நான்காம் பரிமாணம் – 93

19. மாற்ற அதிகாரம் - 3ஆம் பகுதி

- Advertisement -

ந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். மாற்ற அதிகாரத்தில் உங்கள் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் நடக்கும் பல்வேறு மாற்றங்களின் ரகசியத்தைப் பற்றி கூறி வருகிறேன். மாற்றத்தின் கண்களின் வழியாக உயிர் என்றால் என்ன என்பதை இந்த பகுதியில் கூறப்போகிறேன். தொடங்கலாமா?

உயிரும் மாற்றமும்

சூரியனிலிருந்து வெளிவரும் வெளிச்சமும் வெப்பமும் பூமியை தொடர்ந்து வந்தடைந்து கொண்டிருந்தால் பூமியும் வெள்ளி கிரகத்தை போன்று கடும் வெப்பத்துடன் நீங்கள் வாழவே முடியாத அளவுக்கு மாறியிருக்கும் என்று முன்பே நான் உங்களுக்கு கூறியது நினைவிருக்கலாம். ஆனால் பூமியும் கூட சூரியனில் இருந்து பெறப்படும் வெப்பத்தை முழுமையாக மீண்டும் விண்வெளிக்கு திருப்பி அனுப்ப முடியாத நிலையில்தான் இருக்கிறது. இந்த நிலைமையை மாற்ற வேண்டுமென்றால் வெப்பம் அல்லாமல் வேற ஏதாவது இயக்க வடிவமாக சூரிய ஒளியில் உள்ள சக்தியை மாற்றி செலவழிக்க வேண்டும். அப்படி மாற்ற முடியாமல் போனால் பூமியின் சூரியன் போல ஒரு வெப்பக் கோளமாக உருவெடுத்து விடும். இப்படிப்பட்ட மாற்றத்தை நிறுத்தாமல் இருப்பதற்கும் ஒரு புதுவிதமான மாற்றம் தேவைப்பட்டது. அதுதான் உயிர்களும் அதன் இயக்கமும். 

நீங்கள் உங்கள் பள்ளிப்பருவ இயற்பியல் வகுப்பில் வெப்ப சக்தியை இயக்க விசையாக மாற்ற முடியும் என்றும் அதுபோலவே இயக்க விசையை வெப்பமாக மாற்ற முடியும் என்றும் படித்திருப்பீர்கள். உதாரணமாக, எரியும் கரி அடுப்பை உந்து சக்தியாக மாற்றி ரயில் பெட்டி இயங்குகிறது. அதுபோலவே உந்து சக்தியை மின்சக்தி மற்றும் வெப்பமாக மாற்றி உங்கள் இரு சக்கர வாகனத்தின் உந்துவிசை ஒளிவிளக்காக பிரகாசிக்கிறது. நான் மேற்கூறிய இயந்திரங்கள் அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்டவை. இதுபோலவே இயற்கையும் உருவாக்கினால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி இயற்கை உண்டாக்கிய இயந்திரங்கள் தான் உலகில் உள்ள அனைத்து உயிர்கள் மட்டும் ஜீவராசிகள் ஆகும். ஒரு சிறிய செடி என்ன செய்கிறது என்று எப்போதாவது நீங்கள் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு விளங்கிவிடும். ஒரு செடி தனது இலைகளின் மூலமாக சூரிய ஒளியை அப்படியே உள்வாங்கிக் கொண்டு அதன் சக்தியை தனது இலைகளில் தேக்கி வைக்கிறது. இந்த நிகழ்வு நடக்கும் பொழுது அதிகப்படியான சூரியசக்தி பூமியின் மேற்பரப்பில் விழுந்து அதனை சூடாக்கி விடாமல் இருப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இப்படி தேக்கி வைக்கப்பட்ட சக்தி ஏதாவது ஒரு காலத்தில் வெளிவந்து தானே ஆக வேண்டும்? இதுவும் இரண்டு விதத்தில் நடக்கிறது. முதலாவதாக இந்த தாவரங்களை உண்ணும் விலங்குகள் அந்த சக்தியை தனக்குள்ளே பரிமாற்றம் செய்து கொள்கிறது. இது நடக்கவில்லை என்றால் அந்த செடி சிறிது காலத்தில் செயலிழந்து மண்ணுக்குள் மக்கி விடுகிறது. மண்ணுக்கும் ஆகிவிட்டாலும் அதனுடைய சக்தி குறைந்து விடுவதில்லை இப்படி பல காலம் மண்ணுக்குள் நோக்கியிருக்கும் செடி கொடிகள் அனைத்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்பு கூட பெட்ரோல் மண்ணெண்ணெய் போன்ற எரி சக்தியாக மாறி மீண்டும் தனது சக்தியை ஏதாவது ஒரு காலத்தில் வெளிப்படுத்தியே தீரும்.

இந்த சங்கிலித் தொடர் இத்துடன் நின்று போவதில்லை. செடிகொடிகளை உண்ணும் விலங்குகளையும் செடிகளையும் தனக்கு இரையாக்கிக் கொண்டு மனிதர்களாகிய நீங்கள் உயிர் வாழ்கிறீர்கள். சுருக்கமாக சொல்லப்போனால் பூமி சூடாகி விடக்கூடாது என்ற இயற்கையின் முயற்சிக்கு கிடைத்த சிறு விளைவுதான் மனிதர்களாகிய நீங்கள்! ஆனால் மாற்றத்தை தடுப்பதற்காக உருவாக்கிய மனிதன் என்னும் பொருள், தன்னுடைய அபரிமிதமாக மூளையால் உலகில் அதனைவிட மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது ஒரு நகைமுரண் என்றுதான் சொல்ல வேண்டும். செடிகள் விலங்கினங்கள் மற்றும் மனிதர்கள் வெவ்வேறு பண்புகளைக் கொண்டது போல் தோன்றினாலும் அடிப்படையில் அனைவரும் செய்யும் செயல் ஒன்று தான். சூரிய சக்தியை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டு தங்கள் உடலில் இருக்கும் செல்களை ஆக்சிஜனின் துணைகொண்டு எரித்து விடுவது தான். ஆக மொத்தம் இந்த அண்டத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு இரண்டு வழிகள்தான் இருக்கிறது. தனது அணுக்களை பிளந்து அல்லது சேர்த்து உருவாக்கும் மாற்றம் முதலாவது, ஆக்சிஜனை கூட்டாக சேர்த்துக்கொண்டு மூலம் சக்தியை வெளிவிடுவது இரண்டாவது ரகம். மிகப் பெரிய உருவம் கொண்ட பொருட்கள் முதலாவது வழியையும் சிறிதாக இருக்கும் பொருட்கள் இரண்டாவது வழியில் தேர்ந்தெடுக்கின்றன. மாற்றம் எவ்வாறு நடக்கிறது என்பதை விரிவாகப் பார்த்துவிட்டோம். இந்த மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் அதிசயமானவை. அவை என்னவென்று அடுத்த பகுதியில் கூறுகிறேன். அதுவரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -