கினோ

நூலாசிரியர் - ஹருகி முரகாமி

- Advertisement -

கினோ – ஹருகி முரகாமி
தமிழில் – ஸ்ரீதர் ரங்கராஜ்
வெளியீடு – எதிர் வெளியீ
பக்கங்கள் – 312

உலகம் முழுவதும் தனக்கென தீவிர வாசக வட்டத்தை வைத்திருப்பவர் ஹருகி முரகாமி. அவரது புத்தகங்கள் வெளியீடு காணும் போது அவரது ரசிகர்கள் புத்தகக்கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் நின்று அவரது புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். தனது ஒவ்வொரு படைப்பிலும் சோதனை முயற்சிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டவர் ஹருகி. அவரது தனித்த மொழிநடையும், மாய யதார்த்தவாதத்துடன் அவர் பின்னும் சிக்கலான கதையமைப்பும் படிப்பவரைக் கட்டிப்போடக் கூடியவை. வாசிப்பவரிடம் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும் அவரது நாவல்களுக்குச் சற்றும் குறைந்தது அல்ல அவரது சிறுகதைகள். புகழ்பெற்ற அவரது சில சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்.

கினோ

விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த கினோ, அதிகம் பேசாதவன். இயல்பாக யாருடனும் பழகும் தன்மையற்றவன். தனது மனைவி இவனுடன் வேலை செய்யும் ஒருவனோடு இருப்பதைப் பார்த்த பின், பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிடுகிறான். அயோமா பகுதியில் இருக்கும் தனது பெரியம்மாவின் காஃபி நிலையத்தை எடுத்து ஒரு மதுக்கூடத்தை நிறுவுகிறான். அந்தப் பகுதி அதிக மக்களை ஈர்ப்பதாய் இல்லை. ஆனாலும் ஒருநாள் அவனது மதுக்கூடத்தின் ஒரு மூலையில் இள சாம்பல் நிறப் பூனை ஒன்று வந்து தங்கத் தொடங்குகிறது. அவனது கடைக்கு ஒவ்வொருவராக வாடிக்கையாளர்கள் வரத் தொடங்குகிறார்கள். கடை வாடகையை அந்த மதுவிடுதி சம்பாதித்துக் கொள்கிறது.

அவனுக்கும் அவன் மனைவிக்கும் விவாகரத்து முடிவாகிறது. கினோ அவன் விடுதிக்கு வரும் ஒரு பெண்ணோடு உறவு கொள்கிறான். அவள் உடம்பு முழுவதும் சிகரெட்டால் சுடப்பட்ட தழும்புகள் இருக்கின்றன. சில நாட்களுக்குப் பிறகு அங்கிருந்த பூனை எங்கோ ஓடிவிடுகிறது. அவனது மதுக்கூடத்தின் அருகே பாம்புகள் தென்படத் தொடங்குகின்றன.

அங்கே கமிதா என்ற பெயர் கொண்ட ஒரு இளைஞன் அடிக்கடி வருகிறான். எப்போதும் அமைதியாக அமர்ந்து மதுவருந்திக் கொண்டே ஒரு புத்தகத்தைப் படித்து கொண்டிருக்கும் அவன் ஒரு சிறு கலகத்திலிருந்து கினோவையும் அவனது மதுக்கடையையும் காப்பாற்றுகிறான். பிறகு ஒருநாள் கினோவிடம் வந்து அவன் அந்த மதுக்கூடத்தை மூடிவிட்டு சில நாட்கள் தொலைதூரம் சென்றுவிடச் சொல்லுகிறான். எந்த இடத்திலும் அதிக நாள் தங்க வேண்டாம் என எச்சரிக்கிறான். நிலைமை சரியானவுடன் தானே கினோவைத் தொடர்பு கொள்வதாகக் கூறுகிறான். கினோவும் மதுக்கடையை மூடிவிட்டு வேறு இடத்தில் சென்று தங்குகிறான். அந்த வெளித்தங்கல் அவனுக்குச் சில உண்மைகளைப் புரிய வைக்கிறது. அதுவரை அவன் விலகி ஓடிக் கொண்டிருந்த விஷயங்களை நோக்கி அவனைத் திருப்புகிறது. வெறுமை நிரம்பியிருந்த அவனது இதயத்தைத் தங்கள் வசம் எடுத்துக் கொண்ட பாம்புகள், தங்களது குளிர்ச்சியான இதயங்களை அங்கே வைப்பதைப் புரிந்து கொள்கிறான்.

கினோ என்பதற்கு ஜப்பானிய மொழியில் ‘நேற்று’ என்று பொருள். தனது நேற்றைய வாழ்விலிருந்து வெளியே வராமல் அதன் கதகதப்பிலேயே அமிழ்ந்து போய்க் கொண்டிருக்கும் ஒருவனை நிதர்சனம் நோக்கித் திருப்புவதுதான் கதை. கதையில் வரும் பூனை, கமிதா, பாம்புகள் அனைத்துமே கினோவின் மனத்திலிருந்து தோன்றியவையே. அவனுக்குள் இறுகிக் கிடக்கும் உணர்வுகளை வெளிவரச் செய்கின்றன.

நகரும் சிறுநீரக வடிவக்கல்

“ஒரு ஆண் தன் வாழ்நாளில் சந்திக்கும் பெண்களில் மூன்று பேர் மட்டுமே அவனுக்கு அர்த்துமுள்ள உறவாக, முக்கியமானவர்களாக இருப்பார்கள். அதற்கு அதிகமும் இல்லை, குறைவாகவும் இல்லை”அதிகம் நெருக்கமில்லாவிட்டாலும் தனது தந்தை, பதினாறு வயதில் தந்த இந்தத் தத்துவம்தான் ஜூன்பேயைப் பெண்கள் விஷயத்தில் கொண்டுசெலுத்துகிறது. அவன் பழகும் முதல் பெண்ணுடனான உறவு தோல்வியில் முடிகிறது. பிறகு எழுத்தாளனாக மாறும் அவன், தன்னை விட மூத்தவளான கிர்ரீயைச் சந்திக்கிறான். அவளைப் பற்றிய தகவல்களை அவள் சிறு குறிப்புகளாகவே அவனுக்குத் தருகிறாள். தன்னால் ஒரு முழுமையான உறவில் அன்றாடம் உழல முடியாது, அது தன் வேலையின் சம நிலையைக் குலைக்கும் என அஞ்சுவதாக அவள் கூறுகிறாள்.

கிர்ரீயின் வற்புறுத்தலால் தான் எழுதிக் கொண்டிருக்கும் சிறுகதையை அவளிடம் விவரிக்கிறான். அந்தக் கதையில், இளநிலை மருத்துவரான பெண்ணொருத்தி அவளுடன் வேலை செய்யும் திருமணமான அறுவை சிகிச்சை நிபுணருடன் உறவிலிருக்கிறாள். அவள் ஒரு பயணத்தின் போது, கருநிறத்தில் சிவப்பு கலந்த, வழவழப்பான சிறுநீரக வடிவமுடைய ஒரு கல்லைக் கண்டெடுக்கிறாள். அவள் அதனை எடுத்து வந்து, தாள் இருத்தியாகப் பயன்படுத்துகிறாள். சில நாட்களில் வினோதமான ஒன்றைக் கண்டுபிடிக்கிறாள். ஒவ்வொரு நாள் காலை அவள் வேலைக்கு வரும்போதும் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கல் வெவ்வேறு இடங்களில் இருக்கிறது. அது அவ்வாறு நகர்ந்து செல்வதன் காரணம் அறியாமல் குழம்புகிறாள். இந்த இடத்திலேயே ஜூன்பேயின் கதை நிற்கிறது.

“ஒரு நீண்ட காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அது அவளை அசைக்கப் பார்க்கிறது.” என்று கிர்ரீ கூறிய வரிகளில் இருந்து அவன் மீதமுள்ள கதையை எழுதி முடிக்கிறான். ஆனால் அதற்குள் கிர்ரீ அவனுடன் தொடர்பற்றுப் போகிறாள். அவளைத் தொடர்பு கொள்ள அவன் எடுக்கும் முயற்சிகள் வீணாகின்றன. சில நாட்களுக்குப் பிறகு, அவளது பேட்டி ஒன்றை வானொலியில் கேட்கிறான். அவள் உயரமான இடத்தில் இருக்கும் சன்னல்களைச் சுத்தம் செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதை அறிந்து கொள்கிறான். அவள் மிகவும் நேசிக்கும் அவள் தொழிலுக்கும் அவளுக்கும் நடுவே தான் செல்ல முடியாது என்பது அவனுக்குப் புரிகிறது. அவளைத் தன் பட்டியலில் இரண்டாவதாக வைத்துவிட்டு அடுத்த உறவிற்காகக் காத்திருக்கிறான். அதுவே முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொள்கிறான். ஒருநாள் அந்த இள மருத்துவரின் சிறுநீரக வடிவக்கல் காணாமற் போவதோடு கதை முடிகிறது.

கதைக்குள் வரும் அந்தக் கதை, மையக் கதையின் கதாபாத்திரத்தின் எண்ணப் போக்கையே மாற்றிவிடுகிறது. அதுவரை ஜூன்பேயை அழுத்திக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் இருந்து விடுதலையைத் தருகிறது அவன் சிறுகதையில் வரும் கல்.

டோனி தகிதானி

பிறந்த சில நாட்களில் தாயை இழக்கும் டோனி தகிதானி, தந்தையின் புறக்கணிப்பிற்கு ஆளாகிறான். பின் தந்தையின் நண்பரான ஒரு அமெரிக்க மேஜரால் டோனி எனப் பெயர்சூட்டப்படுகிறான். யாருடனும் அதிகம் பேசாத உள்ளடங்கிய குணம் கொண்ட அவன், சித்திரங்கள் வரைபவனாக வளர்கிறான். அவன் இயந்திரங்களை மிகவும் நுணுக்கமாக வரையும் திறன்பெற்றவன். சில காலம் கழித்து அவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். அவன் மனைவிக்கு அதிகப்படியான ஆடைகள் வாங்கிக் குவிக்கும் மனநோய் ஏற்படுகிறது. அவள் அறை முழுவதும் தேவைக்கும் அதிகமான ஆடைகளை வாங்கி அடுக்கிறாள். நிலைமை முற்றிப் போனதை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொள்ள அவள் எடுக்கும் கடைசி முயற்சியின் போது ஒரு விபத்தில் மரணமடைகிறாள். அவளின் ஆடைகளை அவள் விட்டுச் சென்ற நிழலாகப் பாவிக்கிறான். மனித இருப்பில் முடிவிலியாக நீளும் சாத்தியங்கள் அவை என எண்ணுகிறான். சில நாட்களிலேயெ அந்த ஆடைகளை அவன் வெறுக்கத் தொடங்குகிறான். அவன் தவிர்க்க நினைத்த தனிமை இளஞ்சூட்டிலிருக்கும் திரவம் போல அவனை மெதுவாக நிறைக்கத் தொடங்குகிறது.

ஷெஹரசாத்

வீட்டை விட்டு வெளியேற முடியாத கட்டாயத்திலிருக்கிறான் ஹபாரா (என்ன காரணம் என்பதை ஹாருக்கி நமக்குக் கடைசி வரை சொல்வதில்லை). அவனுக்குத் தேவையான மளிகை சாமான், உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுக்க ஒரு பெண் வருகிறாள். அவனது உடல் தேவையையும் சேர்த்தே அவள் கவனித்துக் கொள்கிறாள். கலவி முடிந்த ஒவ்வொரு முறையும் அவனுக்காக ஒரு கதை சொல்கிறாள், ஆயிரத்தோரு இரவுகள் கதையில் வரும் ராணி ஷெஹரசாத் போல. அவள் உண்மையான பெயர் தெரியாததால் அதையே அவள் பெயராகக் கொள்கிறான் ஹபாரா. அதை யாரும் புரிந்துகொள்ள முடியாத குறியீட்டுச் சொற்களாகத் தனது டைரியில் குறித்து வைக்கிறான். ஒவ்வொரு முறை கதை சொல்லும்போதும் ஒரு முக்கியமான கட்டத்தில் கதையை நிறுத்திவிட்டு அவள் கிளம்பிவிடுகிறாள். கதை பிறகு என்னானது என்ற தவிப்பிலேயே அவன் அவளை அடுத்துப் பார்க்கும்வரைக் கழிக்கிறான் (கதையின் முடிவில் நம்மையும் அதுபோன்றே அந்தரத்தில் தவிக்க விட்டுவிடுகிறார் முரகாமி).

இருவருக்குமிடையே உணர்வுப்பூர்வமான பந்தம் எதுவும் இல்லாவிட்டாலும் அவளது கதைகளால் அவன் பெரிதும் ஈர்க்கப்படுகிறான். தான் முற்பிறவியில் ‘ஆரால்’ ஆக (விலாங்கு போல நன்னீர் அல்லது கடல்வாழ் உயிரி) இருந்ததாகக் கூறுகிறாள். உணவை உறிஞ்சிக் கொள்கிற அமைப்பு மட்டும் கொண்ட ஆரால்கள், பாறைகளில் ஒட்டிக் கொண்டு நீர்த்தாவிரம் போல ஆடிக்கொண்டிருக்கும். ஏதேனும் மீன் அதன் மேல் செல்லும்போது அவற்றின் மீது பாய்ந்து, தன் உறிஞ்சியால ஒட்டிக் கொள்ளும். அதற்குள் இருக்கும் பற்கள் கொண்டு, இரையின் வயிற்றுப் பகுதியில் துளை உருவாகும்வரை முன்னும் பின்னும் உராய்ந்து, பின் கொஞ்சம் கொஞ்சமாகச் சதையைத் தின்னத் தொடங்கும்.

யாருடைய துணையும் தனக்குத் தேவையில்லை நான் ஒரு பாலைவனம் போன்றவன் என நம்பும் ஹபாராவை அசைத்துப் பார்க்கின்றன அவளின் கதைகள். இறுதியில் அவனே ஒரு ஆரால் ஆக மாறி தனக்கு மேல் செல்லவிருக்கும் மீனுக்காகக் காத்திருக்கிறான்.

இரும்புத்துண்டுடன் ஒரு நிலக்காட்சி

கேளிக்கைத் தீ மூட்டுவதில் மிகவும் தேர்ந்தவனான மியாகேயின் நட்பு ஜூன்கோவிற்குக் கிடைக்கிறது. அந்த நகரத்தில் வேறு எந்தக் கடற்கரையை விடவும் அதிக கட்டைகள் கிடைப்பதாலேயே அவன் அந்நகரத்தில் குடியேறியுள்ளான். ஓரிரவு, அதிக கட்டைகள் கரை ஒதுங்கியுள்ளதாகக் கூறி ஜுன்கோவை அழைக்கிறான் மியாகே. தனது ஆண் நண்பனோடு அங்கு அவள் செல்ல, மூவரும் மியாகே மூட்டிய கேளிக்கைத்தீயில் குளிர் காய்கிறார்கள். ஜூன்கோவின் நண்பன் விரைவில் கிளம்பிவிட, மியாகேயும் ஜூன்கோவும் தனித்துவிடப்படுகின்றனர். குளிர்பெட்டிக்குள் மூச்சித் திணறிச் சாகப் போவதாக எப்போதும் தான் கற்பனை செய்து கொள்வதாக மியாகே கூறுகிறான். அது பற்றிய கனவு ஒன்று அவனை துரத்தியபடி இருக்கிறது. தன்னிடம் இருப்பவை எல்லாம் வெளியேறித் தான் வெறுமையாகிவிட்டதாக ஜுன்கோ கூறுகிறாள். அதற்கு இருவரும் சேர்ந்து செத்துப் போகலாம் என யோசனை சொல்கிறான் மியாகே. ஆனால் எதுவாக இருந்தாலும் தாங்கள் மூட்டிய நெருப்பு அணையும்வரை அதற்குத் துணையாகத் தாங்கள் இருக்க வேண்டும் என்று அவன் கூறுவதை அவள் ஏற்றுக் கொள்கிறாள். நெருப்பு அணைந்ததும் எழுப்புவதாக அவன் கூற, அவள் ஆழ்ந்து உறங்கிப் போகிறாள்.

ஹனலே விரிகுடா

நீர்ச்சறுக்கு விளையாடச் சென்ற மகனைச் சுறா மீன் கடித்து அவன் இறந்துவிட, அவனது உடலைப் பெறுவதற்காக ஹனலே விரிகுடா செல்கிறாள் சாச்சி. அவனது உடலை அங்கேயே தகனம் செய்துவிட்டு அந்த ஊரில் தன் மகன் சென்ற இடங்களுக்குச் செல்கிறாள். பிறகு அதையே வழக்கமாக்கிக் கொண்டு, வருடந்தோறும் அந்த ஊருக்கு வருகிறாள். அந்த இடமும் அதன் மக்களும் அவளுக்கு நன்கு பரிட்சயமாகிவிடுகின்றன. ஒருமுறை அவள் அங்கே செல்லும் போது இரு இளைஞர்களுக்கு உதவி செய்கிறாள். அவர்கள் அங்கே நீர்ச் சருக்கு விளையாட வந்திருக்கின்றனர். அவள் அந்த ஊர் பற்றிய தகவல்களைக் கூறி பாதுகாப்பான ஒரு விடுதியில் அவர்கள் தங்க ஏற்பாடு செய்கிறாள். அவளைப் பிறகு சந்திக்கும் அவர்கள், கடலில் ஒரு காலுடன் நீர்ச்சறுக்கு விளையாடும் ஒருவனைப் பார்த்ததாகக் கூறுகிறார்கள். அது தன் மகன்தான் என்பதை உணர்ந்து கொள்கிறாள் சாச்சி. ஆனால் அவள் கண்களுக்கு அவன் தெரியாமல் போனது பற்றி அவளுக்கு மிகுந்த துக்கம் உண்டாகிறது. அவள் நினைவில் ஹனலே விரிகுடா என்றும் நீங்காமல் இருந்துகொண்டே இருக்கிறது.

ஏழாவது மனிதர்

சிறுவயதில் தன்னோடு ஒரு சகோதரனைப் போன்று தான் அன்பு கொண்டிருந்த நண்பனின் சாவைத் தடுக்க முடிந்திருந்தும் பயத்தில் தான் மட்டும் தப்பியோடி உயிர் பிழைக்கிறான் அவன். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு குற்றஉணர்ச்சி அவன் மனத்தைச் சிறுகச் சிறுக அரித்தபடி இருக்கிறது. அவன் கடலின் பக்கமே செல்வதில்லை. அலைகள் அவனைப் பயமுறுத்துகின்றன. கடைசியாகத் தான் பார்த்த நண்பனின் உருவம் அவனைக் கனவுகளில் தோன்றி அலைக்கழிக்கிறது. பல வருடங்கள் கழித்து அந்தப் பயத்தை ஒருநாள் வெற்றி கொள்கிறான். அலைகள் பிறகு அவனைத் தொந்தரவு செய்வதில்லை.

தன்னியல்பான ஓர் உறுப்பு

ஐம்பத்தியிரண்டு வயதான தோகாய், ஒரு அழகு சிகிச்சை மருத்துவர். திருமணம் செய்து கொள்ளாதவர். ஆனால் பல பெண்களோடும் தொடர்பிலிருப்பவர். அவை நிரந்தரமாகிவிடாதவாறு கவனத்துடன் செயல்படுபவர். ஆனால் அவருக்கும் ஒரு பெண்ணின் மேல் காதல் வந்துவிடுகிறது. அவள் நினைவாகவே இருக்கும் அவர் அனோரெக்சியா எனும் நோய்க்கு ஆளாகி, உண்ணாமல் இருந்து இறந்து போகிறார். இதை அவரது காரியதரிசி மூலம் அவருக்கு மிகவும் நெருக்கமான எழுத்தாளருக்குத் தெரிந்து கொள்கிறான். அவர் தன்னிடம் இறுதியாகச் சொல்ல நினைத்த விஷயம் பற்றிய தெளிவு, அவர் அவனுக்காக விட்டுச் சென்ற பொருளின் மூலம் தெரிய வருகிறது.

எதேச்சையின் பயணி

எதேச்சையான சம்பவங்கள் எவ்வாறு அர்த்தமுள்ள சில சம்பவங்களுக்கு வழிவகுக்கின்றன என்பது பற்றிய கதை. தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளன் என்பது தெரிந்ததும் வீட்டில் ஏற்படும் குழப்பங்களால் வீட்டை விட்டு வெளியேறி வாழும் ஒருவனுக்குத் தற்செயலாக ஒரு பெண்ணின் நட்பு கிடைக்கிறது. அவளுடனான கடைசி சந்திப்பின் போது அவள் காதிற்குப் பின் இருக்கும் மச்சம் அவன் சிறு வயதிலிருந்து நெருக்கமான பிணைப்பு கொண்ட அவனது சகோதரியை நினைவூட்டுகிறது. பத்து ஆண்டுகளுக்கு மேல் அவளுடன் தொடர்பற்று இருப்பவன், அன்று அவளைத் தொலைபேசியில் அழைக்கிறான். வாழ்வின் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருக்கும் அவன் சகோதரியும் அவனும் சந்தித்துத் தங்களது நெருக்கத்தை மீட்டெடுக்கின்றனர்.

நீ என் காரை ஓட்டலாம்

காஃபுகு, மனைவியின் மறைவிற்குப் பிறகு தனியாக வாழும் நாடக நடிகர். அவரது ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுவிட்டதால் ஒரு பெண் ஓட்டுநரை நியமிக்கிறார். வினோதமானவளாகத் தென்படும் அவளுக்கு, பிறந்ததும் இறந்து போன தனது குழந்தையின் வயதுதான் என்பதை அறிந்து அவருக்கு அவள்மேல் அன்பு ஏற்படுகிறது. தன் மனைவியின் மறைவிற்குப் பிறகு, அவளுடன் உறவில் இருந்த அவளது ஆண் நண்பனோடு தான் ஏற்படுத்திக் கொண்ட நட்பு பற்றி அவளிடம் பேசுகிறார். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவைப் பற்றித் தெரிந்துகொள்ள முயன்றவருக்குத் தன்னை பற்றிய உண்மையும் தெரிய வருகிறது.

முரகாமியின் அனைத்துக் கதைகளிலும் தனிமையே பின்னணியில் தொடர்கிறது. அவரது கதாநாயகர்கள் அனைவரும் சமூக வாழ்வைப் புறக்கணித்துத் தங்களின் ஓட்டுக்குள் சுருண்டு கிடக்கவே விரும்புகின்றனர். ஆனால் ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு வெவ்வேறு சுவாரஸ்யமான கதைகள் இருக்கின்றன. அவர்களை ரத்தமும் சதையுமாக நாம் அன்றாடம் காணும் மனிதர்களாகக் காட்டும் அதே வேளையில் அவர்கள் வாழ்வில் ஏதோ ஒரு புள்ளியில் மாயத்தன்மையைப் புகுத்திவிடுகிறார் முரகாமி. மனிதனின் ஆசை, கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து அவற்றைக் கதைகளில் கதாபாத்திரங்களாக உலவ விடுகிறார். அவரது தனித்த கதை சொல்லல் முறைதான் அவரது படைப்புகளை நோக்கித் திரும்பத் திரும்ப ஒரு வாசகனைக் கொண்டு செல்கிறது. தொகுப்பின் சிறுகதைகளை மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் ஸ்ரீதர் ரங்கராஜ். ஹருகியின் எளிமையைச் சற்றும் குலைக்காமல் தமிழில் கொண்டுவந்திருக்கிறார்.

வாசிப்பதற்கு அனைத்துக் கதைகளும் எளிமையானவையே. சிக்கலான வார்த்தை அலங்காரங்கள் எதுவும் கிடையாது. ஆனால் ஒவ்வொரு கதையிலும் ஹருகி எழுத்தில் இருக்கும் அனைத்தையும் உள்வாங்குவது எல்லா வாசகனுக்கும் சாத்தியமில்லை. சில கதைகள் தொட நினைக்கும் உணர்வுகளை நம்மால் சுலபமாக கண்டுகொள்ள முடிந்தாலும், பல கதைகள் நம்மைச் சுற்றலில் விட்டுவிடுகின்றன. எத்தனை முறை வாசித்தாலும் தங்களை முழுதாகத் திறந்து காட்ட விரும்பாத கதைகள்தான் அதிகம். சிறுகதைகள் குறித்த எனது புரிதல்களைத் தராமல் அவற்றின் மையத்தை மட்டும் இங்கே தந்ததற்கு அதுவே காரணம். வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவை வெவ்வேறு தரிசனங்களைத் தரக் கூடும். எப்படி இருந்தாலும், ஹருகியின் விசித்திர உலகில் பயணம் செல்ல விரும்புவோர் தவற விடக் கூடாத சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது.

-இந்துமதி மனோகரன்

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -