நான்காம் பரிமாணம் – 70

14. ஆயுத அதிகாரம் - 5ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்


நான்தான் காலம் பேசுகிறேன். வெளியுலகில் இருக்கும் ஆயுதங்கள் முதல் உங்கள் மூளை வரை ஒவ்வொன்றும் எவ்வாறு ஆயுதமாக மாறுகிறது என்பதை சென்ற பகுதிகளில் பார்த்தோம். நாம் இதுவரை பார்த்த அனைத்து ஆயுதங்களும் ஒரு ஒற்றுமை உண்டு. அதனை கட்டுப்படுத்துவது சற்று எளிமையானது. ஆனால் நாம் இன்று பார்க்கப்போகும் ஆயுதமோ மிகவும் வலிமையானது மட்டுமல்லாமல் உங்களால் கட்டுப்படுத்துவது என்பது மிகவும் அரிதான காரியமாகும். ஆம். உங்கள் மனத்தைப் பற்றி தான் நான் பேசுகிறேன். சற்று விளக்கமாக பார்ப்போமா?

மனம் எனும் தொழிற்சாலை

ஆதிகாலத்தில் மல்யுத்தத்தில் தொடங்கி பின்பு கைகளில் ஏந்தி பிடிக்கும் ஆயுதங்கள் மூலமாக சண்டைபோட்டு, அதன் பிறகு தொலைவிலிருந்தே தாக்கக்கூடிய வில்லம்பு முதல் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் வரை மனிதன் கண்டுபிடித்து விட்டான். இந்த ஆயுதங்கள் அனைத்தும் ஏதோ ஒரு விதமான பொருட்களால் கட்டமைக்கப்பட்டவைதான். எந்த ஒரு பொருளுமே ஒளியின் வேகத்தைவிட அதிகமான வேகத்தில் பயணிக்க முடியாது. அப்படி வருவதற்கு முயற்சி செய்தால், அதன் நிலை பொருளிலிருந்து அலையாக மாறிவிடும். அப்படியானால் அலையை விட மிகுந்த வேகம் கொண்டு தாக்கும் எந்த ஒரு பொருளும் அண்டத்திலேயே கிடையாது என்றுதானே அர்த்தம்? அந்த அலைவரிசையை ஒரு ஆயுதமாக மாற்றினால் அதனை வெல்வதற்கு யாராலும் முடியாது என்பது தான் உண்மை. எந்த ஒரு ஆயுதத்தையும் உருவாக்குவதற்கு ஒரு கருவி வேண்டும். உதாரணத்திற்கு ஒரு கத்தியை செய்வதென்றால் இரும்பு உலையில் அதனை வார்த்து, பின்பு வடிவமைக்க வேண்டும். அதன் பின்பு அதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு அலைவரிசையை உருவாக்குவது என்பது அதுபோலத்தான். அதனை உருவாக்கும் தொழிற்சாலை உங்கள் மனது தான்!

சூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒளியானது பூமிக்கு வருவதற்கு சுமார் 8 நிமிடங்கள் பிடிக்கும். ஆனால் உங்கள் மனதில் சூரியனின் மேற்பரப்பில் சென்று உட்கார்ந்து கொள்வது போல் நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் அதே நொடியில் உங்கள் மனது சூரியனில் போய் உட்கார்ந்து கொண்டு விடும்! ஆகவே மனம் என்பது எந்த ஒரு பொருளையும் விட மிகவும் வேகமான சக்தியாகும். ஒரு ஆயுதம் மிகவும் வலிமையானது என்பதை எதை வைத்து நீங்கள் கண்டுபிடிக்கிறார்கள்? அது மிகவும் கூர்மையானதாகவும் அதே சமயத்தில் எதிரியின் இடத்திற்குள் ஆழமாக ஊடுருவிச் செல்லும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும். இதே குணம் உங்கள் மனதிற்கும் பொருந்தும். மனம் கூர்மையாக இருந்தால் தான் தான் எடுத்துக்கொண்ட செயலை முழுவேகத்தில் ஒருவனால் செய்து முடிக்க முடியும். அதே சமயத்தில் ஆழ்ந்து சிந்திக்கும் திறன் வாய்ந்த மனதால் மட்டும்தான் தொடர்ச்சியாக நீண்ட காலம் தனக்கு வரும் சவால்களை தாக்குப் பிடிக்க முடியும். அதுபோல எந்த ஒரு ஆயுதத்தின் சக்தியையும் அளப்பது எவ்வாறு தெரியுமா? ஆயுதத்துக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஆற்றலை வைத்துத்தான். அணுவுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றலை மனிதன் கண்டுபிடித்ததால் ஒரு மிகச்சிறிய உருளைக்குள் பெரிய மாநகரத்தை நொடியில் எரித்து சாம்பலாக்கும் சக்தியை கண்டுபிடிக்க முடிந்தது. அப்படி ஒளிந்துகொண்டிருக்கும் சக்தியை நிலையாற்றல் (Potential Energy)  என்றும், அது முழு சக்தியை வெளிப்படுத்தும் பொழுது இயக்க ஆற்றல் (Kinetic Energy) என்று கூறப்படுகிறது. நிலையாற்றல் இயக்க ஆற்றலாக மாறும் அந்தத் தருணம்தான் அந்த ஆயுதம் தன்னுடைய முழு பலத்தை வெளிப்படுத்துகிறது. அப்படியானால் ஒரு ஆயுதத்தின் அடிப்படை குணமே முதலில் சக்தியை தனக்குள் தேக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தான் தேக்கிவைத்த சக்தி வெளியில் கொஞ்சம் கூட கசியாமல் தகுந்த நேரத்தில் முழுமையாக வெளிப்படுத்த வேண்டும்.

மனதை ஒரு ஆயுதமாகப் மாற்றுவதற்கு அடிப்படை கோட்பாடு நிலையாற்றல் தான். நீங்கள் உங்கள் உடலிலிருந்து வெளிப்படும் அலைவரிசை கண்டுபிடிக்கும் அளவையை பொருத்திக்கொண்டால் அதிலிருந்து தொடர்ச்சியாக வெளிப்படும் அலைவரிசை மாறுபாட்டை எளிதாகக் காணமுடியும். குறிப்பாக நீங்கள் மிகவும் கோபமாகவோ அல்லது சந்தோஷமாக இருக்கும் பொழுது மனதின் அலைவரிசை மிகவும் அதிக அளவில் காணப்படும். அதே சமயத்தில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளும் பொழுது மிகவும் குறைந்த அலைவரிசைகளை காணப்படும். அப்படியானால் நீங்கள் அதிக அலைவரிசையை வெளிப்படுத்தும் காலத்தில் இயக்க ஆற்றலை பயன்படுத்துகிறீர்கள். அதே சமயத்தில் அமைதியான நிலையில் இருக்கும்பொழுது நிலை ஆற்றலை அதிகமாக பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் எவ்வளவு அதிகமான நேரம் நிலை ஆற்றல் நிலைமையிலேயே இருக்கிறீர்களோ அவ்வளவு அதிகமான சக்தியை உங்களுக்குள் தேக்கி வைத்துக் கொள்ள முடியும். அதுவே ஒரு மிகப்பெரும் ஆயுதமாக மாறி நீங்கள் நினைத்த காரியத்தை முடித்துக் கொள்ள உதவியாக இருக்கும். ஆனால் இங்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்ன தெரியுமா? மற்ற ஆயுதங்களைப் போல அல்லாமல் மனதை உங்களால் எளிதாக கட்டுப்படுத்தவே முடியாது.

மற்ற ஆயுதங்களை விடவும் மனம் ஒரு மிகப்பெரிய ஆயுதம் என்பதை ஏற்கனவே பார்த்துவிட்டோம். இந்தப் மிகப் பெரிய ஆயுதத்தை கட்டுப்படுத்தும் வழி தெரியாத ஒரு மனிதன் எவ்வளவு ஆபத்தான நிலைமையில் இருக்கிறான் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். ஒரு சிறு குழந்தையின் கையில் கத்தியை கொடுத்தால் அது தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளும் தானே. மனதை கட்டுப்படுத்த தெரியாத மனிதன் கூட இதே நிலையில் தான் இருக்கிறான். சொல்லப் போனால் கத்தியை கையில் கொண்டுள்ள குழந்தையை விட ஆபத்தான நிலைமையில் இருக்கிறான். மற்ற ஆயுதங்கள் அனைத்தும் கண்ணுக்கு எளிதாக புலப்பட்டு விடும். ஆனால் மனதில் ஒளிந்துள்ள இந்த ஆயுதம் மட்டும் வெளியில் எந்தவித எச்சரிக்கையையும் கொடுக்காமல் நேரடியாக தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் தாக்கி அழித்து விடக் கூடிய ஒன்றாகும். இந்த ஆயுதத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அதனை நீங்கள் கட்டுப்படுத்த முயன்றால் அது இன்னும் வேகமாக செயல்பட தொடங்கும்! ஓரளவுக்கு மேல் இதனை கட்டுப்படுத்த இயலாதவர்கள் அதனைச் செயலிழக்க வைக்கும் முயற்சியாக போதை வஸ்துக்களை உட்கொள்ள தொடங்குகின்றனர். இது மனதை ஓரளவிற்கு செயலிழக்க வைத்தாலும் உடலை முழுவதுமாக கெடுத்துவிடும். ஆனால் எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல் இதனை கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கு உலகில் பல வழிகளை மனிதன் கண்டுபிடித்துள்ளான். இந்த வழிகளை கண்டுபிடித்த மனிதர்களை தான் நீங்கள் மகாத்மா என்று கூறுகிறீர்கள். இவர்கள் கூறும் அனைத்து வழியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். மனதை என்றுமே கட்டுப்படுத்த முயலாமல் அதனை தொலைவிலிருந்து பார்க்கும் ஒரு பார்வையாளர் போன்று நோட்டமிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தான் இந்த ரகசியம். அவ்வாறு பார்க்கும் பொழுது “நான்” என்னும் நிலைமையை மறந்து உங்கள் சொந்த மனதை கூட வேறு ஒரு மனிதனாக பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள். எப்பொழுது உங்கள் மனமே ஒரு வெளி மனிதனைப்போல் ஆகிறதோ, அப்பொழுது மற்ற ஆயுதங்களைப் போல் அதனையும் கட்டுப்படுத்திவிடலாம். முடிந்தால் ஒரு முறை முயன்று பாருங்களேன்.

கடந்த ஐந்து பகுதிகளாக பார்த்து வந்த ஆயுத அதிகாரத்தை இந்த பகுதியுடன் முடித்துக்கொண்டு வேறொரு புதிய அதிகாரத்தில் உங்களை சந்திக்கிறேன். 

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -