ஊழ் (21)

இறுதிப் பாகம்

- Advertisement -

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

மதுவின் தாலி, அமுதன் குடும்பத்தார் நிச்சயதார்தத்திற்கு போட்ட நகைகள், புடவைகள் எல்லாம் சபாபதியின் வீட்டு வராந்தாவில் காத்துக்கொண்டிருந்தன.

அதே போல் அமுதனுக்கு மதுவின் வீட்டில் இருந்து போடப்பட்ட கழுத்துச்சங்கிலி, கைச்சங்கிலி, மோதிரங்கள், வாட்ச் உள்ளிட்டவை வீட்டிற்கு உள்ளேயும் அவர்கள் தந்திருந்த சீர்கள் வீட்டிற்கு வெளியில் பின்புறமும் வந்து அங்கே குவித்திருந்திருந்தன.

வழக்கறிஞர்களான பரமசிவமும், ஸ்டீவனும் பத்திரங்களை வாசித்துக் காண்பித்தனர். அமுதனும் மதுவும் பின் இரண்டு வழக்கறிஞர்களும் சாட்சிகளாக சபாபதி வீட்டில் இருந்த சிலரும் கையொப்பம் இட்டார்கள். இந்தக் கையெழுத்து அவர்களுக்குள் இனி எந்த உறவும் இல்லை என்பதற்கான கையெழுத்து. கையொப்பம் இடும்போது அவன் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப்பின் இப்போதுதான் மதுவைப் பார்க்கிறான்.

‘என்னுடைய இந்த நிலையில் கூட அவள் என் மீது இரக்கம் காட்டவில்லை. அவள் என்னோடு பழகியதெல்லாம் பொய்யா? இவளை நான் என்ன ஏமாற்றினேன்?’ அவனுக்கு அவளிடம் கேட்டே ஆகவேண்டும் போல் இருந்தது.

சபாபதியைப் பார்த்து “இவங்க கிட்ட ஒரு ரெண்டு நிம்சம் மட்டும் பேசிக்கலாமா? இதுக்கு அப்பறம்தான் எங்களுக்கு எதுவும் இல்லையே… ஒரு ரெண்டு நிம்சம். இந்தக் காலை வச்சுக்கிட்டு என்னால அடிக்கவெல்லாம் முடியாது. பிளீஸ்…” என்றான். அவன் முறிந்து போன காலின் மேல் இருந்த கட்டைப் பரிதாபமாக பார்த்தார் சபாபதி.

பின் மதுவைப் பார்த்தார். அவள் சரி என்று தலையசைத்தாள். சபாபதியின் வீட்டின் ஒரு அறையை நோக்கி ஊன்றுகோலை ஊன்றிச் சென்றான் அமுதன். சீனு மாமா அவன் கையை அவர் தோள்மீது போட்டுக்கொண்டு அழைத்துச்சென்று அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர வைத்துவிட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் மது அங்கு மெல்ல நடந்து வந்தாள். முதல்முதலாக அவளைப் பெண் பார்க்கப் போன அந்தக் காட்சி அவன் மனதிற்குள் ஓடியது. அவனை அறியாமல் ஒரு அசட்டுப் புன்னகை உதட்டில் வந்து மறைந்தது. அவள் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள். அறையின் கதவு திறந்தே இருந்தது.

“உன் கூட எவ்வளவோ பேசனும்ன்னு ட்ரை பண்ணினேன். ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாமே?”

“இனி அதைப்பத்திப் பேசி புரோயோஜனம் இல்லை விடுங்க”

“ம்ம்ம்… என் கிட்ட இருந்து நீ எந்த விளக்குமுமே எதிர்பார்க்கலையா? கொலைகாரனுக்கு கூட அவன் செய்யலன்னு நிரூபிக்க ஒரு வாய்ப்பு குடுப்பாங்களே? அது கூட எனக்கு இல்லையா?”

“நீங்க கொலை பண்ணல. ஏமாத்திருக்கீங்க. நான் விளக்கம் கேட்டிருந்தா மேற்கொண்டு ஏமாத்ததான் முயற்சி பண்ணிருப்பீங்க”

“நான் என்ன கல்யாணம் பண்ணிட்டு வேற யார்கூடயாவது சுத்திக்கிட்டு இருந்தேனா? அப்படி என்ன உன்னை நான் ஏமாத்துனேன்? சொல்லு”

“நீங்க என்னை ஏமாத்துனீங்கன்னு சொல்லல. ஆண்ட்ரியாவ உங்களுக்கு பிறந்த பொண்ண ஏமாத்திருக்கீங்க. இன்னும் ஏமாத்திகிட்டு இருக்கீங்க”

இதற்கு அவனிடம் எந்தப் பதிலும் இல்லை. இவள் இப்போது அமுதனுக்குத் தரும் தண்டனை இவளுக்கு யாரென்றே தெரியாத ஒருத்தியை அவன் ஏமாற்றியதற்காக. குறைந்தபட்சம் அவன் இவளை ஏமாற்றவில்லை என்பதையாவது ஒப்புக்கொண்டாள். அதுவே அவனுக்கு ஆறுதல் தந்தது.

“கடைசியா ஒரே ஒரு கேள்வி… நம்ம பிள்ளைய கலச்சியா?”

அவள் கன்னத்தில் கண்ணீர் உருண்டு இறங்கியது. கைகளால் துடைத்துக்கொண்டு. “இது பிலிப்பைன்ஸ் இல்ல. இந்தியா. இங்க சிங்கிள் மாம் கான்சப்ட் எல்லாம் யாரும் ஏத்துக்க மாட்டங்க. இதுக்கு அடுத்தும் எனக்கு வாழ்க்கை இருக்கு. அதை நான் பார்க்கணும். யாரோடைய சுமையையோ சுமக்குறதுக்கு நான் ஆண்ட்ரியா இல்லை.” பதிலை முடித்துவிட்ட அடுத்தநொடி விருட்டென்று எழுந்து வெளியே சென்றுவிட்டாள்.

அமுதன் அங்கேயே அமர்ந்திருந்தான். சீனு மாமா உள்ளே வந்து அவனை தாங்கிப் பிடித்து வெளியே அழைத்துச் சென்றார்.

அமுதன் அலுவலகம் முடிந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தான். இப்போது அவன் சிங்கப்பூரில் மதுவோடு சேர்ந்து வாழ்ந்த வீட்டில் இல்லை. பிசானில் ரகுவோடு சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறான். ஒவ்வொரு நாளும் ரயில் நிலையத்திலிருந்து பிசான் பார்க் வழியாக நடந்து செல்வது அவன் வழக்கம். அப்படிச் செல்வதால் தனியாக நடை பயிற்சி செய்யவேண்டிய அவசியமில்லை. சிங்கப்பூர் வந்தபின் அவன் உடலும் மனமும் வெகுவாகத் தேறியது. பச்சைப்பசேல் என்றிருந்த அந்த பார்க்கின் ஊடே ஓடுவதற்கென்றே போடப்பட்ட சாலையில் ஒவ்வொருவராக ஓடி மறைந்து கொண்டிருந்தார்கள். சிலர் நடந்துகொண்டும் சில குழந்தைகள் விளையாடிக்கொண்டும் இருந்தார்கள். சில நேரங்களில் இந்த புல்வெளிகளில் யோகா, தாய்ச்சி, ஜும்பா போன்ற கூட்டு உடற்பயிற்சிகளும் நடப்பதுண்டு.

அமுதனின் அலைபேசியில் அழைப்பு வந்தது. அங்கிருந்த ஒரு கல்லிருக்கையில் அமர்ந்துகொண்டு பேசினான்.

அவன் அம்மா. “என்னப்பா ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு வந்துட்டியா?”

“இல்லமா இப்போத்தான் நடந்து போயிட்டு இருக்கேன்.”

“மாமா வந்தாரு, நீ எப்படியும் அடுத்த மாசம் வர்ற. கேஸ் முடிஞ்ச கையோட அடுத்த வாரமே கல்யாணத்தை வச்சுக்கலாம்ன்னு சொல்றாரு.”

தூரத்தில் அவன் எப்போதும் வழியில் சந்திக்கும் ஒரு சீனப் பாட்டி தள்ளுவண்டியில் வந்துகொண்டிருந்தாள். பொக்கைவாய் தெரிய அவனுக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டுச் செல்வாள். அவள் வண்டியை எப்போதும் தள்ளிக்கொண்டு வரும் பெண் இன்று மாறியிருந்தாள். ஒரு நொடி அவனையறியாமல் அவனுக்குள் ஒரு நடுக்கம் வந்து மறைந்தது. பொக்கைவாய்ப் பாட்டியின் ஹாய்க்கு அவனால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. கல்லிருக்கையின் மேல் ஒரு கற்சிலையாய் மாறியிருந்தான்.

அவள் ஆண்ட்ரியாவே தான். அவளிடம் எந்தச் சலனமும் இல்லை அவள் அவனைப் பார்த்ததாக காட்டிக்கொள்ளவே இல்லை. அந்த இடத்தில் அவன் இல்லாமல் வெறும் கல்லிருக்கை மட்டுமிருந்தாலும் அவள் அப்படித்தான் சென்றிருப்பாள். அவன் அவள் சென்றதிசையே பார்த்துக்கொண்டிருந்தான் தூரத்தில் ஒரு புள்ளியாகி வளைவில் மறைந்து காணாமல் போனாள்.

“என்னடா பதிலே சொல்ல மாட்ற? இவளோ பிரச்சனைக்கு அப்பறம் எல்லாம் தெரிஞ்சிருந்தும் ரேவதி உன்னைக் கட்டிக்கிறேன்னு சொல்றா. அவளை விட நல்ல பொண்ணு கிடைக்காதுப்பா. நீ சரின்னு சொன்னா மத்த ஏற்பாட கவனிக்கலாம்”

“ம்ம்ம்…. சரிம்மா…” என்றான்.

அவன் வேண்டாம் என்று உதறித்தள்ளிய மாமன் மகள் ரேவதி மட்டுமே இப்போது அவனுக்கு வாழ்க்கைத் துணையாக வரத் தயாராய் இருந்தாள். அமுதனைப் பொறுத்தவரை அதுவும் அவனுக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது இத்தனைக்கும் பின் எப்படி இந்தப் பெண் என்னைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறாள் என்று பலமுறைக் தனக்குத் தானே கேட்டிருக்கிறான்.

அதைவிட ஆச்சரியமாக அவன் கண்முன்னே தோன்றிய ஆண்ட்ரியா அவனை யாரென்றே தெரியாதது போல் வெகு இயல்பாய் கடந்து சென்றுவிட்டாள். அவளின் அந்தப் பார்வை இனி நான் எவனிடமும் ஏமாறத் தயாராய் இல்லை என்று எடுத்துரைப்பாதாய் இருந்தது. அவள் பிழைப்பைப் பார்க்க வந்துவிட்டாள் அவளும் இரண்டு குழந்தைகளை வைத்துக் காப்பாற்ற வேண்டுமே என்று எண்ணிக்கொண்டான் அமுதன்.

மது… அவள் என்ன ஆனாள்? வேறு திருமணத்திற்கு தயாராகியிருப்பாளா? சிந்தித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்திருந்தான்.

“ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்….” அமுதனுக்கு அது மதுமதியின் ரூபத்தில் வந்திருக்கிருக்கிறது.

– முற்றும்

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -