நான்காம் பரிமாணம் – 20

4. ஒளி அதிகாரம் - 5ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். ஒளி அதிகாரத்தில் கடந்த நான்கு பகுதிகளாக பல்வேறு விஷயங்களைக் கூறிவிட்டேன். ஒளி என்றாலே கண்களுக்குப் புலனாவது என்றில்லாமல் கண்களுக்குத் தெரியாமல் கூட உண்டு என்று கடந்த பகுதியில் கூற ஆரம்பித்திருந்தேன். இன்று ஒளியின் கண்களுக்குப் புலப்படாத பல்வேறு விஷயங்களை கூறிவிட்டு ஒளி அதிகாரத்தை நிறைவு செய்கிறேன்.

கண்ணுக்குத் தெரியாத ஒளி

அகச்சிவப்புக் கதிர்களும் புற ஊதாக் கதிர்களும் மனிதர்களின் கண்களுக்கு புலப்படாது என்றும் ஆனால் பல்வேறு மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இதனை உணரும் சக்தி உள்ளது என்று கூறியிருந்தேன் அல்லவா? உங்கள் கண்களுக்கு தெரியும் ஒளி சுமார் 400 முதல் 700 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட அலை வடிவம். 780 முதல் ஆயிரம் நேனோ மீட்டர் கொண்ட அலை வடிவம் அகச்சிவப்பு கதிர்கள் எனப்படுகிறது. அதுபோலவே 100 முதல் 400 நானோமீட்டர் உள்ள அலைகள் புறஊதாக் கதிர்கள் ஆகிறது. இந்த எண்களுக்கு எவ்வாறு தொடக்கமும் முடிவும் இல்லாமல் நீண்டு கொண்டே போகிறதோ அதுபோலவே ஒளியின் வகைகளுக்கும் முடிவே இல்லாமல் சென்றுகொண்டே இருக்கும். உங்கள் கண்களால் பார்க்கமுடியும் ஒளி எவ்வளவு குறைவானது என்று இதன் மூலம் புரிந்து கொள்ளுங்கள். அப்படியானால், ஒரு பொருள்  கண்ணுக்குத் தெரியாத அனைத்து ஒளியை எப்பொழுதும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறதா? இல்லை. எந்த ஒரு பொருளும் (உங்கள் சூரியன் உட்பட) எல்லாவிதமான ஒளியையும் எப்பொழுதும் வெளிப்படுத்துவதில்லை. இந்த ஒளி மாற்றம்தான் அந்தப் பொருளின் குண நலன்களை வெளிப்படுத்தும் தருணமாக உள்ளது.  சூரியன், 12 வருடங்களுக்கு ஒருமுறை தனது ஒளியில் சில மாற்றங்களை காண்பிக்கிறது. இந்த மாற்றங்களை வைத்து தான் சூரியனில் உள்ள மின்காந்த அலை மாற்றத்தை நீங்கள் கண்டுபிடித்தீர்கள். உங்கள் கண்களால் பார்க்க முடியாது என்பதால் தொலைநோக்கிகளையும் வேறு சில கருவிகளையும் உண்டாக்கி அதன் மூலமாக மேலும் விதவிதமான ஒளியை பார்ப்பதற்கான சாதனங்களையும் உருவாக்கிக் கொண்டீர்கள். ஆனால் அந்த கருவிகளாலும் அனைத்து ஒளியையும் பார்க்க முடியாது. அதற்கு கூட ஒரு குறிப்பிட்ட அலைக்கற்றையை தான் பார்க்க முடியும். இவ்வாறு உங்களால் பார்க்க முடிந்த அல்லது உங்களால் உருவாக்கப்பட்ட கருவிகளால் உணர முடிந்த ஒளி அனைத்தையும் சேர்த்ததுதான் மின்காந்த அலைக்கற்றை (Electro magnetic spectrum). இந்த மின்காந்த அலைக்கற்றை அனைத்தையும் மொத்தமாக வெளிப்படுத்தக்கூடிய பொருள் இந்த பிரபஞ்சத்தில் உண்டு. அதற்குப் பெயர்தான் குவாசர்(Quasar). இதன் அபரிமித ஒளி வீச்சால் மிகவும் அதிகமான தொலைவில் இருந்தால் கூட வானத்தில் இதனை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இதன் ஒளி எவ்வளோ அபரிமிதமானது தெரியுமா? இதைப் போன்ற ஒளி, சூரிய குடும்பத்தின் (Solar system) அருகில் சிறு அளவு வெளிப்பட்டால் கூட சூரிய குடும்பம் மொத்தமாக அழிந்து விடும். நீங்கள் அனைவரும் பூமியில் உயிர் வாழ்ந்து வருவதற்கு ஒரு முக்கிய காரணம் எந்த ஒரு குவாசரும் சூரிய குடும்பத்திற்கு அருகாமையில் இல்லை. உங்களுக்கு மிக அருகிலிருக்கும் குவாசருக்கு நீங்கள் ஒளி வேகத்தில் சென்றால் கூட சுமார் 170 கோடி ஆண்டுகள் பயணம் தேவைப்படும்.

 உங்களால் எண்ண முடியாத அளவுக்கு கண்ணுக்குத் தெரியாத ஒளி இருந்தால்கூட, பயன் தரக்கூடிய சில வகை ஒளியை நீங்கள் அடையாளம் கண்டுபிடித்து வைத்துள்ளீர்கள். இவற்றில் முக்கியமானது எக்ஸ்-ரே(X-ray) மற்றும் காமா-ரே(Gamma ray) போன்றவை. எக்ஸ்-ரே உதவியால்தான் உங்களால் உடலினுள்ளே கூட ஊடுருவி பார்க்க முடிகிறது. மருத்துவத்திற்கு இது பயனுள்ளதாக இருக்கிறது. காமா-ரே மூலமாக விண்வெளியில் உள்ள பொருட்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. கண்ணுக்குத் தெரியாத ஒளியின் மூலமாக என்ன செய்ய முடியும் என்பது இப்போதுவரை மனித குலத்தின் முக்கியமான ஆராய்ச்சியாக இருக்கிறது. இந்த ஆராய்ச்சி, ஒரு பெரிய வைக்கோல் போரில் ஊசியை தேடுவதற்கு சமமானது. ஏனென்றால் கண்ணுக்குத் தெரியும் ஒளியின் பயன்பாட்டையே இன்னும் மனிதனால் முழுதாக உணர்ந்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் கண்ணுக்குத் தெரியாத ஒளியைப் பற்றி கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள். யூகிப்பதற்கு முன்னால் கண்ணுக்குத் தெரியும் ஒளியின் சில நுட்பமான செயல்பாட்டினை கூறிவிடுகிறேன்.

ஒளியும் உடலும்

உங்கள் உடலுக்கு சரியான நேரத்தில் பசி தூக்கம் போன்ற பல்வேறு உணர்வுகள் வருகிறதல்லவா? அந்த உணர்வுக்கு அடிப்படைக் காரணம் உடலில் உள்ள ஒரு கடிகாரம் தான். கடிகாரம் என்றவுடன் நீங்கள் சுவற்றில் மாட்டி வைக்கும் நேரம் காட்டும் கடிகாரத்தை நினைத்துவிடாதீர்கள். இது முழுக்க முழுக்க வேதியியல் பொருட்கள் ஆனது. எப்பொழுது தூங்க வேண்டும் என்பதற்கு சில வேதியியல் சுரப்பிகள் சுரக்க வேண்டும். இது அனைத்துமே ஒளியின் மூலமாகவே கட்டுப்படுத்தப்படுகின்றது. அதனால்தான் இரவில் தூக்கமும் பகலில் விழிப்புணர்வும் வருகிறது. சூரிய ஒளியில் உள்ள நீல நிறம் மனிதனின் கண்களில் தொடர்ந்து படும் பொழுது முதலில் அயர்ச்சி பின்பு தூக்கம் போன்ற உணர்வுகள் மனிதனுக்கு வருகிறது. உங்கள் கண்களில் படும் நீல நிறம் குறையும் பொழுது உங்களுக்கு அயர்ச்சியும் தூக்கமும் சற்று மெதுவாகத்தான் வரும். சூரியனை உங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றாலும் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் மின் விளக்குகளில் உள்ள வெண்மை நிறத்தை சற்று பழுப்பாக மாற்றுவதன் மூலமாக அதில் உள்ள நீல நிறத்தை குறைக்க முடியும். இதனால் உங்கள் அன்றாட செயல்களில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். தூக்கம் மட்டுமல்லாமல் உங்கள் உடலில் சுரக்கும் பல்வேறு சுரப்பிகளும் ஒளியின் மூலமாக இயக்கப்படுகிறது. இதனால்தான் சூரிய சந்திரனின் சுழற்சிக்கும் உங்கள் உடலில் நடக்கும் சுழற்சிக்கும் அதிகப்படியான தொடர்பு உண்டாகிறது.

இதுவரை வெளியில் உள்ள பொருட்களில் இருந்து வெளிப்படும் ஒளி உங்கள் உடலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மட்டும் தான் கூறியுள்ளேன். எப்படி எந்த ஒரு பொருளுக்கும் ஒளியை உமிழக்கூடிய பண்பு உள்ளதோ அதுபோலவே மனிதர்களின் உடலாலும் ஒளியை வெளிப்படுத்த முடியும். ஒரு பொருள் எப்பொழுது ஒளியை உமிழும்? வெளியிலிருந்து வரும் சக்தியை உள்ளே எடுத்துக்கொள்ளாமல் தனக்குள்ளே இருக்கும் சக்தியை வெளிப்படுத்தும் பொழுது ஒளி பிறக்கிறது. சூரியன் இது போலத்தான் பிரகாசிக்கிறது. அது போலவே மனிதனும் தன் உடலில் உள்ள சுரப்பிகள் மற்றும் அங்கங்களை முழுமையாக தன்வயப்படுத்தி கொண்டு சக்தியை சேகரித்துக் கொள்ளாமல் எப்போது வெளிவிடுகிறானோ அப்பொழுது மனிதனின் உடலும் பிரகாசிக்க ஆரம்பித்துவிடும். இதனைக் குறிப்பிடும் விதமாகத்தான் பல்வேறு மதங்களிலும், கடவுள் மற்றும் தீர்க்கதரிசிகளுக்கு பின்னால் ஒரு ஒளிவட்டம் தெரிவதாக நீங்கள் உருவகப்படுத்தி வைத்துள்ளீர்கள். இப்படிப்பட்ட நிலைக்கு செல்வதற்கு முதலில் கருமை என்னும் நிறத்தின் குணங்களை அறவே ஒதுக்கி பின்பு வெண்மை நிறத்தின் குணநலன்களைப் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். நான் இங்கே குறிப்பிடுவது மனிதனின் தோல் நிலத்தையோ அல்லது உடுத்தும் உடையின் நிறத்தையோ இல்லை. உங்களின் செயல்பாடு மற்றும் எண்ணங்களின் குணத்தையும் அதுசார்ந்த நிறத்தையும் கூறுகிறேன்.  சுருக்கமாக சொல்லப்போனால் உங்கள் எண்ணங்கள் தான் வண்ணங்களாக மாறுகின்றன, அதுபோலவே வண்ணங்கள் தான் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது.

கடந்த ஐந்து பகுதிகளாக கூறிவந்த ஒளி அதிகாரத்தை இங்கே நிறைவு செய்து வேறொரு புதிய அதிகாரத்துடன் உங்களைத் தொடர்ந்து சந்திப்பேன்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -