ஜல்லிக்கட்டு – திரைப்பட விமர்சனம்

பிறமொழித் திரைப்படம்

- Advertisement -

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்கான விருது வழங்கும் விழா தான் ஆஸ்கார் எனப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் நடக்கும் இந்த விழாவில், உலகில் உள்ள அனைத்து நாட்டிலும் வெளியிடப்பட்ட படங்களில், ஒரு படத்தை சிறந்த சர்வதேச திரைப்படமாகத் தேர்ந்தெடுத்து விருது வழங்குவார்கள். இந்த ஒரு பரிசுக்காக உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு நாடும் தலா ஒரு படம் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கும். 


2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆஸ்கார் விழாவில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான போட்டியில் இந்தியாவின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட படம்தான் ‘ஜல்லிக்கட்டு’. இது ஒரு மலையாள திரைப்படம் ஆகும். படத்தின் பெயரை கேட்டவுடனே தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி மலையாளத்தில் படம் எடுத்துள்ளார்களே என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால் படம் பார்க்க ஆரம்பித்த உடன் தான் படத்தின் கதையே வேறு என்று புரிந்தது. தமிழர்களின் ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள நட்பினை வீரத்துடன் எடுத்துரைக்கும் ஒரு கலாச்சாரம். ஜல்லிக்கட்டு திரைப்படமோ மனிதனுக்குள் உள்ள மிருகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு பதிவு.


விமர்சனம்
படம் முழுவதுமே கேரளத்தில் உள்ள மலைவாழ் மக்களின் தினசரி வாழ்க்கையை சுற்றியே நகர்கிறது. படத்தின் தொடக்கத்தில் ஒரு காட்டெருமை வெறிப்பிடித்து கட்டை அவிழ்த்துக் கொண்டு ஒரு மலைகிராமத்தையே சூறையாடுகிறது. அந்த காட்டெருமையை எவ்வாறு அடக்குகிறார்கள் என்பதுதான் படத்தின் இறுதிவரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் கதை இதுவே அல்ல. மாட்டை பிடிக்கிறேன் என்ற பெயரில் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவர் மனத்திலும் வெளிப்படும் வண்மம் தான் படத்தின் மையக்கரு. படம் நிறைவடையும் பொழுது வெறி பிடித்தது எருதுக்கா இல்லை மனிதர்களுக்கா என்று நமக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. ஜல்லிக்கட்டு என்னும் தமிழர் பண்பாட்டை இந்தப் படத்தின் பெயராக வைத்து “ஜல்லிக்கட்டு” எனும் பெயரையே  கொச்சைப்படுத்தி விட்டார்கள் என்றும்  சில சமயம் தோன்றுகிறது.


ஒரு கலைப்படைப்பாக மட்டும் பார்க்கும் பொழுது படத்தின் பல்வேறு இடங்களில் எழுத்தாளரும் இயக்குனரும் சபாஷ் சொல்ல வைத்துவிடுகிறார்கள். படத்தில் ரத்தம் தெறிக்கும் வன்முறை என்பது ஒரு சில காட்சிகள் மட்டுமே இருந்தால்கூட மனித மனதில் இருக்கும் மொத்த வக்கிரத்தையும் வசனத்திலேயே கொண்டு வருவது இந்த படத்தின் சிறப்பு.  உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், உயிர் போகும் தருவாயில் கூட, எதிரி குத்தி இறந்தான் என்று ஊர் சொல்ல கூடாது என்று மாடு குத்தியதாக பொய் சொல்லும் வசனங்களை சொல்லலாம். இந்த படத்தில் மருந்துக்குக்கூட யாருமே நல்லவர்கள் கிடையாது. மிருக குணத்துடன் வேட்டையாடும் ஒரு கும்பல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். 


படத்தில் பின்னணி இசை என்பதே கிடையாது. தேவைப்படும் இடத்தில் மட்டும் மலைவாழ் மக்கள் கொடுக்கும் ஒருவிதமான கூக்குரலை வித்தியாசமான பாணியில் பயன்படுத்தியுள்ளார்கள். சில இடங்களில் இந்த கூக்குரல் நம்மை புல்லரிக்க வைக்கும் அளவிற்கு அமானுஷ்யமாக உள்ளது. படம் முழுவதுமே மேற்கு தொடர்ச்சி மலையையும் அங்கே உள்ள கிராமத்து வாழ்க்கையும் நவீனத்துவம் இல்லாமல் இயற்கையோடு சேர்த்துக் காட்டுகிறது. ஒவ்வொரு காட்சியும் மிக நேர்த்தியாகப் படம் பிடிக்கப் பட்டுள்ளது. படத்தின் தொழில்நுட்பக் குழுவின் தரமான வேலைப்பாடுகள் படம் முழுவதும் நிறைந்துள்ளன.


இவ்வளவு தரமான படத்தின் மையக்கருவாக ” மனிதனுக்குள் உள்ள மிருகத்தை” வைக்காமல் வேறு ஏதாவது அழகான விஷயத்தை வைத்திருந்தால் இந்த படம் வாழ்நாள் முழுவதும் மனதில் நிலைத்திருக்கக்கூடிய ஒரு படைப்பாக இருந்திருக்கும். கொலைவெறி, பகை உணர்வு, நம்பிக்கை துரோகம், ஆணவம், ஆணாதிக்கம், கள்ள உறவு, சட்டத்தை மீறுதல், ரத்த சகதியை ஏற்படுத்தும் சண்டைகள்.  இந்த படத்தில் வரும் அனைத்து காட்சிகளையும் நான் கூறிய ஏதோ ஒரு தலைப்பில் அடக்கிவிடலாம். 


ஆஸ்கார் பரிசுக்காக இந்தியாவின் சார்பில் அனுப்பப்படும் படம் என்ற ஒரே காரணத்திற்காக தான் இந்த படத்தை நான் பார்த்தேன். இந்தியாவின் அடிப்படை கலாச்சாரமான அன்பு, விருந்தோம்பல் போன்ற பல்வேறு குணங்களை வெளிப்படுத்தும் அருமையான படைப்புகள் இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் பொழுது தவறான மனப்பான்மையை வெளிப்படுத்தும் ஒரு படத்தை அனுப்புவது சரிதானா? இல்லை, இந்த படத்திற்கு பல்வேறு சர்வதேச விருதுகளைக் கொடுத்து இந்தியாவை காட்டுமிராண்டிகள் வாழும் நாடாக உலகத்தில் சித்தரிக்கும் அந்நிய சக்திகளின் வேலையா இது? சம்பந்தப்பட்டவர்களுக்கு தான் வெளிச்சம். இது தொழில்நுட்ப ரீதியில் மிகவும் அருமையான படம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அந்த ஒரே காரணத்திற்காக ஆஸ்கார் பரிசுக்கு அனுப்பப்படுவதையும் ஏற்க என் மனம் மறுக்கிறது.

- கட்டுரைப்போட்டி முடிவுகள் -
இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

6 COMMENTS

  1. மிகவும் நேர்மையான நுணுக்கமான விமர்சனம். படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -