நான்காம் பரிமாணம் – 6

2. ஊழி அதிகாரம் - 1ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். எனது பார்வையில் நான் கண்ட பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து உங்களுடன் கூறிக்கொண்டு வருகிறேன். சென்ற பகுதியுடன் மொழி அதிகாரத்தை நிறைவு செய்து, இந்தப் பகுதி முதல் ஊழி அதிகாரத்திற்குள் அடியெடுத்து வைக்கிறேன். ஊழி என்றால் என்ன? என்னுடைய(காலத்தினுடைய) இன்னொரு பெயர் தான் ஊழி. தமிழில் ஊழ்வினை, ஊழியம் போன்ற சொற்களை கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா? அந்த சொற்களுக்கு எல்லாம் ஊழி என்னும் சொல் தான் அடிப்படை. என்னைப் பற்றி நானே சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையிலேயே எனக்கு என்னைப் பற்றி எந்த அபிப்பிராயமும் கிடையாது. ஆனால் நீங்கள் என்னை பற்றி பலவாறாக நினைத்து வைத்துள்ளீர்கள். இதில் உள்ள சில விஷயங்களை உங்களுக்கு தொகுத்து கூறப்போகிறேன்.

இந்த தொடரின் முன்னுரையிலேயே உங்கள் உலகத்தில் நடக்கும் எதற்கும் நான் காரணமல்ல என்று கூறியிருந்தேன் நினைவிருக்கிறதா? அது எப்படி என்பதை இங்கே கூறப்போகிறேன். நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு என்னை எப்படி நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை சுருக்கமாக கூறி விடுகிறேன்.

ஈர்ப்பு விசையும் காலமும்

பெருவெடிப்பு (BigBang) நிகழ்ந்த பின்பு அண்ட சராசரத்தில் பல்வேறு பொருட்களும் சிதறிக் கிடந்தன. அனைத்துப் பொருட்களுமே அணுத்துகள்களாகவும் சக்தி குவியல்களாகவும் இருந்தபோது ஈர்ப்புவிசை என்னும் முதல்மொழி உண்டானது என்று சென்ற அதிகாரத்தில் கூறினேன் அல்லவா? அந்த ஈர்ப்பு விசையின் மூலமாக மட்டுமே காலமாகிய என்னை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். ஈர்ப்பு விசையால் இரண்டு விஷயங்கள் நடக்கின்றன. 1. சுழற்சி 2. ஒன்றிணைதல்.

முதலாவதாக, பெரிய (அதிக நிறையுள்ள) பொருட்களை சுற்றி சிறிய (குறைந்த நிறையுள்ள)பொருட்கள் சுற்றி வர ஆரம்பிக்கும். நிலை தடுமாறாமல் சுற்றும் சிறிய பொருட்கள் எப்போதுமே சுற்றிக் கொண்டே தான் இருக்கும். இதற்கு உதாரணமாக அனைத்து அணுக்களையும் எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு அணுவுக்குள்ளும் உள்ள கருவானது(nucleus) அதிக அடர்த்தி மற்றும் எடை உள்ளதாகும். அந்தக் கருவை, குறைந்த எடை உள்ள எதிர்மின்னிகளின் மேகம் (Electron cloud)  நிலை தடுமாறாமல் எப்போதும் சுற்றிக் கொண்டே தான் இருக்கும். சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும் பூமிக்கும், பால்வெளியை சுற்றிக் கொண்டிருக்கும் சூரிய குடும்பத்திற்கும், விண்மீன் பேரடையை (Galaxy) சுற்றிக் கொண்டிருக்கும் பால்வெளிக்கும், அண்டசராசரத்தை சுற்றிக்கொண்டிருக்கும் விண்மீன் பேரடைகளுக்கும்  இதே விதிதான். 

இரண்டாவதாக, ஒரே நிலையில் இல்லாமல், இரண்டு பொருட்கள் இழுத்துக் கொண்டால், சிறிய பொருளானது பெரிய பொருளுடன் சேர்ந்து இணைந்து கொள்ளும். இதனை எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஒரு பந்தை வானத்தை நோக்கி எறிந்து பாருங்கள். சிறிது நேரத்திலேயே அது பூமிக்கு மீண்டும் வந்து தரையோடு ஒட்டிக் கொள்கிறது அல்லவா? காரணம் என்னவென்றால்,  பந்தில் நீங்கள் கொடுக்கும் விசை, தொடர்ந்து ஒரே நிலையில் இருப்பதில்லை. நீங்கள் எறிந்த பொழுது அதிக விசை உள்ள பந்து, கொஞ்சம் கொஞ்சமாக அந்த விசையை இழந்து பூமியில் விழுந்து விடுகிறது. அந்த விசை குறையாமல் பார்த்து கொண்டால், பந்து பூமியை தொடர்ந்து சுற்றிக் கொண்டே தான் இருக்கும். நீங்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் இவ்வாறுதான் பூமியில் விழாமல் செயல்படுகிறது. சரி. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் காலத்துக்கும் என்ன சம்பந்தம்? உங்களைப் பொறுத்த வரையில், இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமே காலமாகும். உதாரணமாக, உங்கள் உலகில் பல்லாயிரம் ஆண்டுகளாக காலத்தை அளப்பதற்கு மணல் கடிகாரத்தை பயன்படுத்தினீர்கள் அல்லவா? அந்த கடிகாரத்தில் மேலே உள்ள மணல் கீழே பூமியுடன் ஒன்றிணைவதற்காக முயற்சி செய்யும் நிகழ்வுதான் உங்களுடைய நேரத்தின் அளவை. நீங்கள் பயன்படுத்தும் நவீன கடிகாரங்கள் கூட மணல் மற்றும் ஒன்றிணையும் விதியை பயன்படுத்தித்தான் வேலை செய்கிறது.  அது எப்படி என்று கூறுகிறேன் கேளுங்கள்.

அணுக்களின் அதிர்வு

மணல் கடிகாரம் செய்வதற்கு இரண்டு பொருட்கள் தேவைப்படுகிறது. ஒன்று மணல், இரண்டாவதாக பூமி.  பூமியைவிட மணல் மிகவும் சிறியதாக இருப்பதால் மணல் பூமியின் மீது ஒன்றிணைக்கிறது. மணல்துகள் பூமியின் மீது வந்து ஒன்றிணையும் கால அளவு எப்பொழுதுமே ஒரே வேகத்தில் நடப்பதால்தான் உங்களால் காலத்தை முறையாக அளக்க முடிகிறது. பின்பு மணலுக்கு பதிலாக பெண்டுலம் போன்ற கருவிகளை பயன்படுத்தி அளந்து வந்தீர்கள். பெண்டுலமும் இதே ஈர்ப்பு விசையால் வேலை செய்கிறது. ஆனால் பெண்டுலம் மற்றும் மணல் கடிகாரத்தில் உள்ள பெரிய பிரச்சனை என்ன தெரியுமா? இவை அனைத்தும் அளவில் மிகப் பெரியதாக உள்ளன. உங்களுக்கு இதனை அளவில் மிகச் சிறியதாக இருக்க வேண்டுமென்ற யோசனை எப்போதுமே இருந்தது. பூமியையும் மணலையும் பயன்படுத்துவதற்கு பதிலாக, மணலையும் அதைவிட மிகவும் சிறியதான ஒரு பொருளையும் பயன்படுத்தி நீங்கள் கண்டுபிடித்தது தான் கைக்கடிகாரம். ஆம். உங்கள் கைக்கடிகாரம் மணலின் சுத்திகரிக்கப்பட்ட வடிவமான குவாட்ஸ் (Quartz) எனும் தாதுப்பொருளால் தான் செயல்படுகிறது. அதனால் தான் நீங்கள் பயன்படுத்தும் அதிகப்படியான கடிகாரங்களில் குவாட்ஸ் என்று எழுதியுள்ளார்கள். 

பூமியில் ஒரு மணல் துகள் விழுந்தால் அதனால் ஒரு சிறிய அதிர்வு ஒன்று ஏற்படும். கற்பனை செய்வதற்கு கடினமாக இருந்தால் ஒரு பந்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கையில் இருந்த பந்தைக் கீழே போட்டால் அது பூமியில் படும் பொழுது ஒரு அதிர்வை உங்களால் எளிதாக உணர முடியும். அந்த அதிர்வின் கால அளவு எப்பொழுதும் ஒரே மாதிரி தான் இருக்கும். அதேபோல ஒரு மண்துகள்(Quartz) மீது எதிர்மின்னியை(Electron) மோத விட்டால், அதிர்வின் கால அளவும் ஒரே மாதிரி தான் இருக்கும். அதனால் மண்துகள் மீது மின்சாரத்தை செலுத்தி, அது 32768 முறை அதிர்ந்தால் ஒரு நொடி என்று நீங்கள் கணக்கில் கொள்கிறீர்கள். நீங்கள் பயன்படுத்தும் அனேகமான கடிகாரங்கள் இவ்வாறுதான் வேலை செய்கிறது. உங்கள் விஞ்ஞானிகளுக்கு ஒரு நொடியை 32768 முறை பிரித்தால் கூட சில இடங்களில் கணக்குப் பிழை ஏற்பட்டது. அதனால் Cesium 133 அணுக்களில் ஏற்படும் அதிர்வுகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். Cesium 133 அணு 9,192,631,770 முறை அதிர்ந்தால் அது ஒரு நொடி என்கிற கணக்கை உங்கள் விஞ்ஞானிகள் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த உயர் துல்லியமான Cesium 133 கடிகாரத்தை, அணுக் கடிகாரம் (Atomic clock) என்று கூறுகிறார்கள். Cellphoneல் உள்ள GPS கருவி, வானில் உள்ள GPS செயற்கைக்கோளில் உள்ள அணுக் கடிகாரத்தின் உதவியால் தான் வேலை செய்கிறது.

காலத்தை நிறுத்த முடியுமா?

மண்துகள் மீது எதிர்மின்னி மோதினால் ஏற்படும் அதிர்வுதான் காலத்தின் அளவை என்று கூறினேன். அப்படியானால், அந்த அதிர்வை முற்றிலுமாக நிறுத்திவிட்டால் காலம் என்பது நின்று விடுமா? உங்கள் வீட்டில் இன்று உணவு சமைத்து உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த உணவு மீந்து விட்டால் என்ன செய்வீர்கள்? குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து அடுத்த நாள் பயன்படுத்துவீர்கள் அல்லவா? காரணம் என்னவென்றால் நீங்கள் ஒரு பொருளை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கும்பொழுது, அதன் வெப்பநிலை குறைந்து உணவுப் பொருள் சீக்கிரம் கெடாமல் பாதுகாக்கிறது.  உணவில் உள்ள நுண்ணுயிர்களை வளரவிடாமல் குறைந்த வெப்பமானது அதன் காலத்தை நிறுத்தி விடுகிறது. 0 டிகிரி செல்சியஸ் வெப்பம் என்பது உயிர்களை வளர விடாமல் நிறுத்தி விடுகிறது. ஆனால் பொருட்களின் அதிர்வு அப்படியே தான் இருக்கும். அனைத்து அணுக்களின் அதிர்வையும் நிறுத்த வேண்டும் என்றால் அதற்கு எவ்வளவு குறைந்த வெப்பம் தேவைப்படும் தெரியுமா? -273 டிகிரி செல்சியஸ்! இந்தக் குளிர் நிலையில், அனைத்து மூலக்கூறுகளும் அசைவற்று ஜடப்பொருள் ஆக மாறிவிடும். எப்பொழுது அதிர்வுகள் இன்றி ஒரு பொருள் ஜடமாக மாறுகிறதோ, அதற்கு காலம் என்றும் கணக்கு முற்றிலுமாக நின்றுவிடும். இதனடிப்படையில், உங்கள் உலகில் சில பேர் இறந்த பின்பு உடலை -273 டிகிரி உறைநிலை பெட்டியில் வைத்து அடக்கம் செய்கிறார்கள். திரவ நைட்ரஜனின் உதவியால் செய்யப்படும் இந்த முறைக்கு பெயர் Cryopreservation. அவ்வாறு செய்வதனால் இறந்த உடலில் ஏற்படும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் உயிருள்ள உடல் போலவே பலகாலம் இருக்கும். என்றாவது ஒருநாள் உங்கள் மருத்துவ துறை வளர்ச்சி பெற்று உயிர்த்து எழ முடியும் என்ற நம்பிக்கையுடன் இவ்வாறு அவர்கள் செய்கிறார்கள். 

-273 டிகிரி செல்சியஸ் குளிரால் என்னை(காலத்தை) முழுவதுமாக நிறுத்தி வைக்க முடியுமா? பொருட்களை ஒன்றிணைக்கும் ஈர்ப்பு விசையால் அளக்க முடிந்த காலம், அதன் உதவி கொண்டு உருவாக்கப்பட்ட கடிகாரம் முதலியவற்றை கூறினேன். சுழற்சியால் ஏற்படும் காலத்தைப் பற்றி இன்னும் கூறவில்லை. தெரிந்து கொள்ள வேண்டுமா? அடுத்த பகுதியில் கூறுகிறேன்.

(நான் சுழல்வேன்)

இந்த தொடரின் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -