பாபாவும் நானும் (2)

படமாய் வந்த பாபா

- Advertisement -

சென்ற வாரம் பாபா எனக்கு எப்படி அறிமுகமானார் என்பதைப்பற்றி எழுதியிருந்தேன். அதன் பின் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் பாபாகோவிலுக்குச் செல்வதை வழக்கமாக்கிக்கொண்டேன். பக்திக்கு பக்தியுமாச்சு சாப்பாடும் ஆச்சு. 

இரண்டாவது வாரம் கோவிலுக்குச் செல்லும் வழியில் லிட்டில் இந்தியாவில் உள்ள பஃபலோ சாலை (Buffalo Road) சென்று கொஞ்சம் காய்கறிகள் வாங்கிக்கொள்ளலாம் என்று பஃபலோ சாலையில் அலைந்துகொண்டிருந்தேன். ‘பஃபலோ ரோட்’ இதை அப்படியே தமிழ்ப்படுத்தினால் எருமைச் சாலை எனலாம். இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் கால்நடை வளர்ப்பு சிறப்பாக நடைபெற்றதாம். அதிலும் குறிப்பாக இந்த ‘பஃபலோ ரோட்’ பகுதியில் எருமைச் சந்தை இருந்ததால் இந்தச் சாலைக்கு இந்தப் பெயர் வந்துவிட்டது. இப்போது இந்தச் சாலையில் மட்டுமல்ல சிங்கப்பூரில் எருமையை நான் விலங்கியல் பூங்காவில் கூட கண்டதில்லை.

இந்தச் சாலையின் ஒரு புறம் இந்தியக் காய்கறிக் கடைகள் என்றால் மறுபுறம் தேக்கா மார்க்கெட். ஒன்றிரண்டல்ல இருபது கடைகளுக்கும் மேல் வரிசையாக இருக்கும். லிட்டில் இந்தியா பகுதி முழுவதும் பல காய்கறிக் கடைகள் நிறைந்துகிடந்தாலும் இந்தப்பகுதியில் தான் பெரும்பாலும் மக்கள் கூட்டம் அலைமோதும். 

நான் காய்கறிகளை வாங்கிக்கொண்டு பஃபலோ ரோட்டிற்கு இணையாக அதன் பின்புறம் செல்லும் கெர்பாவ் சாலையில் (Kerbau Road) சென்று கொண்டிருந்தேன். வேடிக்கை என்னவென்றால் கெர்பாவ் (Kerbau) என்றாலும் எருமை என்று தான் அர்த்தம் மலாய் மொழியில். சிங்கப்பூரில் இருப்பவர்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமானால் லிட்டில் இந்தியா ரயில் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள சிறிய சாலை. வட இந்தியர்கள் வழிபடும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் இந்தப் பகுதியில் தான் இருக்கிறது. 

என் நண்பர் சுதர்சன் அலைபேசிக்குள் வந்தார். 

“என்ன ஜெய், பாபா கோயிலுக்கு போறீயா?”

“ஆமாண்ணே நடந்து போய்க்கிட்டு இருக்கேன்.” 

பஃபலோ ரோட்டிலிருந்து பாபா கோவில் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு மேல் இருக்கும். இரண்டு பேருந்துநிறுத்தங்களைக் கடக்க வேண்டும். அலுவலக நேரங்களில் கணினி முன் அமர்ந்தே இருப்பதால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நடந்து போவதை பழக்கமாகக் கொண்டுள்ளவன் நான். அன்றும் அப்படித்தான் போய்க்கொண்டிருந்தேன்.

“பாபா போட்டோ எதுவும் வீட்ல வச்சிருக்கியா ஜெய்?”

“இல்லையேண்ணே”

“பாபா படம் ஒண்ணு கிடைச்சா வாங்கி வீட்ல வச்சு கும்பிடு தம்பி. ஒரு மஞ்சள் துணிய விரிச்சு அதுக்கு மேல பாபா படத்தை வச்சு கும்பிடுறது ரொம்ப விசேசம். கிடைக்கலைன்னா எங்கயாவது ஒரு சின்ன காலண்டர் படம் கிடைச்சாலும் வாங்கி வச்சுக்க.”

அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கெர்பாவ் சாலையில் பிரேம் போட்டு கண்ணாடி அடைக்கப்பட்ட பல சாமிப்படங்கள் என் கண்களில் பட்டன. பாபாவும் இருந்தார் மிகப்பெரிய படமாக இருந்தார். இவ்வளவு பெரிய படத்தை வாங்கி நான் தங்கியிருக்கும் அறையில் வைப்பது சிரமம். யோசித்துக்கொண்டே ஒவ்வொரு படமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“இங்க ஒரு கடை இருக்குண்ணே. இருங்க கேட்டுப் பார்க்குறேன்” என்று கூறிவிட்டு. கடைக்காரரிடம் பாபா படம் சிறியதாக இருக்கிறதா என்று கேட்டேன். அவர் கண்ணாடி அடைக்கப்பட்ட சிறிய மேசை மீது வைத்துக்கொள்ளக் கூடிய அழகான படத்தை எடுத்துக் காண்பித்தார். அதில் பாபா வெண்தாடியோடு காவி உடையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி என்னை ஆசிர்வதித்துக்கொண்டிருந்தார். பத்து வெள்ளியைக் கொடுத்து வாங்கிக்கொண்டேன்.

“எப்படிண்ணே நீங்க சொல்றீங்க. பாபா அப்படியே கண்ணுல வந்து சிக்கிட்டாரு?” என்று சொல்லிச் சிரித்தேன்.

“தம்பி பாபா உன்கிட்ட சிக்கல நீ தான் பாபாகிட்ட சிக்கிருக்க. அவர் அருள் உனக்கு இருக்கதால தான் உன்கிட்ட வந்திருக்காரு” என்று கூறி அவரும் சிரித்தார்.

அவரே தொடர்ந்து “அப்படியே ஒரு மஞ்சள் துணி இருந்தா பாரு. ஒருவேளை கிடைக்கலைன்னா வெள்ளைத் துணிய எடுத்து மஞ்சள்ள நனைச்சு வச்சுக்கோ.”

“இது என்ன நம்ம ஊராண்ணே. வெள்ளைத் துணி மஞ்சள் துணிக்கெல்லாம் நான் எங்க போவேன்? நான் தான் பாபாகிட்ட சிக்கிருக்கேனே அவரையே கொடுக்க சொல்லுங்க பார்ப்போம்.”

“அவர் நினைச்சா உனக்கு எல்லாம் கொடுப்பாரு தம்பி. ஆஃப்ட்ரால் மஞ்சள் துணி கொடுக்காமாட்டாரா?”

“அப்படியா அப்போ கொடுக்க சொல்லுங்க” என்று சிரித்துக்கொண்டே கெர்பாவ் சாலையைத் தாண்டி பீர்த் தோட்டம் என்றழைக்கப்படும் நம்மூர் இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து சரக்கடிக்கும் கடையைத் தாண்டினேன். அங்கே பீர் மட்டுமல்ல சூடான மிளகாய் பஜ்ஜி, வடை, டீ எல்லாம் குறைந்த விலையில் கிடைக்கும். உட்கார்ந்து சாப்பிட ஏதுவாக வெளியில் இருக்கைகளும் மேசைகளும் போட்டிருப்பார்கள். நான் எதுவும் சாப்பிடவில்லை சுதர்சன் அண்ணனுடன் பேசிக்கொண்டே அந்த இடத்தைக் கடந்தேன். 

“தம்பி நீ சும்மா விளையாட்டுக்குப் பேசுற. ஆனால் நீ உண்மைலையே பாபா மேல நம்பிக்கை வச்சுக் கேளு உனக்கு கிடைக்கும்”

“சத்தியமா நம்புறேண்ணே. நம்பாட்டி இந்த முறை நான் கோயிலுக்கே போயிருக்க மாட்டேண்ணே.”

“அப்போ உனக்கு நிச்சயமா உன் மஞ்சள் துணி கிடைக்கும்”

அவர் சொல்லி வாய் மூடவில்லை. அங்கே ஒரு கடையின் வெளியே பல வண்ணங்களில் தொங்கிக்கொண்டிருந்த கைக்குட்டைகளில் ஒரு மஞ்சள் நிறக் கைக்குட்டை மட்டும் காற்றில் பறந்து என்னை வா வா என்றழைத்தது. எனக்கு ஒரு நிமிடம் பகீரென்றிருந்தது. எதிர்பாராமல் நடந்ததா? அல்லது இத்தனை நாள்கள் மஞ்சள் துணிப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் இந்தப் பகுதியைக் கடந்ததால் அதில் என் கவனம் செல்லவில்லையா? ஒரு சில நொடிகளில் மின்னல் போல் பல எண்ணங்கள் தோன்றி மறைந்தன.

“இங்க ஒரு மஞ்சள் கலர் கர்ச்சிஃப் தொங்குதுண்ணே”

“கர்ச்சிஃபோ என்னும்மோ. உனக்குத் தேவை மஞ்சள் துணி கிடைச்சிருச்சுல. அதான் பாபா” என்றார்.

இது நடந்து ஆறு வருடங்களுக்கு மேல் ஆன பின்னும் இந்த நினைவுகள் எல்லாம் என் நெஞ்சில் அப்படியே இருக்கிறன. இதை இங்கே எழுதிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கூட அந்த மஞ்சள் நிறக் கைக்குட்டை என் கண் முன் நினைைவுகளில் ஆடிக்கொண்டிருக்கிறது. இப்போது வரை அதே மஞ்சள் கைக்குட்டையில் அதே பாபா அப்படியே என் வீட்டில் இருக்கிறார். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படம் அந்தப் படம் தான்.

பாபா படத்தில் ரஜினிகாந்த் போல ஒரு வரத்தை வீணடித்துவிட்டோமா என்று கூடத் தோன்றியது. ஆனால் இது சினிமா பாபா அல்ல உண்மை பாபா அள்ள அள்ளக் குறையாத ஆயிரமாயிரம் வரங்களை கொடுத்துக்கொண்டே இருக்கக்கூடிய கருணைக் கடல் என்பதைப் பிற்காலத்தில புரிந்துகொண்டேன்.

அந்தக் கருணைக் கடல் என் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை வரும் வாரங்களில் கூறுகிறேன். 

ஓம் சாய்ராம்

– சாயி நாமம் ஒலிக்கும்

அடுத்தப் பதிவைப் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

பாபாவும் நானும் (3)

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -