ஜூம் கலாட்டா – 5

ஜூம் வெட்டிமன்றம்

- Advertisement -

“என்ன அபிராமி? இன்னிக்கு ஜூமியன் வரானா?” என்று குணா கேட்ட கேள்விக்கு ஆச்சரியத்துடன்

“காலைல காக்கா ஏதாவது கத்தியதா? விருந்தாளி வராங்கனு?” என்றாள்.

“ அவனா விருந்தாளி? காக்காவையே மயில்னு  உங்கிட்ட வித்துடுவான். வங்கி கணக்குல நீ 2000$ எடுத்ததா குறுஞ்செய்தி வந்துச்சு. அதான் அந்த சனியன் வருதானு கேட்டேன்” என்று சன்னமாக சொன்னார் குணா.

ஜூமியன் என்று அழைக்கப்பட்டவன் குணாவின் வாழ்வில் வந்ததிலிருந்து வகை வகையாய் ஏமாற்றப்படுவருவதை தெரிந்தும் அதை தடுக்க இயலாமல் மாஸ்க் நாடா அறுந்ததைப் போல வாய்மூடி தவிக்கிறார்.

ஜூமில் மகனின் கல்யாணத்திற்கு நேரலையில் காமிக்க அறிமுகமான ஜூமியன் அபிராமியை தொடர்ந்து ஏமாற்றி பணத்தை கறப்பதில் வல்லவன்.

இதோ இப்ப இந்த 2000$ வெள்ளியும் அவனிடம் ஏமாறவே வங்கியில் எடுத்திருக்கிறாள், இன்று எப்படியாவது கையும் களவுமாய் பிடிக்க கங்கனம் கட்டிக்கொண்டார்.

“வணக்கம் மேடம். என்ன கண்ணு ரொம்ப சிவந்திருக்கு. சரியா தூங்கலையா?” கரிசணமாய் கேட்டுக்கொண்டே வந்தான் ஜூமியன்.

“டேய், அவ என்னை முறைச்சு முறைச்சு கண்ணு எப்பவும் சிவந்தே இருக்கும். தினமும் 12மணி நேரம் தூங்குறவளை எப்படிடா இப்படி கேட்டே?” என்று பொறுமினார் குணா.

“ஜூமியன், கண்ணு சிவப்பை குறைப்பதற்கு ஏதாவது வைத்திய வெச்சியிருப்பியே. சொல்லேன் கேட்போம்” என்று வலையை வீசினார்.

“என்ன ஆச்சரியம். இப்பத்தான் இமயமலையிலே இருந்து சுத்தமான தண்ணித்துளிகள் வாங்கினேன். வெறும் 100$ தான். இதுல முகம் கழுவுனா கண் குளிர்ச்சியாகிடும்.” ஒரு சிறிய குடுவையை எடுத்துக் கொடுத்தான்.

அபிராமி அப்படியே நெகிழ்ந்துவிட்டாள் “எவ்வளவு அக்கறை தம்பி உனக்கு. இந்தா பணம்” என்றவளை தடுத்தான்.

“ஐயோ, பணத்தை எதிர்பார்த்து என்றாவது எதையாவது செஞ்சியிருக்கேனா?” அவன் நடித்ததை குணாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

“என்ன ஜூமியன் புரட்டாசி மாசம் கோழி முட்டை போட்டக் கேக் வேண்டாம்னு சொல்லுவோமே அப்படித்தானே இதுவும்?” நக்கலடித்தார்.

“உங்களுக்கு எப்பவும் குறும்புங்க. ஒரு முக்கியமான விசயம். அபிராமி அம்மா பட்டிமன்றத்துல அணித்தலைவியா கலக்கப் போறாங்க” என்று குண்டு தூக்கிப்போட்டான் ஜூமியன்.

இவ கண்டிப்பா மேடைல திக்கி திக்கிப் பேசி திணறுவாள் அதை நாம ரசிக்கலாம் என குணா கனவு காண ஆரம்பித்தார்.

“அம்மா, இந்தாங்க நீங்க பேச வேண்டிய தலைப்பு”  ஜூமியன் தலைப்பை அறிவித்தான்.

“ அபிராமி நீ உடனே நூலகம் போய் குறிப்பு எடுத்துக்க.” என்று குணா அவசரப்படுத்தினார்.

“என்னங்க நூலகம் எங்கே இருக்கு? நான் பார்த்ததே இல்லையே” என்றவளின் அறிவை மெச்சினார் குணா.

“அது யீசூன் மாலில் மேல்மாடியில் இருக்கு அபிராமி. இதுவரைக்கும் நீ நுழையாத கடை அதுதான். இப்பவாவது போய் உபயோகப்படுத்து” என்று அறிவுரை கொடுத்தார் குணா.

“அம்மா எதுக்கு குறிப்பெல்லாம் எடுக்கனும்? எங்க குழுவே அவங்க பேச வேண்டிய மொத்த குறிப்பும் எடுத்தாச்சு. இந்தாங்க” என்று தாளைக் கொடுத்தான் ஜூமியன்.

“டேய், எதிர் அணியினர் பேச்சுக்கு இவ பதில் தரனும்ல. அதுக்கு சுயபுத்தி தேவை. ஆனால் இங்கே இல்லையே” என்று நக்கலடித்தார் குணா

“இதோ இது தான் எதிரணியினர் பேசப்போற முழுப்பேச்சு. அதுக்கு எப்படி பதிலடி தரனும் இதுல இருக்கு” என்று இன்னொரு தாளையும் கொடுத்தான்.

“அடப்பாவி கேள்வித்தாளை பரிட்சைக்கு முன்னே கிடைத்த மாதிரியிருக்கே. பேச்சாளர்கள் எப்படிடா ஒத்துக்கிட்டாங்க?” அதிர்ச்சியாய் கேட்டார் குணா

“எல்லாம் நம்ம ஆளுங்க. நடுவர் தீர்ப்பும் நாளையே வந்திடும். அதுல அம்மாவின் பேச்சை பாராட்டி அவரு நிறைய பேசுவார்.” என்று அடுக்கினான் ஜூமியன்.

“டேய் ஜூமில் பார்வையாளர்கள் கண்டுப்பிடிச்சிடுவாங்க. நீங்க மாட்டிப்பீங்க” என்று வக்கனையாய் கேட்ட குணாவிடம்

“அதுக்குத் தான் சார், 20பேரை ஜூமில் இறக்குறேன். அவங்க விடாம அம்மா புராணத்தை ஜூமில் செய்தி அனுப்பிட்டே இருப்பாங்க. முகநூல் நேரலையிலும் வாழ்த்து தெரிவித்து பட்டையை கிளப்புவாங்க” என்று மடக்கினான் ஜூமியன்.

“அபிராமி அம்மா, அந்த பட்டிமன்ற ஆயத்த பணி செலவு 2000$ கொடுத்துட்டீங்கனா, நான் மற்ற வேலையை பார்த்துடுவேன். எல்லோரும் என்னை மாதிரி பணத்தாசை இல்லாம இருப்பாங்களா?” என்று அப்பாவியாய் கேட்டான்.

“தம்பி, இந்தா பணம். நீயும் உடம்பை பார்த்துக்கப்பா. எனக்காக எவ்வளவு கஷ்டப்படுற? அப்படியே எனக்கு நகம் வெட்டி, நகச்சாயம் செய்ய 200$ல ஏற்பாடு செஞ்சேனு சொன்னியே, அவங்க எப்ப வருவாங்க?” என்று பாசத்தை பொழிந்தாள்

“டேய் ஜூம்ல பேசுறதுக்கு எதுக்குடா நகச்சாயம்? வெட்டிமன்றத்து நகம் வெட்டனுமா?” என்று பொறுமினார் குணா

“அம்மா, ஜாக்கிரதையா இருங்க. நம்ம பட்டிமன்றத்தை கெடுக்க யாராவது முயற்சி செய்வாங்கனு எனக்கு உளவுத்துறை தகவல் வந்தது” என்று காதை கடித்துவிட்டு சென்றான் ஜூமியன்.

“என்னங்க. வங்கில பணம் எடுக்கனும், கழுத்துக்கு மசாஜ் செஞ்சிக்கனும் சீக்கிரம் வண்டியை எடுங்க” என்று கட்டளையை நிறைவேற்ற வண்டி சாவி எடுத்துக்கொண்டு ஓடிய குணாவிற்கு ஒரு சின்ன ஆசை வந்தது “அவ கழுத்துக்கு நானே மசாஜ் செய்யுற சாக்குல கதையை முடிச்சிடுவோமா?” அவளை அடக்குவதைவிட அடங்கிப்போவது எளிது என்பது தெரியாதவரா அவர்? அடக்கமாய் வண்டியை எடுத்து அவள் வரும்வரை காத்திருக்க துவங்கினார்.

– தொடரும் இந்த ஜூம் கலாட்டா….

ஜூம்-கலாட்டா-6

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

ஜூம் கலாட்டா

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
உமா சங்கர்
உமா சங்கர்https://minkirukkal.com/author/umasanker/
நகைச்சுவை பேச்சாளராக வளர விரும்புபவர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் குறும்பட இயக்குனர். Life Is Beautiful என்ற வரிகளால் ஈர்க்கப்பட்டு அதை செயல்படுத்த நினைப்பவர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -