சகடக் கவிதைகள் – 31

- Advertisement -

நரகத்தில் சிந்திய செல்லாக்காசுகள்

குத்தும் ஈட்டிகளைப் போல்
கூரான மரங்களைக் கொண்ட
கானகம் ஒன்றில்
காத்துக்கிடந்தேன்

எங்கிருந்தோ வீழும்
பெயர் தெரியா ஜீவன்கள்

எங்கு பார்த்தாலும்
கதறலும் அலறலுமாய்

எங்கோ யாருக்கோ
மன்னிப்புக் கேட்டபடி
கெஞ்சும் சில குரல்கள்

தன்னைத் தானே
சபித்தபடி சில குரல்கள்

தாங்க முடியா தாகத்தால்
தன் குருதியையே குடித்து

கிழிந்து தொங்கும்
சதைகளை கட்டிச் சேர்த்திழுத்து

அங்கும் இங்குமாய்
அலையும் இலக்கற்ற
அடிமைகளைக் கண்டு
அவர்களின் பால் பரிவு கொண்டு
அருகே சென்று நின்றேன்

திடுக்கிட்ட ஜீவன்கள்
திடீரென்று ஓலமிட்டன
தன் நிலை மறந்துபோய்
என் நிலை கீழென பழித்து
எள்ளி நகையாடின

இது எங்கள் இடம்
இது எங்கள் சொத்து
வெளியே போ
ஒழிந்து போ

கூக்குரல் இட்டபடி
கூடிய கூட்டத்தைக் கண்டு

அன்பெனும் பொற் காசுகளை
அவர்கள் மேல் வீசிப் பார்த்தேன்
ஆரவாரங்களால் அவை
காணாமல் போயின

அமைதியாய் விலகி நடந்தேன்
மீண்டும் அழுகுரல்களும் ஓலங்களும்
மீளாத்துயரமும்
ஒரு விருப்பம்தான் போலும்

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -