சூர்யப்பாவை – 16

தொடர் கவிதை

- Advertisement -

ஆடைக்குள் நுழைந்த எறும்பென
அங்குமிங்கும் மனத்திற்குள்
ஓடுகின்றன உன் நினைவுகள் ..
பலநேரம் குறுகுறுக்கவும்
சிலநேரம் கடுகடுக்கவும்
செய்கின்றன அவை.

சுர்ரென்று கடுகடுக்கும்
சொற்களே பின்னாளில்
சுவைமிகு உரையாடலுக்கும்
சொக்கிடும் உடன்படிக்கைக்கும்
வித்திடுகின்றன..
சொற்களுக்குள் ஒருபோதும்
வன்மமும் இகழ்வும் நம்மால்
புகுத்தப்படுவதில்லை.
வெறுப்பினைச் சேகரிப்பதால்
விளைந்திடும் நன்மையென்ன?

என்றோவொருநாள் சுமக்கப்போகும்
முத்துக்காகத்தான் வாழ்வின்
எல்லாநாள்களையும் மகிழ்வாய்
வைத்திருக்கின்றன சிப்பிகள்.
முத்துகள் சுமக்காதுபோயினும்
கிளிஞ்சல்களும் பேரழகுதாமே..
சினத்தின்போது உதிர்பவை
கிளிஞ்சல் சொற்களாகவேனும்
இருத்தல் காதலின் அடையாளம்.

இதழ்க்கிளிஞ்சல்களைக்
கொஞ்சுவதிலேயே போய்விடுகின்றன
முத்துக்குளிப்பதற்கென
முனைந்திடும் பொழுதுகள்.
முத்துச்சிப்பியாய் இருத்தலினும்
கிளிஞ்சல்களாய்க் கிணுகிணுத்தலே
காதலின் இன்னிசை என்கிறாய்
கிளிஞ்சற்காதலன் நீ சூர்யா ..
கிண்கிணியொலியில் மெய்மறந்து
பண்ணெழுதட்டும் நம்காதல்..!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -