சகடக் கவிதைகள் – 33

உளவாளி

- Advertisement -

உளவாளி

யாருக்கும் தெரியாமல்
தவறுகள் பல செய்தேன்

யாரிடமும் பகிர்ந்ததில்லை
யாரையும் நம்பியதில்லை

பாதகம் செய்தவன் யாரேனும்
பகிரங்கமானால்
ஊரோடு சேர்ந்து
உடனே கல்லெறிவேன்

தவறுகளைத் தட்டிக் கேட்பதில்
தன்னைப் போல் யாரும் உண்டோ?
என்றெண்ணி கர்வம் கொள்வேன்

தீர்ப்பு சொல்வதில்
தீரத்துடன் செயல்படுவேன்

இதயத்தில் தராசு முள்
எப்போதும் வீற்றிருக்க
எடைபோடும் இன்பம்
என் சித்தத்தில் ஊறியதாம்

பிறர் புகழ ஓர் முகத்தை
பிறப்பிலிருந்தே அணிந்துகொண்டேன்

எது சரி? எது தவறு?
எது நீதி? எது நியாயம்?

என் திசை நோக்கினால்
எல்லாம் விளங்குமென்பேன்

என்னை எடைபோட
எவனுமிங்கு பிறக்கவில்லை

என் புகழின் உயரம் அறிய
எந்த அளவுகோலுமில்லை

பூமியின் நிலம் தீரும் வரை
ராஜ்ஜியங்கள் பல வீழ்த்தியிருக்கிறேன்

குருதிக் கடல் பொங்கும் வரை
போர்கள் பல நிகழ்த்தியிருக்கிறேன்

எங்கிருந்தோ எதிரிகள்
வெட்ட வெட்ட
முளைக்கிறார்கள்

பற்றிய கத்தியை மட்டும் – நான்
கீழே வைப்பதாய் இல்லை

எத்துணை வென்றாலும் சலித்ததில்லை
எத்துணை தோற்றாலும் விரக்தியில்லை

செல்வங்களை இட்டு வைக்க
கஜானாக்கள் போதவில்லை

உண்டு களித்த ஓர் உணவை
மீண்டும் உண்ண நேரமில்லை

எல்லையற்ற வகைகளில்
எண்ணற்ற வண்ணங்களில்
காலம் காலமாய் நான்
போடாத வேடமில்லை

ஆனாலும் ஒருவன் மட்டும்
எளிதாய் என்னை
கண்டுகொள்கிறான்

எனக்கே மறந்துபோன
என் ரகசியம் அத்தனையும்
என் காதருகே விடாமல் சொல்லி
எக்காளமாய்ச் சிரிக்கிறான்.

அவன் முன் மட்டும்
அடங்கிப் போய் நிற்கிறேன்

தாங்கள் யாரென்று
தாழ்மையோடு கேட்கிறேன்

கண்ணாடியில் காணும் வரை
உன்னையே கண்டு பெருமை கொள்வாய்
கண்களை மூடித் தேடினால் மட்டுமே
என்றேனும் என்னை அறிவாய்
அசரீரியின் உருவம் தேடி
ஆவலாய்க் கண்களை மூடினேன்

வாளேந்தி சண்டையிட
வரிசையாய் வந்து நிற்கிறார்கள்

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -