அப்பத்தா

சிறுகதை

- Advertisement -

நான் தான் திவ்யா ‘கே ஒன்’ படிக்கிறேன். எனக்கு அப்பத்தாவைத் தான் ரொம்பப் பிடிக்கும். அவங்க தான் தினமும் என்கூட விளையாடுவாங்க. அம்மா எப்போ பார்த்தாலும் கம்ப்யூட்டர் முன்னாடியே உட்காந்திருப்பாங்க. அதுல ஏதேதோ படிக்கட்டுப் படிக்கட்டா மேலையும் கீழையும் ஓடும். அப்பாக்கு ஃபோன் பண்ணி “இறங்கிருச்சுங்க வாங்கிறவா?” “ஏறிருச்சுங்க வித்துரவா?” கேட்டுக்கிட்டே இருப்பாங்க. 

அப்பா காலைல எழுந்து கிளம்பி அப்பத்தா போட்டோ முன்னாடி நின்னு சாமி கும்பிட்டுட்டு ஆபிஸ் போய்டுவாரு. அம்மா எனக்கு சாப்பாடு குடுக்குற நேரம் போக மிச்ச நேரத்துல எல்லாம் அந்தப் படிக்கட்டவே பாத்துகிட்டு இருப்பாங்க. என்னமோ ‘கேம்’ போல. அவங்களுக்கு அதான் பிடிக்கும். அப்பத்தாவுக்கும் அது என்னன்னு புரியவேயில்லை. 

எங்க வீட்டுக்குள்ளயே சறுக்கு, சீசா, ஊஞ்சல் எல்லாம் இருக்கு தெரியுமா? ஏ.பி.சி.டி ரப்பர் ஷீட் வச்சு சுவரு கட்டி அதுக்குள்ள எல்லா பொம்மையும் இருக்கும். டோரா, ஸ்பைடர்மேன், டைனோசர், டாக்டர் செட், பார்பிடால் செட், கிச்சன் செட் எல்லாமே இருக்கு. நாங்க வெளில போறப்போ எப்பவுமே ஒரு ‘டாய்’ வாங்கித் தருவாங்களே. ஆனால் விளையாடக் கூப்பிட்டா மட்டும் வரவே மாட்டாங்க. 

அப்பத்தா தான் எப்பவும் என்கூட விளையாடுவாங்க. அப்பாவுக்கு லீவுன்னா அப்பத்தா வரமாட்டாங்க. அப்பாகூட விளையாடுவேன். 

எங்க அப்பாவுக்கு நாலு மாடு ஒரு சிங்கம் கதை கூடத் தெரியல நான் தான் சொன்னேன். 

“யாருடாச் செல்லம் உனக்கு இந்தக் கதை சொன்னது?” 

“அப்பத்தா தான்பா சொன்னாங்க” 

“அப்படியா! வேற என்ன சொல்லிக் கொடுத்தாங்க” 

“டாக்டர் செட்ட வச்சு ஊசி போட, காபி போட…. உங்களுக்கு காபி வேணுமாப்பா?” 

“போட்டுக்குடு பார்ப்போம்” 

என்னோட கிச்சன் செட் எடுத்து அதுல டம்ளர் இருந்துச்சு. “அப்பா உங்களுக்குப் பீட்சா வேணுமாப்பா?” 

“எல்லாத்தையும் குடு” 

“சரி அப்போ உங்களுக்கு ஒரு சிக்கன் ரைஸ்… இந்தாங்க” 

அப்பா அந்த தட்டுல இருந்து எடுத்து அபுக்கு அபுக்குன்னு சாப்ட்டாரு. ஹிஹி… எனக்கு அவரு சாப்பிடுறதைப் பார்த்தாச் சிரிப்பா வருது. 

அடுத்த நாள்ல இருந்து அப்பத்தா வர ஆரம்பிச்சுட்டாங்க. ஆனால் இப்போ எல்லாம் அம்மா “ஏய் என்ன? எப்பப்பார்த்தாலும் அப்பத்தா அப்பத்தான்னுக்கிட்டு. அவங்க சாமிகிட்ட போய்ட்டாங்க. புரியுதா?” அவங்க என்னைத் திட்டுறப்போல்லாம் அப்பத்தா அவங்களை முறைச்சுப் பார்ப்பாங்க. ஆனால் நான் அதை அம்மாகிட்டச் சொல்ல மாட்டேன். 

“என்னங்க இவ எப்போப் பார்த்தாலும் அப்பத்தா அப்பத்தான்னு தனியாப் பேசிக்கிட்டு இருக்கா.” அப்பாக்கிட்ட அம்மா சொன்னாங்க. 

“சின்னப்பிள்ளை தானே, விளையாடிக்கிட்டு இருந்திருப்பா விடு” 

“எனக்குத் தெரியாதா அவ விளையாடுறாளா? இல்லையான்னு?” அம்மா கோவமா கத்துனாங்க. 

“சரி இப்போ என்ன பண்ணனும்ங்கற?” 

“டாக்டர்ட்ட போகணும்” 

டாக்டர் அங்கிள எனக்கு ரொம்பப் பிடிக்கும். மிக்கிமவ்ஸ் பொம்மை வச்சிருப்பாரு. கொஞ்ச நேரம் கைல குடுத்துட்டு அப்பறம் வாங்கிடுவாரு. 

“குழந்தைங்க உலகம் ரொம்பச் சின்னது. பெரியவங்க மாதிரிப் பேசுவாங்க ஆனால் நம்மள மாதிரிச் சிந்திக்கவோப் புரிஞ்சுக்கவோ முடியாது. அவங்களுக்கு உயிரில்லாத பொம்மைங்க மட்டும் பத்தாது. சில உயிருள்ள பொம்மைகளும் தேவை. அப்பா அம்மாவவிட நல்ல பொம்மை இந்த உலகத்துல இருக்கா? ஒருவேளை உயிர்ப்பொம்மை கிடைக்கலைன்னா கற்பனைல தேட ஆரமிச்சுருவாங்க. மாத்திரை தரேன் குடுங்க. அடுத்த வாரம் வந்து பாருங்க.” 

“பை…பை…குட்டி…” 

“பாய் டாக்டர் அங்கிள்” 

இந்த மாத்திரை பிடிக்கவேயில்லை. இதைச் சாப்பிட்டா அப்பத்தா வரவே மாட்றாங்க. ச்சீக் கசக்குது. துப்பிறப் போறேன். 

இப்போல்லாம் அம்மா படிக்கட்டைப் பாக்குறதே இல்லை. என்கூட விளையாடுறாங்க. வெளிலக் கூட்டிட்டு வந்திருக்காங்க. ஸ்லைட்ல ஏறிச் சறுக்கிட்டு இருக்கேன் அம்மா உட்காந்து ஃபோன் பார்த்துக்கிட்டு இருக்காங்க. 

மஞ்சக் கலர்ப்பூ அப்பத்தாவுக்கு ரொம்பப்பிடிக்கும். ஐ! நிறையப் பூ இருக்கு. வெள்ளைக் கலர்ப்பூ கூட இருக்கு. 

“ஏய் இங்க என்னடி பண்ற? கண்ட நோயெல்லாம் ஊருக்குள்ள பரவிட்டு இருக்குன்னு சொல்றாங்க. நீ குப்பையைப் பொறுக்கிட்டு இருக்க. கீழ போடு” அம்மா அதட்டுனாங்க. 

“இல்லமா இது அப்பத்தாவுக்கு” 

நான் சொல்லி முடிக்கிறதுக்குள்ள வேகமா அம்மா கைல இருந்த பூவெல்லாம் தட்டி விட்டுட்டாங்க. “பைத்தியம்… நல்லா ஆயிட்டன்னு நினைச்சேன். மறுபடி அப்பத்தா புராணத்தை ஆரமிக்கிற. அவங்கச் செத்துப்போயிட்டாங்க… புரியுதா?” 

எனக்கு அழுகை அழுகையா வந்துச்சு. என்னோட பூவெல்லாம் கீழ கெடக்கு. அம்மா என்னைத் தூக்கிட்டு வேகமா லிப்ட்டுகிட்ட வந்துட்டாங்க. அவங்க கண்ணுலயும் தண்ணி வருது. “சாரிமா… சாரிமா…” நான் தான் தப்பு பண்ணிட்டேன். அம்மா பாவம். “சாரிமா… சாரிமா…” நான் அழுதுக்கிட்டே இருந்தேன். 

“சாரிடா செல்லம். சாரிடா… அம்மா தான்டா உன்கிட்ட சாரி சொல்லணும். அம்மா தெரியாம கோவப்பட்டுடேன் டா. எல்லாம் அந்தக் கிழவியோட ஃபோட்டோ அங்க இருக்கதால தான். அதைத் தூக்கி உள்ள வைக்கணும். உங்க அப்பாவ வேற எங்கயாவது வச்சு கும்பிடச் சொல்லிக்குவோம்.” 

வீட்டுக்குப்போன கொஞ்ச நேரத்துலையே நான் தூங்கிட்டேன். வெளில அம்மா படிக்கட்டைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நான் அங்க போனேனா, அப்பத்தா ஃபோட்டோ முன்னாடி அந்த மஞ்சள் வெள்ளைப் பூவெல்லாம் இருந்துச்சு. 

“அம்மா இதை யாருமா கொண்டுவந்து வச்சாங்க?” 

“ம்ம்ம்… உங்க அப்பத்தா” சொல்லிட்டு அம்மா சிரிச்சுக்கிட்டே கையை நீட்டுனாங்க. நான் ஓடிப்போய் அவங்க மடில ஏறி உட்காந்துக்கிட்டேன். 

கம்ப்யூட்டரை அவங்க ‘சட்டவுன்’ பண்ணுனாங்க… 

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -