நான்காம் பரிமாணம் – 36

8. அசை அதிகாரம் - 1ஆம் பகுதி

- Advertisement -


இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். சுவையின் பல்வேறு குணங்களை சென்ற அதிகாரத்தில் கூறிய நான் இன்று அசை அதிகாரம் என்னும் புதிய பகுதியை தொடங்குகிறேன். அசைவு என்னும் சொல்லின் மூலம்தான் அசை என்பதாகும். இந்த மொத்த பிரபஞ்சமே அசைவினால் உருவாகிய ஒரு பொருள் தான். அப்படிப்பட்ட அசைவை பற்றி இந்த அதிகாரத்தில் தெரிந்து கொள்வோமா?

அசைவின் தொடக்கம்

காலங்களில் ஏற்படும் பருவநிலை மாற்றம், இரவு பகல் சுழற்சி, உங்கள் வாழ்வில் ஏற்படும் வயோதிகம் போன்ற அனைத்து விதமான மாற்றங்களும் எதனால் நிகழ்கிறது என்று நீங்கள் யோசித்து பார்த்ததுண்டா? அப்படி யோசித்து பார்த்தால் அவை அனைத்திற்கும் அடிப்படையாக ஒரே ஒரு விஷயம் தான் இருக்கும். அதுதான் அசைவு. பிரபஞ்சத்தில் ஏற்படும் அனைத்து மாற்றங்களுக்கும் மூல காரணம் இதுதான். பூமி சூரியனை சுற்றி நகர்ந்து கொண்டே இருப்பதனால் நீங்கள் காலநிலை மாற்றத்தை உணர்கிறீர்கள். அதுபோலவே பூமி தன்னுடைய அச்சில் சுழன்று கொண்டு நகர்வதால் இரவு பகலை பார்க்கிறீர்கள். உடலில் உள்ள அவயங்கள் நகரும் விதத்தை வைத்து வயோதிகத்தை தெரிந்து கொள்கிறீர்கள். இவை அனைத்தும் அசைந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா? அசைவு எதனால் உண்டாகிறது? இதற்கு தொடக்கமும் முடிவும் எங்கே? அதைத் தெரிந்துகொள்ள இந்தப் பிரபஞ்சத்தின் தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

ஒரு பொருள் அசையாமல் இருக்க வேண்டுமென்றால் அந்தப் பொருளை உருவாக்கிய அனைத்து அணுக்களும் அசைவற்று இருக்க வேண்டும். ஒரு அணு எப்பொழுது அசைவற்று இருக்கும் தெரியுமா? -273 டிகிரி குளிர் நிலையில் முற்றிலும் செயலற்றுப் போகும். பிரபஞ்சத்தில் உள்ள மொத்த அணுக்களும் இப்படி இருந்தால் இயக்கம் என்ற ஒன்று எங்குமே இருக்காது. ஒலி, ஒளி, உயிர் போன்ற எதுவுமே இல்லாத ஜட நிலையில் பிரபஞ்சம் இருப்பதைத்தான் விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் தொடக்கம் என்று வர்ணிக்கிறார்கள். பண்டைய மதங்களில் இந்த நிலைமையை பிரபஞ்சத்தின் முட்டை வடிவம் என்று கூட கூறுகிறார்கள். எதுவுமே இயக்கமற்று இருக்கும்பொழுது முதல் இயக்கம் எவ்வாறு உருவானது? 

ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில் ஒரு விசை அல்லது பொருள் உருவாகுவதை புரிந்துகொள்வதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டை கூறிவிடுகிறேன். ஒன்றுமில்லாததை  பூஜ்ஜியம் என்று வைத்துக் கொள்ளுங்கள். பூஜ்ஜியத்தை இரண்டாக பிரித்தால் பூஜ்ஜியம் தான் கிடைக்கும். ஆனால் இதனை பிரிப்பதற்கு வேறு ஒரு வழியும் உள்ளது. இதனை +1 மற்றும் -1 என்னும் இரண்டு எண்கள் ஆக கூட இருக்கலாம். இவை இரண்டும் ஒன்று சேர்ந்தால் மீண்டும் பூஜ்ஜியம் வந்துவிடும் அல்லவா? இதுபோன்றே ஒன்றுமில்லாத வெளியிலிருந்து பிரிந்த இரு வேறு விஷயங்கள்தான் பொருட்கள்(Matter) மற்றும் எதிர்மறை பொருட்கள்(Antimatter) ஆகும். இந்த உருவாக்கம் நடந்த உடனேயே பிரபஞ்சத்தின் கருமுட்டையானது முழுவதுமாக வெடித்து சிதற ஆரம்பித்தது. உங்களைப் பொறுத்தவரையில் இதுதான் பிரபஞ்சத்தின் முதல் அசைவு. 

வெடித்து சிதறிய பொருட்களானது விண்வெளியில் சிறுசிறு திவலைகளாக ஒதுங்கி விண்மீன் பேரடை (Galaxy) ஆக மாறியது. இவற்றில் இருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் கூட ஒருவிதமான அசைவுதான். தண்ணீர் உள்ள குளத்தில் ஒரு சிறு கல்லை எரிந்தால் அது விழுந்த பகுதியை சுற்றி அலைகள் வெளிப்படும் அல்லவா? அதுபோலவே விண்மீன் கூட்டங்களுக்குள் ஏற்படும் உரசலின் பொழுது ஏற்படும் அலைதான் ஒளியாக வெளிப்படுகிறது. இதிலிருந்தே பிரபஞ்சமும், விண்மீன்களும் அங்கே தெரியும் ஒளியும் கூட ஒருவித அசைவு தான் என்று உங்களுக்குப் புரியலாம். ஆனால் இது மட்டும் அசைவு கிடையாது. உங்கள் வாழ்வுக்கு இன்றியமையாததாக நீங்கள் கருதும் பல்வேறு விஷயங்களும் ஒருவித அசைவு தான் என்பதனை அடுத்ததாக விளக்கப் போகிறேன்.

அசைவும் உயிரும்

எந்த ஒரு உயிரினமும் உயிர்ப்புடன் இருப்பதை தெரிந்து கொள்வதற்கு அடிப்படையாக நீங்கள் பார்ப்பது அதன் அசைவை வைத்துத்தான். நவீன விஞ்ஞானத்தை பின்பற்றும் மருத்துவர்கள் கூட மனிதனின் இறப்பை கண்டுபிடிப்பதற்கு கண்களின் அசைவற்ற தன்மையை வைத்துத்தான் முடிவு செய்கிறார்கள். ஒரே இடத்தில் வேரூன்றி இருக்கும் மரங்கள் கூட மேல்நோக்கி வளர்ந்து அசைந்து உயிர் வாழ்கிறது. அப்படியானால் அசைவுக்கும் உயிருக்கும் என்ன சம்பந்தம்?  இங்கே சம்பந்தம் என்பதைவிட இவை இரண்டும் ஒன்றுதான் என்று கூறினால் சரியாக இருக்கும். ஆம். அசைவு எனும் நிகழ்வுக்கு நீங்கள் வைத்த மற்றொரு பெயர்தான் உயிர்! இதனைப் பற்றி இன்னும் விளக்கமாக அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -