தனிமை

கவிதை

- Advertisement -

கைவிடப்பட்ட ஒற்றைச் செருப்பாய்
தனித்தலையும் இறகாய்
எரி நட்சத்திரமாய்
மனித வருகையற்ற
காட்டுக் கோவிலாய்
வவ்வால் புழுக்கைகள் மணக்கும்
இடிந்த கோட்டையாய்
துடுப்பற்ற படகாய்
புகை வண்டிக்காய் காத்திருக்கும்
புதிதாய் போடப்பட்டு
பயன்பாட்டிற்கு திறக்கப்படாத
தண்டவாளப் பாதையாய்
வற்றிய ஆற்றில்
மீன் தேடும் பசித்த கொக்காய்
உதிரும் இலைகளை
எண்ணியபடி இருக்கும் விருட்சமாய்
பரந்து விரிந்த மனவெளியில்
நித்தியத்துவ அழகியலைத் தேடி
பிராத்தனையை முன்னெடுத்துப்
பயணிக்கும்
ஆன்ம யாத்தரீகனாய்‌
நானும் உன்
காதலின் பெருங்கனவில்.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -