கருப்பைக்கண்ணி

சிறுகதை

- Advertisement -

“யமுனாவோட கற்பப்பையை எடுக்கிறாங்களாம் ஆஸ்பத்திரியில் அட்மிட் பனிறுக்காங்க ,என்னை கூட வந்து இருக்க சொல்றா ! உன் சித்தி

என் அம்மாவின் உடன் பிறந்த சகோதரிகளில் இரண்டாவது சகோதரி சரோஜினி பெரிய கண்கள்  ஒல்லிபோன தேகம், சிவந்த நிறம் மற்ற எல்லாரையும் விட இளமை காலத்தில் அவள் அழகாக இருந்ததாக என் அம்மா சொல்வாள்.

பொதபொதவென பிடரிவரை வளர்ந்து பாப்கட்டிங் செய்யப்பட்ட சுருட்டை முடியுடன் , திடிரென சிரிக்கும், வெட்கப்படும் ,கோபம் கொள்ளும் யமுனா, சரோஜினி சித்தியின் மகள். எனக்கு தங்கை…

சரோஜினி சித்தியின் வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம் நடக்கும்போது என் அம்மாவுக்கு திருமணம் முடிந்துவிட்டிருந்தது எனது அப்பா பெண் பார்க்கும் போது சரோஜினி சித்தியை மணபெண் என்று நினைத்து கொண்டுதான்  சம்மதம் சொன்னதாக அம்மா என்னிடம் சொல்லிருக்கிறாள், ஜானகி  சித்தி காதல் திருமணம் செய்து கொண்டதால் ‘தன்’, மானம் பறிபோனதால் என் தாத்தா மனைவி பிள்ளைகளுடனா தொடர்பை முற்றிலும் அறுத்துகொண்டு தனது இரண்டவாது மனைவியுடன் குடித்தனம் நடத்த கிழம்பி விட்டார்.

பொறுப்பில்லாத ஊதாரி அப்பனின் குழந்தைகளில் ஏதேனும் ஒன்று குடும்பத்தை தன் தோளில் சுமக்க வேண்டிய பொறுப்பு இருந்தது. அதற்கான தகுதி நிறைந்தவளாக தியாக உள்ளம் கொண்டவளாக சரோஜினி சித்தி தன்னை மாற்றிக் கொண்டாள்.

குடும்பத்தின் தலை எழுத்தை புரட்டி போடுகின்ற சகோதரனின் படிப்பு, வாழ்வின் அவலங்களையும் நிர்பந்தங்களையும் அறியாது “அக்கா பசிக்குது,” என்கின்ற சின்ன தங்கையின் பசியும் தான் , குடும்பத்தின் பொறுப்பை அவள் தலையில்  ஏற்றியது.

.சோற்றுக்கு வழியில்லாத குடும்பத்தில் பசியால் சுண்டியிலுக்கும் வயிறுகள் யாரோ ! ஒருவனுடைய உயிரையும், உடலையும் தின்னத் தொடங்குகின்றன.

“ சார் 100 ரூபாய் அட்வான்ஸ் வேணும் !”

இளமையும் ,அழகும் கொண்ட பாதுகாப்பில்லா, வறுமையுடன் போராடுகின்ற எல்லா பெண்களின் முன்னும் ஒரு கண்ணியவான் தோன்றவே செய்கிறார் தன் கொடூரமான அருவருப்பான முகத்தை மறைத்து கொண்டு

“ எதுக்கு ? “

“ தம்பி ஸ்கூல் பேண்டு கிழிஞ்சிடுச்சு, காக்கி அட்டைவச்சு தெச்சு போட்டுட்டு போறான் “

கருணை உள்ளம் கொண்ட கண்ணியவான்.. பெண்.. அதுவும் , அழகான பெண் அவளை விரும்பியபடி ஆட்டிவைக்க கிடைக்கின்ற சந்தர்பங்களை நழுவ விடுவதில்லை

“இந்தா 200 ரூபாய் , 100  ரூபாய் தான் ஆபிஸ் கணக்கு “

நன்றி உணர்ச்சியை வார்த்தைகளால் வெளிபடுத்துவது முடியாது . விழித்திரைகளை கண்ணீர் ஓர் பனியை போல மூடும் ஆனால் விழாது தேங்குகின்ற கண்ணீரெல்லாம் மீண்டும் கண்களுக்குள்ளேயே காணாமல் போகும்.இத்தகைய நன்றியுணர்ச்சியெல்லாம் கண்ணிவான்கள் எதிர் பார்பதில்லை,, நன்றியை எதிர்பார்த்தா அவர்கள் உதவிகள் செய்கிறார்கள்.

சரோ ! இந்தா.. உன்  தங்கச்சிக்கு டிரஸ் எடுத்துட்டு வந்தேன்

“ சார் பரவாயில்லை வேணாம்”

“ வாங்கிகிரையா… ? இல்லையா ?’

அக்கரையா ! மிரட்டலா !  அன்யோன்னியமா ஏதோ ஒன்றுக்கு அடிபணிந்து அவள் வாங்குகிறாள்

கேட்கிற போதும் ,கேட்டகாத போதும் கிடைத்த உதவிகளுடன் வேலை திடிரென கிடைக்காமல் போனது.

“ சார் எனக்கு மட்டும் ஏன் சார் வேலையில்லை,”  ‘’சாயந்திரம் வா பேசிக்கலாம்”

அந்தி நேரம் வராமலா இருக்கும்.

“ சரோ உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன் .. நீ என்ன சொல்ற”

“சார் எனக்கு குடும்பம் தான் முக்கியம் தம்பி ,தங்கச்சி நல்லாயிருக்கனும் அவங்களை நல்லா பாத்துக்கணும் நான் தான் சார் அதை செய்யணும்”,.

“ நான் பாத்துக்கிறேன்”…..

அவரிடம் இருந்து தப்பிப்பதற்கான முதல் வழியை எளிதாகவே அடைந்தார்.

“ஆனாலும் ,எங்க வீட்டுல என்ன சொல்றாங்களோ அதைதான் செய்வேன்,அதுவும் இல்லாம எங்க அப்பா முறடர், அவரை நினைச்சா பயமா இருக்கு”, என்று சொல்லி தப்பிவிட்டதாக நினைத்தால்,

அடுத்த நாளே! கண்ணியவான் என் தாத்தாவிடம் சென்று பேசிவிட்டார். அவர் என்ன பேசினார் என்பது இன்றளவும் ரகசியமே  ! உறுதியாக அவர் தன் காதலை பற்றி பேசியிருக்க வாய்ப்பில்லை . என் தாத்தாவின் முறட்டு தனம் ஊறரிந்த ஒன்று, ஜானகி சித்தி ஓடிப்போன போது உடலில் ஒட்டு துணியில்லாமல் கையில் வாலா கத்தியுடன் ( அம்மா அப்படித்தான் சொன்னால்)பவனிவந்திருக்கிறார்,தன்னை எதிர்ப்பது யாராக இருந்தாலும் கையோங்குகிற கட்டுபாடில்லா கோபம் அவருடையது.

“ சரோ நேத்து உங்க அப்பாவை பார்த்து பேசிவிட்டேன், உங்க சின்னாமாவீட்டுக்கு போயிருந்தேன்”

தனக்கு சாதகமாய் பலமாய் இருந்த ஒன்றையும் இந்த மனிதன் உடைத்துவிட்டான் கடைசியாய் மிகவும் இருதியாய் இருந்த வாய்ப்பு .உங்க பொண்டாட்டி ஒத்துக்க மாட்டங்க என்னால முடியாது.”

அடுத்த இரண்டு நாளில் சூப்பர்வைசர் மனைவி வந்திருப்பதாகவும், சரோஜினி சித்தியை பார்க்க விரும்பியதாகவும் யாரோ சொன்னபோது  சித்தியின் தலையில் இடிதான் விழுந்திருக்க வேண்டும்.

“நீங்கதான் சரோஜினியா? நான் தான் அவரோட பொண்டாட்டி “ அழுத படியே பேசினாள்

“ நான் அவருக்கு பொருத்தமானவள் இல்லைங்க அவரை கல்யாணம் பண்ணிக்கங்க ,என்னால உங்களுக்கு எந்த தொந்தரவும் வராது…..”

உலகமே தனக்கெதிறாய் மாறிவிட்டதாக நினைத்தால் சித்தி.

“ கல்யாணம் ஆனாலும் உன் தம்பி தங்கச்சிகளை நான் பார்த்துக்குவேன்”

சாதார்யமாய் வெற்றி பெற்று விட்ட கண்ணியவாணுக்கு தன் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள தெரியாதா ! என்ன ?

நிராசையுடனும், பலபலவந்தத்தாலும் கொஞ்சம் காதலுடனும் திருமணம் முடிந்தது.சரோஜினி சித்தி இரண்டாம் மனைவியானாள்.இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே என்தாத்தாவின் மனமும் மாறிக்கொண்டிருந்தது. தான் ஒரு உத்தமனாக மாறிவிடும் உத்தேசத்துடன் எல்லோரையும் ஒரே குடும்பமாக்கினார்.

யாரோ கைவிடும் போது ,யாராவது கை கொடுக்கிறார்கள் அதிஸ்டம் உள்ளவர்களை, என் கடைசி சித்தியும் மாமாவும் காப்பாற்றபட்டார்கள்.

அதிஸ்டம் இல்லாத சிலரின் வாழ்கையில் துரதிர்ஷ்டம் தீர்க்க முடியாத நோயை போல கூடவே இருக்கிறது.

சரோஜினி சித்தியின் வயிற்றில் கரு உருவானது. யாருடைய முடிவு என்பது தெரியவில்லை கருவை கலைக்க கருத்தடை மாத்திரைகளை சாப்பிட்டார் சித்தி.

தாயின் வயிற்றுக்குள்ளேயே மரணத்திற்கு எதிராக போராடி பேருருவாய் வளர்ந்து குழைந்தை .

சித்தியின் துயரம் என்றென்றைக்கும் தீராதபடி குறைந்த மாதத்திலேயே பிறந்தாள் யமுனா, மரணத்தை நேரில் கண்ட அதிர்ச்சியிருந்து மீளாதவளாக இருக்கிறாள் யமுனா !

  மருத்துவர்களின் அறிக்கைபடி யமுனா மூளை வளர்ச்சி அடையாதவள் , மூளை வளர்ச்சி முழுவதும் தடைப்பட்ட முன்னேற்றம் காண முடியாத ஒருநோயாளி.

யமுனாவுக்கு எனக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசுதான் குடும்ப விழாக்களில் நாங்கள் ( ஜானகி சித்தியின் குழைந்தைகள், நான் ,யமுனா ) சந்தித்துகொள்ளும் போதெல்லாம், என்னையறியாமல் பரிதாப உணர்ச்சி மேலோங்க பாசம்கொண்டதும் ,அவள் இருக்கமாய் கட்டிபிடிக்கும் போது அவள் மீது பயமும் மாறிமாறி வந்து போகும். அவளுடன் நாங்கள் சுவாரஸ்யமான விளையாட்டுகளை விளையாட முடியாத போதும் அவளுடன் நாங்கள் விளையாட பலவந்தபடுத்தப்பட்டதால் அவளை வெறுக்கவும் செய்தேன். என்ன இருந்தாலும் அவள் எங்கள் தங்கை என்பதில் உரிமை கொண்டாடவும் செய்தேன். அது எங்களுக்கு பெருமையாகவும் இருந்தது.

 சரோஜினி சித்தி எப்போது வீட்டுக்கு வந்தாலும் முடிவில் அழுது  கொண்டும் , இனிமேல் இங்கே வரவே! மாட்டேன் என்று யமுனாவை இழுத்து கொண்டு நடப்பதும் பல முறை நடந்து இருந்தாலும் ஒரே மாதிரித்தான் இருந்தன.

யமுனா சித்தியின் பிடியில் இருந்து விடுபட முயற்சி செய்தபடி தலையை மட்டும் திருப்பி கைகளை ஆட்டி தத்தா……. தத்தா……. என்றபடியே விடைபெறுவாள் வாசல் சுவர் மறைக்கும் வரை,

நாட்கள் வேகமாக நகர்ந்து விட்டன. சந்தோசம் எங்கெல்லாம் இருக்கிறதோ அதை தேடும் மனம் கொண்ட வயதில் துயரம் மட்டுமே குடி கொண்டிருக்கிற சரோஜினி சித்தியின் வீட்டை திட்டமிட்டே நான் தவிர்த்து வந்தேன். நான் எப்படி வலுக்கட்டடயமாய் துயரங்களை சந்தித்து அழுக முடியும்.

இனிநான் தப்புவிக்கவே முடியாது. அந்த குழைந்தையின் கருப்பையை அகற்றும் போது சாட்சியாய் நானும் நிற்க்க வேண்டும்.

மருத்துவ மனையில் சித்தி எப்போதும் போல இப்போதும் அழுது கொண்டே இருந்தது. ஆப்பரேசன் பன்னும் அளவு ரத்தம் இல்லை,ரத்தம் கொடுத்த பின்தான் பண்ண முடியும் அதுவரை காத்திருக்க வேண்டும் என்றும் அநேகமாய் அடுத்த செவ்வாய் ஆப்பரேசன் முடிந்து விடும் என்றும் சித்தி கூறியது. சிறு நிமிட மௌனத்திற்கு பிறகு தன் கணவர் எவ்வளவு உயர்ந்தவர் இந்த நிலையிலும் தன்னையும்,தன் குழைந்தையும் காப்பற்றுகின்ற இவரை போன்ற ஒரு மனிதர் நமது இனத்தில் இல்லை என்றும்… ஏதோ ! ஏதோ! சொன்னாள்.

எதிர்காலம் பற்றி பேசும் போது நம்பிக்கை மிகுந்தவளாகவும் தன் கணவனை பற்றி பேசும்போது உண்மையில்லாத கர்வம் கொண்டவளை போலவும் பேசிய சித்தி ,தன் கடந்த காலத்தை தொட்டு நகர்கின்ற எதை பேசினாலும் அழுது கொண்டே பேசினாள்

“ எதுக்கு சித்தி”

 ‘’ சமயத்தில் ரத்தம் போன கூட தெரியாது ,, நாம இருக்கிற போது பாத்துக்கலாம்,  நாம செத்து போயிட்ட யார்டா…… பார்ப்பாங்க “ இப்படி பண்ணிட்ட கூட ஏதாவது ஹாஸ்டல்ல செத்துடலாம். நாங்க இல்லாத போது இவளுக்கு யாருடா இருக்கா!

நான் யமுனாவின் விரல்களை பிடித்தபடி இருந்தேன்.

சித்திக்கு வேறுபயம் இருக்கலாம் அவளது தாய்மை இரக்கமில்லாத இந்த சமூகத்தின் ஏதோ ஒரு பிரைஜயால் அது நடக்கவும் செய்யலாம் ,நடக்காததா என்ன? ஆனாலும் யமுனா மனதால் மட்டும்மல்ல உடலாலும் வளர்ச்சியில்லாதவளே ! இரக்கமே இல்லாத ஆணின் இதயத்திலும் கருணை ஏற்பட வைக்கின்ற அப்பாவி குழைந்தை அவள்.

அந்த நாட்களில் மட்டுமல்ல , எல்லா நாட்களிலும் அவளை அறியாமல் வெளியேறுகின்ற மலம், மூத்திரத்தை சித்தி இல்லாத போது யார் கவனிப்பார்கள் . சித்தியின் கண்ணீர் வடியாத கண்களை பார்த்தபடி இருந்ததேன் …. அப்போது மனதில் சொல்லிக் கொண்டேன்.

குரல் வளையை நெறிக்க முடியாமலும், கத்தியை எடுத்து வயிற்றில் சொருக தைரியம் இல்லாமலும், தலையணையை வைத்து அழுத்தி யமுனாவை கொல்ல முடியாமல் டாக்டரின் உதவியை நாடியிருக்கிறீர்கள் நீங்கள் வணங்கும் கடவுள் இப்போதாவது உங்களுக்கு உதவட்டும் ……..

“ ஏன்டா வெள்ளிக்கிழமை ஆப்ரேசன் முடிந்தது ஏண்டா வரலா?”

ஏதோ ,ஏதோ காரணத்தால் மேலும் இரண்டு நாள் தாமதமகிவிட்டது……

வழக்கம் போலவே சித்தி பேசத் தொடங்கினாள். டாக்டர் பயந்து கொண்டிருததாகவும், கத்தி ஆர்பாட்டம் செய்கின்ற பெண் அன்று அமைதியாகவும்,பெரியவர்களை போல காலை நீட்டி படுத்தப்படி கண்களில் கண்ணீருடன் ஆப்ரேசன் அறைக்குள் நுழைந்ததாகவும்  (இதை சொல்லும் போது சித்தி சேட்டைசெய்யும் குழைந்தை போல புன்னகைத்தாள் ) யமுனா பக்குவம் அடைந்தவள் போல் நடந்து கொண்டாள் என்று சொல்லி பெருமிதம் கொண்டாள். எம்புள்ளைய கொண்டு வந்து அறுத்துட்டு நிக்கிறேனே ! அழத் தொடங்கினாள் சித்தி அழுவதும் , தன்னை தானே தேற்றிக் கொண்டு பேச தொடங்குவதும் வழக்கமான ஒன்றுதான் என்றாலும் அன்றைய அழுகை ஒரு தாயின் கருப்பையில் இருந்து சுரந்த கண்ணீரின் அழுகையாக இருந்தது.

என் அருமை சித்தியே ! நீங்கள் பாவபட்டவர் , வாக்குறிதிகளை நிறை வேற்றுகின்ற உங்கள் கணவனின் மீதும் இன்றும் உங்களுக்கு கண்களை மூடுகின்ற வடியாத கண்ணீரின் நன்றியுணர்ச்சிதான் இருக்கிறது. அதை விடவும் வாழ்நாள் முழுவதும் அவர் முன் நன்றியுணர்ச்சியுடன் உங்களை நிற்க்க வைத்ததற்காக பற்றி எறிகின்ற கோபம் தெரிகின்றது. இதையெல்லாம் தாங்கி கொள்ள முடிந்தாலும், யமுனாவை முடியவே முடியாது, பொதுவாகவே குழைந்தைகள் சுமை ,இந்த குழைந்தை பல ஆயிரம் டன் சுமை சுமப்பது சிரமம்தான், கருப்பையில் இருந்த போது மருந்து, வளர்ந்தபின் கருப்பை, அன்றும் இன்றும் நீங்கள் எடுத்த முயற்ச்சிகளை தோல்வியுற செய்து நிற்கிறாள், அவள் மரணத்தை வென்றவள். அவள் உங்களின் நீண்ட துயரம்……… வடியாத கண்ணீர் துளி.

“ சித்தி கிழம்புறேன் ……..” யமுனா ………டா….. டா…..

 “ஏய் எந்திரிக்க கூடாது  “

 சித்தியின் பிடியில் இருந்து விடுபட முயற்சி செய்துகொண்டிருந்தாள் யமுனா, அவளையும் என்னையும் மறைக்கின்ற சுவர் வந்தபோது ….. எழவே முடியாத போதும்   “தா….த்தா….. ‘’தா…..த்தா என்றாள் சிரித்தபடியே !….

கடவுள் இருந்தால் …… கடவுளால் சிரிக்க முடிந்தால்,.. யமுனா சிரித்ததை போலத்தான் இருந்திருக்கும்……

தென்றல்
தென்றல்https://minkirukkal.com/author/thendral/
கதைகள் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வமுடையவர். தொடர்ந்து பல பத்திரிக்கைகளுக்கு தென்றல் என்ற புனைப் பெயரில் எழுதிவருக்கிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -