மட்டுபடுத்தப்பட்ட வினைச்சொற்கள்

கதையாசிரியர் : அ. முத்துலிங்கம்

- Advertisement -

ஆசிரியர் : அ.முத்துலிங்கம்

தற்காலத் தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை திரு.அ.முத்துலிங்கம். புலம்பெயர் மக்களின் நெருக்கடிகளை, கனவுகளைத் தொடர்ந்து தனது எழுத்தில் பதிவு செய்து வருபவர். “மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள்” என்ற இந்தக் கதையிலும் ஒரு புலம்பெயர்ந்த பரிசாரகி வருகிறாள். அவளின் தாய்நாட்டைக் கூட நமக்கு முத்துலிங்கம் தெளிவுபடுத்தவில்லை. இலங்கை, இந்தியா அல்லது கயானாவாகக் கூட இருக்கலாம் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார். அகதி என்ற சொல்லே அவளின் இன்றைய நிலையை விளக்க வல்லதாக இருப்பதால் அவள் பூர்வாசிரமங்கள் தேவை இல்லையென தவிர்த்திருக்கலாம். அவள் பெயரையும் ஒரே ஒரு இடத்தில் குறிப்பிட்டதோடு சரி. மற்றபடி அவள் பெயர் வெறும் பெயருக்குதான்.

செய்யும் வேலை அன்றி பிறவற்றில் அதிக கவனம் இல்லாத பரிசாரகி அவள். வேலையிடத்தில் அவளுக்குக் கற்றுத் தரப்படுவது வெறும் பெயர்ச்சொற்களும் சில விதிகளும் தான். வேலை இல்லாத நேரங்களிலும் அவற்றையே திரும்பத் திரும்ப உருப்போடுகிறாள். வினைச்சொற்கள் அவளுக்குத் தேவையில்லை. அவை தானாக வந்து அமரும் என்று அவளுக்குப் புகட்டப் படுகிறது. அது வந்து உட்காரும் தேதியை எதிர் நோக்கிக் காத்திருக்கிறாள்.

அந்தத் தேதி நெருங்குவதை அறிவிப்பதைப் போல, அவள் பணியாற்றும் விருந்தொன்றில் ஒரு இளைஞனைச் சந்திக்கிறாள். அவன் தனது எண்ணைப் பகிர, அவனை அழைத்தவளுக்கு, பேசும் துணிவு மட்டும் இல்லாமல் போகிறது. பின்னர் தொலைபேசியில் பதிவான அவன் குரலை, ஒரு சடங்கைப் போல தினமும் கேட்டு மகிழ்கிறாள்.

நாட்கள் கடந்தாலும் அவன் நினைவுகள் அகலாமல் அவளை அலைகழிக்க, ஒருநாள் துணிந்து அவனைத் திரும்பவும் அழைக்கிறாள். ஆனால் அன்றும் அவளால் உதிர்க்க முடிந்தது சில பெயர்ச்சொற்களே அதாவது அவன் முதல் நாள் பணித்திருந்த உணவு வகைகளின் பெயர்களை வரிசையாகச் சொல்கிறாள். அவற்றின் மூலம் அவளை அவன் அறியச் செய்கிறாள். இறுதியில் அவனாக அவளைத் தேடி வந்த போது, தான் அதுகாறும் உழன்று கொண்டிருந்த விதிகளை மீறி அவள் வாழ்க்கைச் சக்கரம் தடம் மாறியதா என்பதைத் தனக்கே உண்டான தனிப் பாணியில் சுவையுறத் தந்திருக்கிறார் முத்துலிங்கம்.

வழக்கமான ஒரு காதல் கதை தான் என்றாலும் முத்துலிங்கத்தின் பிரத்யேக பாணியில் அதனைப் படிக்கையில் ஒவ்வொரு வரியும் புதிதாய்த் தெரிகிறது. அவரது புனைவுலகில் கதை மாந்தர்கள் உண்மைக்கு மிக அருகில் இருப்பதாலேயே வாசகரின் மனத்திற்கும் எளிதில் நெருக்கமாகி விடுகிறார்கள். கதையின் ஒவ்வொரு வாக்கியத்திலும் பகடி தெரிக்கின்றது. ஆனால் அது கதையின் தீவிரத்தைக் குலைக்கவில்லை. தேர்ந்தெடுத்த சொற்களால் கதாப்பாத்திரத்தின் மெல்லிய உணர்வுகளைச் சத்தமில்லாமல் கடத்தி விடுகிறார்.

முத்துலிங்கத்தின் எழுத்தில் இருக்கும் மற்றொரு சுவாரஸ்யமான கூறு அவர் கையாளும் உவமைகள். அவை கனகச்சிதமாக வாக்கியங்களோடு ஒட்டிக் கொள்கின்றன. இலகுவான அவரது நடையில் இந்த உவமைகளை நாம் தவற விடும் அபாயம் உண்டு. ஆனால் நிதானித்து உள்வாங்கும்போது அவை நம் வாசிப்பனுபவதிற்குக் கிடைக்கும் ‘போனஸ்’

ஒவ்வொரு கதவும் திறப்பதற்காகவே மூடப்படுகின்றன. ஒவ்வொரு எல்லையும் தாண்டுவதற்காகவே வகுக்கப்படுகின்றன. அதே போலவே விதிகள் மீறுவதற்காகவே விதிக்கப்படுகின்றன். புழுக்கம் நிறைந்த அகதி வாழ்க்கையில் இருந்து வெளியேறத் துடிக்கும் ஒரு பெண்ணின் ஏக்கங்களுக்கு இந்த ஆக்கத்தின் மூலம் உயிர் கொடுத்து நம் மனங்களில் சிறகடிக்கச் செய்கிறார் அ.முத்துலிங்கம்.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -