நான்காம் பரிமாணம் – 25

5. அனல் அதிகாரம் - 5ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன்.அனல் அதிகாரத்தில் வெப்பத்தைப் பற்றிய பல்வேறு தகவல்களைச் சொல்லிக்கொண்டு வந்த நான் இந்தப் பகுதியுடன் அனல் அதிகாரத்தை நிறைவு செய்யப் போகிறேன். இதுவரை வெளியுலகில் வெப்பத்தினால் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளையும் மாற்றங்களையும் கூறினேன். ஆனால் வெப்பத்தின் முக்கிய பங்கு உங்கள் உடம்பிற்கு உள்ளேயும் இருக்கின்றது. அதைப் பற்றி இந்தப் பகுதியில் பார்ப்போம்.

வெப்பமும் உடலும்

இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு விதத்தில் அதிர்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு இந்தத் தொடரைப் படித்து இருந்தால் நன்கு புரிந்திருக்கும். அந்த அதிர்வு -273 டிகிரி குளிரில் மொத்தமாக நின்றுவிடும் என்றும் வெப்பம் அதிகமாக அதிகமாக அதிர்வும் அதிகமாகுமென்று பார்த்துள்ளோம். ஒரே ஒரு அணு கூட வெப்பத்தினால் அதிர்வு அடையும் பொழுது பல கோடி அணுக்களின் கூட்டமாக இருக்கும் உங்கள் உடல் வெளிப்படுத்தும் அதிர்வின் ஒட்டுமொத்த வெளிப்பாடுதான் உங்கள் உயிரின் அடிப்படை. உதாரணத்திற்கு ஒரு சிறிய செங்கலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரே ஒரு செங்கலின் மூலமாக எந்த ஒரு கட்டிடத்தின் முழுமையான செயல்பாட்டையும் செய்ய முடியாது. ஆனால் அது போன்ற பல்லாயிரம் செங்கல்கள் ஒன்று சேரும் பொழுது உங்களுக்கு பிடித்தமான எந்த ஒரு கட்டிடத்தையும் எழுப்ப முடியும் அல்லவா? ஒவ்வொரு கட்டிடத்திற்கும் அதன் வடிவமைப்பிற்கு ஏற்றவாறு சில குணாதிசயங்கள் இருக்கும். அதுபோலவே, பல கோடி செல்களின் கட்டமைப்பால் செய்யப்பட்ட ஒருவிதமான வடிவமைப்பு தான் உங்கள் உடல். இதில் ஏற்படும் சிறு மாற்றம் கூட அதன் குணத்திலும் மாறுதலை உண்டாக்கும். இதன் குணங்கள் வெளிப்படுவதற்குத் தேவையான அடிப்படை சக்தி வெப்பம் தான். நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள சக்தி எப்பொழுதுமே முழுவதுமாக உங்கள் உடலில் போய் சேர்வது கிடையாது. அதில் பாதிக்கும் மேற்பட்ட சக்தி வெப்பமாக மாறி உங்கள் உடம்பை சீரான வெப்ப நிலையில் வைத்திருக்கும். உங்கள் உடல் சீராக இயங்குவதற்கு இந்த வெப்பநிலை எப்பொழுதுமே இருந்தாக வேண்டும். உடலுக்குள் தேவையற்ற பொருட்கள் நுழைந்துவிட்டால் உராய்வு அதிகமாகி அதிகரிக்கும் வெப்பத்தை தான் காய்ச்சல் என்கிறீர்கள். அதே சமயத்தில், உடலுக்கு தேவையான எரிபொருள் இல்லாமல் நீங்கள் பட்டினியாக இருந்தால் உடலின் வெப்பம் குறைந்து விடும். இந்த வெப்ப குறைபாட்டை நீக்குவதற்காக, உடல் தன்னுடைய தசைகளை வேகமாக உலுக்கி உடலின் உள்ளே உள்ள செல்களில் உராய்வை ஏற்படுத்தி வெப்பத்தை அதிகரிக்க முயற்சி செய்யும். இந்த செயலுக்கு பெயர்தான் உடல்நடுக்கம். கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் காரணம் இதுதான். ஒருவர் தொடர்ச்சியாக மதுபானம் அருந்துவதால் அவரது உடல் பழக்கப்பட்டு அதனை வைத்து உஷ்ணத்தை தொடர்ச்சியாக உண்டாக்கிக் கொள்ளும். திடீரென்று அவர் மதுபானம் அருந்துவதை நிறுத்தி விட்டால் அவர் கைகள் நடுங்குவதற்கும் காரணம் கூட அந்த வெப்பக் குறைபாடு தான். இப்பொழுது புரிகிறதா உணவை விட உடல்சூடு உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று? ஒரு சில நொடிகள் இந்த சூடு குறைந்தால் கூட உடல் நடுங்க ஆரம்பித்து விடும். இப்படி வெப்பத்தை உண்டாக்குவதில் உங்கள் வயிற்றுக்கு ஒரு முக்கிய பங்கு எப்போதும் உண்டு. நீங்கள் சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதில் இருந்து அதனைக் கொண்டு போய் உடலின் மற்ற பகுதிகளில் சேர்ப்பதற்கு உங்கள் வயிற்றுப்பகுதி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால்தான் பண்டைய மருத்துவ முறைகளில் வயிற்றை ஜடராக்கினி (ஜடர் – வயிறு, அக்கினி – வெம்மை) என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வெப்பம் உங்கள் உடலில் தொடர்ந்து இருக்கும் வரைதான் உங்களுக்கு உயிர் இருப்பதாக கருதப்படுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் தன்னுள் இருக்கும் சக்தியை வெப்பமாக வெளிப்படுத்த முடியாத  இயலாமைக்குப் பெயர் தான் மரணம்.

நான் மனிதனை அடிப்படையாக வைத்து மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தும் இளஞ்சூட்டு ரத்தப் பிராணிகள் எனப்படும் சில வகை விலங்குகளுக்கு மட்டும்தான் பொருத்தம். இதைத் தவிர குளிர் ரத்தப் பிராணிகள் என்று ஒரு வகையும் உண்டு. மீன்கள் போன்ற பல்வேறு உயிரினங்கள் இந்த வகையைச் சேர்ந்தது தான். இவை அனைத்தும் வெளி உலகில் உள்ள வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு அதன் மூலம் உயிர் வாழ முயற்சி செய்கிறது. ஆனால் வெப்ப ரத்தப் பிராணிகள் உணவை உட்கொண்டு வெப்பத்தை வெளிவிடுகிறது. குளிர் ரத்தப் பிராணிகள் அதன் சுற்றுப் புறம் சற்று மாறினால் கூட ஒவ்வாமை ஏற்பட்டு இறந்து விடும். ஆனால் மனிதர்கள் போன்ற வெப்ப ரத்தம் உடையவர்களுக்கு எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உடலை சீரான வெப்பத்தில் உடலை வைத்துக் கொண்டு உயிர் வாழ முடிகிறது.

உடலுக்கு மட்டும் வெப்பம் அடிப்படை கிடையாது. உங்கள் மனதிற்கும் இது முழுவதும் பொருந்தும். சிலருக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும் என்று சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதற்கு ஒரு விஞ்ஞானபூர்வமான காரணம் உள்ளது. உங்களுக்கு எப்பொழுது எல்லாம் கோபம் வருகிறதோ, உங்கள் மூக்கின் மேற்பரப்பின் வெப்பம் சாதாரண அளவை விட சற்று அதிகமாகவே இருக்கும். உங்கள் இயல்பான நிலையில் மூக்கின் மேற்பரப்பில் இருக்கும் வெப்பத்தையும் நீங்கள் கோபப்படும் பொழுது இருக்கும் வெப்பத்தையும் அளவிட்டு பார்த்தால் நீங்கள் எவ்வளவு கோபப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை கூட கண்டுபிடிக்க முடியும். இங்கே கோபம் மட்டுமல்ல, பொய், அன்பு போன்ற பல்வேறு மனோபாவங்களையும் மூக்கின் மேல் உள்ள வெப்பம் வெளிப்படுத்துவதாக பல்வேறு ஆராய்ச்சிகளை உலகிலுள்ள விஞ்ஞானிகள் செய்துள்ளனர். ஒரு சிறிய வெப்பத்தை கண்காணிக்கும் கேமராவை உங்கள் முன்னால் நிறுத்தி வைத்து உங்களிடம் கேள்விகள் கேட்பதன் மூலமாக எது உண்மை எது பொய் என்பதை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். இப்படி உங்களுடைய மொத்த அந்தரங்கத்தையும் வாங்கிக்கொண்டு அதனை வைத்து உங்களை மிரட்டி அடிமையாக வைத்துக் கொள்வதற்கு ஒரு தனி மதமே (Scientology) உலகில் உள்ளது! மனதில் உள்ள உணர்வுகளுக்கும் வெப்பத்திற்கும் எவ்வளவு நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்வதற்காகத் தான் இதையெல்லாம் கூறினேன். ஒரு உணர்வால் உடலின் வெப்பநிலை மாறுகிறது என்றால் அந்த உணர்வை முழுவதுமாக நீங்கள் கட்டுப்படுத்த முடிந்தால் உங்கள் உடலை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் அல்லவா? அப்படி மனிதன் முயற்சி செய்து அதற்குண்டான வழிகளை தொகுத்து ஒரு நெறிமுறையை வகுக்க முயற்சி செய்ததற்கு பெயர்தான் மதம். இப்படிப்பட்ட நுட்பமான செயலை செய்வதற்காக மிகுந்த பயிற்சி தேவைப்படும். இதனை பல்வேறு வழிகளில் செய்ய முடியும் என்பதால் பல்வேறு மதங்களும் உண்டாக்கின. தனது உணர்வால் உடலை முழுவதுமாக கட்டுப்படுத்தி மேன்மையான நிலையில் வாழ்பவர்களை தான் நீங்கள் புனிதர் அல்லது கடவுள் என்று கூறுகிறீர்கள். இந்தப் பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கும்பொழுது ஒருவர் மற்றொருவரை தொடுவதால் கூட உடலின் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு அவர்களது முயற்சி தடைபட்டுப் போகும். இந்த வழிமுறைகள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டு அதன் மிச்சங்களை மட்டும் வைத்துக்கொண்டு பிரிவினைவாதம் செய்யும்பொழுது அதுவே தீண்டாமை ஆனது. அடிப்படையில் உணர்வை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட மதமே உணர்வை தூண்டி சண்டை போட வைக்கும் ஒரு கருவியாக மாறிப்போனது!

வெப்பம் என்பது நீங்கள் மிகவும் எளிதாக உணரக்கூடிய ஒரு சக்தி. நீங்கள் பார்க்கும் பார்வை கூட கண்கள் எனும் சிறு உறுப்பு மூலமாக உணரப்படுகிறது. ஆனால் வெப்பத்தை உணர்வதற்கு உங்கள் மொத்த உடலும் உதவி செய்யும். இந்தப் பிரபஞ்சத்தின் இயக்க சக்தியே வெப்பத்தின் வடிவமாகத் தான் உள்ளது. உங்கள் உடல் மற்றும் மன நோயை குணப்படுத்துவது முதல் விண்வெளியில் பறப்பது வரை வெப்பத்தின் உதவியால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். எளிமையாக உணர்ந்து கொள்ள முடிந்த இதனை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு உண்மையில் எந்த ஒரு பாடமும் அவசியமில்லை. உங்கள் உணர்வுகளை சற்று கூர்மையாக்கிக் கொள்வதன் மூலமாக அதனை நீங்களே புரிந்து கொள்ள முடியும். முயன்று பாருங்கள். அனல் அதிகாரத்தை இங்கே நிறைவு செய்து வேறொரு புதிய அதிகாரத்துடன் உங்களைத் தொடர்ந்து சந்திப்பேன்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -