சூர்யப்பாவை – 5

தொடர் கவிதை

- Advertisement -

எப்போதுமே கேட்டபின் கிடைப்பது
எப்படி அன்பாகும்?
அதென்ன பண்டமாற்றுப் பொருளா?
பரிமாற்ற உணர்வல்லவா ..!
வலிய வலிய தேடிவந்து
கேட்கும்போதெல்லாம் வலிக்கும்.
கேட்டுக் கொடுப்பதா?
கேளாமலே எடுப்பதா? என்ற
கேள்வித்தட்டுகளிடையே
தடுமாறுகிறது எடைக்கோல்முள்.

அண்மையிலிருக்கையில்
கவனயீர்ப்பு கைக்கொடுத்துவிடும்.
தொலைவினில் இருக்கையில்
அன்பை எங்ஙனம் அனுப்புவது?
அன்போ கவனமோ ஆறுதலோ
வெளிப்படுத்தாவிடில் மறுமுனையில்
புறக்கணிப்பாய்த் திரிந்து புற்றாய்த் திரண்டெழும் ஒருநாள்..
அதை அத்துணை எளிதாய்க்
கரைத்துவிடவோ கலைத்துவிடவோ
கடந்துவிடவோ முடியாது.

கேளாமலே அன்பை அள்ளியள்ளிக்
கொடுக்கின்ற உள்ளம் கொண்டிருக்கவேண்டும் உன்னைப்போல்.
ஆனாலும் வேண்டுமென்றே
அடம்பிடித்துக் கேட்டுகேட்டு
உன்னைச் சீண்டுவதில் கேள்விகளெலாம் நம் அன்பின்
வேள்வித்தீயாய் மாறட்டும்.

எரிந்துகொண்டேயிருக்கிறேன் நான்..!
நீரூற்றுவதோ நெய்யூற்றுவதோ
தேவையறிந்து தீர்ப்பதில்
தாய்மருத்துவன் நீ சூர்யா ..!
விருந்தும் மருந்துமாய் நீயே
நின்றென் உலகினை
வியனுலகாய் மாற்றுகிறாய்.

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -