காதல் பூக்கள்

கவிதைகள்

- Advertisement -

ஆசைக் கனவுகள் ஆயிரம் சுமந்து
அடுக்கடுக்காய் வார்த்தைகள் கோர்த்து
கோர்த்த பூமாலையைக்
கண்களில் ஏந்திக் காத்திருக்கிறாள் …
அவன் வந்து வாசனை நுகரும்
அந்த நொடிக்காக!!

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

அவனது சட்டைப் பட்டனில் சிக்கி
செத்து மடிந்த
அவளது கூந்தல் முடி
சரித்திரத்தில் வாழ்ந்து
காதல் காவியமாகிவிடுகிறது!

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

வழியெங்கும் விழிப்பூக்களை
உதிர விட்டுவிட்டு
இலையுதிர் கால மரமாய்
வாசலிலேயே நிற்க வைப்பது
காதலின் ஒருவித வித்தையோ!

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

உன்னோடு சென்ற இடங்களுக்கு
செல்லும் போதெல்லாம்,
அவ்விடம் நிறைகிறது
நினைவு இலைகளால்…..
அவ்விலைகள்
தேடித் திரிகின்றன,
அன்று நம்மிடமிருந்து
உதிர்ந்த புன்னகைப் பூக்களை!!

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


என் அடிவயிற்றினில்
பல நூறு பட்டாம்பூச்சிகள்
உயிர்த்தெழ காத்துக்கிடக்கின்றன!
ஒரு துளியேனும்
தேன் சுரக்காதோவென
தொண்டைக்குழியும் நாவும்
வறண்டு காத்துக்கிடக்கின்றன!
என் செவிகள் இரண்டும்
பூங்கொத்தை ஏந்திக்
காத்துக்கிடக்கின்றன!
ஒரேயொரு முறை
உன் இதழ் உதிர்க்காதா
என் பெயரை என்ற ஏக்கத்தோடு!
போனால்போகட்டும்
பிறப்புக் கொடுத்துவிடு
சில நூறு யுகங்கள்
நான் காற்றில் பறக்கும்
காற்றாடியாகிறேன்!

- கட்டுரைப்போட்டி முடிவுகள் -
தேன்மொழி அசோக்https://minkirukkal.com/author/thenmozhi/
கவிமாலை,தங்கமீன் கலை இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளில் கவிதைகள் எழுதி வருகிறார். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்று இரண்டு வருடங்கள் மென்பொருள் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.இவரது கவிதைகள் தமிழ் முரசு நாளிதழிலும்,கட்டுரைகள் தேக்கா எக்ஸ்பிரஸ் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. கற்பனை சிறகை விரித்துப் பறக்க, கவிதைகள் பக்கபலமாய் இருப்பதாக நினைக்கிறார்..கவிதைகளோடு பழகி இன்னும் நெருக்கமாக விரும்புகிறார்.

2 COMMENTS

guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -
2
0
Would love your thoughts, please comment.x
()
x