பும் இருந்தா எங்கன்னாலும் போய் பொழச்சுக்கலாம் தம்பி. ரொம்ப கவலைப் படாதீங்க.”

“உண்மை தாண்ணே. தேவையில்லாம கடனை வாங்கி ஏஜென்ட்டுகிட்ட கொடுத்துட்டு அதுக்கு வட்டி கட்டத் தாண்ணே இங்க பாதிப் பேர் உழைச்சுகிட்டு இருக்கான். ஒரு ரெண்டு மூணு வருசமாவது உழைச்சாத்தான் இந்தக் கடன்லாம் அடைச்சுட்டு கொஞ்சம் காசு பார்க்க முடியுது. அதுலயும் தண்ணி தம்முன்னு கெட்ட பழக்கம் இருந்தா முடிஞ்சது”

“இவ்வளோ தூரம் தெளிவா பேசுறீங்க. அப்பறம் என்ன பயம். கவலைய விட்டுத்தள்ளுங்க. இந்தியாவுல இருந்து சிங்கப்பூர்ல இருக்க வேலைய கண்டுபுடிச்சு வந்துட்டீங்க. இப்போ சிங்கப்பூர்லையே இருக்கீங்க உங்களால நிச்சயம் முடியும். முயற்சி பண்ணுங்க. சீக்கிரமே நல்ல வேலை கிடைச்சு உங்க கடனெல்லாம் அடைச்சுருவீங்க. உங்க நம்பர் குடுங்க நான் யார்கிட்டயாவது விசாரிக்கிறேன். வாய்ப்பிருந்தா கால் பண்றேன்”

“அதல்லாம் வேண்டாமண்ணே. பரவால்லண்ணே. உங்க கிட்ட பேசுனதே எனக்கு தெம்பா இருக்குண்ணே. ரொம்ப நன்றிண்ணே.”

நான் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம் வந்தது. “சரிங்க தம்பி நான் இறங்குறேன். கவலைப்படாதீங்க கடவுள் உங்களைக் காப்பாத்துவாரு” என்று சொல்லிவிட்டு இறங்கினேன். “ரொம்ப நன்றிண்ணே…. ரொம்ப நன்றிண்ணே…” என்று அவர் ஒரு நான்கு முறை கூறினார்.

பாபா கோவிலுக்குச் சென்றேன். அந்த பெயர் தெரியாத தம்பிக்காவும் வேண்டினேன். மனத்தை ஒரு நிம்மதி நிறைத்தது.

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் அலுவலகம் சென்றேன். ஒரு அரைமணி நேரத்தில் என் மேலாளர் என்னை அழைத்தார். மிகவும் அமைதியான குரலில் உன்னை வேலையில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். இது ஆஸ்திரேலியாவில் இருக்கும் தலைமை அலுவலகத்தின் முடிவு. நான் உனக்காக எவ்வளவோ போராடிப் பார்த்தேன் ஒன்றும் செய்ய முடியவில்லை. உன்னைத் தவிர ஆட்குறைப்பு நடவடிக்கையில் மேலும் சிலரும் வேலை இழக்கிறார்கள் என்றார். ஒரு வாரத்திற்கு முன் நான் சிறப்பாக பணியாற்றுவதாக எனக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்த அதே மலாய் மேலாளர் இப்போது வேலை பறிபோன கடிதத்தைக் கொடுக்கிறார். எனக்கு அவரிடம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவர் கொடுத்த கடிதத்தைப் பெற்றுக்கொண்டு என் இருக்கையில் வந்தமர்ந்தேன்.
கண்களை மூடிக்கொண்டு பாபா என்றேன். நேற்று நான் சந்தித்த அதே தம்பி என் கண்களுக்குள் வந்தான். அவனுக்கு நான் வழங்கிய அத்தனை அறிவுரைகளும் என் கண்களுக்குள் எனக்கே எனக்காக மறுஒளிபரப்பு செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. உண்மை தான் அந்த தம்பிக்கு நான் வழங்கிய அத்தனை அறிவுரைகளும் எனக்குத் தெம்பூட்டிக் கொண்டிருந்தன. ஒருவேளை அவனை நான் நேற்று சந்திக்காமல் இருந்திருந்தால் ஆறுதல் சொல்ல ஆளின்றி நொறுங்கிப் போயிருப்பேன். இப்போது எனக்கான ஆறுதலை என் மனமே எனக்குச் சொல்லியது.

வீடு கட்ட வாங்கிய கடன்கள் என் முன்னே வந்து அச்சுறுத்தின. திருமணம் போன்ற எதிர்காலக் கனவுகள் ஒரு கானல் நீராய் கண் முன்னே அலையாடின. எத்தனை வந்தாலும் என்னோடு பாபா இருக்கிறார் என்று நம்பினேன். நம்பினோர் நிச்சயம் கைவிடப்படார். அவரின் கைகளையை இறுகப் பற்றிக்கொண்டிருக்கும் என்னை எப்படி அவரால் விட முடியும்? 

ஓம் சாய்ராம். 

– சாயி நாமம் ஒலிக்கும்

அடுத்தப் பதிவைப் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

பாபாவும் நானும் (4)

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -