துரோகத்தின் நிழல்

மூன்று கவிதைகள்

- Advertisement -

துரோகத்தின் நிழல்

மின்மினியின் முதுகில் ஏறி
பயணிக்கிறேன்.
கண்ணீர் புரளும் நதிகள்
குறுக்கிடுகின்றன.

ஆசைகள் கொந்தளிக்கும் கடல்
பொங்கி எழும்புகிறது.
உலர்ந்த கனவுகள்
சூறாவளியாய்
சுழட்டியடிக்கிறது.

கசப்பு திரண்டு
மழையாய் நனைக்கிறது.
ஏக்கம் ததும்பும்
இசையின் நறுமணம்
எங்கும் கமழ்கிறது.

தனிமை தவமிருக்கும்
சிகரங்களைத் தாண்டுகிறேன்.
பரிதவிப்பின் மென் பனித் தீண்டல்
உணர்வை சில்லிடச் செய்கிறது.

கொடுவெயில் உலவும்
பாலையின் வலையில் சிக்காது தப்பி…
பசுமை பாய்ந்தோடும்
கானகத்தின் நடுவில்
பல்வண்ண….
பலவடிவ….
இனிப்புக் கனிகள் குலுங்கும்
அந்த மரத்தின் அருகில்
பேராவல் கொண்டு
இறங்குகையில்…
புலி ஒன்று
விழி மூடாது காத்திருக்கிறது.

??????????????????????????

சிலிர்க்கும் நிமிடங்கள்

பிணந்தின்னிகள் காடுகளில் அலைகின்றன
பணந்தின்னிகள் நாட்டில் சண்டையிடுகின்றன
நாடே சுடுகாடாகிப் போச்சு
பெண் பெண்ணுக்கு எதிரி
ஆண் ஆணுக்கு எதிரி
வாழ்வைத் தீர்மானிக்கிறது
சாதி மதம் இனம்
பணம் அதிகாரம்
மனிதம் இற்றுக் கிடக்கிறது
வீதிகளில் குருதி வெள்ளம்
ஈஸ்வர அல்லா தேரா நாம்
மறுதலித்தேன்
மனம் கசந்தேன்
சிலுவையைத்
தூக்கித் திரிகிறேன்
சங்கப்பலகையாய் மின்வெளி
அதில் அரங்கேற்றிய உன் கனவு
காலங்களை நீந்திக் கடந்து இதயங்களை அடையும்
இன்னும் என்ன கலக்கம்
எல்லாத்தையும் விட்டுவிடு
பூவோடு இலைகளும் அழகு
அன்பே உன்னோடு
உன் மனசும் அழகு
கண்ணோடு
உன் இதழ்களும் அழகு
எனக்குள்ளிருந்து எடுத்துப் போடுகிறது மனக்கிளி
எனக்கான சீட்டு
இன்னும் வரவில்லை
அதற்குள் கிளி பறந்து விடுமோ என பயமாக இருக்கிறது
ஏதோ சொல்ல வருகிறாய்
ஏனோ சொல்லாமல் மறைக்கிறாய் அன்பே
சொன்னால் தானே
சுகங்கள் பிறக்கும்
உன் காந்தக் கண்கள் ஈர்க்கின்றன கண்ணே
என் இதயம் உடல் தாண்டிச் செல்ல முனைகிறது
அன்பே
உன் இமைகளால் திரையிடு
உன் மெளனம் உன் எதிரி
என் மெளனம் என் சத்ரு
அடிபட்டு சாவதென்னவோ
நம் இனிய காலம்
பூவெடுத்தேன் மனம் வாசம் வீசியது
பழம் எடுத்தேன்
உயிருக்கு பசித்தது
பேச ஒரு சொல் கிடைக்கவில்லை
விழிகள் பார்த்து கிறங்கினேன்
வழிகள் யாவும் மறந்து போனது
உளிகள் என்னுள் தேவதை சிலையை வடிக்கின்றன
உள்ளத்திலிருந்து
பறவை வெளியேறியது
உலகிற்குள் பறந்து தேடியது
உள்ளத்திற்குத் திரும்பிய பறவைக்கு பசியெடுத்தது
பாடலின் அர்த்தம் தெரியவில்லை
பாடலை ரசிக்கிறேன்
சந்தம் நெஞ்சைத்
தின்று கொண்டிருக்கிறது
படைப்பு
ஒற்றைமாட்டு வண்டி
மொழிபெயர்ப்பு
இரட்டை மாட்டு வண்டி
எல்லாம் பயணத்திற்கே.

??????????????????????????

தூரத்தில் வெளிச்சம்

கடவுள் சந்தை
விதவிதமான கடவுள்கள்
கனவுகளோடு ஜனங்கள் வாங்கிச் செல்கிறார்கள்
முத்தமிட்டாய்
முள்கிரீடம் சூட்டப்பட்டது
இதயச்சிலுவையில் அறையப்பட்டுத் துடிக்கிறேன்
ஆயுதம் தீர்வல்ல
அகிம்ஸை தீர்வல்ல
அநியாயங்களை எதிர்க்கும் மக்கள் திரளின் கோபமே தீர்வு
முகத்தில் மனம் பார்க்கிறேன்
மனத்தில் எண்ணங்களைப் படிக்கிறேன்
கணத்தில் மறந்திட மேகமாய் கலைந்து போகிறேன்
அறிவுஜீவியாக இருக்க மாட்டேன்
மனிதஜீவியாக இருப்பேன்
உலகம் உய்ய வேண்டும்
என்பதே என் அவா.
ஒவ்வொரு கல்லாய் இடுகிறேன்
பானை நிறைந்தபாடில்லை
நானும் நிறுத்தவில்லை
நாரைகளைக் காணவில்லை
தூது விட வேண்டும்
கடிகைமுத்துப் புலவர்
என் பாட்டன்
தூரத்துக் கனவுகள்
என் மனசுள்
சிக்கிக் கொண்டன
என்னிடம் விடுவிக்கச் சொல்லி மன்றாடுகின்றன
தொலைவு பொருட்டில்லை
பயணம் கடினம் தான்
போயாகணுமே
ருசித்துத் தின்ற மாமிசம் சலித்துப் போனது
காய்கறிகளும் பழங்களும் அரிசியும் மாவுகளும் சுவை திரிந்து போயின
பசித்துப் புசித்த காலம் மலையேறிப் போய்விட்டது.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -