சந்தர்ப்பம்

சிறுகதை

- Advertisement -

மோகனா.. இன்னைக்கு உன்னோட ட்ரீட் தான். ஞாபகம் இருக்குல?”

“இல்லைன்னு சொன்ன சும்மாவா விடப் போற? இருக்குடி..”

கடித்த பற்களுக்கிடையே பதிலளித்தேன்..

பிரேமாவிற்கு ஏதாவது காரணம் வேண்டும். புதுத் துணி எடுத்தால், வீடு மாறினால், சூப்பர்வைசர் ரெண்டு வார்த்தை நல்ல விதமாய்ச் சொல்லிவிட்டால், முடியை ரெண்டு இன்ச் ட்ரிம் பண்ணினால்…. வெட்கமே இல்லாமல் ட்ரீட் கேட்டு விடுவாள். மறுக்கவும் முடியாது.

“என்ன பிரேமா.. அக்கா பொண்ணு பொறந்த நாளைக்கெல்லாம் ட்ரீட் கேக்குற..”

ஒருநாள் தற்செயலாய்த் துளிர்த்த தைரியத்தில் கேட்டே விட்டேன்.

“என்னடி இவ்வளவு கஞ்சூஸா இருக்க.. ஒரு காபி டிபன் வாங்கித் தந்தா கொறஞ்சுடுவியா? வேண்டாம்டி.. நான் ஒன்னும் எவடா வாங்கித் தருவான்னு இங்க நாக்கத் தொங்கப் போட்டுட்டில்ல.” தனது வீங்கிய இரு கைகளையும் ஆட்டியவாறு கூறினாள்.

திடீரென தனக்கிருக்கும் மான ரோஷத்தைக் கண்டெடுத்த பிரேமா அடுத்த இரண்டு நாட்களுக்கு என் முகத்தைப் பார்க்க நேர்ந்த போதெல்லாம் வாயை இறுக்கமாக மூடிக்கொண்டு நாடகத்தனமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். எந்தத் தாஜாவும் பலிக்கவில்லை. பிறகு ஒரு வழியாக சரவண பவனில் கிங் மீல்ஸ் சாப்பிட்டுத் தனது மௌன விரதத்தை முடித்துக்கொண்டாள்.

‘பேசாட்டா போடி’ என்று சொல்லலாம்தான். முடியவில்லை. அவளிடம் என் ரகசியங்கள் சில இருக்கின்றன. எவ்வளவுதான் கட்டுப்பாடாய் இருக்க நினைத்தாலும் வாழ்க்கையின் சில அந்தரங்கங்களை ‘ஏய்.. யார்கிட்டேயும் சொல்லிடாதடி’ என்றபடியே யார் காதுக்குள்ளாவது போடத்தான் தோன்றுகிறது. இதற்கு முன் வேலை பார்த்த இடத்தில் சுமனா இருந்தாள். அவளிடம் சொல்லும் விஷயங்கள் கிணத்தில் போட்ட கல் மாதிரி தான். நாமே நினைத்தாலும் திரும்ப எடுக்க முடியாது. அண்ணா நகரில் இருக்கும் இந்த ரெடிமேட் கடையில் வேலைக்குச் சேர்ந்த இந்த ஏழு மாதத்தில் என் செக்சனில் வேலை பார்க்கும் மற்ற மூன்று பெண்களும் பெரிதாக நட்பு பாராட்டாதபோது பிரேமா தான் தானே வந்து ஒட்டிக் கொண்டாள் பிள்ளைபூச்சி மாதிரி. என் முகத்தின் அசட்டுக் களை அவளை ஈர்த்திருக்க வேண்டும்.

மாலை ஷிஃப்ட் முடிந்ததும் இருவரும் கிளம்பினோம். எனக்குப் பிறந்த நாள் என்பதால் அதிக விசேஷம் என்றும் அந்தத் தெருவிலேயே விலையுயர்ந்த ஹோட்டலுக்குச் செல்ல வேண்டும் என்றும் பிரேமா கூற அதுவே தீர்மானமாகியது. என் பிறந்த நாள் என்னைக் காட்டிலும் அவளுக்கு விசேஷமானதாய் இருந்ததில் வியப்பொன்றுமில்லை. நான் என் பர்சில் இருந்த ஐநூறு ரூபாய்த் தாளை மனத்தால் தடவிப் பார்த்துக் கொண்டே கிளம்பினேன்.  

க்கா.. யக்கா.. ஒரு பொஸ்தகம் வாங்கிக்கோக்கா.”

ஹோட்டலுக்குச் சில அடிகள் முன்னே அந்தக் குரல் எங்கள் இருவரையும் நிறுத்தியது.

ஆறேழு மாதக் குழந்தை ஒன்றை இடுப்பிலும் புத்தகக் கட்டை மறு கையிலும் தூக்கிக் கொண்டு எங்களை நோக்கி ஓடி வந்தாள் அவள். தலைமுடி பல வாரங்கள் தண்ணீர் காட்டாமல் பிசுக்கேறியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்ந்திருந்த அழுக்கு அவள் மேனியில் பாசியாய்ப் படர்ந்திருந்தது. என்றோ ஒருநாள் மஞ்சள் நிறத்தில் இருந்திருக்க வேண்டிய புடவையை உடம்பில் சுற்றியிருந்தாள். குளித்துச் சுத்தமாய் வந்தால் அழகியாகவே இருந்திருப்பாள். இவளின் சிறு வயது உருவமாய் அந்தக் குழந்தை. கம்புக்கூட்டில் பெரிதாய்க் கிழிந்திருந்த கருப்பு கவுன் அணிந்திருந்தது. மூக்கிலிருந்து வழிந்த சளியோடு கட்டை விரலையும் சப்பியவாறு எங்களை வெறித்துப் பார்த்தது.

“பொஸ்தகம் வாங்கிக்கோங்கக்கா.. இருவது ரூபாதான்..”

தமிழ் அவள் நாவுக்கு இன்னும் பழகியிருக்கவில்லை. அவள் நீட்டிய புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். சின்னப் பிள்ளைகள் கலரிங் செய்யும் புத்தகம். விலை பத்து ரூபாய் என்றிருந்தது.

“இதுல பத்துன்னு விலை போட்டுருக்கே?”

“வவுத்துப் பசிக்குக்கா.. ஒரு ஏளைக்கு உதவி செய்க்கா.. பிள்ளைக்குப் பால் வாங்கக் கூட காசில்லேக்கா..”

அவள் இரக்கத்தைக் கறக்கும் பொதுவான வார்த்தைகளை மனப்பாடம் செய்தது போல் ஒப்பித்தாள்.

பிரேமாவிற்கு இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.

“என்னடி இவ கூட பேசிட்டு இருக்க.. எல்லாம் ஏமாத்துற கேஸ்ங்க.. ஒருத்தன் மொத்தமா இதுங்க எல்லாத்துக்கும் இப்படிப் புத்தகம் வாங்கிக் கொடுத்துப் பிச்சை எடுக்க விடுறான். இந்த பஸ் ஸ்டாப் பக்கந்தான் எப்பவும் சுத்திக்கிட்டு இருப்பான். அந்தப் பிள்ள கூட அவளுதா இருக்காது பாரேன்..”

உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று அவளைக் கேட்க முடியாது. நாங்கள் வேலை பார்க்கும் கடையின் முதலாளி எந்த அரசியல்வாதியின் பினாமி என்பதில் தொடங்கி ரோட்டோர ஃபிராடுகளின் சரித்திரம் வரையில் அனைத்தும் தனக்கு அத்துபடி என்பதாய்ப் பேசுவாள். சில சமயங்களில் அவை உண்மையாகவும் இருப்பதுண்டு.

“ஐயோ.. சத்தியமா எம் பிள்ளைக்கா.” அவள் பிள்ளையின் தலையில் கை வைத்துக் கூறினாள்.

“சத்தியத்துக்கெல்லாம் அஞ்சுற ஆளா நீங்க.. மோகனா சீக்கிரம் வாடி.. கிளம்பலாம்”. என் கையைப் பிடித்து இழுத்தாள் பிரேமா.

அந்தக் குழந்தைக்கு எங்களின் உரையாடல் ஏதோ விளையாட்டு போல் தெரிந்திருக்க வேண்டும். விரலை எடுக்காமல் ஈறுகள் தெரிய சிரித்தது. எனக்கு என் அக்கா மகள் ஸ்ருதியின் ஞாபகம் வந்தது. இந்தப் பெண் ஏமாற்றுக்காரியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். இந்தக் குழந்தை என்ன செய்தது ஏழைக்கு மகளாய்ப் பிறந்ததைத் தவிர.

நான் ஹான்ட் பாக்கைத் திறந்து பத்து ரூபாயை எடுத்து அவளிடம் நீட்டினேன்.

“புக் எல்லாம் வேணாம்… சும்மா வச்சுக்கோ.”

அவள் அதை வாங்க ஆசையோடு கைநீட்டினாள்.

“எதுக்குடி நீ சும்மா கொடுக்குற..” என்று இடையில் புகுந்த பிரேமா அவளிடம் திரும்பி,

“ஏய் இந்தப் பத்து ரூபாய வாங்கிக்கிட்டு ஒரு புக்கக் கொடு” என்று அதட்டினாள்.

அவள் சட்டெனப் புத்தகக் கட்டை இறுகப் பற்றிக் கொண்டாள்.. .

“இல்லக்கா .. பொஸ்தகம் இருவது ரூபா.”

“அதனாலென்ன.. பத்து ரூபாய்க்குத் தா…”

“இல்லக்கா.. முடியாதுக்கா.. இருவது தாங்க கொடுக்கிறேன்.” அவள் தயக்கத்தோடு சொன்னாள்.

அவளின் கீழ்ப்படியாமை பிரேமாவிற்கு ஆத்திரத்தை வரவழைத்தது.

“நீ வாடி சீக்கிரம். கண்ட கண்டதுங்களோட நின்னு நேரத்தை வீணடிச்சுக்கிட்டு.. இப்படிதான் புக் விக்குறேன் சீப்பு விக்குறேனு சொல்லிட்டு சமயம் கிடச்சா நம்ம பர்ஸ அடிச்சுட்டுப் போய்டுவாளுங்க.”

அவளின் கடைசி வாக்கியம் வேலை செய்தது. நான் கையிலிருந்த பத்து ரூபாயைப் பைக்குள் திணித்துவிட்டு அவளைப் பார்த்தேன். அந்த முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை. அவள் திரும்பவும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. எனக்குச் சிறிது ஏமாற்றமாகிவிட்டது. பிரேமா என் கைகளைப் பிடித்து ஹோட்டலுக்குள் இழுத்துச் சென்று விட்டாள்.

அன்று பிரேமா மட்டும் முன்னூற்றிப் பத்து ரூபாய்க்குச் சாப்பிட்டாள். பில்லுக்குப் பணம் கொடுக்கும் போது அந்தக் குழந்தையின் எண்ணை வழிந்த முகம் மனதிலாடியது. வேறு ஏதாவது சந்தர்ப்பத்தில் பிரேமா இல்லாத நேரமாய்ப் பார்த்து அவளுக்கு அந்தப் பத்து ரூபாயைத் தந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

ன்றைய தினத்திற்குப் பின் பிரேமா பலமுறை என் கையைக் கடித்து வயிற்றை ரொப்பிக் கொண்டாள். கஸ்டமர்கள் அதிகம் இல்லா நாட்களில் கடையின் கண்ணாடிச் சுவற்றின் வழி கவனித்ததுண்டு. அந்தப் பெண் இன்னும் இதே தெருவில் தான் கையில் குழந்தையோடு கடந்து செல்பவர்களிடம் ஓடி ஓடிப் போய் புத்தகம் விற்றுக் கொண்டிருக்கிறாள். அன்று பார்த்ததை விடவும் அந்தக் குழந்தை மெலிந்திருக்கிறது. எனக்குதான் அந்தப் பத்து ரூபாய் தரச் சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை.

கல்கியில் வெளிவந்த கதை

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -