இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
நான்தான் காலம் பேசுகிறேன். அசை அதிகாரத்தில் அசைவுகளின் வரலாற்றையும் அதன் விளைவாக உருவாகிய நிகழ்வுகளைப் பற்றியும் விளக்கமாக பார்த்தோம். அசைவுகளால் உங்கள் உடலுக்குள் ஏற்படும் விந்தையான நிகழ்வு என்னவென்று தெரியுமா? அதனைக் கூறிவிட்டு இந்த அதிகாரத்தை இந்த பகுதியுடன் நிறைவு செய்கிறேன். அசைவுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொள்வதற்கு முன்பு அசைவுக்கும் ஜடத்தன்மைக்கும் என்ன தொடர்பு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பகுதிக்குள் செல்லலாமா?
அசைவும் ஜடத்தன்மையும்
எந்த ஒரு பொருளும் அசையாமல் இருந்தால் அதனை ஜடப்பொருள் என்று கூறுகிறீர்கள். அதேபோல் எந்த உயிரினம் அசையாமல் இருந்தால் அதனை ஜடப் தன்மை கொண்டதாக கருதுகிறீர்கள். அசைவும் ஜடத்தன்மையும் எதிர்ப்பதமாக உங்களுக்கு தோன்றினாலும் உண்மையில் இவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் போன்றது. ஒரு பொருள் ஜடமாக இருக்கும் பொழுதுதான் அசைவினால் கிடைக்கும் பலன்களை நன்கு புரிந்துகொள்ள முடியும். இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு ஒரு எடுத்துக்காட்டை கூறிவிடுகிறேன். மனிதன் ஆதிகாலத்தில் ஒரே இடத்தில் வேட்டையாடி சாப்பிடும் பொழுது நான் சென்ற பகுதியில் கூறியது போல விவசாயம் என்பது தோன்றவே இல்லை. ஆனால் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு புலம்பெயரும் பொழுதுதான் விதையிலிருந்து செடி எவ்வாறு உருவாகிறது என்பதை புரிந்து கொண்டு அதன் மூலமாக புலம்பெயராமல் குடிஅமர்வதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்தான். எந்த ஒரு உயிரினமும் தொடர்ந்து அசைத்துக் கொண்டே இருந்தாலும் அல்லது தொடர்ந்து ஜடமாக இருந்தாலும் அதன் பரிணாம வளர்ச்சி என்பது மிகக் குறைவாகத்தான் இருந்து வந்துள்ளது.
நீங்கள் ஈசல் மற்றும் விட்டில் பூச்சிகளை பார்த்திருப்பீர்கள். பிறந்தது முதலே அது தொடர்ந்து பறந்து கொண்டே தான் இருக்கும். சில மணி நேரங்களே உயிர்ப்புடன் வாழும் அந்த பூச்சிகள் மடிந்து விழும் பொழுதுதான் ஜடமாக மாறும். ஆனால் மனிதன், ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் தனது வாழ்நாளில் ஒரு பெரும் பகுதி அசைந்து கொண்டு தனக்குத் தேவையான உணவை சேகரித்து உட்கொள்வதற்கு முயற்சி செய்கிறது. பின்பு ஆழ்நிலை உறக்கத்தில் உண்ட உணவின் மூலமாக தனது உடலை நன்கு வளர்த்துக் கொள்கிறது. ஒரு மனிதன் வாழ்நாளில் தூக்கம் என்பது இல்லாமல் தொடர்ந்து விழிப்புடன் இருந்தால் அவனுடைய வாழ்நாள் மிகவும் சொற்பமானது தான். உடல் பரிணாம வளர்ச்சி அடைவதற்கு மிகவும் சிரமப்படும். இங்கே அசைவு தன்மைக்கு ஜட தன்மை மிகவும் உதவுகிறது. இதில் என்ன பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என்று உங்களுக்கு தோன்றலாம். அனைத்து மிருகங்களின் வாழ்விலும் தினமும் நடக்கும் இயற்கையான விஷயம்தான் இது? இதிலுள்ள விந்தையான உண்மை என்னவென்றால் உடலளவில் எளிதாக புரிந்து கொள்ளும் இந்த விஷயத்தை மனதளவில் புரிந்துகொள்வதற்கு மனிதன் மறந்து போனதுதான்! அதனை விளக்கமாக பார்க்கலாமா?
அசைவும் மனதும்
உணவு, செல்வம் போன்ற அனைத்திற்கும் மனிதன் தொடர்ந்து ஓடியாடி செயல்பட வேண்டியிருக்கிறது. தான் உழைத்து சேகரித்த செல்வத்தை மகிழ்வுடன் பயன்படுத்துவதற்கு மனம் என்ற ஒன்று தேவைப்படுகிறது. மனம் என்பது உடலுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு உணரும் கருவியாக இருந்தாலும் உடல் அலைந்து கொண்டே இருந்தால் அதனை உணர முடியாது. ஒரு குளத்தில் நீர் தெளிவாக அசையாமல் இருக்கும் பொழுது அதனால் அடி ஆழத்தை எளிதாக காண முடியும். ஆனால் நீர்ப்பரப்பில் அலைகள் ஏற்படுமேயானால் அடிஆழத்ததையும் காண முடியாது நீரும் கலங்கல் ஆகிவிடும். உங்கள் மனம் வேலை செய்வதும் இதேபோல்தான். அதே சமயத்தில் உடல் அசைந்து கொண்டே இருப்பதும் மிகவும் இன்றியமையாதது. ஒரு நதி நீர் நகர்ந்து கொண்டே இருந்தால் மட்டும்தான் பாசி மற்றும் அழுக்கு சேராமல் தூய்மையாக இருக்க முடியும். உள்ளத்தில் அழுக்கு சேராமல் இருப்பதற்கும் உடலின் அசைவு மிகவும் முக்கியமானது. இந்த அசைவை மேலும் வலுப்படுத்துவதற்காக அதன் அசைவை சற்று நிறுத்த முயற்சி செய்ய முடியும். உடல் லாகவமாக இயங்குவதற்கு தூக்கம் எவ்வளவு முக்கியமானதோ அதுபோலவே உடலின் புத்துணர்வை மேம்படுத்துவதற்காக அதற்கு ஓய்வு கொடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு செய்யும் பொழுது உடலுக்குள் ஒளிந்திருக்கும் மனது எவ்வளவு வேகமாக இயங்குகிறது என்பதை நீங்களே கண்காணிக்க முடியும். சுருக்கமாகச் சொல்லப்போனால், நீங்கள் உங்கள் வாழ்வில் சில சமயங்களில் நதி போலவும் சில சமயங்களில் தெள்ளிய குளம் போலவும் இருந்தால்தான் வாழ்வின் அடிப்படையே உங்களால் முழுமையாக உணர முடியும்.
நீங்கள் ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கும் பொழுது மனம் என்ற ஒன்று இருப்பதை உணர மாட்டீர்கள் அல்லவா? அதுபோலவே மனம் தொடர்ந்து அலைபாய்ந்து கொண்டே இருக்கும் பொழுது மனதிற்கு அடியில் புதைந்திருக்கும் உயிர்களின் அடிப்படை தத்துவத்தை உங்களால் உணர்ந்து கொள்ள முடியாது. அசைந்து கொண்டே இருக்கும் மனதை கட்டுப்படுத்த தெரியாதவர்கள், உடல் மற்றும் மனம் தவிர உயிர்களிடத்தில் வேறு எதுவுமே இல்லை என்ற முடிவில் திண்ணமாக இருப்பார்கள். உடல் மற்றும் மனதிற்கு பின்னால் பல்வேறு படிநிலைகளில் உயிர்களின் கூறு அமைந்துள்ளது என்று உணர்ந்த உலகின் பல்வேறு அறிஞர்களும் அதனை அனைவரும் அறிந்து கொள்வதற்காக வழி முறைகளை உருவாக்கினார்கள். மனித சமுதாயம் உலகில் தோன்றிய அனைத்து இடங்களிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இது பொதுவாக நடந்துகொண்டிருந்தது. அவற்றில் சில பழக்கவழக்கங்கள் மட்டும் மிகவும் பிரபலமடைந்து பின்பு அது மதம் என்ற பெயரும் பெற்றது. ஆனால் மனதின் அடி ஆழத்தை உணர்வதற்கான இந்த வழிமுறையை வைத்தே அதனை மறந்து போக வைக்கும் அளவிற்கு சண்டைகளையும் பூசல்களும் உருவாக்கியதுதான் விந்தையிலும் விந்தை யான விஷயம்!
உடல் என்பது ஒரு இயந்திரத்தைப் போன்று எவ்வாறு உணவு மற்றும் மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து ஒரு இயக்க சக்தியாக மாறுகிறது என்பதை நான் முந்தைய அதிகாரங்களில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் அவற்றுக்கு பின்னால் கூட மனமென்னும் இயக்கம் தொடர்ந்து நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த சிக்கலான கட்டமைப்பைக் நீங்கள் உணர்ந்து கொள்வதற்கு உங்களுக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் தான் பதில் தெரிய வேண்டும். எப்பொழுது அசைய வேண்டும் மற்றும் எப்போது அசையாமல் இருக்க வேண்டும். இது இரண்டுமே சரிவிகிதத்தில் இருந்தால் மட்டும்தான் உங்களுக்கு உயிர் எனும் உண்மையைக் கூட புரிந்துகொள்ள முடியும். பின்பு அதன் வழியாக அண்டத்தின் அனைத்து உண்மைகளையும் தத்துவங்களையும் இயற்கையாகவே உங்களால் அறிந்துகொள்ள முடியும். முயன்று பாருங்களேன்.
கடந்த ஐந்து பகுதிகளாக கூறிவந்த அசை அதிகாரத்தை இங்கே நிறைவு செய்து வேறொரு புதிய அதிகாரத்துடன் உங்களைத் தொடர்ந்து சந்திப்பேன்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.
எப்பொழுது அசைய வேண்டும் மற்றும் எப்போது அசையாமல் இருக்க வேண்டும்? ?
?