நான்காம் பரிமாணம் – 94

19. மாற்ற அதிகாரம் - 4ஆம் பகுதி

- Advertisement -

ந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

காலம் என்னும் நான் மாற்ற அதிகாரத்தில் இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் பல்வேறு மாற்றங்களைப் பற்றி கூறிக் கொண்டு வருகிறேன். சென்ற பகுதியில் மாற்றம் நடக்கும் இரண்டு முக்கியமான வழிகளை பற்றி உங்களுக்கு கூறியிருந்தேன். இன்று அந்த இரண்டு மாற்றங்களும் முடிவில் எந்த நிலையை அடையும் என்பதை பற்றி விரிவாக கூற போகிறேன். தொடங்கலாமா?

தயிரும் சிவப்பு அரக்கனும்

நான் கூறிய தலைப்பு உங்களுக்கு விந்தையாக இருக்கலாம். நீங்கள் அன்றாடம் சாப்பிடும் தயிருக்கும் சிவப்பு அரக்கன் என்ன சம்பந்தம்? இங்கே முதலில் தயிரை பற்றி கூறி விடுகிறேன். நீங்கள் உணவு சாப்பிடும்போது முதலில் சாம்பார், பருப்பு, ரசம் முதலிய பண்டங்களை உட்கொண்டு விட்டு இறுதியாகத்தான் தயிரையும் தயிர் சாதத்தையும் சாப்பிடுவீர்கள் அல்லவா?  இந்த தத்துவத்திற்கும் மொத்த அண்டசராசரத்தில் வாழ்வுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது! 

ஆக்சிஜனின் துணைகொண்டு தன்னை மாற்றத்திற்கு உள்ளாகி கொள்ளும் அனைத்துப் பொருட்களும் அந்த நிலையை தொடர்ந்து கொண்டே இருக்க முடியாது. எரிந்து கொண்டிருக்கும் ஒரு விறகு, அனைவருக்கு இரண்டு காரணங்கள் இருக்கும். முதலில், எரிந்துகொண்டிருக்கும் பிறகு முழுமையாக கரியாக மாறியிருக்கலாம். இரண்டாவதாக அந்த விறகை புகை சூழ்ந்து கொண்டு அதன் அருகே ஆக்சிஜனை நெருங்க விடாமல் இருந்தால்கூட அந்த விறகு அணைந்து போகும். ஆக்சிஜன் தட்டுப்பாடு உண்டான பின்பு நெருப்பும் முழுவதுமாக பற்றிக் கொள்ளாமல் சிறகிலிருந்து மென்மேலும் அதிக புகை கிளம்பும். அதிக புகை அந்த விறகின் எரியும் தன்மையை பாதிக்க மாற்றத்தை குறைக்கிறது. உங்கள் உடலில் உள்ள செல்கள் கூட இந்த விறகு போல ஆக்சிஜனின் துணை கொண்டு தன்னை தானே எரித்து உடலில் மாற்றத்தை உண்டாக்குகிறது. இந்த எரிக்கும் செயல் முழுவதுமாக நின்று விட்டால் அதுவே அந்த உயிரின் மரணம் ஆகவும் கருதப்படுகிறது. ஆனால் இந்த மரணம் நிகழ்வதற்கு முன்னால் என்ன நடக்கிறது தெரியுமா? ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் தனக்குள் சக்தியை உருவாக்கிக் கொள்ள தன்னிடமுள்ள குளுக்கோஸ் மூலக்கூற்றை உடைத்து அதிலிருந்து தயிரின் அடிப்படையாக இருக்கும் லாக்டிக் அமிலத்தை உருவாக்குகிறது. இந்த நிகழ்வில் சற்று குறைவாக சக்தி உருவானாலும் இங்கே ஆக்சிஜன் தேவைப்படுவதில்லை. ஒரு மனிதன் இறக்கும் தருவாயில் இருக்கும் பொழுது அவனது உடலில் லாக்டிக் அமிலத்தின் அளவு அபரிமிதமாக கூடிவிடுகிறது! இதனை வைத்தே உங்கள் விஞ்ஞானிகள் அடுத்த சில மணி நேரங்களில் இறப்பு வந்துவிடும் என்பதை கூட கணித்து விடுகிறார்கள்.

அதுசரி நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள தயிருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? தயிர் என்பது பாலில் இருக்கும் சக்தியை ஒரு நுண்ணுயிர் மூலம் செரிக்க வைத்து அதன் விளைவாக கிடைக்கும் கழிவு தான். தயிர் எனும் உணவு ஏற்கனவே செரிமானம் ஆனதால் அதனை மீண்டும் மாற்றுவது என்பது சற்று கடினமானது. நீங்கள் உணவின் இறுதியில் தயிர் சாப்பிடுவதால் உங்கள் உணவுக்குழாய் வழியாக இருக்கும் மற்ற உணவுகள் அதனால் கழுவப்பட்டு உங்கள் உடல் பாகங்கள் அதிக மாற்றம் அடையாமலும், வயிற்றில் உள்ள பொருட்கள் மேலும் கெடாமல் இருப்பதற்கும் உதவுகிறது. இங்கே மாற்றம் எனும் வார்த்தையை முக்கியமாக குறித்துக்கொள்ளுங்கள். எந்த உயிரும் தொடர்ச்சியாக மாற்றமடைந்து கொண்டிருக்கும்போது அதிகம் வெளிப்படாத லாக்டிக் அமிலம், மாற்றமடையாமல் ஒரு நிரந்தர நிலைமை நீங்கள் எட்டும் பொழுது இறுதியாக வெளிப்படுகிறது. சுருக்கமாக சொல்லப் போனால் மரணம் என்பது தான் உங்கள் உடலின் மாற்றங்கள் நிற்கும் தருணம் ஆகும். நீங்கள் உண்மையிலேயே இறக்க விரும்பவில்லை என்றால்கூட உங்கள் உடல் இறப்பதை தான் விரும்புகிறது!

சிறிதாக இருக்கும் பொருட்கள் அனைத்தும் ஆக்சிஜனேற்றம் மூலம் தன்னை மாற்றிக்கொண்டு ஒரு மாறா நிலையை அடைவதற்கு முயற்சி செய்வது எப்படி என்பதை உங்களுக்கு கூறிவிட்டேன். இதே நிலைமையே சூரியன் போன்ற மிகப் பெரிய நட்சத்திரங்களும் கோள்களும் அடைய முயற்சி செய்தால் அதன் விளைவாக உருவானதுதான் சிவப்பு அரக்கன் (Red gaint) சூரியன் இன்னும் பல கோடி ஆண்டுகள் இருந்துவிட்டு இறக்கும் நிலையை அடையும் பொழுது சிவப்பு நிறமாக மாறி தற்பொழுது அளவைவிட பல நூறு மடங்கு பெரிதாக வளர்ந்து தனது இறுதி மூச்சை விட்டு விட்டு ஒருவழியாக இறந்துவிடும். இந்த நிலைக்கு பின்பு அதிகப்படியான மாற்றங்கள் நிகழாமல் ஒரு நிலைமையை சூரியன் இன்னும் சில கோடி ஆண்டுகளில் அடைந்துவிடும். இங்கே உள்ள இருமை நிலையை சற்று யோசித்து பாருங்கள். எந்த ஒரு மாற்றத்திற்கும் கிடைக்கும் முக்கியமான விளைவு மாற்றமில்லாத தன்மைதான்! ஒருவேளை இயற்கையின் முக்கியம் நோக்கமே இந்த நிலையை அடைவதாக கூட இருக்கலாம். ஆனால் மாற்றம் அடையாமல் இருப்பது கூட மாற்றத்தின் ஒரு வித்தாக மாறுகிறது. அது எப்படி என்பதை அடுத்த பகுதியில் கூறுகிறேன் அதுவரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -