தென்னாடுடைய சிவனே போற்றி …!

தந்தையர் தின சிறப்புப் பதிவு

- Advertisement -

சிவன் : மகனே முருகா..!  பூவுலகில் சென்ற ஞாயிறு அன்று  தந்தையர்நாளென்று கொண்டாடினர்.. வாழ்த்துகளின் ஒலி விண்ணை எட்டியது. கேட்டாயா???

முருகன் : அதற்கென்ன அப்பனே இப்போது?

சிவன் : ஒன்றுமில்லையே… உனக்கும் அச்செய்தி தெரிந்திருக்குமே என்றுதான் கேட்டேன்…

முருகன் : ம்ம்ம்ம்… சுற்றிவளைத்து நீர் எங்கு வருகிறீர் என்று எமக்குப் புரிகிறது. 

சிவன் : ஆகா.. ஆகா.. ஆகாககாகா..!  சூடத்தைப்போல சட்டென்று பற்றிக்கொண்டாயே..!  என் மகனல்லவா நீ…!

முருகன் : வீணான புகழுரைகள் வேண்டாம். தாம் எதிர்பார்ப்பது கிடைக்காது.

சிவன் : இந்த மனிதர்களின் செயல்களைப் பார்த்து எனக்கும் அப்பேரவா வந்துவிட்டதடா மகனே. மாட்டேனென்று சொல்லிவிடாமல் ஒரேயொருமுறை வாழ்த்திவிடடா செல்வமே..!

முருகன் : ஒருக்காலும் நடக்காது 

சிவன் : ஏனடா நடக்காது? ஏன் நடக்காது? மகனிடமிருந்து ஒரு வாழ்த்தினை ஒரு தகப்பன் எதிர்பார்க்கக்கூடாதா?

முருகா : நெற்றிக்கண்ணிலிருந்து என்னைப் பெற்றெடுத்தால் மட்டும் போதுமா? உடனே ஒரு பொய்கையில் போட்டுவிட்டீர். ஒருவகையில் அதுவொரு நாடுகடத்தல் போலத்தான்… ! நீர் பெற்ற பிள்ளையை நீர் வளர்ப்பதற்குச் சோம்பிக்கொண்டு வாடகைத்தாய்மாரிடம் ஒப்படைத்துவிட்டீர்…

சிவன் : என்னது? வாடகைத்தாய்மாரா?

முருகன் : ஆம். கார்த்திகைப் பெண்டிர் அறுவரைத்தாம் சொல்கிறேன். ஏன் கைலாயத்திலேயே என்னை வளர்த்திருக்கலாமே? 

சிவன் : ஆறுபேர் சீராட்டி வளர்த்ததை இப்படிக் குறையாகச் சொல்லிவிட்டாயே?

முருகன் : அறுவர் என்ன? ஆயிரம்பேர் வளர்த்தாலும் அம்மையப்பன் வளர்த்ததுபோல் இருக்குமா?

சிவன் : அது அப்படியில்லையடா மகனே..

முருகன் : என்ன அப்படியில்லையடா மகனே? சரி அதைக்கூடப் பொறுத்துக்கொள்ளலாம்.. ஒரு சின்னபையன் என்றும் பாராமல் என்னைப் போருக்கு அனுப்பியதை மட்டும் என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது தந்தையே.!

சிவன் : அடேய்.. உன்னைப் படைத்ததே அதற்குத்தானேடா!

முருகன் : எத்துணைக் கல்நெஞ்சம் உமக்கு தந்தையே..! அரக்கர்கூட்டத்திற்கு எல்லாம் வரங்களை வாரி வாரி நீர் வழங்கிவிட்டு, அவன் போருக்கு அழைத்தால் பொடியன் என்னை அனுப்பிவைத்தீரே! நீரே போருக்குச் சென்றிருக்கலாம்தானே? இரக்கமிருந்ததா உமக்கு! பிள்ளையைப் போருக்கு அனுப்பிவிட்டுக் கண்மூடித் தவம் செய்யும்  தகப்பனை வேறெங்கும் யாரேனும் பார்த்ததுண்டா?

உம்மோடு எம் தாயும் அல்லவா கூட்டு சேர்ந்துகொண்டார். சென்று வென்று வா மகனே என்று ஒரு வேலையும் கையில் கொடுத்து அனுப்புகிறார். அவரே அந்த வேலைத் தூக்கிக்கொண்டுபோய்ச் சண்டை போட்டிருக்க வேண்டியதுதானே? அதைத்தூக்க நான் எவ்வளவு நொந்துபோனேன் என்று தெரியுமா   உங்களுக்கு? அதிலும் கூடவே ” வெற்றிவேல் வீரவேல்” என்று முழங்கிக்கொண்டே போர்புரிய வேண்டுமாம்! சிறுவயதிலேயே பலசாலியாய் இருக்க, எனக்கென்ன ஆடும் கோழியும் மீனும் பாலும் வெண்ணையும் நெய்யும் ஊட்டி ஊட்டி வளர்த்தீர்களா?

ஒருநாளா இரண்டுநாளா? ஆறுநாள்.. முழுதாய் ஆறுநாள் ..அந்தச் சீரலைவாய்க் கடற்கரையில் மொட்டைவெய்யிலில் மாய்ந்து மாய்ந்து சூரனுடன் சண்டையிட்டுக் காய்ந்தே போனேன்.. குடிக்க தண்ணீர் கூட அங்கு இல்லை.. தமது தலையில்தான் கங்கையே குடியிருக்கிறதே.. கொஞ்சம் அந்தப்பக்கம் திருப்பிவிட்டிருக்கலாம்.. அதற்கும் தமக்கு மனமில்லை… நானே “நாழிக்கிணறு” ஒன்றைத் தோண்டி என் தாகத்தைத் தணித்துக்கொண்டேன்..

பூவுலகில் பிள்ளைகளை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்கிறார்கள் தெரியுமா? அப்படி ஒருநாளாவது என்னை நீங்கள் பார்த்துக் கொண்டதுண்டா?

விதவிதமான உடைகள், விதவிதமான தின்பண்டங்கள், விதவிதமான விளையாட்டுப் பொருள்கள்,பள்ளிக்கூடம், மிதிவண்டி, தோழர்கள், தொலைக்காட்சி, ஈருருளி, கல்லூரி, தோழிகள், திரைப்படம், மகிழுந்து, என அவர்கள் வாழும் வாழ்வே தனிதான்..
எனக்கென்ன வாங்கிக் கொடுத்திருக்கிறீர்கள்? கையில் ஒரு வேலும், ஊர் சுற்ற ஒரு மயிலும்.. ! எல்லாம் என் தலையெழுத்து ..!

சிவன் : என்னடா இப்படிச் சலித்துக் கொள்கிறாய்? சிவனின் நெற்றிக்கண்ணில் பிறந்த வெற்றிச்செல்வன் என்ற பெருமை வேறு யார்க்குக் கிடைக்கும்?

முருகன்: ஆமாம்.. நீங்கள் மட்டும் இமையத்தின் உச்சியில் குளுகுளுவென்ற இடத்தில் இருந்துகொண்டு என்னைப் பொய்கையில் தூக்கி எறிந்துவிட்டீர்கள்.

சிவன் : இப்போது எதற்கு நடந்து முடிந்த கதையெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறாய்? உன் படைப்பின் நோக்கம் எதுவென்று எமக்குத்தான் தெரியும்.

முருகன் : ம்ம்க்கும்.. அரக்கர்கள் வரம் கேட்கும்போது மட்டும் தமக்கு எதுவுமே தெரியாதுபோலும். அள்ளி அள்ளி வழங்க வேண்டியது வரங்களை.. பெரிய்ய பாரி வள்ளல் இவர்..!

சிவன் : மகனே .. கேலியின் அளவு கூடிக்கொண்டே போகிறதே.. கொஞ்சம் கட்டுப்படுத்து..! என்ன இருந்தாலும் நான் உன் தந்தையல்லவா? ஒரு வாழ்த்து கேட்டது குற்றமாடா மகனே? இப்படிப் பொரிந்து தட்டுகிறாய்?

முருகன்: பழத்தைக்காட்டி ஏமாற்றியதுமுதல், போருக்கு அனுப்பியதுவரை எல்லாமே எமக்குத் துன்பமான செயல்கள்தான் என்றாலும் அதன்பின் நடந்த சில செயல்களால் எனக்கு உங்கள்மேல் அன்பு பெருகியது என்னவோ உண்மைதான்.. அதனால்தான் இதுவரையிலும் உம்மோடு சண்டைபோடாமல் இருந்தேன்..

சிவன்: நான் செய்தது எல்லாமே உனக்கு நல்லதுதானடா.. இப்போது எல்லாமும் புரியாது.. பின்னாளில் புரிந்துகொள்வாய்.. பிள்ளை உனக்கு அறுபடைவீடுகள் கொடுத்திருக்கின்றனர்.. நான் எங்கு போனாலும் ஒரே வீடுதானடா.. பார்.. நீதான் செல்வாக்காக இருக்கிறாய்.

முருகன் : ஆமாம் ஆமாம்.. செல்வாக்கு எனக்குக் கொஞ்சம் கூடுதல்தான்..! அதற்குக் காரணம் எனது தனிப்பட்ட திறமைகள் பலவும்தான்.

தாங்கள் செய்த ஒரேயொரு நல்ல செயல் ..பொய்கையில் தூக்கிப்போட்டாலும் அதைத் தமிழ்நாட்டுப் பொய்கையாய்ப் பார்த்துத் தூக்கிப் போட்டீரே.. அதுதான் சிறப்பு. அம்மக்கள் தமிழென்றால் உயிர்போல எண்ணுகின்றனர். அத்தமிழுக்கே என்னைத் தலைவனாக்கி அழகு பார்க்கின்றனர்.

குன்றுதோறும் எனக்குக் கோவில் கட்டி வழிபடுகின்றனர். காவடி எடுக்கின்றனர். . திருச்செந்தூரில் சூரவத நிகழ்வினை அப்படித்தான் கொண்டாடுகின்றனர். முருகா முருகா என்று உருகத்தான் செய்கின்றனர்.

அத்தனைக்கும் மேலாக என் உள்ளங்கவர்ந்த வள்ளியை நான் அங்குதானே கண்டேன்.. காதல் கொண்டேன்.. மணவாட்டியாய் ஆக்கிக்கொண்டேன்..

அன்பும் அறமும் மனிதமும் கல்வியும் ஈகையும் இறையருள்நெறியும் தழைத்துச் செழித்தோங்கும் தமிழ்நாட்டிற்கு என்னை  அனுப்பிவைத்த ஒரேயொரு காரணம் போதும்.. நான் உம்மைப் பெருமையுடன் கொண்டாட..!

எம் தமிழ்மக்கள் தந்தையர்நாளைக் கொண்டாடுவதில்லை. அவர்கள் எப்போதுமே தந்தையைக் கொண்டாடும் அன்பின் விழுதுகளாய் இருக்கின்றனர். 

இங்குள்ள எல்லோர்க்கும் தமிழ்நாடு தாய்நாடுதான்.. ஆனால் என்னைப் பிறப்பித்து இங்கே அனுப்பியது எம் தந்தையாகிய நீர் .. ஆதலால் இது எனக்குத் தந்தைநாடு..!

” எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே .. ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே.”

சிவன் :
முருகா.. என் செல்ல மகனே.. நீ சொன்ன இந்த ஒரு வரியே திருவரியாய் உள்ளத்தில் ஒட்டிக்கொண்டதே.. இதைவிடவும் சிறந்ததொரு வாழ்த்து இருக்க முடியுமா? “இவன் என்நோற்றான் கொல்” என்று நெகிழ வைத்துவிட்டாய் முருகா!


வாயில் சொல்வதா வாழ்த்து? வாழ்ந்து காட்டுவதில் அல்லவா நிறைந்து ததும்ப வேண்டும் வாழ்த்து..! இவன் என் பிள்ளை என்று நெஞ்சம் நிமிர்த்தி கண்கள் பனிக்க தந்தையரை நெகிழ்த்துவதுதானே மெய்யான வாழ்த்து. நீ அதைச் செவ்வனே செய்துவிட்டாய் மகனே..! 

வாழ்க தமிழ்..!

வாழ்க தமிழ்மக்கள்..!

வாழ்க தமிழ்ப் பண்பாடு..!

வாழ்க தாய்த்தமிழ்த் திருநாடு!

- கட்டுரைப்போட்டி முடிவுகள் -
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

6 COMMENTS

 1. ஆகா! அருமை பிரபா! இதை வைத்து 33ம் முருகேசி திரைப்படமே எடுக்கலாம்போல….

  அசத்துங்கள்!

  • அண்ணா… முருகேசியா!!! எங்கேயோ போயிட்டீங்க தெய்வமே நீங்க! ???

 2. ஓம் முருகா சிரித்துப் படித்தேன். நல்லாத்தானிருக்கு.

 3. துள்ளலான எழுத்து நடை. நக்கலும் நையாண்டியும் சரளமாக வருகின்றன. எல்லோரும் விரும்பும் படியான எழுத்து. வாழ்த்துகள் பிரபா..

  • ஆண்டவன் சொல்றான்
   அடியேன் எழுதுறேன் ??
   அனைத்தும் அவனருள் ❤

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -