சூர்யப்பாவை – 22

தொடர் கவிதை

- Advertisement -

வாழ்த்து என்பது
வெறும் சொல் அல்ல.
சொல்வடிவம் பெற்ற
ஆயுள் கோடு.
குறிசொல்பவளின் அழகிய
குறிக்கோல் போல
நா அங்குமிங்கும் ஓடி
ஆயுள்கோட்டின் நீளஅகல
அடர்வினைச் செப்புகின்றது.  
வாழ்த்துகள் என்னும்
ஆன்ம நீர்மையினாலே
நீராழிச் சேலையுடுத்த
நிலப்பெண் உயிர்ப்புடன்
நெடுங்காலமாய்ச்
சுற்றிச் சுழல்கிறாள்.

வாழ்த்தும் நெஞ்சத்தில்
வஞ்சக்கறைகள் 
தங்குவதில்லை.
வஞ்சக்கரி படிந்தடர்ந்து
பிசுபிசுப்பேறிய உள்ளத்திலும்
வாழ்த்து நன்மாயம் செய்யும்.
வழலைக்கட்டியாய் நுரைத்து
உள்ளச்சலவை செய்து
கதகதப்பாக்கும்.
கொடுத்தாலும் பெற்றாலும்
வாழ்த்து மனம் நிறைக்கும்.

தொடர்ந்து வாழ்த்துவது
ஓருயர்ந்த தூய்மைப்பணி.
இறுக்கமான புழுக்கமான
மனநிலையை மாற்றிவிடும்.
வாழ்த்தும்போது மட்டுமே
உயிர்க்காற்றினை
உள்ளும்புறமும்
பரிமாற்றம் செய்கிறது
நுரையீரல்.
குருதிநாளமெங்கும்
புத்துணர்வு தாளமிட்டுப்
பாய்ந்தோடும். 

ஊருக்கெல்லாம் வாழ்த்துகையில்
புன்னகைசூடும் பூவிதழ்கள்
உனை வாழ்த்துகையில் மட்டும்
முத்தங்கள் சூடிக்கொள்கின்றன
என்றே முறுவலிக்கிறாய்.
வாழ்த்தினை முத்தப்பாவினில்
வடித்திடும் தேம்பாவலன் நீ.
உன்னால் நீள்கின்ற
ஆயுட்கோட்டினை வளைத்து
வானவில்லாக்கி விடுகின்றன
உன் வாழ்த்துகள்.
வாழ்த்தும் வாழ்வும்
நீயாகிவிட்டாய் சூர்யா…!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -